நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 18, 2021

அடியார்க்கும் அடியேன்

    

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மாதத்தின் 
சுவாதி நட்சத்திரம்..

தம்பிரான் தோழர் - என்று
போற்றப் பெறும்
ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
தனது நண்பர்
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலாய மாமலைக்கு ஏகி
முக்தி நலம் எய்திய நாள்..


ஸ்ரீ சுந்தரர்
இப்பூவுலகில் வாழ்ந்த காலம்
பதினெட்டு ஆண்டுகளே..

திருநாவலூரில்
சடையனார் - இசைஞானியார்
தம்பதியர்க்கு
மேலை தவப் பயனால்
திருமகவாக அவதரித்தார்..


திருமுனைப்பாடி நாட்டின் மன்னர்
நரசிங்க முனையர்
சுந்தரர் மீது அன்பு கொண்டு 
தமது மகனாக வளர்ந்தார்..


சடங்கவி சிவாச்சாரியார்
தமது மகளைத் திருமணம் முடிக்கும் வேளையில் 
இறைவனால்
தடுத்தாட்கொள்ளப்பட்டார்..

பின் மேலை வினைப் பயனால்
திரு ஆரூரில் பரவை நாச்சியாரையும்
திரு ஒற்றியூரில்
சங்கிலி நாச்சியாரையும்
மணந்து கொண்டார்..


இவ்விருவரும்
திருக்கயிலாயத்தில்
அம்பிகையின்
பணிப் பெண்களாகிய
அநிந்திதை, கமலினி ஆவர்..

நாடெங்கும் நடந்து
நற்றமிழ் பாடி
சைவம் வளர்த்ததோடு
அற்புதங்கள் பலவும்
நிகழ்த்தியுள்ளார்..


திரு அவிநாசியில்
முதலை உண்டு தீர்த்த பாலகனை
உயிருடன் மீட்டு அருளினார்..

சுந்தரர் அருளிச் செய்தவை
திருப்பாட்டு எனப்படும்..
3800 திருப்பதிகங்கள்
அருளப் பட்டதில்
நமக்குக் கிடைத்திருப்பவை
நூறு திருப்பதிகங்கள் மட்டுமே..


பித்தாபிறை சூடீபெரு
மானே அரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேன் எனலாமே.. (7.1.1)

விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.. (7.27.1)

போரா ருங்கரியின் உரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. (7.28.4)

சுந்தரர் திரு ஆரூரில்
அருளிச் செய்த
திருத்தொண்டர் திருத்தொகையே
பின்னாளில் - சேக்கிழார்
பெரிய புராணம் பாடுதற்கு
அடிப்படையாய் அமைந்தது..

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7.39.1)

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.. (7.59.1)

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ 
லந்தனில் வந்துகண் டேனே.. (7.67.5)


இந்திரன் மால்பிரமன் எழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்
தான்மலை உத்தமனே.. (7.100.9)
***
திரு அஞ்சைக் களத்தில்
இருந்தபோது திருக்கயிலாயத்திற்கு வந்து சேரும்படிக்கு
இறைவன் ஆணையிட்டு
ஐராவணம் என்னும் 
வெள்ளை யானையை
அனுப்பி வைக்க
அந்த அளவில்
சேரமான் பெருமாள் நாயனாரும்
உடன் புறப்பட்டு வர
ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
திருக்கயிலையைச்
சென்றடைந்தார்..
***

சேரமான் திருவடிகள் போற்றி..
சுந்தரர் திருவடிகள்
போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

9 கருத்துகள்:

 1. தம்பிரான் தோழரைப் பற்றிய பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. நால்வரில் ஒருவரான ஸ்ரீ சுந்தரரின் அற்புத செயல்களை பிறப்பிலிருந்து அழகாக கூறிய பதிவு. அவர் அருளிய பாடல்களை பக்தியுடன் பாடி மகிழ்ந்தேன். படங்கள் நன்றாக உள்ளன. ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் புகழைப் போற்றி,அவரருள் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ஓம் நமசிவாய..ஓம் நமசிவாய..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு.
  சுந்தரர் திருவடிகள் போற்றி.
  தேவாரங்களை பாடி வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. சுந்தரர் திருவடியைப் போற்றி நாயகனாம் சிவபெருமானைச் சரணடைவோம்...

  பதிலளிநீக்கு
 5. தம்பிரான் தோழர் பற்றிய பதிவுக்கு நன்றி. சுருக்கமாயும், விளக்கமாயும் அவர் சரித்திரத்தைக் கூறி விட்டீர்கள். சுந்தரரைப் போல் இறைவனை அதிகாரம் செய்யும் பேறு மற்ற நாயன்மார்களுக்குக் கிட்டியதில்லை. இவர் தனிச் சிறப்புடன் வாழ்ந்தவர். ஈசன் திருவடி நிழலில் நாமும் சரண் அடைவோம்.

  பதிலளிநீக்கு
 6. ஈசன் திருவடி நிழல் என்றைக்கும் உகந்தது. அவனது அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 7. முன்பெல்லாம் நண்பர்கள் குழாம் அனுப்பும் விழாக்களில் எடுத்த படங்களோடு நிறைய இடுகைகள் போடுவீர்கள். விழாக்கள் விரைவில் நடக்கவேண்டும்.

  பதிவை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. சுந்தரர் 18 ஆண்டுகள்தான் வாழ்ந்தாரா? அவர் அருளிய 3800 பதிகங்களில் 100 மட்டும்தான் நமக்கு கிடைதிருக்கிறதா? அபூர்வ தகவல்கள் அடங்கிய பதிவு.

  பதிலளிநீக்கு