நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 24, 2017

சொல்.. சொல்.. சொல்!..

அக்கா.. அக்கா..வ்!..

வாம்மா.. தாமரை.. உள்ளே வா!.. வீட்ல.. அத்தை மாமா.. சௌக்கியமா!..

ம்ம்.. எல்லாரும் சௌக்கியந்தான்!.. ஆமா.. நீங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?.. பழைய சினிமா பாட்டு புத்தகத்தை எல்லாம் வெச்சுக்கிட்டு!..இன்னைக்கு கவியரசர் பிறந்த நாள் இல்லையா.. அத்தோட மெல்லிசை மன்னரோட பிறந்த நாளும் .. அதனால.. அத்தானோட இலக்கிய வட்டத்தில சின்னதா கலை நிகழ்ச்சி இருக்கு...

அப்போ.. நானும் வரட்டுமா?.. கலை நிகழ்ச்சி எங்கே நடக்குது?..

ஓ!.. தாராளமா வா.. தாமரை!... 
நம்ம தமிழ்க் கல்லூரி கலையரங்கத்தில தான்.. 
சாயங்காலம் ஆறு மணிக்கு!..

அக்கா.. நீங்க என்ன செய்யப் போறீங்க!..

கவியரசர் எழுதுன பாட்டு ஒன்றைப் பற்றிப் பேசப் போகிறேன்!..

ஹை!.. ஜாலி.. ஜாலி!.. அக்கா பேச்சை மேடையில கேட்கப் போறேன்.. அக்கா.. என்ன பாட்டுக்கா அது!.. சொல்லுங்களேன்!..

வாழ்க்கைப் படகு...ங்கற படத்தில..

ஆயிரம் பெண்மை மலரட்டுமே!.. - அப்படிங்கற பாட்டு தானே!..

எப்படி...மா கண்டுபிடித்தாய்!?..

அக்கா.. உங்க மனசு எனக்குத் தெரியாதா!..
அந்தப் படத்தில அந்தப் பாட்டு தானே சூப்பர் பாட்டு!..

அக்கா.. அந்தப் பாட்டோட முதல் சரணத்தில -

காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒருமனம் என்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

- அப்படி..ங்கற வரிகள்!... சும்மா சொல்லக் கூடாது...க்கா!..
கவியரசர்..ன்னா கவியரசர் தான்!..

அந்த பாட்டுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கு சொல்லட்டுமா!..

சொல்லுங்களேன்!..

பல்லவியிலயும் முதல் சரணத்திலயும் -
சொல்.. சொல்.. சொல்.. தோழி.. சொல்.. சொல்.. சொல்!..
- அப்படி..ன்னு, கவியரசர் சொல்லியிருப்பார்!..

ஆமாம்!..

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

தன் நிலையை மட்டுமல்லாது பெண்மையின் நிலையையே 
அந்தக் கதாநாயகி சொல்வதாக கவிஞர் சொல்லியிருப்பார்..

தோழி!.. சொல்!..

எதைச் சொல்வது?.. எவரிடத்தில் சொல்வது?..

இதோ.. இதைச் சொல்!..

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல்!..

இது தான் சொல்!.. இதையே அவனிடத்தில் சொல்!..
அவனிடத்தில் மட்டுமல்ல.. அனைவரிடத்தும் சொல்!..

இது தான் சொல்!.. இதையே சொல்!..

இது கண்ணுக்குள் புகுந்த காதலனுக்கு மட்டுமல்ல..
காவல் நிலை தவறி மனம் தடுமாறும் மன்னனுக்கும் தான்!..

மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா.. நில் நில் நில்!...

-  அப்படி..ன்னு,  கம்பீரமாக விரல் நீட்டி
நாடாளும் மன்னனை எச்சரிக்கும்போது
பெண்மை பேருவகை கொண்டு நிற்கிறதே!..
அங்கே தான் கவித்துவம் கொடிகட்டிப் பறக்கின்றது!..

அக்கா!..

பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்காத பெண்மையை
பெருஞ்சினம் கொண்டு கொடுங்கை வாள்நுனியில் நிறுத்தி
வக்கிரம் தலைக்கேற அக்கிரமம் செய்யத் துணியும் மன்னனே!..
நீ வாரி எடுத்தது ஒரு பெண்ணை என்றா நினைக்கின்றாய்?..

குழி கண்ட விழி கொண்டு உற்றுப் பார்!..

சுடு விரல் நுனி கொண்டு தொட்டுப் பார்!..
உணர்வு இற்றுப் போன உடம்பு!..
உயிர் அற்றுப் போன உடம்பு!..

உண்மையான பெண்மைக்கு இது தான் நிலை..
பொய்மைக்கு யாதொன்றும் சொல்வதற்கு இலை!..

இப்படி மறைவான பொருள் -
இந்தப் பாட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது!..

ஓ!.. - என்று கைகளைத் தட்டினாள் தாமரை..

என்ன தாமரை!.. என்ன ஆயிற்று?..

அருமை அக்கா!.. அருமை!..
மறைவான பொருள் மட்டுமல்ல..
நிறைவான பொருளும் தானே அக்கா!..

நிஜம் தான்!.. 
இதற்கு மேலும் பெண்மையை சிறப்பித்துக் கூற யாராலும் முடியாது..

தேவிகா அவங்களோட நல்ல நடனம்..
சுசிலா அம்மாவோட இனிமையான குரல்..
அற்புதமான இசை - மெல்லிசை மன்னர்..
பாடல் காலத்தை வென்றிருக்கின்றது!..மெல்லிசை மன்னர் எத்தனை எத்தனையோ சிறப்பான பாடல்களைத் தந்தவர்.. அவருடைய புகழைச் சொல்லும் பாடல்களுள் இதுவும் ஒன்று..

மெல்லிசை மன்னரும் கவியரசரும் 
நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.. இல்லையா அக்கா!..

அது உண்மைதானே!.. 

சரி அக்கா.. நான் புறப்படுகின்றேன்..

சாயங்காலம் அஞ்சு மணிக்கு இங்கேயிருந்து கிளம்பறோம்..
நீயும் மறக்காம வந்துடு!.. 

சரி.. அக்கா!..

இரு.. தாமரை.. ஒரு கப் காபி குடிக்கலாம்!..

ஓ.. குடிக்கலாமே!..
***

ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே..
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒருமனம் என்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது..
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது..
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா.. நில் நில் நில்!...

ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே..
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..
***

கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள் நாளும் நாளும் அனைவராலும் பேசப்படுகின்றன...

அது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
மாபெரும் வித்தகர்களை 
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

12 கருத்துகள்:

 1. ரசனையான விவரிப்பு...

  ரசித்தேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அருமை ஐயா அருமை
  கண்ணதாசன் விசுவநாதன் கூட்டனி
  மறக்கக் கூடியதா

  பதிலளிநீக்கு
 3. மேதைகளின் பிறந்தநாள் பதிவு அறிபுதம் ஜி மறைந்தும் வாழ்பவர்கள் இவர்களே...

  பதிலளிநீக்கு
 4. இருவருக்குமே ஒரே நாளில்தான் பிறந்த நாள்தான் என்பது ஒரு விசேஷம். வைரச் சுரங்கத்திலிருந்து ஒரு கல் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடலை ரசனையுடன் ஆண்டிருக்கிறீர்கள். ரசித்தேன்.
  மெல்லிசை மன்னருடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கவியரசரைப் பற்றியும், பாடல்கள் உருவான விதம் பற்றியும் ஒரு பள்ளி மாணவனின் ஊக்கத்தோடு ,மலர்ச்சியுடன் சொல்லுவார். இருவருமே நம்முடன் இரண்டற கலந்தவர்கள் அல்லவா?!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பாடல் பகிர்வு. இரு மேதைகளுக்கும் அளித்த
  புகழ் மாலை அழகு.

  இன்று ஜெயா தொலைக்காட்சியில் காந்தி கண்ணதாசன் அவர்கள் தன் அப்பாவின் பாட்டுக்களையும் பாடல் பிறந்த விதத்தையும் சொன்னார். ராஜாஜி அவர்கள் "வீடுவரை உறவு வீதிவரை மனைவி" பாடலை ரசித்து கேட்டு கண்ணதாசனை பாராட்டியதை சொன்னார்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டு பேரும் பொக்கிஷங்கள் ..இருவரையும் அவர்தம் பிறந்தநாளில் அழகிய பாடலுடன் நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. பாடலை மிகவும் ரசித்து எழுதிய பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. உங்களைப் போலவே எனக்கும் தேவிகாவும் பிடிக்கும், கண்ணதாசனும் பிடிக்கும், எம் எஸ் வியும் பிடிக்கும். என் மைத்துனியின் திருமண நாளன்று தான் கவியரசரின் உயிரற்ற உடல், மரப்பெட்டியில் அமர்ந்து சென்னை வந்திறங்கியது. அந்த நாளை மறக்கமுடியுமா? மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் - என்ற பாடல்தான் நானறிந்த அவரின் பாடல்களில் என் தாய்க்கு மிகவும் பிடித்த பாடல். அண்ணன் என்னடா தம்பி என்னடா - என்ற பாடல் தமிழ்க் குடும்பங்கள் அனைத்துக்குமே பிடித்த பாடல். சொல்லிக்கொண்டே போகலாம்....கண்ணில் நீர்மல்க அவரை நினைவுகூர்வோம்! - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

  பதிலளிநீக்கு
 10. தங்கள் ரசனைக்கு ஈடேது? ரசித்தோம். அருமை.

  பதிலளிநீக்கு
 11. கண்ணதாசன் பாடல்கள் கேட்க ஏது சலிப்பு,,,?நம்மை கைபிடித்து அழைத்துச்செல்லும் வார்த்தைகளின் பிரவாகம் மனம் நுழைந்து கோலாச்சும்/

  பதிலளிநீக்கு
 12. இரு பொக்கிஷங்களைப் பற்றிய பதிவை அன்று காண முடியாமல் இப்போதுதான் வாசித்தோம்!!! மிகவும் ரசித்த பதிவு....

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு