நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2021

திருவடி மண்

   

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
நம் நாட்டின்
எழுபத்தைந்தாவது
சுதந்திரத் திருநாள்..

அனைவருக்கும்
அன்பின் இனிய
சுதந்திரத் திருநாள்
நல்வாழ்த்துகள்..


இந்நாளில்
இம்மண்ணிற்காக
எண்ணரும்
தியாகங்களைப் புரிந்த
உத்தமர்கள் அனைவரையும்
நன்றியுடன்
நினைவு கூர்வோம்..


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே  -  அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே  -  அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே  -  இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ  -  இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று வணங்கேனோ!..
-: மகாகவி பாரதியார் :-


இத்துடன்
இன்றைய சூழ்நிலையை
மனதில் கொண்டு
எளியேன் தொடுத்த
சிறு பாமாலையையும்
இப் புனித மண்ணிற்கு
சூட்டி மகிழ்கின்றேன்..


வேதங்கள் விளைவாகி
விரிகதிர் போலெங்கும்
விரிவாகி வந்ததிந்த மண்..
பேதங்கள் நினையாத
பெரியோர்தம் தன்மையால்
தலையாகி நின்றதிந்த மண்..

அறவோரும் மறவோரும்
அன்னையாய்த் தொழுதிட
அன்பினில் ஆன்றதிந்த மண்..
நாத் தழும்பேறிட நாத்திகம்
மொழிந்தோர்க்கும்
நல்லநீர் தந்ததிந்த மண்..

விழுதாகி நிற்போர்க்கு
நிழலாகி நலந்தந்து
நீள்புகழ் தந்ததிந்த மண்..
பழுதாகிப் பண்பினில்
பாதகம் புரிந்தோர்க்கும்
இதமாகி நின்றதிந்த மண்..

நடுவென்று வாழ்ந்தோர்க்கும்
நாடென்று எழுந்தோர்க்கும்
நானென்று நின்றதிந்த மண்..
நல்லவர்கள் வல்லவர்கள்
சொல்லாலும் செயலாலும்
சுடரெனப் பொலிந்ததிந்த மண்..

மூவரும் வில் கொண்டு
பனிமலை செல்கையில்
சீர்கொண்டு நின்றதிந்த மண்..
பாவலர் சொல் கொண்டு
பாமாலை சூட்டிடப்
பேர் கொண்டு நின்றதிந்த மண்..

சோறாகி நீராகி
சுவர்க்கமும் தானாகி
சுதந்திரம் ஆனதிந்த மண்..
ஈறாகி முதலாகி
முன்வரும் நினைவாகி
நிரந்தரம் ஆனதிந்த மண்

பொன்கொள்ளும் ஆசையில்
புரவியில் வந்தோர்க்கும்
புகலாகி இருந்ததிந்த மண்..
மண்கொள்ளும் ஆசையில்
கடலேறி வந்தார்க்கும்
கரையாகி நின்றதிந்த மண்..

சீர்கொண்ட ஸ்ரீராமன்
செம்மையாய் நடந்ததால்
சிறப்புறப் பொலிந்ததிந்த மண்..
ஆலிலையில் துயின்றவன்
அன்றள்ளித் தின்றதனால்
அமுதாகி அமைந்ததிந்த மண்..

புத்தர்களும் சித்தர்களும்
பொற்பாதம் வைத்திடப்
புகழாகி நின்றதிந்த மண்..
ஆழ்வாரும் அடியாரும்
அவனிக்கு நலங்கூற
நல்வழி நிறைந்ததிந்த மண்..

மண்ணல்ல கண் என்று
இசையுடன் வாழ்வோர்க்கு
பூவாகிப் பூப்பதிந்த மண்
மண்ணல்ல புண் என்று
புழுதியில் உழல்வோரை
முள்ளாகி அழிப்பதுவும் இந்த மண்..

வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்
விண்ணேகும் வேளையில்
பொன்னாக்கிக் கொள்ளும் இந்த மண்..
பொல்லாங்கு புகல்வோர்கள்
புவிநீங்கும் பொழுதினில்
புழுவாக்கித் தள்ளும் இந்த மண்..

மண்ணைப் புகழ்ந்தவர்
வீழ்ந்ததும் இல்லை
மண்ணை இகழ்ந்தவர்
வாழ்ந்ததும் இல்லை!..

மண் வாழ்க மண் வாழ்க
மாறாத வளங்கொண்டு
என்றென்றும் வாழ்க வாழ்க.
பகை வென்று பிணி வென்று
பல்வகைத் துயர் வென்று
பாரதத்தாய் என்றும் நின்று வாழ்க..
***
நம்மிடையே
இருந்து கொண்டு
நம்மையே 
இழித்தும் பழித்தும் பேசி
உண்ட அகத்தை
இரண்டகம் ஆக்கி
உயிர் வளர்க்கும்
குணமுடைய சிலருக்கு
நமது பெருமைகள்
தெரியாவிட்டாலும்
ஐக்கிய அரபு அமீரகத்தினருக்குத்
தெரிந்திருக்கின்றது..

அமீரகத்தினருக்கு நன்றி.
வாழ்க நட்புறவு..




பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும்
நனி சிறந்தனவே!..
-: மகாகவி பாரதியார் :-

வாழ்க பாரதம்
வெல்க பாரதம்

ஜெய் ஹிந்த்!..
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. மண்ணின் பெருமையை பண்பாடிக் கொண்டாடும் தமிழ் வரிகள் அருமை.  இனிய 75 வது சுதந்தர தின வாழ்த்துகள்.  அமீரகத்து நல்லுள்ளங்கள் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அழகான பதிவு. தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    தாய் மண்ணிற்காக தாங்கள் அளித்த கவிதை மிகச்சிறப்பாக உள்ளது. பூமித்தாயின் சிறப்புகளை தமிழ் எனும் அழகான மலர்களால் படிப்படியாக அழகாக தொடுத்து, அவள் பாதங்களில் பூமாலையை சமர்பித்த, உங்கள் தமிழ் புலமைக்கு என் பணிவான வந்தனங்கள். அன்னை இந்நேரம் கண்டிப்பாக மகிழ்ந்து தங்களுக்கு நல்லாசிகளை வழங்கியிருப்பாள்.

    படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அமீரகத்து நல்ல பண்புகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவர்களின் நல்ல உள்ளத்திற்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நெகிழ்ச்சியுடன் நன்றி...

      நீக்கு
  3. மண்ணின் பெருமையை சொல்லும் கவிதை மிக அருமை.

    75 வது சுதந்திர தின் நல் வாழ்த்துக்கள்!

    பாரத்தியின் பாடலும் உங்கள் பாமலையும் பாடி பாரத அனையை வணங்கி கொண்டேன்.

    காணொளி கேட்டேன். அமீரகத்து காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ஜி

    மண்ணைப் புகழ்ந்தவர் வீழ்ந்ததும் இல்லை
    மண்ணை இகழ்ந்தவர் வாழ்ந்ததும் இல்லை

    மிகவும் அருமையான வரிகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. நடுவில் சில படங்கள் வரலை. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. சுதந்திர தின வாழ்த்துகள். பதிவும் சிறப்பாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..