திரு. அனந்தநாராயணன் அவர்கள் Fb ல் வழங்கிய பதிவு - இது..
திரு. கேஜி கௌதமன் அவர்கள் வழியாக எனக்குக் கிடைத்தது...
மனதைக் கவர்ந்த அந்தப் பதிவு
சற்றே அலங்காரங்களுடன்
நமது தளத்தில்!..
***
போகும் வழியில் ஒரு மின்கம்பம்..
அதில் சிறு காகிதத் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது..
எதற்காக இந்தத் தாள்?.. என்ன அதில் எழுதியிருக்கு!?..
- என்ற ஆர்வத்தில் நானும் அருகில் போய்ப் படித்தேன்...
அந்தக் காகிதத்தில் -
என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை..
இப்படிக்கு அஞ்சலையம்மாள்..
- என்றபடிக்கு விலாசத்துடன் எழுதப்பட்டிருந்தது..
எனக்கும் பொழுது போகவில்லை..
குறுகலான வழி..
எதிர்ப்பட்ட ஒருவரிடம் இந்த விலாசத்தைக் கூறி வழி கேட்டேன்..
இந்த அம்மாவா!.. கொஞ்ச தூரம் போனால் பழைய வீடு ஒன்றிருக்கும்.. அங்கே தான் இந்த அம்மா இருக்காங்க!..
- என்றார்..
அவர் காட்டிய வழியில் நடந்தேன் நான்..
வழி காட்டியவர் பழைய வீடு என்று சொன்னார்..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..
அது கீற்றுக் கொட்டகை..
வெயிலில் தூளாகிப் போயிருந்தது.. மழைத் தூறல் விழுந்தால் தண்ணீரோடு போய் விடும்..
அந்தக் கொட்டகையின் வாசலில் அந்த மூதாட்டி..
எலும்பும் தோலுமாக - குழி விழுந்த கண்களுடன்..
காலடி சத்தம் கேட்டதும் -
யாரப்பா நீ!.. - என்றார்கள்..
அம்மா.. இந்த வழியாக வந்தேன்.. வழியில் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது.. உங்களுடையதாக இருக்கலாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்..
அதைக் கேட்டதும் அந்த மூதாட்டியாரிடமிருந்து விசும்பல்..
ஒட்டி உலர்ந்த கன்னங்களில் கண்ணீர்..
ஏனம்மா அழுகின்றீர்கள்?.. - என்றேன் அதிர்ச்சியுடன்..
தம்பீ.. ரெண்டு நாளா இந்த மாதிரி தான்.. முப்பது முப்பத்தைஞ்சு பேராவது இருப்பாங்க..
அம்மா... கீழே இந்தப் பணம் கிடந்தது.. உங்க கிட்ட கொடுத்துட்டுப் போகலாம் ..ன்னு வந்தேன் ..ன்னு சொல்றாங்க..
உண்மையில என்னோட பணம் ஏதும் காணாம போகலை.. அந்தக் கடுதாசியும் நான் எழுதலை.. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுப்பா!..
ஊரார் பணம் எனக்கு எதுக்குடா.. ராசா!..
மறுபடியும் அதிர்ந்தேன்..
பரவாயில்லைம்மா.. நீங்க இதை வெச்சிக்குங்க!..
அவர்கள் கையில் பணத்தைக் கொடுத்ததுடன் தொட்டுக் கும்பிட்டு விட்டு நடந்தேன்..
பின்னாலிருந்து அந்த மூதாட்டியின் குரல் கேட்டது..
தம்பீ.. நீ போறப்போ.. அந்த லைட்டு மரத்துல கட்டியிருக்குற கடுதாசிய கிழிச்சுப் போட்டுடு!.. மறந்துடாதேப்பா!..
ஆகட்டும்.. அம்மா!..
அந்தக் கடிதம் தொங்கிக் கொண்டிருக்கும்
மின் கம்பத்தினைக் கடந்து - நடந்தன என் கால்கள்..
மனதில் பலவிதமான எண்ணங்கள்..
யார் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்கள்?..
அந்தக் கடிதத்தைக் கிழித்து விடுங்கள்..
- என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் சொல்லியிருக்கக் கூடும்..
ஆனால், யாரும் அப்படிச் செய்த மாதிரி தெரியவில்லை..
ஆதரவுக்கு என்று யாரும் இல்லாமல் வாழும் ஓர் உயிருக்கு
அன்பின் இனிய வார்த்தைகளால் உதவி செய்திருக்கிறார் ஒருவர்..
அந்த நல்லவருக்கு மனதால் நன்றி சொல்லிக் கொண்டேன்..
நன்மை செய்யவேண்டும்!..
- என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்..
அண்ணே!.. இந்த விலாசம் எங்கே..ன்னு சொல்ல முடியுமா?..
வர்ற வழியில் இந்த ஐம்பது ரூபாய் கிடந்தது..
அந்த அம்மா கிட்டே கொடுக்கணும்.. வழி சொல்லுங்களேன்?...
அந்த குறுகலான வழியில் எதிர்ப்பட்டவர் என்னிடம் கேட்டார்...
மனித நேயம் மலர்கின்றது!.. - என்ற மகிழ்ச்சியுடன்
அஞ்சலையம்மாள் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினேன்..
வாழ்க நலம்!..
***

















