நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 16, 2020

ஆநிரை வாழ்க...

பட்டி நிறையப் பால் பசுக்களைத் தாரும் அம்மா!..

திருவிளக்கு வழிபாட்டின் போது - ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் போற்றும் தோத்திர மாலையில் வரும் வேண்டுதல் இது!..

எட்டுப் பெருஞ்செல்வங்களையும் அருளும் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் உறைவிடம் திருமாலவனின் திருமார்பு!..

அந்த மாதவனின் உறைவிடமோ - 
பால் தரும் பசுக்கள் நிறைந்திருக்கும் பட்டி!..

எங்கெல்லாம் பசுக்களும் கன்றுகளும் நிறைந்திருக்கின்றனவோ - அங்கெல்லாம் ஸ்ரீ ஹரிபரந்தாமனும் உறைந்திருக்கின்றான்!...
- என்பது ஆன்றோர் திருவாக்கு..

பட்டி நிறைய பால் பசுக்கள் எனில் - அவை கன்றுகள் இல்லாமல் இல்லை..

பசுக்களும் கன்றுகளும் என்றால் செழுங்காளைகள் இல்லாமல் இல்லை!..

அப்படியெனில் அதுவே கோகுலம்!..


இல்லறத்துடன் கூடிய நல்லறம் என்பது இதுவே!..

நாமும் வாழ்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் - சேர்ந்தவைகளையும் வாழ வைப்பது..

நமக்கு வேண்டியதெல்லாமும் நம்மைச் சேர்ந்த உயிர்களுக்கும் நிச்சயம் வேண்டும்!..

நமக்கு வேண்டியதெல்லாமும் என்றவுடன் -
புற அலங்கார - ஆடம்பரப் பொருட்களைக் கருத வேண்டாம்!..

அவை - அனைத்தும் மாயை!..

தன் குஞ்சுகளுடன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் பெட்டைக் கோழிக்குக் காவலாகக் கூவித் திரியும் கொண்டைச் சேவல்...

மந்தைப் பொது வெளியில் - இளம் பசுக்களுடன் ஊடாடித் திரியும் பொலி காளைகள்...

ஒருக்காலும் தலை தாழாது - மதர்த்துத் திரியும் ஆட்டுக் கிடாக்கள்...

அவற்றின் கம்பீரமும் கர்வமும் பொருள் பொதிந்தவை!..
என்றென்றும் ஈடு இணையில்லாதவை!..

மாற்றாருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு
அந்த அழகையெல்லாம் அழித்தொழித்தவர்கள் - நாம்!..

இன்றைய உலகில் அந்தக் காட்சிகள் எல்லாம் காணக் கிடைக்காதவை..

அப்படியே - அபூர்வமாக காணக் கிடைத்தாலும்,
அவற்றைக் கண்டு மகிழத்தக்க மனோநிலையில்
நமது சமுதாயம் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது..

இயற்கை வாழ்வியலை அழித்து ஒழித்ததே -
இன்றைய நாகரிகம் எனும் போது -
தெளிவு கொண்ட மனம் நாணுகின்றது..
தலையும் தானாகத் தாழ்கின்றது..

ஆடுகளுக்கு மட்டும் ஏதோ ஒரு வரம் கிடைத்திருக்கின்றது..

அதனால் - கிடாக்கள் இன்றும் சுதந்தரமாக உலா வருகின்றன..

ஆனால் - பசுக்களும் கோழிகளும்!?..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த வெண்மைப் புரட்சியினால் - கிராமத்துப் பசுக்கள் - செயற்கை முறைக் கருவூட்டலுக்கு ஆளாகின..

படிப்படியாக - பசுக்களுக்கு காளைகளுடன் நேர்ந்த சேர்க்கை தடுக்கப்பட்டது..

ஆறறிவு எனப் பீற்றிக் கொண்டு திரியும் மனித இனத்தைப் போலவே பசுக்களுக்கும் பத்து மாத பந்தம் தான்..

பசுக்களுக்கும் மாத சுழற்சி 26 - 28 நாட்கள் தான்..

கருவுற வேண்டி - விடியற்காலைப் பொழுதில் - கட்டுத்தறியில் நிற்காமல் வாலைத் தூக்கியபடி குதிக்கும்.. வேதனைக் குரலெடுத்துக் கதறும்..

அப்படிப் பரிதவிக்கும் பசுவின் குரலையும் -
தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஏளனம் செய்து காசு பார்த்தார்கள்..


பசுக்களின் இனவிருத்திக்கென்றே
ஆதரிக்கப்படுபவை - கோயில் காளைகள்..

அவற்றுக்கு - அதைத் தவிர வேறு வேலை ஏதும் இல்லை..

கோயில் காளை இல்லாத ஊர்களில் -
பொலி காளைகளை ஊட்டமுடன் வளர்த்திருப்பார்கள்..

சூரிய உதயத்திற்கு முன்னதாகவே - கருத்தரிக்கக் காத்திருக்கும் பசுவிற்கு காளையுடன் இணை சேரும் பேறு கிட்டும்..

ஆனால், இன்று கிராமங்களில் கூட -

பசுக்களின் இனவிருத்திக்கான கோயில் காளைகள் இல்லாமல் போயின..
ஆண்மை பொங்கும் பொலி காளைகளும் வளர்க்கப்படுவதில்லை..

நிறைந்த பால்!. நிறைய காசு!.. -  என்ற ஆசை வார்த்தைகள் -
நாட்டு மாடுகளின் அழிவுக்குக் காரணமாகின..

உழவுக் காளைகளைத் தவிர்த்த ஏனைய பொலிகாளைகள் அறுகிப் போயின..

கால சூழ்நிலைகளின் மாற்றத்தால் -
மீதமாக இருந்த உழவுக் காளைகளுக்கும்
எருமைக் கடாக்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டது..

வேளாண் பணிக்கு வேறு பணிகள் நன்று!.. - எனக் கொண்டு
வேறு பலவற்றில் மக்கள் தம்மை இணைத்துக் கொண்டதும் -

உழவு இயந்திரங்கள் - வயல்வெளிகளை ஆக்ரமித்துக் கொண்டன..

வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமாக இருந்த காளைகளை
விரோதமாகப் பார்க்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டான் - விவசாயி..

விளைவு!.. -

மாடு வதைக் கூடங்கள் (Slaughter House) பல்கிப் பெருகின..

கால்நடைகளைச் செல்வங்களாகக் கொண்டாடிய நம்நாடு
இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது!..

பாரம்பர்யமான காளைகளை ஒழித்து விட்டு -
செயற்கைக் கருவூட்டலின் மூலமாக -
பாரதத்தின் கலாச்சாரத்தை அழிக்கும் வேலை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்கின்றனர் ஒருசாரார்..

செயற்கை கருவூட்டலின் மூலமாக பெறப்படும் பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து பற்பல கேடுகள் விளைகின்றன என்றும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன..

வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன் வந்த பால் -
ஒழித்துக் கட்டப்பட்டு வெகு நாளாகி விட்டது..

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பால் - பால் அல்ல!..

இன்று புழக்கத்தில் உள்ள பால் - பல பிரச்னைகளுக்குக் காரணமாகின்றது.

முன்பெல்லாம் புலால் உண்போர்க்கு கையருகில் கிடைத்தது - கோழி..

இன்றைக்கு - கோழியும் முட்டையும் நிறைவுறு வாழ்வைக் கெடுப்பவையாகி விட்டன..

நம்மைச் சுற்றியுள்ள உணவுப் பொருட்கள் பலவும்
நமக்குப் பகையாக ஆக்கப்பட்டு விட்டன..

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி -
பாராம்பர்யத்தை மீட்டெடுப்பதுதான்!..


தலை நிமிர்ந்து நின்ற தமிழர்களின் காரியங்கள் பலவும் தகைமையான தத்துவங்களை உள்ளடக்கியதாக விளங்கின..

அதற்கு சிறப்பானதொரு சான்று தான் - தை மாதத்தின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் எனும் திருநாள்.


உழவே தலையானதாகக் கொண்டு வாழ்ந்த போது - தமக்குப் பலவழிகளிலும் உற்ற துணையாக இருந்த கால்நடைச் செல்வங்களைப் போற்றி பாராட்டி மகிழ்ந்தனர் - நம் முன்னோர்

அந்த நன்றி உணர்வின் வெளிப்பாடே - மாட்டுப் பொங்கல்!..

இறைவனின் தன்மையைக் கூறும் போது - பாலுக்குள் நெய் மறைந்து இருப்பதைப் போல என்று - பாலை முன் வைத்து அப்பர் பெருமான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

இன்றைக்கு நமக்கு பொங்கல் வைக்கின்றான்!..
என்றைக்கு நம்மைப் பொங்க வைப்பானோ?..
பால் தரும் பசுக்களை - வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்று புகழ்பவள் - கோதை நாச்சியார்.


பசுக்களில் சிறப்பித்துக் கூறப்படுவது காமதேனு..
காமதேனு சிவவழிபாடு செய்ததாக நிறைய ஊர்களின் தலபுராணம் கூறும்.

அது அல்லாமல் - ஊர்க்காட்டில் மேய்ந்து திரிந்த பசு ஓடிச்சென்று மரத்தடியில் புற்றுக்குள் தானாகப் பால் சொரிந்தது - என்றெல்லாம் வழங்கப்படுகின்றது.

பால் - மங்கலகரமான பொருள்களுள் ஒன்று.
தொடக்கமும் முடிவும் அதுவே!..

கண்கள் கொண்டு அறிய முடியாதபடிக்கு அதனுள் - தயிர் மோர், வெண்ணெய் நெய் - என மேலும் நான்கு பொருட்கள் ஒளிந்திருக்கின்றன.

பாலை நன்றாகக் காய்ச்சி - உறை ஊற்றிய பின்னரே தயிர்.
தயிரை மத்தினால் - முறுக வாங்கிக் கடைந்தால் - வெண்ணெயும் மோரும்.

வெண்ணெயை உருக்கினால் கிடைத்தது - நெய்.

நெய்யை உருக்கினால் மிச்சம் என்று எதுவும் இன்றி -
பரவெளியில் கலந்து விடுகின்றது..


பாலிலிருந்து நெய் வரைக்குமான இந்தப் பயணம் தேவாரம் முழுதும் பேசப்படுகின்றது.

இத்தகைய பாலைத் தரும் ஜீவன்களுள் முதலிடத்தில் இருப்பது - பசு.


ஆ.. காட்டு... மண்ணு திங்கறயா?...
அம்மா பார்த்தால் கட்டிப் போட்டுடுவாள்!...
எருமையின் பால் பயன் பாட்டில் இருந்தாலும் அது மந்தமான தன்மையைக் கொடுப்பதால் - மங்கல காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை.

ஆயினும், பொறுமையின் அருமையைக் குறிப்பது - எருமை!..

பசும்பாலை விடவும் அதிக கொழுப்பு உடையது எருமைப் பால்.

ஆகும் வரை உபயோகப்படுத்திக் கொண்டு -
எருமையை சற்றே புறந்தள்ளி வைத்ததால் -
அந்தக் காலத்திலேயே எருமைகளின் மீது அன்பு கொண்டாள் -
கோதை நாச்சியார்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - என  எட்டாவது திருப்பாடலிலும்,

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும்..

- என்று பன்னிரண்டாவது பாடலிலும் எருமையின் அருமையைப் பேசினாள்.


எனத்தோறூழி அடியாரேத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந் தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்தமேதி காணாதுஆயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ் சென்று திரளும்சாரல் அண்ணாமலையாரே!.. (1/69)

- என்றும், 

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்தவனுக்கு அருள் புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளங்தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருஐயாறே!.. (1/130)

- என்றும் திருஞானசம்பந்தர் பரவுகின்றார்.

இப்படி - இன்னும் பல அழகிய கோலங்கள் பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கின்றன.


கோளறு திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலில் -

வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தன்னோடும் உடனாய்..

- என்று போற்றுகின்றார் ஞானசம்பந்தப்பெருமான்..

ஈசன் எம்பெருமானுக்கு நந்தியே வாகனம்!..  ஆயினும்,

ஒளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடை மேல் வீற்றிருந்து பவனி வரும் எம்பெருமான் பசுவாகிய காமதேனுவையும் வாகனமாகக் கொள்கின்றான்!..

- என்றே ஆன்றோர் சுட்டிக் காட்டுவர்.

பசு என்பது ஜீவாத்மா!.. அது செந்நெறியாகிய சிவநெறியில் செல்லும் போது சிவபெருமான் ஆரோகணிக்கும் விடை வாகனமாகின்றது.

இதைத்தான் - மனமே முருகனின் மயில் வாகனம்!..  - என்றார் கவியரசர்.

சிவபெருமானின் வாகனமாகிய காளை மிகப்பெரிய பெருமைகளை உடையது.

காளையை அறத்தின் மறுவடிவம் என்பர் - சான்றோர்.

மாடு - என, குறிக்கும் சொல் - செல்வம் எனும் பொருளையும் தருகின்றது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை. (400)

என்பது ஐயன் திருவள்ளுவரின் அருள்வாக்கு...

ஸ்ரீ கிருஷ்ணனின் இளம் பருவம் மாட்டு மந்தையிலேயே கழிந்தது..அந்த காலத்தில் ஒரு நாட்டில் போர்ப் பறை முழங்கும் முன் - 
பகையாளியினுடைய ஆநிரைகளைக் கவர்ந்தல் என்பது
வரலாற்றில் சொல்லப்படுகின்றது... 

மகாபாரதத்திலும் -
விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த பஞ்ச பாண்டவர்களை வெளிக்கொணர்வதற்கு - துரியோதனாதிகள் -
விராட தேசத்தின் பசுக்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

ஈசன் - காளையைக் கொடியாகக் கொண்டு அற்றார்க்கு அருளி நிற்பவன்.

அவன் திருவடியில் கிடக்கும் காளையும் -
அவ்வண்ணமே அருங்குணத்தினை உடையது.

அறத்தின் வடிவாகிய காளையும் அதன் வம்சமும் அற்றார்க்கு உதவி நிற்பன. தம்மை ஆதரிப்பவரை வாழ வைக்கும் தன்மை உடையன.

அதனால் தான் -

தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு..
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு!..

- என்று கவிஞர் மருதகாசி அவர்கள் பாடல் இயற்றினார்.

இத்தகைய ஆனினங்களிடம் இருந்து பாலைக் கறப்பதுடன் தோலையும் உரித்துக் கொள்கின்றது மனித சமுதாயம். 

உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் உதிரச் சேற்றில் தள்ளி - அவற்றின் இறைச்சியையும் உடைமையாக்கிக் கொள்கின்றது.

இப்பொழுதும் கடும் உழைப்பாளிகளைச் சொல்லும் வார்த்தைகள்,

மாடாக உழைத்து ஓடாகத் தேய்கிறான்!..  - என்பதே!..

ஆனால், அந்த நிலையில் மாடாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் கடைசிப் புகலிடம் அடிமாடு என்பது வேதனைக்குரிய நிலையே!..


சைவ நெறிகளில் நந்தி என போற்றுதலுக்குரியது - காளை..

ஆண்மைக்கோர் எடுத்துக்காட்டு - காளை..

ஈசன் எம்பெருமானையே - காளை என வர்ணிக்கின்றார் திருநாவுக்கரசர்..

அதிகார நந்தி என்பது உயரிய திருக்கோலம்..

காளையின் முகத்துடன் விளங்கும் நந்தியம்பெருமான் தான் சைவத்தில் - முதற்குரு!..

நந்தியம்பெருமானின் அனுமதியுடன் தான் சிவ தரிசனம் என்பது ஐதீகம்.

அம்பிகைக்கு எப்போதெல்லாம் ஈசன் - ஞான விளக்கம் அளிக்கின்றாரோ - அப்போதெல்லாம் அருகிருக்கும் சிறப்பினை உடையவர் நந்தியம்பெருமான்.

ஊழிக் காலத்தில் - அம்பிகை உட்பட - சகலமும் ஈசன் திருமேனியில் ஒன்றி விடும் போது - ஈசனுடன் தனித்திருப்பவர் நந்தியம்பெருமான் மட்டுமே.

நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நர்த்தனம் ஆடி ஊழி சங்காரத்தை நிறைவு செய்வதாக ஞான நூல்கள் பேசுகின்றன.


ஹரப்பாவில் கிடைத்த காளை சின்னம்
ஆதி மனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாக இணங்கியவை ஆநிரைகள்!.
ஆநிரைகள் என்றென்றும் இல்லறத்தானுக்கு உரியவை..

மனிதன் பலவேளைகளில் காட்டு விலங்காகின்றான்.. 
ஆனால், ஆநிரைகள் ஒருபோதும் காட்டு விலங்குகளாவதில்லை..

ஆநிரைகள் இல்லறத்தார்க்குக் கிடைத்த செல்வங்கள்!..
அவற்றுக்குக் குறையேதும் நேராமல் பார்த்துக் கொள்வது நமது கடமை!..


கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசயமங்கையே!.. (3/17)

என்று பசுக்களைச் செல்வமாகப் புகழ்ந்துரைக்கின்றார் திருஞானசம்பந்தர்..

அந்தணர் என்போர் அறவோர் - என்று திருவள்ளுவர் குறித்தாற்போல,

அறவோரை அந்தணராகக் கொண்டு திருப்பதிகம் பாடும்போது -
வாழ்க ஆனினம்!.. - என்றும் வாழ்த்துகின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்..

ஆநிரைகள் வாழ்ந்தால் அதனை அண்டியுள்ள
மக்களும் நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்..

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போமாக!..

ஆநிரைகளை அன்புடன் ஆதரித்து 

அவற்றின் நல்வாழ்வினுக்கு
வேண்டிக் கொள்வோமாக!..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. நீண்ட பதிவில் உங்கள் ஆதங்கங்களையும், ஆநிரைகளின் பெருமையையும் விளக்கமாக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.  உணர்ந்து படித்தேன்.  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்களுக்கு நல்வரவு...

   இந்தப் பதிவு கூட பழையது தான்...
   சற்று ஒழுங்கு செய்து கொடுத்துள்ளேன்...

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. மனிதனைப் போல மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை மறந்து விட்டனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
   அன்பின் நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 4. விரிவான பதிவு.
  மிக சிறப்பு பதிவு.
  ஆநிரைகளை போற்றி பாதுகாக்கப் பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. சற்றே நீண்ட பதிவு என்றாலும் உங்கள் மனத்தில் ஊறிக் கிடக்கும் எண்ண ஓட்டங்களை இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு. பலவற்றை இழந்து வருகிறோம் என்று எண்ணும்போது மனதில் வலி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..