நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 20, 2014

பிரம்மோற்சவம்

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதம் - புரட்டாசி!.

காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.

ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான விரத நாட்கள் இருந்தாலும் புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள்தான்.

பெருமாளை  வழிபட சனிக்கிழமை மிகவும் சிறப்பென்கின்றனர்.
அதைப் போல புதன் கிழமைகளும் உகந்தவையே!..


அதுவும் புரட்டாசி மாதத்தின் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது மரபு வழியாக காலகாலமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றானவன் புதன்.  மாதுலகாரகன் எனப்படும் புதன் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை  - சந்திரனின் அழகைக் கண்டு மயங்கிய வேளையில் தோன்றியவன்.

புதனுடைய வீடு கன்னி.
புத்திக் கூர்மையை அருள்பவன் - புதன்.
எண்ணும் எழுத்தும் புதனின் அனுக்ரகமே!..

புதனின் அதிதேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு.
புதனுக்கு உரிய நிறம் பச்சை. உரிய எண் ஐந்து.
புதனுக்கு உரிய ரத்தினம் - மரகதம்.
புதனுக்கு உரிய தானியம் - பச்சைப்பயறு.

புதனுக்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.   

புதன் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.
புதனுக்குரிய கன்னி ராசியில் சூரியன் விளங்குவது புரட்டாசி மாதத்தில்!..

எனவேதான்,

புரட்டாசி மாதம் - பெருமாளின் அருள்பெற உகந்ததாகத் திகழ்கின்றது. 
பெருமாளைக் குறித்த பிரார்த்தனைகள் சிறப்புக்கு உரியதாகின்றன. 

வேங்கடேசப் பெருமாள் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாள் - புரட்டாசி திருவோணம்.

புதனின் நட்புக்குரியவன் சனைச்சரன்!..
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி  பூஜை செய்து  இயன்ற அளவு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. 


எந்நாளும் விழாக்கோலம் பூண்டிருக்கும் திருப்பதியில் பிரம்மோற்சவப் பெருவிழா  நிகழும் ஜய வருடத்தின் புரட்டாசி பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று தொடங்குகின்றது.

திருவிழாவினை முன்னிட்டு - மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அனைத்தும் சுத்தம் செய்து மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருவதாக அறிய முடிகின்றது.

அந்த ஆபரணங்களின் எண்ணிக்கை 502.

மூலவருக்கு 120 ஆபரணங்களும், உற்சவ மூர்த்திகளுக்கு 382 ஆபரணங்களும் என கூடுதல் - 502. 

இவை பிரம்மோற்சவ விழா நாட்களில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை.

இவற்றுள்  மூலவரின் வைர கிரீடம், வைர சங்கு, சக்கரம், ரத்ன கிரீடம், பச்சைக்கல் சங்கு, சக்கரம், வைர ஹஸ்தம், ஏழு கிலோ எடையிலான வைர மகர கண்டி, தங்க வஸ்திரம் , 32 கிலோ எடையிலான அஷ்டோத்ர ஹாரம்  மற்றும் சகஸ்ர நாம ஹாரம் ஆகியன முக்கியமானவையாகும்.

இந்த ஆபரணங்கள் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும்.

செப்டம்பர்/26 முதல் தொடங்கும் திருவிழா அக்டோபர்/4 வரை நிகழும்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம்  சகல உயிர்களையும் படைத்தருளும் மூர்த்தியாகிய ஸ்ரீபிரம்ம தேவனால் நடத்தப் படுவதாக ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் வெங்கடேஸ்வர சுவாமியின் பிறந்த நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நிறைவு பெறும் விதமாக சக்ரஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடைபெறும்.

26/09  {1}கொடியேற்றம்.  பெரியசேஷ வாகனம்.
27/09  {2}சின்னசேஷ வாகனம். அன்ன வாகனம்.
28/09  {3}சிம்ம வாகனம். முத்துப்பந்தல்.
29/09  {4}கற்பக விருக்ஷம். ஸர்வ பூபால வாகனம்.
30/09  {5}மோகினி அவதாரம். கருட சேவை.
01/10  {6}அனுமந்த வாகனம். தங்கத்தேர் / யானை வாகனம்.
02/10  {7}சூர்ய பிரபை. சந்திர பிரபை.
03/10  {8}ரதோத்ஸவம். குதிரை வாகனம்.
04/10  {9}தீர்த்தவாரி.    கொடியிறக்கம் / பல்லக்கு உற்சவம்.

செப்டம்பர் 25 அன்று பாலிகை அங்குரார்ப்பணம் (முளைவிடுதல் விழா) .
செப்டம்பர் 26 அன்று கொடியேற்றம். 


பிரம்மோற்சவத்தைக் காண்பதற்கு சகல  தேவர்களையும் அழைக்கும் விதமாக கொடியேற்றத்தன்று வெங்கடேஸ்வர சுவாமியின் வாகனமான கருடனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். 

கருடன் உருவம் பொறித்த மஞ்சள் வஸ்த்ரமும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலையும் மேள தாளங்களுடன் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

கொடிப்பட்டம் ஊர் சுற்றி வந்தவுடன் மங்கல வாத்யங்கள் முழங்க வேத மந்திரங்களுடன் தங்கக்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும்.

அத்துடன்  தொடங்குகின்ற மகத்தான பிரம்மோற்சவம் ஒன்பது நாட்களுக்கு  நடைபெறும். 

பெரிய சேஷ வாகனம்
முதல் நாள் - பெரிய சேஷ வாகனம். ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருள ஸ்ரீ மலையப்ப சுவாமி கௌமோதகி எனும் கதாயுதத்துடன் எழுந்தருள்வார்.

இரண்டாம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் குழலூதும் கிருஷ்ண திருக்கோலம். அன்றிரவு அன்ன வாகனத்தில் வீணையுடன் சரஸ்வதி தேவி திருக்கோலம்.

மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோலம். அன்றிரவு முத்துப்பந்தல். காளிங்க நர்த்தன திருக்கோலம்.


நான்காம் நாள் காலையில் கற்பக விருட்சம். ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி கோபால திருக்கோலம். அன்றிரவு சர்வ பூபால வாகனம். கொக்கு வடிவில் வந்த அசுரனை வதம் செய்யும் ஸ்ரீகிருஷ்ண திருக்கோலம்..

மோகினி அலங்காரம்
கருட சேவை
ஐந்தாம் நாள் காலையில் மோகினி திருக்கோலம். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்த்ரம் ஸ்வாமிக்கு அணிவிக்கப்படும். அன்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை.


ஆறாம் நாள் காலையில் அனுமந்த வாகனம். கோதண்ட ராமர் திருக்கோலம். அன்று மாலை  தங்கத் தேரோட்டம் . அன்றிரவு கஜ வாகனம்.

ஏழாம் நாள் காலையில் சூரிய பிரபை வாகனம். அன்றிரவு சந்திர பிரபை. வெண்ணெய்த் தாழியுடன் பாலகிருஷ்ண திருக்கோலம்.

எட்டாம் நாள் காலையில் தேவதாரு மரக்கட்டைகளினால் உருவாக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி உலா. அன்றிரவு குதிரை வாகனம்.

ஒன்பதாம் நாள் காலையில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் உடன் வர - ஸ்ரீதேவி, பூதேவி யருடன் ஸ்ரீமலையப்ப சுவாமி பல்லக்கில் ஸ்ரீபூவராக ஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருள்வார். 


ஸ்ரீபூவராக ஸ்வாமி கோயிலில் எழுந்தருளும் திருமேனிகளுக்கு  மஞ்சள், சந்தனம் முதலான மங்கலத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.


புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்கின்றனர்.

பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறகு அன்று மாலை கொடி இறக்கப்படும்.

திருவிழா நாட்களில் - ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக பல்வேறு வாகனங்களில் ஆரோகணித்து திருக்கோயிலின் நான்கு மாடவீதிகளிலும் எழுந்தருளும் பெருமாளின் முன்பாக -

நூற்றுக்கணக்கான அன்பர்கள் ஆனந்த கோலாகலமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் செல்வர்.

கோலாட்டம், மயிலாட்டம் முதலான கிராமிய நடனங்களுடன் இசைக் கச்சேரி முதலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடப்பது கண்கொள்ளா காட்சி.


இந்தக் கோலாகலங்களை எல்லாம் கண்டு மகிழ்வதற்காகத் தான்  -

திருவேங்கடக் குளக்கரையில் குருகு எனும் நாரையாக, 
திருவேங்கடச் சுனையில் மீனாக, 
திருமாமலைக் காட்டில் செடி கொடி செண்பக மரமாக, 
திருவேங்கடச் சிகரத்துள் ஒரு முகடாக, 
திருவேங்கடத்துள் பொங்கி வழியும் காட்டாறாக, 
திருவேங்கடவன் நின்றருளும் சந்நிதி வாசற்படியாகக் கிடக்க வேண்டும்.. -

என்று விரும்புகின்றார் - குலசேகர ஆழ்வார்!.. 

நாமும் அவ்வாறே விரும்புவோம்!..

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் 
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!..(685)
குலசேகர ஆழ்வார் அருளிய 
பெருமாள் திருமொழி/நான்காம் திருமொழி

ஸ்ரீ வேங்கடேச சரணம்!.. சரணம் ப்ரபத்யே!..
* * *

20 கருத்துகள்:

  1. பிரம்மனால் நடத்தப்படும் பிரம்மோத்ஸவம்....

    அருமையான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  2. மனதை மகிழ வைத்த தெய்வீகமான இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் ஐயா !மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. தங்கள் தலத்தின் மூலம் பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி, அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. தங்கள் தளத்தில் என்பதற்கு தலம் என்று போட்டு விட்டேன் அதுவும் அவன் விருப்பமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் விருப்பம்..
      அதுவும் அவன் விருப்பமே!..
      மகிழ்ச்சி..

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    புரட்டாதி மாதப் புதன் கிழமை, சனிக்கிழமைகளின் விசேடங்களையும்
    பெருமாளின் உற்சவ மகோன்னதங்களையும் தங்கள் மூலம்
    இன்று அறியக் கிடைத்தது மிக்க மகிழ்வே!..

    உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  6. கோமதி அரசு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் நண்பரே... அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகைக்கும் வழிமொழிதலுக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  7. உங்கள் பதிவைப் படிக்கும் போது திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் பாடல்" குறையொன்றுமில்லை மறை மூர்த்திக் கண்ணா "
    என்கிற பாடல் மனதில் அலையாய் அடிக்கிறது.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது போல - குறையொன்றும் இல்லாது எங்கும் நிறைவாகட்டும்.
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உங்கள் பதிவைப் படித்ததும் வங்கி நண்பர்களோடு திருப்பதி சென்று வந்த அந்த நாட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. புரட்டாசியோடு பிரம்மோற்சவம் பற்றிய குறிப்புக்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  9. பிரம்மோற்சவம் அறிந்தேன்
    உணர்ந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  10. பிரம்மோற்சவம் பற்றி அரிய தகவல்கள் அறிந்தேன். நன்றி. தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது பணிகளுக்கிடையே - வருகை தந்து அன்புடன் கருத்துரை வழங்கிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..