நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

தாயாய் தந்தையாய்..

அழகிய சோலையும் நிழலும் குளமும் குளிர்ச்சியுமாக இருந்தது - அந்த கிராமம்..

சரி .. இங்கேயே ராப்பொழுதுக்கு தங்கி விட்டு கோழி கூப்பிட எழுந்து நாகப்பட்டினத்துக்கு நடையைக் கட்டுவோம்!..

- என்று, எண்ணியபடியே பார வண்டியிலிருந்து கீழே குதித்து இறங்கினான் - அவன்..

அவன் ஒரு வியாபாரி..

நாட்டில் ஆங்காங்கே விளையும் பொருட்களை வாங்கி சுத்தம் செய்து எடையிட்டு நாகைத் துறைமுகத்தின் பெரு வணிகர்களிடம் விற்பனை செய்வது வழக்கம்...

அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே இது தான் தொழில்...

நேர்மை தவறியதில்லை.. ஆனாலும் குறும்புத்தனம் அதிகம்..

இன்றைக்கு இவ்வழியே செல்கின்றான்..

வண்டி முழுதும் மூட்டைகள்.. விலையுயர்ந்த ஜாதிக்காய் மூட்டைகள்..

சோழ தேசத்தின் நெடுவழிகளில் எந்தக் காலத்திலும் கள்வர் பயம் இருந்ததில்லை.. எனவே துணைக்கு என்று ஆட்களில்லாமல் பயணம்..

மாலை மயங்குகின்ற வேளை.. இந்த ஊர் மற்றும் சூழல் பிடித்திருந்தது..

வண்டிக் காளைகளை அவிழ்த்து அருகிருந்த குளத்தில் தண்ணீர் காட்டினான்..

வண்டியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்த வாளியினை அவிழ்த்து அதில் பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு மற்றும் பச்சரிசி தவிடு இவற்றைப் பதமாகக் கரைத்து மாடுகளுக்குக் கொடுத்தான்..

பார வண்டியின் இரண்டு மாடுகளும்  பசி தீரக் குடித்தன..

கொஞ்சம் வைக்கோலை உருவி சுருளாகச் சுற்றி மாடுகளின் முதுகு, கழுத்து. திமில் - பகுதியில் நன்றாகத் தேய்த்து விட்டான்..

மாடுகளை சாலையோர மரத்தில் கட்டி விட்டு வைக்கோலை உருவிப் போட்டான்..

களைப்பு நீங்கிய களிப்பில் மாடுகள் வைக்கோலை மேய்ந்த வேளையில் -
அவனும் குளத்தில் இறங்கி நீராடினான்..

நீராடிக் கரையேறியதும் அருகில் இருந்த ஆலயத்தில்  சிவ தரிசனம் செய்தான்...


நாடு செழிக்க வேண்டும்.. நல்ல மழை பெய்ய வேண்டும்.. ஆறு குளம் நிறைந்து நல்ல விளைச்சல் ஆக வேண்டும்.. உழவனும் வணிகனும் ஏனைய மக்களும் நல்லபடியாக வாழ வேண்டும்!..

கயிலாய நாயகி உடனுறை கண்ணாயிர நாதர் சந்நிதியில் மனதார வேண்டிக் கொண்டான்...

நெற்றி நிறைய திருநீற்றினைத் தரித்துக் கொண்டு வெளியே வந்தான்..

வயிற்றுக்குள் பசியெடுத்தது..

கோயிலுக்கு அருகில் அன்ன சத்திரம்..

உள்ளே புகுந்தவனுக்கு  பலவகைக் கூட்டு துவையலுடன் அன்னம் பரிமாறினார்கள்..

வயிறார சாப்பிட்டபின்  -
அன்ன சத்திரத்தின் அறச்செயல்களுக்காக பத்து வராகனை கொடையாக
சந்தோஷமாகக் கொடுத்தான்...

அன்ன சத்திரக் கண்காணிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி..

ஐயா.. தாங்கள் சற்றே ஓய்வெடுங்கள்.. தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பது எங்கள் கடமை..

அவர்களுக்கு நன்றி சொல்லிய வண்ணம் வெளியே வந்தபோது -
பார வண்டியின் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்..

அச்சிறுவனைப் பார்த்து வணிகன் கேட்டான் -

என்ன வேண்டும் உனக்கு?..

எனக்கு ஒன்றும் வேண்டாம்!..

பிறகு என்ன பார்க்கின்றாய்?..

வண்டி புதியதாக இருக்கிறதே!.. உங்களுடையதா?..

ஆமாம்!..

மாடுகள்?..

என்னுடையதுதான்!..

வண்டியிலுள்ள மூட்டைகள்?..

அவைகளும் என்னுடையது தான்!..

அப்படியானால் எல்லாமே உங்களுடையது தான்!..

ஆமாம்.. எல்லாமே என்னுடையது தான்!..

எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள்?..

எதற்காக இந்தப் பொடியன் குடைகின்றான்!?..

சிந்தனை விரிந்தது வணிகனுக்குள்..

நாகப்பட்டினத்துக்கு!... - பதிலுரைத்தான்..

ஓ!.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது?.. - சிறுவன் கேட்டான்..

வணிகன் அதிர்ந்தான்..

நான் நினைத்தது சரி தான்!.. இவன் ஒற்றன்!.. இவனுக்குக் கடுக்காய் கொடுத்து விட வேண்டியது தான்!..

ஏன் பதிலில்லை.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது?..

சிறுவன் நகைப்பும் அதட்டலுமாகக் கேட்டான்..

கடுக்காய்!.. கடுக்காய் இருக்கிறது!...

ஓ.. கடுக்காய்!.. இருக்கட்டும்.. இருக்கட்டும்!..

நகைத்த வண்ணம் அச்சிறுவன் அங்கிருந்து அகன்றான்..

வியாபாரிக்கு நிம்மதி.. அந்த நிம்மதியுடனேயே கண்ணயர்ந்தான்..

மறுநாள் அதிகாலையில் சேவல் கூவியது..

ஊரும் துயில் நீங்கி எழுந்தது..

அங்கிருந்து வியாபாரி சுறுசுறுப்புடன் நாகைக்குப் புறப்பட்டான்..

காலை நேரம்.. பரபரப்பான கடைவீதி..

ஜாதிக்காய்.. ஜாதிக்காய்!.. - என்று, கூவிய வண்ணம்
தான் கொண்டு வந்த மூட்டைகளை வண்டியிலிருந்து இறக்கினான்..

பலரும் வந்தார்கள்.. மூட்டைகளை அவிழ்த்துக் காட்டச் சொன்னார்கள்..

 அன்றைய நடப்பு விலையைப் பேசினார்கள்..

நல்லவிலை கிடைக்கும் போலிருக்கிறதே!.. - என்ற ஆவலுடன் மூட்டையைப் பிரித்தான் வியாபாரி ..

ஆச்சர்யத்துடன் அதிர்ந்தான்..

மூட்டையில் இருந்தவை - கடுக்காய்!..

என்னப்பா.. இது ஜாதிக்காய்  என்று சொன்னாய்,, கடுக்காயாக இருக்கின்றது?..

உண்மையாகவே நீ ஜாதிக்காய் தான் கொண்டு வந்தாயா?..

ஜாதிக்காய்க்கும் கடுக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு!...

நாகப்பட்டினத்துக் கடை வீதி வியாபாரியைப் பார்த்துச் சிரித்தது..

பிழை செய்து விட்டேன்.. பெரும் பிழை செய்து விட்டேன்..

அவமானத்தில் குறுகினான் வியாபாரி...

எல்லா மூட்டைகளையும் மீண்டும் வண்டிக்குள் வாரிப் போட்டுக் கொண்டு முதல் நாள் நாள் இரவு தான் தங்கியிருந்த ஊரை நோக்கி விரைந்தான்..

மாலை வேளை..
கோயில் வாசல்.. குளக்கரை.. சந்நிதியை நோக்கியவாறு -

இது உனக்குத் தகுமா?.. நீதியா.. நியாயமா?.. - கூவினான்..

நேற்றைய பொழுதில் இவனைக் கண்டவர்கள் இப்போது கூடி விட்டார்கள்..

வருத்தம் தோய்ந்த அவனது முகத்தைக் கண்டு விசாரித்தார்கள்..

என்ன ஆயிற்று.. மூட்டைக்கு நல்ல விலை தகையவில்லையா?..

அப்படியிருந்தால் தான் பிழையில்லையே.. மூட்டை  எல்லாம் மாறிப் போய் விட்டன..

புரியவில்லையே.. என்ன சொல்கிறீர்கள்!?.. - ஊர்க்காரர்கள் வினவினார்கள்..

ஐயா.. நான் கொண்டு வந்தது ஜாதிக்காய்.. நேற்று இங்கு இருந்தவேளையில் சிறுவன் ஒருவன் வந்து மூட்டையில் என்ன இருக்கின்றது என்று கேட்டான்.. நான் அவனை மதிக்காது கடுக்காய் என்று பொய் சொன்னேன்..  அந்தப் பாவம் - கடைத் தெருவில் மூட்டையைப் பிரித்தபோது எல்லாமே கடுக்காய் ஆகிப் போனது!..

உண்மையாகவா.. இப்படியும் நடக்குமா?.. - ஊர்க்காரர்கள் வியந்தார்கள்...

உண்மைதான் ஐயா.. இதோ பாருங்கள்!..

மூட்டையை அவிழ்த்துக் காட்டினான் வியாபாரி..

ஊர்மக்கள் ஆவலுடன் எட்டிப் பார்க்க - உள்ளே இருந்தவை - ஜாதிக்காய்!..

என்னய்யா.. பொய் சொல்கிறீர்?.. இது ஜாதிக்காய் தானே.. கடுக்காய் என்கிறீர்?.. எங்களைப் பித்தனாக்குகின்றீரா?..

இல்லை ஐயா!.. இல்லை.. நான் தான் பித்தனாகிப் போனேன்.. நாகையில் கடுக்காயாக இருந்ததால் தான் விலை போகவில்லை.. இங்கே வந்ததும்
ஜாதிக்காய் ஆகி விட்டன.. என்ன மாயம் நடந்திருக்கிறதோ தெரியவில்லை..

இறைவா.. எம்பெருமானே!..
அறியாமல் பொய் சொல்லி விட்டேன்.. என் பிழை மன்னித்தருள வேண்டும்!..

எல்லாம் என்னுடையது தான் என்று அகந்தை கொண்டிருந்தேன்..
உருவம் கண்டு எள்ளி நகையாடினேன்.. என்னை மன்னித்தருள வேண்டும்!..

அரற்றினான்.. அழுதான்.. தொழுதான்!..

அவ்வேளையில் மீண்டும் அச்சிறுவன் அனைவரது முன்னிலையிலும் தோன்றினான்..

வணிகனே!.. உன்னை மன்னித்தேன்.. நல்லவனாகிய உனக்குப் பொய்யுரை எதற்கு?.. மனம் திருந்தி நல்வாழ்வு வாழ்வாயாக!..

கருணைக் கடலாகிய கணபதி  - வணிகனை வாழ்த்தி மறைந்தார்..

ஒற்றன் என்றல்லவா நினைத்திருந்தேன்..
ஒற்றைக் கொம்பன் என்று நினைக்கத் தோன்றவில்லையே!..

- வணிகன் தரையில் விழுந்து வணங்கினான்..

தன்னுணர்வு பெற்ற ஊர் மக்கள் விநாயகனைப் போற்றி வணங்கினார்கள்..

வணிகனும் ஜாதிக்காய் மூட்டைகளை சந்தையில் நல்ல விலைக்கு விற்றான்..

கையில் கிடைத்த தொகையைக் கொண்டு அவ்வூரில் அறச் செயல்களைப் புரிந்தான்..

நல்வாழ்வு வாழ்ந்து நற்பேறு எய்தினான்..

கடுக்காய் பிள்ளையார் - திருக்காறாயில்
இவ்வண்ணமாக விநாயகப் பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய தலம் -

திருக்காறாயில்..

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று,,
திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..

இந்தத் திருவிளையாடலின் காரணமாக
இத்தலத்தில் விநாயகருக்கு -
கடுக்காய்ப் பிள்ளையார் என்றே திருப்பெயர்..

திருஆரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் 15 கி.மீ., தொலைவில் உள்ளது - திருக்காறாயில்..

இன்றைக்கு திருக்காரவாசல் என்று வழங்கப்படுகின்றது..


இன்றைக்கு விநாயக சதுர்த்தி..

விநாயக வழிபாடு என்பது மகத்தான தத்துவம்..

உள்ளுணர்ந்து வழிபடுதலே சாலச் சிறந்தது..

ஒரு செயலைச் செய்யும் வல்லமையை நமக்களித்து உறுதுணையாய் நிற்பதனாலேயே - வல்லப கணபதி..


அப்படி வல்லமையுடன் நல்ல செயல் ஒன்றைச் செய்வதற்கான புத்தியையும் அந்த செயலில் வெற்றியையும் அருள்வதனாலேயே -

சித்தி புத்தி கணபதி..

வல்லபை மற்றும் சித்தி புத்தி - எனும் சிறப்புப் பெயர்கள் விநாயகருக்கே உரியன..




தாய் தந்தையரை வலம் வந்து பணிவதே விநாயக தத்துவம்...

இதைத் தான் -

தந்தை தாய்ப் பேண்!,, - என்று மொழிந்தார் ஔவையார்..

இயன்றவரை அவ்வண்ணம் இருப்போர்க்கு
விநாயக மூர்த்தியே - தந்தையாய் தாயாய் இருப்பார் என்பது திண்ணம்..


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்..

வித்தக விநாயக.. விரைகழல் சரணே!..
***

21 கருத்துகள்:

  1. சிறப்பு பகிர்வு மிகவும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி நலமுடன் குவைத்கசென்று விட்டீர்களா ?
    தங்களை சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
    தொலைபேசி உரையாடலால் மகிழ்ச்சி.

    கடுக்காய் விநாயகர் வரலாறு அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நலமுடன் குவைத் வந்து சேர்ந்தேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான படங்கள், அருமையான கதை.
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இடமும் கதையும் அறியாதது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக மிக அழகான கதையுடன் படங்களுடன் விநாயகச் சதுர்த்திக்கான பதிவு அருமை! புதியதொரு இடம் கோயிலையும் அறிந்து கொண்டோம். விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்!

    கீதா: துளசியின் கருத்துடன்....என்னுடையது என்ற வார்த்தைகளைப் பார்த்ததுமே தோன்றிவிட்டது இறைவனின் விளையாட்டுத் தொடங்கிவிட்டது என்று...நான் அடிக்கடிச் சொல்லுவது....எல்லாமே இறைவனுடையது..இன்று நம்முடையது நாளை வேறுயாருடையதும் ஆகிவிடும் இறைவனின் சித்தம் அதுவானால்....என்று அது நினைவுக்கு வந்தது....கதையை மிகவும் ரசித்தேன்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      இறைவனின் லீலைகள் எல்லாமே மனிதரைப் புடம் போடுவதற்காகத் தானே..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கடுக்காய் பிள்ளையார் - கதை புதியது.... ஊரும் புதியது.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான கதை. கும்பகோணத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையாரைப் பற்றியும் இவ்வாறு ஒரு கதை கூறக் கேட்டிருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கரும்பாயிரம் கொண்ட விநாயகரும் இப்படியொரு திருவிளையாடல் செய்தவர் தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கடுக்காய் பிள்ளையார்...படங்களுடன்..தவல்களும் சிறப்பு ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இந்த ஊர்களெல்லாம், அதன் தலப் பெருமை எல்லாம், எப்படிப் படித்தீர்கள்? அல்லது அந்த அந்த ஊர்களுக்கு தரிசனம் செல்லப் போகும்போது தெரிந்துகொண்டீர்களா? தகவல் மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தேவார திருமுறையில் இருந்து திருப்பதிகங்களைத் தொகுத்தபோது திருக்கோயில்களின் தலவரலாற்றினையும் குறித்து வைத்திருக்கின்றேன்..

      அவ்வப்போது நினைவுக்குக் கொண்டு வந்து பதிவில் தருகின்றேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. சுவாரஸ்யமான கதையுடன் விநாயகர் தரிசனம். நினைவிலிருந்து தலப்பெருமை எழுதுவது சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..