நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 03, 2013

கணபதி அக்ரஹாரம்

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..


கணபதி வீற்றிருந்து அருள் புரியும் திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!...

அவற்றுள் பழம் பெருமையுடன் சிறப்பாக - விளங்கும் திருத்தலம்,

கணபதி அக்ரஹாரம்!..

அகத்திய மாமுனிவர் - குடகு மலையில் தவமிருந்த சமயம், நதிப்பெண்கள் ஒன்று கூடி உலா கிளம்பினர். அவர்களுள் துள்ளலும் துடிப்புமாக இருந்தவள் காவிரி. 

விதியின் விளையாட்டால், இளம் மங்கையரின் ஆட்டமும் பாட்டும் மகாமுனிவரின் தவத்தைக் கெடுத்தன. அகத்தியர் விழித்து நோக்கினார். 

காவிரி - ஒருத்தியைத் தவிர, மற்ற எல்லாரும் திகைத்து ஒதுங்கினர். காவிரியோ - அகத்திய மாமுனிவரின் வடிவத்தைக் கண்டு சிரித்தாள்.  

அவளது அறியாமையை உணர்ந்த முனிவர்,  அவள் திருந்தவும் அவளால் வையகம் வளங்கொண்டு பொருந்தவும் திரு உளங்கொண்டார். விளைவு - 

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தில் நீராக - சிறைப்பட்டாள்!..

அதைக் கண்டு, அஞ்சி நடுங்கிய மற்றவர்கள் ஓடிச்சென்று - நின்ற இடம் இந்திர சபை. தேவேந்திரன் மற்றவர்களுடன் கூடி ஆலோசித்தான். நான்முகன் கூறினார். 

''..காவிரிப் பிரச்னை தீர வேண்டும் என்றால்  - கணபதியின் திருவடிகளைச் சரணடையுங்கள்!..'' - என்று.

தேவர்கல் எல்லாரும், ஓடிச் சென்று - உமை மைந்தனின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கினர். 

''அஞ்சேல்!..'' - என்று அபயம் அளித்தார் ஐங்கர மூர்த்தி.

அதன்பின்  - ஒரு சுபயோக சுப தினத்தில், காக்கை வடிவங் கொண்டு - அகத்தியரின் அருகிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார் - பெருமான்.


சிறைப்பட்டுக் கிடந்த காவிரி - சிரித்த முகத்துடன் வெளிப்பட்டாள்.

''..தம்மை மீறி ஒரு காக்கை  இச்செயலைச் செய்வதா!..'' எனக் கோபங்கொண்ட அகத்தியர், தவம் கலைந்து எழுந்தார். அந்தப் பொல்லாத காக்கையோ - இளம் பாலகனாக மாறி, கைக்கெட்டும் தூரத்தில் நின்றது!..

''..யாரடா.. நீ .. மாயக்காரன்!..'' - என்று தாவிப் பிடித்து, 

''..இத்தனை தலைக்கனமா உனக்கு!..'' - என்றபடி, தலையில் ''நறுக்''  என குட்டினார்.

குதுகலத்துடன் சிரித்தபடி - தன்னுருவம் காட்டி மறைந்தார் கணபதி!..

அவவளவு தான்!.. தடுமாறிப் போனார் தவமுனிவர். ஒருகணம் சிந்திக்காமல் செயல் பட்டதை உணர்ந்தார். கண்ணீர் பெருகியது.

''..ஐயனே!.. என்பிழை பொறுத்தருள்க!..'' - எனப் பணிந்தார்.

''..அகத்தியரே!.. முதலில் காவிரியை வாழ்த்தி விடை கொடுத்தருளுங்கள். அவளும் அவளால் இந்த அவனியும் பெருமை கொள்ளட்டும்!..'' - என்று பெருமான் திருவாய் மலர்ந்தார்.

''..காவிரி மடந்தாய்!.. துடுக்குடன் செருக்குற்றுத் திரிந்தாய்!.. அதனால், என் கமண்டலத்தினுள்  சிறைப்பட்டுக் கிடந்தாய்!.. ஐங்கரன் அருளால் சுதந்திரம் அடைந்தாய்!.. அன்பும் அருளும் பெற்றுப் பொலிந்தாய்!.. இனி, தமிழகத்திற்கு நீயும் ஒரு தாய் எனச் சிறந்தாய்!.. நலந்திகழ நெடுவழி நடந்தாய்!.. நடந்தாய் வாழி காவேரி!.. நாடெங்குமே சிறக்க நன்மையெல்லாம் செழிக்க.. நடந்தாய் வாழி காவேரி!..'' - என்று வாழ்த்தி மகிழ்வுடன் காவிரிக்கு விடை கொடுத்தார்.

ஆயினும், மனம் ஆறவில்லை. முதற்பிள்ளையின் உச்சியில் குட்டிய சோகம் தீரவில்லை!..  காவிரி சென்ற வழியிலேயே நடந்தார். அவள் சென்ற வழியெல்லாம் மங்கலம் விளைந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தார்.  பற்பல திருத்தலங்களைத் தரிசித்தபடி சென்றவர் - செல்வக் கணபதியைக் கண்டு கைகூப்பித் தொழும் வேளையும் வந்தது.

காவிரியின் வடகரையில் மாஞ்சோலைகள் அடர்ந்திருந்த வனப்பகுதியில் விநாயகப் பெருமான் தரிசனம் அளித்தார். அகத்திய மாமுனிவர் ஆனந்தக் கண்ணீர்  பெருகி வழிய, பணிந்து வணங்கினார்.

''..ஐயனே!.. கவலை வேண்டாம்!.. உம் பிழை பொறுத்தோம்!..''

''..ஆனாலும் ஸ்வாமி!.. இளம் பாலகனாக நின்ற உம்மை அறியாமல் பாலன் என்றும் பாராமல், பலங்கொண்டு உச்சியில் குட்டி- பெருந்தவறு புரிந்தேனே!..''

''..ஆயினும் - தாயினும் நல்லாளாக - காவிரி, வளம் கொடுக்கின்றாள்!.. மண்ணும் மக்களும் நலம் பெறுகின்றனர்!.. இதுவே நமக்கு மகிழ்ச்சி!.. உயிர்கள் இன்புற்று வாழ நாம் எதையும் ஏற்றுக் கொள்வோம்!.. இனி.. இது முதற்கொண்டு நீர் - எமை வழிபடும் போது, உமது சிரசில் குட்டிக் கொள்ளும்!..''

விநாயகப் பெருமான் - அகத்தியரை வாழ்த்தினார்.

அகத்தியர் வழிபட்ட ஸ்ரீ கணபதி
- இப்படி, அகத்திய மாமுனிவர், விநாயகப் பெருமானை வணங்கி நின்ற திருத்தலம் தான்  - கணபதி அக்ரஹாரம்!.. 

அகத்திய மாமுனிவரைக் குருவாகக் கொண்டுதான் நாமும் , தலையில் குட்டிக் கொண்டு விநாயகப் பெருமானை வணங்குகின்றோம்!..

கணபதி ஸ்தலங்களில் சிறப்புடையதும் , அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான பெருமையுடைய - இத்தலத்தின் பெருமையை உணர்ந்த கெளதம மகரிஷி கணபதியை பூஜித்து  - நித்ய மங்கல ஸ்வரூபத்தினை - காவிரிக்குப் பெற்றுத் தந்தார்.

உற்சவமூர்த்தி
இத்திருக்கோயிலில் மாதந்தோறும் வளர்பிறைச் சதுர்த்தியில் - காலையில் அபிஷேக ஆராதனையும் , மாலையில் ஸ்வாமி திருவீதி எழுந்தருளலும் நிகழ்கின்றது. தேய்பிறைச் சதுர்த்தியாகிய சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.  விரதம் இருந்து வரும் அன்பர்கள் - பூஜையில் கலந்து கொண்டு விரதம் நிறைவு செய்வார்கள். 

கணபதி அக்ரஹாரத்தில் - விநாயக சதுர்த்தி அன்று, மக்கள் அனைவரும் தத்தம் இல்லங்களில் சதுர்த்தி வழிபாடு செய்யாமல் கணபதியின் ஆலயத்தில் ஒன்று கூடி, அங்கேயே பெருமானுக்கு நிவேத்யங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்து மகிழ்கின்றனர். 

விநாயக சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழாவாக நிகழ்கின்றது. நாளும் காலை மாலை வேளைகளில் - திருவீதி உலா சிறப்புடன் நிகழ - ஒன்பதாம் நாள் தேரோட்டம். 

விநாயக சதுர்த்தி அன்று பதினெட்டு காலம்  பூஜிக்கப்பட்ட புனித கலச நீரால் மஹாஅபிஷேகம் நிகழ்வுறும். அதன்பின் மக்களுக்கு மகத்தான அன்னதானம். 

மறுநாள் மாலையில் கண்ணாடிப் பல்லக்கில் வீதி உலா. ஊஞ்சல் சேவை மற்றும் மஞ்சள் நீராட்டு என மங்கலகரமாக திருவிழா இனிதே நிறைவுற - ஸ்ரீவிநாயகப்பெருமான் ஆஸ்தான பிரவேசம் கொள்வார்.

கணபதி அக்ரஹாரம் - தஞ்சையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன. கண்டியூர், திருவையாறு , திருப்பழனம், திங்களூர் - தலங்களை அடுத்து உள்ளது.

கும்பகோணம் - திருவையாறு பேருந்துகள் கணபதி அக்ரஹாரம் வழியாகத் தான் இயங்குகின்றன.

சோழ மண்டலத்தில் சிறப்புற்று விளங்கும் இத்திருக்கோயில் - நாயக்க, மராட்டிய மன்னர்களால் வணங்கப்பட்ட பெருமை உடையது.


அகத்திய நாடியில் இத்திருக்கோயிலைப்பற்றிய விவரங்கள் உள்ளதாகவும், 

ஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் இத்தலத்துக்கு விஜயம் செய்த போது -  ''..மூலவர், மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட செய்தியைக் கூறியதுடன்- திருப்பணிக் காலங்களில் மூலஸ்தானம் மிக கவனத்துடன் திருப்பணி செய்யப்படவேண்டும்!..''- என அருளியுள்ளதாகவும்,  திருக்கோயில் வரலாறு கூறுகின்றது.

காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் இஷ்ட மூர்த்திகளுள் - கணபதி அக்ரஹாரத்தின் பிள்ளையாரும் ஒருவர்.

கணபதியை கைகூப்பித் தொழுவோம்!..
கவலையெல்லாம் நீங்கப் பெறுவோம்!..

ஓம் கம் கணபதயே நமஹ:

11 கருத்துகள்:

  1. கணபதி அக்ரஹாரம் திருத்தலம் உட்பட விளக்கங்கள் மிகவும் அருமை...

    மிக்க நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. ஒரு கால் நூற்றாண்டு தஞ்சை புண்ய பூமியிலே இருந்திருந்தாலும்,
    கணபதி அக்ரஹாரம் வழியே பல முறை சென்று இருந்தாலும்,
    அந்த கோவிலுக்கு ஏனோ சென்றதே இல்லை.

    அடுத்த முறை தஞ்சைக்கு வரும்போது, ( எப்போதோ ?) கணபதியைத் தரிசிக்கவேண்டும்.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்!.. கணபதி நிச்சயம் தரிசனம் தந்தருள்வார்!..

      நீக்கு

  4. எத்தனை எத்தனைக் கோயில்கள்.! எத்தனை எத்தனைக் கதைகள்.! இங்கெல்லாம் செல்லவும் அருள் பெறவும் எத்தனை எத்தனைப் பிறவிகள் தேவையோ. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. வாழ்க்கைத் தத்துவங்களின் உருவம் தான் கணபதியின் திரு உருவம்!..நிச்சயம் இப்பிறவியிலேயே கணபதியின் தரிசனம் கிட்டும்!.. ஐயன் அருளுண்டு என்றும் பயமில்லை!..

      நீக்கு
  5. மனம் இனிக்க மகிழ்வான தகவல்கள் பகிர்ந்துள்ளீர்கள் .மூன்று முறை
    தலையில் குட்டிக் கும்பிடும் போதும் அதன் அர்த்தம் இதுவாக இருக்கும்
    என்று அறியாதவர்க்கும் எம்பருமான் தில்லைக் கூத்தனின் அன்புருவான
    கணபதிக்கு இத்தனை ஆலயங்களும் சிறப்பம்சம் பெற்றவை என்று வாசித்து
    உணரும் போது மேலும் மேலும் ஆலயங்களின் சிறப்பினைக் கண்டு மனம்
    வியந்து போகும் அளவிற்கு இப் பகிர்வு அமைத்துள்ளது ! வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் ஆன்மீகத் தேடல் அழகாகத் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்!..மேன்மேலும் சிறப்பான தகவல்களைத் தந்திட பெருமான் துணை புரிய வேண்டும்!..அதனால் எல்லாருக்கும் நன்மைகள் விளைந்திட வேண்டும்!..தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. காவிரிப் பிரச்னை தீர வேண்டும் என்றால் -
    கணபதியின் திருவடிகளைச் சரணடையுங்கள்!..'' - என்று.

    அருமையான வழியை காட்சிப்படுத்திய
    சிறப்பான பகிட்வுகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு
  7. I was born in the samll village in the year 3.4.1962 so my name is Ganesan in this village each and every house in Ganesan it's lot of confusion to identify the person very famous temple all are settle well in this god mahaganapathy each and every person pay their first salary to this god



    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..