நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 
வியாழக்கிழமை
நாளை
ஸ்ரீ சுந்தரர் குருபூஜை
சுந்தரரும்
சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலாய மாமலையில் முக்தி பெற்ற நாள்..
ஸ்வாமிகள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே..
சமயத்தின் முன்னோடிகளைப் போல இவரும் முதலை உட்கொண்ட பாலகனை மீட்டளித்துள்ளார்..
குண்டையூர் கிழார் அளித்த நெல்லை ஆரூர் மக்களுக்கு  என்று வீடுகள் தோறும் பூத கணங்களைக் கொண்டு நிறைத்திருக்கின்றார்...
மனிதர்களுடன் வாழ்ந்திருந்த காரணத்தால் பரவை நாச்சியாருடனான முதல் திருமணத்தை மறைக்க முயன்ற பிழையைச் செய்து அதற்கான தண்டனையும் ஈசனிடம் பெற்றிருக்கின்றார்..
வனப்பகை, சிங்கடி எனும் ஏழைச் சிறுமியரை தன் மகள்களாக ஏற்றுக் கொண்டு அன்பு காட்டியிருக்கின்றார்... 
கரை புரண்டு ஓடிய காவிரி கூட  - திரு ஐயாற்றில் வழி விட்டு ஒதுங்கியிருக்கின்றாள்...
இன்னும் பற்பல அற்புதங்கள் சுந்தரர் வாழ்வில்.. 
எல்லாவற்றையும் தற்சமயத்தில் தட்டச்சு செய்ய இயலாதவனாக இருக்கின்றேன்..
இவர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் 3800.. நமக்குக் கிடைத்திருப்பவை நூறு திருப்பதிகங்கள் மட்டுமே..
காஞ்சி எனப்படும் கச்சி ஏகம்பத்தில் 
அருளிச்செய்து - இடக் கண்ணில் பார்வை 
பெற்றதான திருப்பதிகம்..
ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 61
கண் நலம் கூட்டுகின்ற 
திருப்பதிகம்
 ஆலம் தான்உகந்து அமுது செய்தானை	
  ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்	
சீலந் தான்பெரி தும்முடை யானைச்	
  சிந்திப் பாரவர் சிந்தையு ளானை	
ஏல வார் குழலாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற	
கால காலனைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  1  
உற்ற வர்க்கு உத வும்பெரு மானை	
  ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்	
பற்றி னார்க்கென்றும் பற்றவன் தன்னைப்	
  பாவிப்பார் மனம் பாவிக்கொண் டானை	
அற்றமில் புகழாள் உமை நங்கை	
  ஆதரித்து வழிபடப் பெற்ற	
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  2  
திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்	
  செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்	
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்	
  காம னைக்கன லாவிழித் தானை	
வரிகொள் வெள் வளையாள் உமை நங்கை	
  மருவி ஏத்தி வழிபடப் பெற்ற	
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  3  
குண்ட லந்திகழ் காதுடை யானைக்	
  கூற்று தைத்த கொடுந்தொழி லானை	
வண்டலம்புமலர்க் கொன்றையி னானை	
  வாள ராமதி சேர்சடை யானைக்	
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை	
  கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற	
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  4  
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை	
       வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை	
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை	
        அரும றையவை அங்கம்வல் லானை	
எல்லையில் புகழாள் உமை நங்கை	
       என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற	
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்	
       காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 5  
திங்கள் தங்கிய சடையுடை யானைத்	
  தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்	
சங்க வெண்குழைக் காதுடை யானைச்	
  சாம வேதம் பெரிதுகப் பானை	
மங்கை நங்கை மலைமகள் கண்டு	
  மருவி ஏத்தி வழிபடப் பெற்ற	
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  6  
விண்ண வர்தொழு தேத்தநின் றானை	
  வேதந் தான்விரித் தோதவல் லானை	
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை	
  நாளும் நாம்உகக் கின்ற பிரானை	
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற	
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  7 
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்	
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்	
  பாலோடு ஆனஞ்சும் ஆட்டுகந் தானை	
அந்தமில் புகழாள் உமை நங்கை	
  ஆத ரித்து வழிபடப் பெற்ற	
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  8  
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்	
  வாலி யபுரம் மூன்றெரித் தானை	
நிரம்பி யதக்கன் தன்பெரு வேள்வி	
  நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்	
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
  பரவி யேத்தி வழிபடப் பெற்ற	
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்	
  காணக் கண் அடியேன் பெற்றவாறே..  9 
எள்கல் இன்றி இமையவர் கோனை	
  ஈசனை வழிபாடு செய்வாள்போல்	
உள்ளத் துள்கி உகந்து உமை நங்கை
  வழிபடச் சென்று நின்றவா கண்டு	
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி	
  வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட	
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்	
  காணக் கண் அடியேன் பெற்ற வாறே..  10  
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்	
  பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்	
கற்ற வர்பர வப்படு வானைக்	
  காணக் கண் அடியேன் பெற்ற தென்று	
கொற்றவன் கம்பன் கூத்தன்எம் மானைக்	
  குளிர்பொழில் திரு நாவல் ஆரூரன்	
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்	
  நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11
திருச்சிற்றம்பலம்
சுந்தரர் திருவடிகள் போற்றி
சேரமான் பெருமாள் நாயனார் 
திருவடிகள் போற்றி
ஓம் சிவாய நம ஓம்
**



திருச்சிற்றம்பலம்.
பதிலளிநீக்குஅழகிய பாசுரங்கள்.
எனக்கும் கண்புரை தொல்லை கொடுப்பதால் நானும் உருகி வாசித்தேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
பாசுரங்கள் பாடிக்கொண்டோம்.
பதிலளிநீக்கு"சுந்தரரும்
சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலாய மாமலையில் முக்தி பெற்ற நாள்.." வணங்குகிறோம் அவர்கள் பாதம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா