நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 08, 2019

வரந்தரும் வரதன் 1

விருந்தினர் பக்கம் - 7

அன்பிற்குரிய நெல்லைத் தமிழன் அவர்கள்
நமக்கெல்லாம் ஸ்ரீ அத்தி வரத ஸ்வாமி தரிசனம் செய்து வைக்கின்றார்..

அவரது அனுபவம் அழகிய வண்ணமாக -
இன்றைய விருந்தினர் பக்கத்தில் மலர்கின்றது...

வாருங்கள் அவரைப் பின் தொடர்வோம்...


***

நகரேஷு காஞ்சி என்று புகழ்பெற்ற காஞ்சி திருத்தலத்தில் ‘கச்சி நகர் வரதன்’ எனப்படும் காஞ்சீபுரம் வரதராஜர் கோவில் அமைந்துள்ளது.  வைணவர்களுக்கு, அரங்கன், வரதராஜன், திருப்பதி வெங்கடாசலபதி ஆகிய தெய்வங்கள் மிகவும் முக்கியமானவை. பழங்காலத்தில், காஞ்சீபுரத்திலிருந்து சென்ற வைணவர்கள் இத்தலங்களில் சேவை புரிந்தனர்.  தாங்கள் விட்டுவிட்டு வந்த ஊரின் நினைவாக, தாங்கள் தெய்வ கைங்கர்யம் செய்த கோவில்களிலும், தம் மனத்துக்கினியவனை ஸ்தாபிதம் செய்தனர்.

அதனால்தான் திருவல்லிக்கேணியில் அரங்கநாதன் சன்னிதியும், திருப்பதியில் வரதராஜன் சன்னிதியும் இன்றும் காணமுடிகிறது.. காஞ்சீபுரம் வரதராஜர் கோவிலின் மூலவர், வரதராஜர். இவர் தனக்குச் சேவை செய்துவந்த திருக்கச்சி நம்பிகளிடம் திரைக்குப் பின்னால் இருந்து பேசியவர்..
அத்திவரதர், அத்திமரத்தால் வடிவமைக்கப்பட்டு அஸ்திகிரி எனப்படும் அத்திகிரி கோவிலின் விமானத்தின் கீழே பதினாறாம் நூற்றாண்டுவரை மூலவராக இருந்தார். இவரையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் (ஆழ்வார்கள், ஜீயர்கள் போன்றவர்கள் இறைவனைத் தரிசிப்பதை ‘மங்களாசாசனம்’ என்று குறிப்பர்) செய்தார்கள்.


பத்தி முதலாமவற்றில் பதி எனக்குக் கூடாமல்
எத்திசையும் உழன்றோடி இளைத்து விழும் காகம்போல்
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே..

என்று வைணவ ஆச்சார்யர்களுள் ஒருவரான வேதாந்த தேசிகன் அவர்கள் பாடிப்பரவிய பேரருளாளன் இந்த அத்திவரதர்.

இஸ்லாமிய படையெடுப்பினால், மூலவரைக் காப்பாற்ற (மரத்தினால் ஆனவராதலாலும், உடைப்பது, தீவைப்பது என்று மாற்று மதத்தவர் சைவ வைணவ கோயில்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதாலும்),  கோயில் குளத்தினுள் அத்திவரதர் மறைத்துவைக்கப்பட்டார்.  இதனை ஒரு குடும்பம் மட்டுமே அறியும்.

அந்தச் சமயத்தில், உற்சவரான தேவாதிராஜனை, இன்னொரு குடும்பத்தினர் உடையார்பாளையத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டனர்.  இதற்கிடையே, அத்திவரதரை குளத்தில் மறைத்துவைத்த குடும்பத்தினர் (அவர்கள்தாம் தர்மகர்த்தாக்களாக இருந்த தாத்தாச்சார்யார் குடும்பத்தினர்) இறந்துவிட்டனர். 

இஸ்லாமிய படையெடுப்பின் கோரங்கள் முடிந்த நேரத்தில் (கிட்டத்தட்ட 30/40 வருடங்கள், கோவிலில் மூலவரும் உற்சவரும் இல்லாமல் பூஜைகள் செய்யப்படாமல் பாழ்பட்டிருந்தது), ஒரு அடியாரின் உதவியோடு, உடையார்பாளையம் வனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்திகளை மீண்டும் கோவிலுக்குள் கொண்டுவந்து பூசைகளை ஆரம்பித்தனர்.

மூலவர் அத்திவரதரைக் கண்டுபிடிக்க முடியாமல், கோவில் அதிகாரிகள், 30 கிலோமீட்டர் தொலைவில் பழைய சீவரம் என்ற ஊரில் பத்மகிரி என்ற மலையின்மேல் இருந்த கல்லால் ஆன தேவராஜப் பெருமாளை, அவர் அத்தி வரதரைப்போல் இருந்ததால் எடுத்துவந்து, மூலவராக அவரை பிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கினர்.

1700ம் வருடம் (1709 என்று சொல்கிறார்கள்), ஏதோ ஒரு காரணத்தால் கோயில் குளம் முழுவதும் வற்றவைக்கப்பட்டது (அல்லது இயற்கையாக வற்றியிருக்கலாம்). அப்போது அங்கு அத்தி வரதர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மூலவர் ஏற்கனவே பிரதிஷ்டை பண்ணி பூஜைகள் நடந்துகொண்டிருந்த காரணத்தால்,

இந்த அத்திவரதரை பேழையில் வைத்து 40 வருடங்களுக்கு (அதாவது தெய்வ மூர்த்திகள் வரதராஜர் கோவிலில் இல்லாத காலகட்டத்தைக் கொண்டு) ஒரு முறை புஷ்கரணியிலிருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலமாக 48 நாட்கள் பூஜை செய்து, மீண்டும் குளத்தில் இருத்திவிடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

வரதராஜனைப் பூசிப்பது, அவர் சயனம் கொண்டிருப்பது நாகத்தணை மேல். அவர் வசிப்பது நீரில். அதனால், அத்திகிரி வரதர், அவரது இஷ்டத்தின்பேரில் புஷ்கரணியில் மறைந்து இருந்தார் என்ற நம்பிக்கையே அத்தி வரதரை மீண்டும் புஷ்கரணியிலேயே சயனகோலத்தில் கிடத்துவதற்குக் காரணம்.

இதற்கு முன்பு அத்திவரதர் புஷ்கரணியில் இருந்து வெளியெடுக்கப்பட்டு ஒரு மண்டல பூஜை செய்யும்போது, தற்போதுள்ள மீடியாக்கள் இல்லாததால், அந்த நிகழ்வு இப்போதுபோல் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததில்லை. அதனால்தான் தற்போது இந்த நிகழ்வு மிகுந்த மக்களால் பேசப்பட்டு, முடிந்தவர்கள் அனைவரும் அந்த அத்திவரதனை தரிசிக்க முனைகின்றனர்.

கோவில் குளத்துநீர் இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு, அனுமதிக்கப்பட்ட பட்டாச்சார்ய வம்சத்தினர், அத்திவரதர் வைக்கப்பட்டிருக்கும் பேழையிலிருந்து நாகர்கள் புடைசூழ கிடந்த கோலத்தில் இருக்கும் அத்திவரதரை வெளியில் எடுத்து சுத்தம் செய்து, எண்ணெய்க்காப்பு போன்ற அலங்காரங்கள் செய்து, பிறகு செய்யவேண்டிய மந்திரரூபமானவைகளைச் செய்து பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கின்றனர். இதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது.(குளத்திலிருந்து வரதர் வெளிப்பட்டதை, பட்டர் ஒருவர் விளக்குகிறார்:
27 ஜூன் இரவு 12 மணிக்கு பணிகள் துவங்கின. 12:10க்கு இரண்டாவது படி தொட்டவுடன் சேர் பகுதி தொடங்கியது. சேரை அகற்றிக்கொண்டே இருந்து, அதிகாலை 6 மணிக்கு 6 து படி தாண்டி, வரதரின் பொற்பாதம் தெரிந்தது. அந்தச் சமயத்தில் அங்கு அனுமதிக்கப்பட்ட 70 பேர்கள் இருந்தனர். 2:45க்கு வரதரின் முக தரிசனம் கிடைத்தது. 

3:15க்கு வரதரை முழுவதுமாக வெளியே எடுத்து, துணி சுற்றப்பட்டு வசந்த மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டபிறகு அனைவரும் வெளிவந்துவிட்டனர். மூன்று நாட்கள் வரை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று 1ம் தேதி ஜூலை முதல் அனைவரும் தரிசனம் செய்ய ஆயத்தமாகும்)

வாழ்க்கையில் எதற்கும் நம்பிக்கை என்பது அவசியம்.  அப்பா என்பவரை நாம் அம்மா சொல்லித்தான் அறிகிறோம், ஏற்றுக்கொள்கிறோம். சொந்த வாழ்வில் இருக்கும் இந்த நம்பிக்கைக்கு மேலாகவே நமக்கு இறை நம்பிக்கை தேவைப்படுகிறது. அதுவே அவனை அணுகுவதற்கான முதல் படி.

என் மனைவி பெங்களூரிலிருந்து வந்த பிறகு, நாங்கள் ஜூலை 8ம் தேதிக்கு மேல், அத்திவரதரை தரிசிக்கலாம் என்று நினைத்திருந்தோம். அந்தச் சமயத்தில் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியின் உறவினர்களும் வருவதால், எல்லோரும் சேர்ந்து காஞ்சீபுரம் சென்று பேரருளாளனைத் தரிசிப்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

என் பையன் கேட்டுக்கொண்டால், நான் திரும்பவும் பெங்களூர் செல்ல வாய்ப்பு உண்டு. இந்தக் களேபரத்தில் அத்திவரதர் தரிசனம் தடைபட்டுவிடப்போகிறதே என்று 3ம் தேதி நினைத்துக்கொண்டிருந்தேன். இரவு 9 மணிக்குப் படுத்துவிட்டாலும் 12 மணி வரை ஏதோ காரணத்தால் தூக்கம் வரவில்லை.. அத்திவரதர், காஞ்சீபுரம் இவைகளே மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. 

அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து, பெண்ணுக்கு உணவைச் சமைத்துவைத்துவிட்டு, 5:30க்கு கிண்டி இரயில் நிலையம் சென்று, காஞ்சீபுரம் இரயிலைப் பிடித்து 8:15க்கு காஞ்சீபுரம் சென்றுவிட்டேன். ஸ்டேஷனிலிருந்து சிறிது நடந்துசென்று, அரசு பஸ் ஒன்றில் 10 ரூபாய் டிக்கெட்டில் பயணித்து கோவில் அருகே இறங்கிக்கொண்டேன். அங்கேயே செருப்பை ஒரு ஓரத்தில் விட்டுவிட்டு கியூவில் நின்றபோது மணி 8:40. உமதடிகள் அடைகின்றேன் என்று ஒருகால் உரைத்தவரை
அமையும் இனி என்பவர்போல் அஞ்செலெனக் கரம் வைத்து
தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும்தாம் மிக விளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே..

வரைதிரை இல்லாத அருளை வணங்கும் அத்திவரதரே..
உமது அடியிணையை நான் பணிகின்றேன்.

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

29 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  விவரங்கள் அறிந்தேன். காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.... இன்று ஒரு திருமணவிழா பயணம். அதனால் பதிலளிக்க தாமதம். அடுத்த பகுதியில் நிறைவுறும்.

   நீக்கு
 2. மின்னலென முடிவெடுத்து உடனே செயல்படுத்தியும் விட்டீர்கள். அருமை. இந்தச் சுறுசுறுப்பு எனக்கு வராத கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்... நிஜமாகவே சொல்றேன்... நாம் முனைந்து இறை தரிசனங்கள் நமக்குக் கிடைக்காது. அந்த வேளை வரும்போது தானாகவே நடக்கும்.

   சில மாதங்களுக்கு முன்பு, மாலை 7 மணிக்கு ரங்கநாத பாதுகா என்ற பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்தேன். அதில், கார்த்திகை ஞாயிறு சோளிங்கர் தரிசனம்-நங்க நல்லூரிலிருந்து வேன் புறப்படும், திரும்ப மறுநாள் காலை 10 மணிக்கு நங்க நல்லூருக்கு வந்து சேரும் என்று போட்டிருந்தது. உடனே அவர்களைத் தொலைபேசினேன். (நான் நினைத்தது அதற்கு இன்னும் ஒரு வாரம் பத்துநாட்கள் இருக்கும் என்று). அவர் உடனே, இன்றுதான் அந்தப் பயணம், இரவு 9 மணிக்கு புறப்படுகிறது, சீட் இருக்கிறது என்றார். அரை மணி நேரத்தில் குளித்து, டிரஸ் எடுத்துக்கொண்டு நான் மட்டும் புறப்பட்டு (மலையில் மனைவியால் ஏற முடியுமா என்று அப்போது சந்தேகம்) 8:45க்கு அங்கு போய்ச்சேர்ந்து மறுநாள் அதிகாலையில் சோளிங்கர் மலையில் நரசிம்மர் தரிசனம்.

   அத்தி வரதர் தரிசனமும் அதைப்போலத்தான்.

   டிரமாடிக் ஈவண்ட்ஸ் என்று சொல்வதைப்போல.

   அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

   நீக்கு
 3. என்னே வரதனின் கருணை. அமையும் இனி என்று உங்களை வரவழைத்து விட்டானே. மஹா புண்ணியவான் நீங்கள்.
  அன்பு முரளிமா. இது தான் வேண்டும் இந்தத் திண்ணம்.
  மனம் நிறை மகிழ்ச்சி.
  எங்கள் மாப்பிள்ளை சென்றபோது 5 ஆம் தேது மூன்று மணி நேரம் க்யூ.
  3 செகண்ட் தரிசனம்.

  வரதன் அழகை என்னவென்று வர்ணிப்பது.
  பேரருளாளன் கருணை வெள்ளத்தை அனுபவித்தத் திருக்கச்சி நம்பிகளை
  எவ்வளவு போற்றுவது.

  படங்களுக்கும் ,பாசுரங்களுக்கும், நிகழ்வை என்னை மாதிரி
  வீட்டில் இருப்பவர்களுக்கு
  அனுபவிக்கக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அன்பு முரளி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா....

   என் மனைவி நேற்று (ஞாயிறு) காலையில் சென்று (7 மணிக்கு அங்க போய்ச் சேர்ந்தாளாம்), கூட்ட நெரிசலில் தரிசனம் பெற்றாள். வார இறுதி என்பதால் நிறைய மாற்றங்கள், அதனால் மிகவும் சிரமமாக இருந்தது, இனிமே நான் வரலைப்பா என்றாள்.

   எனக்கும் தரிசனம் எப்படி நேர்ந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்பீர்கள்.

   நீக்கு
  2. எனக்கும் ஞாயிறு கூட்ட நெரிசல் வாட்ஸாப்பில் வந்தது.
   பாவம் உங்கள் மனைவி.
   எப்படியோ அவன் பார்வை நம் மேல் பட்டால் போதும்.

   நீக்கு
 4. அத்திவரதர் தரிசனம் கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சி. விபரங்கள் எல்லாம் பொறுமையுடன் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் தனியாகப் போய் தரிசனம் செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... ஆமாம்... மனதில் தோன்றியது..உடனே புறப்பட்டுவிட்டேன். நேற்று என் மனைவி மற்றும் அவள் சகோதரர்கள், பெற்றோர் சென்று சேவித்துவிட்டு வந்தனர். நான் இன்னொரு முறை மனைவியுடன் செல்வேன்.

   நீக்கு
 5. படங்கள் எல்லாமும் தொலைக்காட்சி, வாட்சப் போன்றவற்றில் வந்தன. அத்திவரதர் ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சி மூலம் தரிசனம் கொடுக்கிறார். நமக்கெல்லாம் அவ்வளவு தான் லபிக்கும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பஹ்ரைனில் வேலை செய்தபோது, அங்கு என் பாஸ் (பாலக்காடு), மஹாபாரதம் நடந்த நிகழ்வு என்று தான் நம்பவில்லை என்று கூறுவார். நான் அதற்கு, அது நாவல் போல, கதாநாயகனின் நற்குணங்களைக் காட்டி எழுதப்பட்ட நூல் அல்ல. ஒவ்வொருவருடைய நல்ல பக்கம், கெட்ட எண்ணம், சூழ்ச்சி, வஞ்சகம், தர்ம சிந்தனை, அதர்மம் என்று எல்லாவற்றையும் சொல்கிறது. கடவுள் என்ற நிலையில் இருந்ததால் கிருஷ்ணனின் தவறுகளை மறைக்கவில்லை (அதாவது தவறுகளாக நாம் எடுத்துக்கொள்ளும் செயல்களை), வில்லன் என்பதால் துரியோதனனுடைய நல்ல செயல்களைச் சொல்லாமல் இருக்கவில்லை. அது வாழ்ந்த மானுடர்களின் சரித்திரம் என்றேன்.

   அதேபோன்று, காஞ்சி வரதராஜர் கோவிலில், ஆலவட்ட கைங்கர்யம் (பெருமாளுக்கு சாமரம் வீசுவது) தொடர்ந்து செய்துவந்த திருக்கச்சி நம்பிகள் என்று மரியாதையாக அழைக்கப்படும் கஜேந்திரதாசரிடம், அவர் கேட்கும் கேள்விகளுக்கு திரைக்குப் பின்னால் இருந்து இந்த அத்தி வரதர் பதில் சொல்லியுள்ளார் (கஜேந்திரதாசர் பிறப்பால் அந்தணர் இல்லை.. இவர், ராமானுசருக்கு ஆச்சார்யராக இருந்தவர். அதாவது குரு ஸ்தானத்தில். ராமானுசர் வைணவர்-பிறப்பால் சைவர்). அவர், அத்திகிரி வரதரிடம், தனக்கு மோட்சம் உண்டா எனக் கேட்டதற்கு, உனக்கு மோட்சம் அளிக்கமாட்டேன். உன் கைங்கர்யத்துக்குப் பதிலாக நான் உன்னுடன் பேசுகிறேனே..அந்தப் பேறு உனக்குக் கிடைத்திருக்கிறதே..அவ்வளவுதான். மோட்சம் வேண்டுமென்றால், ஆச்சார்யன், குரு ஒருவனை அணுகு என்று சொல்லிவிடுகிறார் (இராமானுசரை மனதில் வைத்து).

   என்னுடைய முன்னோர்களின் முன்னோர்கள், காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர்கள். அவர், காஞ்சீபுரம் வரதனால், 'நீர் என் அம்மாவோ' என்று வியந்து பாராட்டப்பட்டவர். (அவர், தினமும் வரதராஜனுக்கு பால் கண்டருளப்பண்ணும்போது, பால் பொறுக்கும் சூட்டில்தான் இருக்கா, கொதிக்கக் கொதிக்கக் கொடுத்தால் வாய் வெந்துவிடாதா என்று தன் விரலை பாத்திரத்தில் விட்டு, சோதனை செய்தபிறகுதான் கண்டருளப்பண்ணுவாராம். வரதராஜப் பெருமாள் அவரை அவ்வாறு அழைத்தபிறகு அவரது பெயரே, நடாதூர் அம்மாள் என்றே ஆயிற்று.)

   இத்தகைய வரலாற்று மூர்த்தங்களைத் தரிசிப்பதற்கு எனக்குள்ள ஆவலுக்குக் கேட்கவா வேண்டும்? (அரங்கன், வெங்கடாசலபதி என்று வரலாற்றின் பக்கங்களில் உள்ள தெய்வங்களின்பால் எனக்கு ஆர்வம் மிக உண்டு).

   வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்ட நம்பெருமாளின் குமிழ்ச்சிரிப்பு உங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது, அவன் பக்கலிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவனது அருள் உங்களுக்கு இல்லையானால் நடக்குமா?

   நீக்கு
  2. நாங்க இங்கே வந்தது என்னமோ அவன் அருளால் தான்! அங்கே சுத்தி இங்கே சுத்தி ரங்கனைச் சேர் என்பார்கள். அது போல் நாங்களும் எங்கெல்லாமோ சுத்திட்டு இங்கே வந்திருக்கோம்.

   நீக்கு
 6. மீண்டும் தொடரக் காத்திருக்கிறேன். வரதன் துளசி இங்கே வந்து விட்டது. அவன் கருணையே கருணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்குள் வரதனின் துளசிப் பிரசாதம் வந்துவிட்டதா? வாழ்த்துகள்

   நீக்கு
  2. ஆமாம் மா. ஏதோ ஓர் காகிதம் என்று சொன்னார்கள்.வழவழா என்றிருந்ததது.
   பச்சைப் பசேல்னு சுகந்த துளசி அதில் வைத்துக் கொண்டு வந்தார் மாப்பிள்ளை.
   கண்கள் நிறைந்து விட்டது எனக்கு.

   நீக்கு
 7. அன்பு துரை செல்வராஜு சார்.. நெட் களேபரத்திலும் சிறப்பாக வெளியிட்டமைக்கு நன்றி.

  அலைபேசியில் தட்டச்சு செய்வதால் எழுத்துப் பிழை ஏற்படலாம்.

  நான் தரிசித்ததை எழுதினால் பிறருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன். சேவிக்க வாய்ப்பு குறைந்தவர்களுக்கு நம் குழுவில் உள்ள ஒருவரது அனுபவம் தாங்களே தரிசித்தது போன்ற மகிழ்வைக் கொடுக்கும் எனவும் தோன்றியது.

  நாமெல்லாம் செம்புலப் பெயல் நீர் போல தாம் கலந்த அன்புடை நெஞ்சங்கள் அல்லவா?

  பதிலளிநீக்கு
 8. நாங்களும் தரிசித்தது போன்ற உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த உணர்வைக் கொடுத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி..

   எல்லோருக்கும் இறையருள் வாய்க்கட்டும்.

   நீக்கு
 9. அத்திவரதரை நினைத்துக் கொண்டே இருந்த மனது காலையில் கடமையை செய்து விட்டு சட்டென்று கிளம்பி விட்ட்தே!

  நினைத்தவுடன் முடிக்கும் மனம் வாழ்க!

  மீண்டும் மனைவி உறவுகளுடன் அத்திவரதன் வரச்சொன்னால் மீண்டும் தரிசனம் செய்துக்கலாம்.

  தினம் தொலைக்காட்சியில் பார்த்து தரிசனம் செய்தாலும். நீங்கள் நேரில் போய் தரிசனம் செய்து வந்து வரதனை காட்டியது நாங்களே நேரில் தரிசனம் செய்த உணர்வு.

  வரதனின் வரலாறு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம்.

   நீங்க எத்தனையோ தலங்களுக்குச் செல்கிறீர்கள். அதனைப் பற்றி நிறைய படங்களுடன் எழுதுகிறீர்கள். அதுவே நாங்களும் உங்களுடன் பிரயாணத்தில் கலந்துகொண்டதுபோன்ற திருப்தியை அளிக்கிறது. வாய்ப்பு இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்போம். அது இல்லாதபோது உங்கள் இடுகையைப் படிக்கும்போதே, நாங்களும் வந்த திருப்தி கிடைக்கிறது.

   அதனை என்னுடைய இடுகையும் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி.

   நிச்சயம் இந்த வாய்ப்பு உங்களுக்கும் வாய்க்கவேண்டும் என்பது என் ப்ரார்த்தனை.

   நீக்கு
 10. வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம்.
  இறை நம்பிக்கை நம்மை வழி நடத்தி செல்லும்
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி அரசு மேடம். ஆனால் அதற்காக கண் காது மூக்கு எல்லாம் வைத்து, இல்லாதவற்றை ஜோடித்து பலர் எழுதுகிறார்கள் (வாட்சப்பில் அத்தகைய தகவல்கள் நிறைய கொட்டுகின்றன). அவற்றில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

   நமக்கு இறை நம்பிக்கை இருக்கும்போது, தவறான பாதையில் போகும்போதும், (அதாவது ஒரு காரியம் முடிப்பதற்கான பாதையில் இல்லாமல் வேறு பாதையில் செல்லும்போது), அந்த இறை நம்பிக்கையே நம்மை சரியான பாதக்கு இட்டுச் செல்லும். நான் இதனை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

   நீக்கு
 11. மேலும் அறிய காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி தி.தனபாலன். அடுத்த பகுதியில் நிறைவுறும்.

   நீக்கு
 12. அத்தி வரதனை தரிசித்ததை அழகாக எழுதியுள்ளீர்கள். புராண கதையை தவிர்த்து, சரித்திரத்திற்கு முன்னுரிமை அளித்தததற்கு பாராட்டுகள்.
  1979 ஆம் ஆண்டு அத்தி வரதர் வெளிப்பட்ட பொழுது அதன் மகிமை அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எப்படியாவது சென்று தரிசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜூலை ஐந்தாம் தேதி செல்லலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த மாத இறுதியில் சென்னை செல்ல வேண்டிய வேலை இருக்கிறது, அப்போது காஞ்சீபுரம் சென்று விட்டு செல்லலாம் என்று மகன் கூறியிருக்கிறான். பார்க்கலாம். அது வரதனுக்கும் சித்தமாக வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...

   என்னைப் பொறுத்தவரையில், புராணக் கதைகள் என்னை ரொம்பவும் ஈர்த்ததில்லை. என் அனுபவம், என் நம்பிக்கைகள்தான் என்னை ஒரு இடத்துக்கு, கோயில்களுக்கு ஈர்க்கின்றன.

   வார நாட்களில் செல்லுங்கள். சென்னையிலிருந்து 6 மணி அல்லது அதற்கு முன்பு இருக்கும் இரயில் பயணித்து 8 மணிக்கு முன்பு காஞ்சீபுரத்தை அடைந்தால், மிக சுலபமாக தரிசித்துவிடலாம். 25ம்தேதிக்கு மேல், நின்ற கோலம் என்று ஞாபகம். அதனால் ஆரம்ப நாட்களைத் தவிர்த்துவிடுங்கள்.

   நீக்கு
 13. வருடம்சரியாக நினைவில்லை நாங்கள்திருச்சியில் இருந்து முதன் முதலாக காஞ்சி சென்றதுமடத்தில் மூன்று ஆசாரியர்களையும் பார்த்தோம் 1080 வாக்கு என்று நினைக்கிறேன் எல்லாக் கோவில்களுக்கும் சென்றோம் என்று நினைக்கிறேன் அத்தி வரதர் இப்போதைய மீடியாக்களால் பெரிதும் பேசப்படுகிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி.எம்.பி. சார்... நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது, அந்த ஊரிலிருந்துதான் நடு ஆச்சாரியருக்கு மேனேஜராக என்னுடன் வேலை செய்தவருடைய அப்பா சென்றார். அப்போ ஒரு தடவை காஞ்சீபுரம் போகப்போறேன் வரியா என்றார்..அப்போ, சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சீபுரத்துக்கு சேலத்தில் உள்ளவர் கூட்டிச் செல்லணுமா, நாமே போய்க்கொள்ளலாம் என்று நினைத்துவிட்டேன். யாரையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. சில நாட்கள் முன்புதான் பரமாச்சார்யா, புதுப் பெரியவா இவர்களின் அதிஷ்டானத்தைத் தரிசனம் செய்தேன்.

   மீடியா, கோவில்களில் நுழைந்து 20 வருடங்களாவது இருக்கும். அதனால்தான் ஏகப்பட்ட பரிகாரத் தலங்கள், `இந்தக் கோவிலில் இந்த அதிசயம்` என்பதெல்லாம் வந்திருக்கிறது. மீடியாவினால்தான் இந்த அத்தி வரதர் வைபவம், புஷ்கரம், நூற்றி எட்டு திருப்பதிகளை (106) சேவிப்பது, பாடல் பெற்ற ஸ்தலங்கள் யாத்திரை என்பன போன்றவை நிறைய மக்களைச் சேர்ந்திருக்கிறது

   நீக்கு