நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

சப்தமங்கை 4

சப்த மங்கையர் வழிபட்ட தலங்களைப் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன..

இதன் தொடர்புடைய பதிவுகளைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்..


சப்த மங்கை தரிசனம் - 7
 புள்ளமங்கை...

ஸ்ரீ சாமுண்டி வழிபட்ட திருத்தலம்..


அம்பிகையின் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம்...

எவ்விதத் தடங்கலும் இல்லை..
ஆறு திருத்தலங்களில் ஆறு விதமான திருக்கோலத்துடன் ஐயனை தரிசனம் செய்தாயிற்று..

இனி ஏழாவது தலம்!..

அதோ - புள்ளமங்கை எனும் திருத்தலம்...

இந்தத் தலத்தில் அல்லவோ -
தேவர்களுக்கு முன்பாக - அன்றைக்கு பாற்கடலில் மூண்டெழுந்த ஆலகாலத்தை அருந்திய கோலத்தில் ஐயன் திருக்காட்சியளித்தான்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்டத்தைக் காத்தருள்வதற்காக
ஐயன் ஆலகால நஞ்சினை அருந்தியதைக் கண்டு மனம் பொறுக்காமல்
ஐயனின் கண்டத்தைத் தடவிக் கொடுத்து ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டதும் இந்தத் தலத்தில் அல்லவோ நிகழ்ந்தது..

அம்பிகையின் மனதில் பழைய நினைவுகள் மூண்டெழுந்தன..

ஆலந்தரித்த நாதன்!.. - என, முப்பத்து முக்கோடித் தேவரும் பணிந்து நின்றதும் இந்தத் தலத்தில் அல்லவோ!..

ஆலகால நஞ்சின் கொடுமை நீங்கியதும்
நான்முகப் பிரம்மன் ஆயிரத்தெட்டு நற்றாமரை மலர்களைக் கொண்டு
பாதபூஜை செய்து போற்றி நின்றதுவும் இந்தத் தலத்தில் அல்லவோ!..

எம்பெருமானின் திருவிளையாடல்களை நினைக்கையில்
அம்பிகையின் மனம் சந்தோஷத்தால் விம்மியது..

மகிஷாசுர வதத்தின் போது
கோர சௌந்தர்யம் கொண்டு சாமுண்டியாக எழுந்ததும்
அவ்வண்ணமே உக்ரம் அடங்காமல் சிவபூஜை செய்ததும்
அம்பிகையின் நினைவுக்கு வந்தன..

அதோ!..
ஆயிரங்கோடி சூர்யப் பிரகாசம் என - சிவலிங்க மூர்த்தி..


அன்பினால் நெக்குருகிய நிமலை
சிவமூர்த்தியின் அருகில் அமர்ந்தாள்...

நினைவுகளை நெற்றிப் புருவத்தின் இடையே நிறுத்தியவள்
நிமலனைத் தியானித்தாள்..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்!..

அண்டப் பிரபஞ்சம் எங்கிலும் எதிரொலித்தது - அம்பிகையின் தியான மந்திரம்..

அடுத்த சில நொடிகளில் சகஸ்ராரப் பெருவெளியில் சர்வாலங்கார பூஷிதனாக நாகாபரணம் இலங்கிட சதாசிவமூர்த்தி திருக்காட்சி நல்கினான்..

பண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ் சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..

தனக்கு முன்பாக பேரொளிப் பிழம்பாக நின்ற
எம்பெருமானை அம்பிகை வலஞ்செய்து வணங்கினாள்..

அந்தளவில் அம்மையும் அப்பனும் ஆனந்தத் திருக்கூத்து நிகழ்த்திட
அதனைக் கண்ட ஆருயிர்கள் அத்தனையும் கண் பெற்ற பேற்றினை எய்தின..


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்
அம்பிகை - அல்லியங்கோதை, சௌந்தர்யநாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், குடமுருட்டி ஆறு
தலவிருட்சம் - ஆலமரம்

சக்கராப்பள்ளி சப்த ஸ்தானத்தின் 
ஏழாவது திருக்கோயில் - இது..


மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே..(1/16)
- திருஞான சம்பந்தர் -

சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்
இத்தலத்தில் - பெண்ணின் ஏழாவது பருவமாகிய
பேரிளம் பெண் எனும் திருக்கோலத்தில் தரிசனம் கண்டனர்..

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்கோயில் உள்ளது..
திருஞானசம்பந்தப்பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..

திருக்கோயில் ஆலந்துறை எனவும்
திருத்தலம் திருப்புள்ளமங்கை எனவும் கொள்ளப்படும்..

இன்றைக்கும் புள்ளமங்கை எனவே வழங்கப்படுகின்றது..
எனினும் பசுபதிகோயில் கிராமத்தின் ஒருபகுதியாகவே உள்ளது..


முதலாம் பராந்தக சோழரின் திருப்பணி..
கலைப்பெட்டகமாகத் திகழ்கின்றது - திருக்கோயில்..

திருமூலஸ்தானத்தைச் சுற்றிலும் நீராழி அமைந்துள்ளது..

மிகச்சிறப்பாக குறிக்கப்படவேண்டிய செய்தி -
இத்திருக்கோயிலில் விளங்கும் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் திருமேனி..


ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கொற்றக்குடையின் கீழ் - 
எருமைத் தலையின் மீது நிற்கின்றாள்..

பிரயோகச் சக்கரத்துடன் சங்கு, வாள், வில், கதை, திரிசூலம், கேடயம், அங்குசம் முதலான ஆயுதங்களுடன் அம்பறாத் தூணியைத் தரித்தவளாக  விளங்குகின்றாள்..

தேவியின் இருபுறமும் சிங்கமும் மானும் விளங்குகின்றன..

மேலும் ஸ்ரீதுர்கையின் இருபுறமும்
தன்னைத் தானே அரிந்து தருகின்ற வீரர் சிலைகளையும் காணலாம்.. 

நாட்டியக் கலையின் 108 கரணங்களும் புராணக் கதைகளும்

நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன..

சோழ நாட்டின் சிற்பிகள் -

மிகச் சிறிய அளவில் நேர்த்தியாக படைத்திருக்கின்றனர்..

கலை வடிவங்களை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..


மாலை நேரத்தில் திருக்கோயிலில் - கருட பட்சிகள் வந்து அடைகின்றன..
காலகாலமாக இவ்வாறு நடந்து வருவதாக சொல்கிறார்கள்..

தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில்
பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வழி கேட்டால் சொல்வார்கள்..

ஒன்றரை கி.மீ தொலைவு.. உட்புறமாக நடந்து செல்ல வேண்டும்..
திருக்கோயில் வரைக்கும் நல்ல சாலை வசதி உள்ளது

சிற்றுந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்..

ஆனால் - சிறிய ஊராகிய பசுபதிகோயிலில் ஆட்டோக்கள் இயங்குவதாகத் தெரியவில்லை..

திருக்கோயில் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே காலைப் பொழுதில் திறக்கப்பட்டிருக்கின்றது..

மற்றபடி பகல் 12 மணிக்கு முன்பாக திறந்து ஒருகால பூஜை நடைபெறுகின்றது..

மாலையில் நாலரை மணிக்குத் திறக்கப்படும் கோயில்
இரவு ஏழரை அல்லது எட்டு மணி வரையிலும் திறந்திருக்கின்றது..

கோயில் திறக்கப்படும் நேரம் விசேஷ நாட்களில் மாறுபடுகின்றது...

காலையில் தரிசனம் செய்வதற்காகச் சென்ற நான் -
கோயில் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினேன்...

ஆலய வழிபாட்டுக்கான பொருட்களை
பசுபதிகோயில் கடைத்தெருவில் வாங்கிச் செல்வது நல்லது..

இந்த அளவில் சப்த மங்கைத் தலங்கள் ஏழையும் தரிசனம் செய்துள்ளோம்..

ஆனந்த விகடன் எனும் பத்திரிக்கையின் மின் தளத்தில் -
சப்த மங்கை தலங்கள் ஏழினையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்கள்..

எந்த வகையில் அப்படி சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை..
அது மிகவும் சிரமம் என்பது மட்டும் நிச்சயம்....

வருந்தி வருவார் குறைவு என்பதால் பெரும்பாலும்
மாலை நேரங்களிலேயே கோயில்கள் திறந்திருக்கின்றன..

பங்குனி மாதத்தில் நடைபெறும் சப்த ஸ்தானத்தின் போது கூட
பல்லாக்குடனேயே நாமும் சுற்றி வந்தால் -
ஏழு தலங்களையும் தரிசித்து முடிக்க இரண்டு நாட்களாகும்...

சக்கராப்பள்ளி
சப்தமங்கைத் தலங்கள் ஏழும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன..

அந்தவகையில் இந்தக் கோயில்கள் சந்தைக் கடையாக மாறாமல் இருப்பது புண்ணியம்..

எனினும் - நெடுஞ்சாலையின் அருகாக அமைந்திருந்தாலும்

நலிந்த நிலையில் உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்...

மாபெரும் மன்னர்கள் ஆண்ட அந்தக் காலத்தில் 
தஞ்சையிலிருந்து சக்கராப்பள்ளி - குடந்தை - மானம்பாடி வழியாக 
வீராணம் செல்லும் இந்தச் சாலை வணிகப் பெருவழி என்பது குறிப்பிடத்தக்கது..

அத்தகைய சாலை இன்று ஆக்ரமிப்புகளால் ஒடுங்கிக் கிடப்பதையும் சொல்லியாக வேண்டும்...

பசுபதி கோயில் - ஐயம்பேட்டை - சக்கராப்பள்ளி - பாபநாசம் வரையிலான சாலையை ஆக்ரமிப்பின் பிடியிலிருந்து விடுவித்து அகலப்படுத்துதற்கு இயலவில்லை...

பல்வேறு இடையூறுகளாலும் பிரச்னைகளாலும் 
பல வருடங்களாக நின்று போயிருந்த சக்கராப்பள்ளி சப்த ஸ்தானம்
கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது..

பங்குனியில் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து காலையில் சக்கராப்பள்ளியில் புறப்படும் பல்லாக்கு எல்லா ஊர்களையும் சுற்றி விட்டு மறுநாள் காலையில் புள்ளமங்கையில் இருந்து புறப்பட்டு -

ஐயம்பேட்டை மதகடி கடைத்தெருவில் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் கோயில் வாசலில் பூமாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு மதியத்திற்குப் பிறகு திருக்கோயிலை அடைவதை அவசியம் கண்டு மகிழ வேண்டும்..

நல்லதொரு சமயம் கிடைக்கும் போது அனைவரும் சப்த மங்கைத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்..

இந்தப் பதிவுகள் முழுமையானவை அல்ல என்பதை உணர்கின்ற வேளையில்

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் பல தகவல்களுடன் எழுதுதற்கு அம்பிகை துணையிருப்பாள் என நம்புகின்றேன்..
* * *

இன்று கலைமகள் திருவிழா
ஸ்ரீ சரஸ்வதி பூஜை


இசையாய் தமிழாய் வீற்றிருப்பவள் அவள்..
அன்னையின் திருவருளை வேண்டி நிற்போம்..
நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்!.. 
- என, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...
***

ஓம்
ஒருத்தியை ஒன்றுமிலா என்மனத்தில் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தை எல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசை நான்முகன் தேவியையே..
- கம்பர் -

வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
வாக்களிப்பாள் எனத்திடம் மிகுந்தேன்
பேணிய பெருந் தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்..
- மகாகவி பாரதியார் -

அனைவருக்கும் 
அன்பின் இனிய
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

ஓம் சக்தி ஓம் 
* * * 

5 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  குடமுருட்டி என்ற ஊர் அபிராமம் அருகிலும் உள்ளது பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் உள்ளது.

  சப்தமங்கை நான்காம் பதிவு வழக்கம்போல அருமை.... தொடரட்டும்....

  பதிலளிநீக்கு
 2. புள்ளமங்கையில் கோஷ்டப்பகுதியில் மிக நுணுக்கமான, இராமாயணச் சிற்பங்கள் உள்ளனவே, பார்த்தீர்களா ஐயா? இறை நோக்கில் மட்டுமன்றி கலை நோக்கிலும் ரசித்து அனுபவிக்கப்படவேண்டிய தமிழகக் கோயில்களில் இக்கோயில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பல முறை சென்றுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 3. குறித்துக் கொண்டோம். நிச்சயமாகத் தரிசிக்க வேண்டிய இடங்கள். சப்தமங்கை கோயில்களின் சிறப்பையும், தகவல்களையும் அறிந்தோம். மிக்க நன்றி.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 4. இவற்றில் ஒன்றுக்குக் கூட விஜயம்செய்ததில்லை

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு. தொடர்கிறேன். படங்கள் அட்டஹாசம். தரிசனம் செய்துகொண்டோம்.

  யாரேனும் தெரிந்தவர்கள், இந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு சென்றால் (அல்லது நீங்களோ அல்லது முனைவர் ஜம்புலிங்கம் சாரோ செல்லும்போது கூடவே சேர்ந்துகொள்ளத் தோன்றுகிறது. வெறும்ன அட்டென்டன்ஸ் போடுவதைவிட, தலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஒரு சிறப்பையும் விடாது தரிசனம் செய்வது மேல் அல்லவா?)

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..