நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 14, 2017

காவிரியே வாழ்க!..

புண்ணிய பாரதத்தில் முக்கியமான பன்னிரண்டு நதிகளில்
கொண்டாடப்படுவது புஷ்கர விழா!..
- என்று பலவகையான ஊடகங்களும் சேதி சொல்கின்றன..

ஒவ்வொரு வருடமும் தேவகுருவாகிய பிரகஸ்பதி (வியாழன்) எந்த ராசியில் பிரவேசிக்கின்றாரோ அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கர விழா நடப்பது வழக்கம் என்கின்றார்கள்..

அந்த வகையில் நேற்று முன் தினம் செப்டம்பர் 12 ( செவ்வாய்க்கிழமை) அன்று திருக்கணித பஞ்சாங்கப்படிகன்யா ராசியில் இருந்து துலா ராசிக்கு  குரு பெயர்ச்சி அடைந்துள்ளார்..

ஆகையால் தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரன் எனும் தேவன் -
அந்த ராசிக்குரிய நதியில் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்..

இந்த புஷ்கரன் மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானதால்
மேற்சொல்லப்பட்ட 12 நாட்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றது..

எனவே , இந்த 12 நாட்களும் துலா ராசிக்குரிய காவிரியின் படித்துறைகளில் நீராடி வழிபாடு செய்வது உத்தமம் என்பது ஐதீகம்...

ஸ்ரீகாவிரி - அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம்..
நீரின்றி அமையாது உலகு!.. - என்றுரைத்தார் திருவள்ளுவர்..

தண்ணீரும் காவிரியே!.. - என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு...

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நீரை -
அதுவும் காவிரியை எப்படியெல்லாம் போற்றியிருக்கின்றார்கள்!..

நாம் தான் - பெற்றோர் பெரியோர் சொல் கேட்பதில்லையே..

தமிழகத்தின்
குறிப்பாக சோழ மண்டலத்தின்
அதிலும் குறிப்பாக தஞ்சை வளநாட்டின் செல்வமகள் - காவிரி...

ஆனால், நாம் அவளைப் போற்றிக் கொண்டாடி காப்பாற்றினோமா!?..

என்றால் - இல்லை!.. - என்பது தான் விடை..

கங்கையிற் புனிதமாய காவிரி!.. - என்று புகழ்ந்தார் தொண்டரடிப் பொடியாழ்வார்..

இன்னும் ஒருபடி மேலாக -

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
எல்லாமும் கண்ணன்.. கண்ணனே!.. - என்று கசிந்துருகினார் நம்மாழ்வார்..

பருகும் நீர் - கண்ணனின் வடிவம் என்றார்.. 

ஆனால் நாம் என்ன செய்தோம்!?..

ஆழ்வார்கள் அப்படிப் புகழ்ந்து போற்றினர் என்றால் -

தேவாரம் பாடிய பெருமக்களும் மகத்தான முறையில் சிறப்பித்து வணங்கினர்..

நம்மாழ்வார் நீரைக் கண்ணனாகக் கண்டார்.. 
அப்பர் பெருமான் நீரை சிவபெருமானாகக் காண்கின்றார்..

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்!.. - என்பதோடு

தீர்த்தனைச் சிவனை சிவலோகனை மூர்த்தியை !..
- என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்..

தேவாரம் முழுதுமே இவ்வாறு காணலாம்..

ஸ்ரீகாவிரி - மயிலாடுதுறை
வந்தவரை வாழ வைத்தது இந்த மண்..

காவிரியும் இங்கு வந்தவள் தான்!..

தேடி வந்தவள்.. நம்மை நாடி ஓடி வந்தவள்..
ஆனால், அவளை நாம் வாழவைக்கவில்லை...

வேளாண்மையைவிட்டு என்றைக்கு தமிழ் மக்கள் விலகினரோ -
அன்றைக்கே தொடங்கி விட்டது அனர்த்தம்...

வஞ்சக அரசியலுடன் வண்கணாளர்கள் கைகோர்த்துக் கொண்டனர்..

பற்பல காரணங்கள் சூழ்ந்து கொள்ள -
பொன் விளைந்த நிலங்களில் சீமைக் கருவை போடப்பட்டது..
விளையாத தரிசு எனக் காட்டப்பட்டது....

அதற்கு பல்வேறு அரசுத் துறைகளும் உடந்தையாக இருந்தன..

தொடர்ச்சியாக வரப்புகளும் வாய்க்கால்களும் அழிக்கப்பட்டன..

வாரிக் கொடுத்த வயல்வெளி - மனைப் பிரிவுகள் என,  கூறுகளாகியது..

நன்செய் நிலத்திற்கு அந்நியமான சரளைக்கல், ஜல்லி, செம்மண்,
கருமண், பாழடைந்த கட்டிடங்களின் இடிபாடுகள், குப்பைகள் - என, எல்லாமும் கொட்டப்பட்டது..

நிலமகள் அவமானப்படுத்தப்பட்டாள்..

இதையெல்லாம் கண்ட காவிரி மனமுடைந்து போனாள்...

பெரியோர்கள் பலவிதமாக - நதியை நீரைப் புகழ்ந்துரைத்தும்
நாம் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோமா - என்றால்,

இல்லை!..

இன்றைக்குக் காவிரி வறண்டு கிடக்கின்றது..

ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுக்கு நீர் ஊட்டியவள்!..

இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒழித்துக் கொண்டிருப்பதால்
கடந்த சில ஆண்டுகளில் சரியான மழை இல்லை...

நாம் நீராதாரங்களைப் பெருக்கி காத்து நிற்கும் பண்பையும் இழந்தோம்..

எல்லாவற்றுக்கும் ஒரே பதில் - உலகியல் மாற்றம்!.. என்பதே...

சென்ற மாதம் விடுமுறையில் வந்திருந்தபோது
காவிரியின் நிலைமை கண்டு கண்கள் கலங்கின..

காவிரியோ - முற்றாக வறண்ட நிலையில்..

குடந்தையில் மகாமகக் குளமும் பொற்றாமரைக் குளமும் காய்ந்து கிடக்கின்றன...

தஞ்சை சிவகங்கைக் குளமும் திருஆரூர் கமலாலயமும் மன்னார்குடியின் ஹரித்ரா நதி எனும் திருக்குளமும் தான் தண்ணீருடன் இருக்கின்றன..

காரணம் இவையெல்லாம் அந்த காலத்தில் மாமன்னர்கள்
திட்டமிட்டு அமைத்த கட்டமைப்புகள்...

இன்றைக்கு மக்களாட்சியில்
ஒரு சிறு வாய்க்காலின் பராமரிப்பு - சொல்லும் தரமன்று...

கடும் வறட்சியில் களைப்பாகி தாகமுற்று -
எல்லா உயிர்களும் நல்ல தண்ணீருக்கு பரிதவிக்கின்றன..

மக்கள் தண்ணீரின் தேவையை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்..

இவ்வேளையில் நீரின் சிறப்பை - காவிரியின் சிறப்பைக் காட்டும் வண்ணம்
காவிரியில் புஷ்கர விழா நிகழ்கின்றது...

புஷ்கர விழாவுக்காக நந்தி மண்டபம், துலாக்கட்டம் - ஆகியன திருப்பணி கண்டுள்ளன..

துலா கட்டத்தின் எதிரே காவிரி நதியில் 100 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் உடைய தொட்டி அமைக்கப்பட்டு அதில் காவிரி நீர் ஆழ்துளைக் குழாய் மூலமாக நிரப்பப்பட்டுள்ளது...காவிரியின் துலா கட்டத்தில் செயற்கைத் தடாகம் அமைக்கு வேளையில் தொன்மையான கிணறுகள் ஒன்பதினைக் கண்டறிந்துள்ளனர்...

இவையெல்லாம் அந்தக் காலத்தில் காவிரியில் நீர் குறையும் போது மக்களின் பயன்பாட்டிற்கு என, அமைக்கப்பட்டவைகளாகும்..மயிலாடுதுறையில்
செப்டம்பர் 12 முதல் 24 வரை இந்த விழா நடக்கின்றது..

தினமும் யாகசாலை பூஜைகளும் மாலை வேளையில் காவிரிக்கு மகா ஆரத்தியும் நிகழும்..

முன்னதாக செப்/11 அன்று மயிலாடுதுறை காவியின் துலா கட்டத்தில் காவிரியன்னைக்கு புதிய சிலை நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்துள்ளன..

மறுநாள் காலை எட்டரை மணியளவில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு காவிரியில் புஷ்கரப் பிரவேசம் நிகழ்ந்தது..

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர், வள்ளலார் மற்றும் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் துலா கட்டத்தில் எழுந்தருளியிருந்தனர்..

 ஸ்ரீ பரிமளரங்கநாதரும் ஸ்ரீதேவி பூதேவி உடனாக எழுந்தருளியிருந்தார்..

ஆராதனைக்குப் பின் காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ந்தது..
மக்கள் ஆயிரக்கணக்கில் தீர்த்தத் தொட்டியில் நீராடி வருகின்றனர்..புஷ்கர வேளையில் நீராடினால் 
பாவங்கள் எல்லாம் தொலையும்!.. 
-  என்பது நம்பிக்கை...

நீரை மதிக்காத பிழையும் 
ஆற்றைக் கெடுத்த பிழையும் 
இயற்கையை அழித்த பிழையும் 
முதற்கண் அழியட்டும்..

இதன் பிறகாவது
வயலும் வரப்பும் வாழட்டும்..
நீரும் சீரும் பெருகட்டும்..


காவிரி புஷ்கர விழாவினைப் பற்றி -
திரு Dr. B. ஜம்புலிங்கம் அவர்கள் வழங்கிய பதிவினை இங்கே காணலாம்..

மக்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கான வசதிகளை
மாவட்ட நிர்வாகத்தினரும் மற்றும் ஆன்மீக அமைப்பினரும் செய்துள்ளனர்..

பவானி, மேட்டூர், கொடுமுடி, திருச்செங்கோடு, திருப்பராய்த்துறை, ஸ்ரீரங்க,ம், திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம்,மயிலாடுதுறை பூம்புகார் -என , காவிரியின் கரை நெடுக இவ்விழா அனுசரிக்கப்படுகின்றது...

பதிவில் உள்ள படங்கள் மயிலாடுதுறையில் நிகழும் புஷ்கர விழாவினைக் காட்டுபவை..

இந்தப் படங்களை Fb வாயிலாகப் பெற்றேன்..
வலையேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நீரைக் காப்போம் - என
மக்கள் மனங்களில் 
புதிய எழுச்சி உண்டாகட்டும்.. 
அதற்கு தற்போது கொண்டாடப்படும் 
புஷ்கர விழா உறுதுணையாகட்டும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
* * * 

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி அழகிய படங்கள் விழா விடயங்கள் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. புஷ்கர விழா செல்ல முயன்றேன். இறையருள் கிட்டவில்லை. தங்கள் பதிவால் அக்குறை நீங்கியது. என் பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இயற்கையை நேசிப்பவர்களுக்கு எந்நாளும் புஷ்கரம் தான்!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..

   நீக்கு
 4. கருத்துக்களும் புகைப்படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நதியில் நீராடும் பாக்கியமில்லாமல் சொம்பெடுத்து நீர் மொண்டு குளிப்பது வேதனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   சில நாட்களுக்கு முன் திறந்து விடப்பட்ட காவிரி நீர் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றது..

   தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..

   நீக்கு
 6. காவேரி தாய்க்கு எனது வணக்கங்களும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   ஆம்.. வணக்கத்திற்கு உரியவள் - காவிரி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. புகைப்படங்களும் தகவல்களும் அருமை! எல்லா நதிகளுக்கும் எம் வணக்கங்கள்!

  உங்கள் வரிகளை வழிமொழிகிறோம்....//நீரை மதிக்காத பிழையும், ஆற்றைக் கெடுத்த பிழையும், இயற்கையை அழித்த பிழையும் முதற்கண் அழியட்டும்/// ஆம் ஆம்!! அருமை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்....

   காவிரி வாழ்க.. வாழ்க..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. நீரை மதிக்காத பிழையும் - அந்தப் பகுதி முழுமையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு