நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

தேவி தரிசனம் - 3

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!.. 

வடபெருங்கோயிலுடையானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலைகளைத் தான் சூடி  - அழகு பார்த்த பின்,  பெருமானுக்கு சமர்ப்பித்தவள்!..

அடியார்களும் ஆழ்வார்களும் தம்மை நாயகியாகப் பாவித்துக் கொண்டனர். 

இறைவன் மீது அன்பு கொண்டு கசிந்துருகி நின்றனர். 

ஆனால்,


ஆண்டாள் - பெண்மைக்கே உரிய பெருஞ்சிறப்புடன் கண்ணனை எண்ணிக் கசிந்துருகினாள். நாரணன் நம்பியை நினைந்து நினைந்து நெஞ்சுருகிப் பாடினாள். துழாய் மாலையுடன் தமிழ் மாலையும்  தொடுத்தாள்

பூமாலையுடன் பாமாலையும் தொடுத்த பைந்தமிழ்ப் பாவைக்கு -

சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்..
சுட‌ராக‌ என்னாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்!..
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்..
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்!..
கன்னிதமிழ் தேவி மைக் கண்ணன் அவ‌ள் ஆவி
தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள்!.. 

- என்று கவிமாலை சூட்டினார் கவியரசர்.

அனந்தனிடம் அவள் கொண்ட அன்பினை அதிசயித்துப் பேசிய ஆன்றோர் பலர்!..

ஞானப்பூங்கோதை நல்கிய நற்றமிழைப் படித்தாலும் கேட்டாலும், அது நம் பாவங்கள் தீர்க்கும். பரமனடி காட்டும்! - என்பது நிதர்சனம்.

நன்றி - ஜகந்நாதன் ராமானுஜம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் - வடபெருங்கோயிலுடையானின் திருத்துழாய் வனத்தில் - ஆடிப்பூரத்தன்று அவதரித்த ஆரணங்கு!.. 

பெரியாழ்வார்க்கு திருமகளாக வளர்ந்த பெரும்பெயர்க் கோதை!..

திருஅரங்கத்துச் செல்வனுடன் இரண்டறக் கலந்த அருந்தமிழ்ச் செல்வி!..

திருத்துழாய் மாலை தொடுத்த தூயவள்!..  
தொடரும் அன்பினில் அனைத்து உயிர்க்கும் தாயவள்!..

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியைப் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் நெஞ்சம் ஆனந்தத்தால் அதிர்கின்றது.

ஆடிப்பூரக் கோலாகலத்திலிருந்து - இன்னும் மனம் மீளாத நிலையில்,
மூன்றாவது ஆடிவெள்ளியினை முன்னிட்டு,  மூவாத் தமிழில் -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் அருளிய 
வாரணம் ஆயிரம்
(ஆறாம் திருமொழி)


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்..


நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..


நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்..

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..

  
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்..

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்..


வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு 
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே..

Andal Kalyanam. Sri Vaikuntanathji Mandir, New Delhi.
திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
* * *

12 கருத்துகள்:

  1. உங்கள் பதிவின் மூலம் தமிழில் இருக்கும் பல இறை இலக்கியங்கள் தெரிய வருகின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. மூன்றாவது ஆடிவெள்ளியினை முன்னிட்டு,
    மூவாத் தமிழில் -முதுநெல்லிக்கனியாய் சுவைக்கும்
    முத்தமிழ் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான பாடல் பகிர்வு.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..நன்றி.

      நீக்கு
  4. சூடிக் கொடுத்த சுடர்கொடியின் படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
    தெய்வீகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அருகிருந்து அவள் இயக்குவதைப் போல உணர்கின்றேன்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..நன்றி.

      நீக்கு
  5. சில மாதங்களுக்கு முன் ஆண்டாளின் திருப்பாவையை முழுமையாகப் படித்து நிறைவு செய்தேன். இருப்பினும் புகைப்படங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் தங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. தெரியாத விசயங்களெல்லாம் தங்களால் அறியமுடிகிறது நன்றி.
    நண்பரே தங்களது வலைப்பூவில் இணைக்க முடியவில்லை இதனால் எனக்கு பதிவுகள் உடன் தெரிவதில்லை யூகத்தின் பேரில் நானாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர்..
    வலைப்பூவில் இணைவதில் எங்கோ குறை உள்ளது அது என்ன என்று தெரியவில்லை. இது குறித்து அறிந்தவர் யாரும் அருகில் இல்லை.. சரி செய்து விடுகின்றேன்..
    தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..