நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 10, 2017

அழகரே வருக.. வருக..

வாத்யாரே!.. இவ்வளவு பெரிய கூட்டம்!.. 
பார்க்கிறப்பவே மனசு சந்தோஷமா இருக்கு!..

இவ்வளவு மக்களையும் பார்க்கிறதுக்காகவே அழகர் வர்றாரு!..

அழகர் எங்கேயிருந்து வர்றாரு?..

மதுரைக்கு வடக்கே திருமாலிருஞ்சோலை.. அப்படி..ன்னு மலை.. அதை பழமுதிர் சோலை..ன்னும் சொல்வாங்க..

அங்கே சுந்தரராஜப் பெருமாள்..ன்னு திருக்கோயில்.. ஆனாலும்,
சாமிக்கு அழகர் - கள்ளழகர் அப்படிங்கற பேர் தான் சிறப்பு..

அழகர் அங்கேயிருந்து தான் வர்றாரு...


சனிக்கிழமை (06/5)அன்றைக்கு அழகர் கோயில்...ல திருவிழா ஆரம்பம்..

முதல் இரண்டு நாளும் திருக்கோயில்..ல புறப்பாடு.. உற்சவம்..

திங்கட்கிழமை (08/05) சாயங்காலம் அஞ்சு மணிக்குக் கண்டாங்கிப் பட்டுடுத்தி நேரியல் கம்பு எடுத்துக்கிட்டு தங்கப் பல்லக்கில எழுந்தருளினார்..

ஏழு மணிக்கு காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி..கிட்ட மதுரைக்குப் போய்ட்டு வர்றேன்!.. - அப்படின்னு சொல்லிட்டு புறப்பட்டார்...

வர்ற வழி நெடுக பற்பல திருக்கண்கள்.. 

திருக்கண்கள்..ன்னா என்னங்க வாத்யாரே!..

திருக்கண்கள்..ன்னா பல்லாக்கில வர்ற சாமிய கொஞ்ச நேரம் தங்க வைக்கிற மண்டகப்படி மண்டபங்கள்.. 

ராஜாக்கள் காலத்தில கட்டி வச்ச மண்டபங்களும் உண்டு.. அந்த ஊர்க்காரங்க தற்காலிகமா அமைக்கிற மண்டபங்களும் உண்டு..

எல்லா ஊர்களிலேயும் காத்துக் கிடந்த மக்களின் உற்சாகமான வரவேற்பு..  

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன் பட்டி, கடச்சனேந்தல் - இப்படி பல ஊர்கள்...ல  கோலாகல வரவேற்பு..

நேற்று (09/05) காலைல ஆறு மணிக்கு மதுரையின் எல்லை மூன்று மாவடி..ங்கற இடத்துக்கு வந்து சேர்ந்தார்... 

சிறப்பான வரவேற்பு.. அதைத் தாண்டி சர்வேயர் காலனி, புதூர், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட் போஸ்ட் ..ங்கற இடங்கள்...லயும் உற்சாகமான வரவேற்பு.. 

எல்லா இடத்திலயும் அழகர் மேல தண்ணி பீய்ச்சி அடிச்சி ஜனங்களுக்கு சந்தோஷம்...

நேற்று தல்லாகுளம் மண்டகப்படி எல்லாம் இருந்து விட்டு -
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தார்..

அங்கே நள்ளிரவுப் பொழுதில் திருமஞ்சனம் ஆகியதும் - 
பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டார்..

தங்கக் குதிரை வாகனத்தில் ஆரோகணித்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்..

இன்றைக்கு (10/5) அதிகாலை இரண்டு மணிக்கு 
தல்லாகுளம் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி திருக்கோயிலுக்கு வந்தருளினார்..  

அங்கே தங்கக் குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் -
கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் வந்து கொண்டிருக்கிறார்..

இன்னும் கொஞ்ச நேரத்தில அழகர் வைகையாற்றுக்கு வந்து விடுவார்..


அதோ.. அதோ.. தங்கக் குதிரை வாகனம்!.. 
பச்சைப் பட்டுடன் அழகர் வருகிறார்.. அழகர் வருகிறார்!..

வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கின்றார்..

வானத்தை எட்டும்படிக்கு மக்கள் முழங்குகின்றனர்..

கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

விடியற்காலை 6.30 மணி..
கோலாகலமாக 
வைகை ஆற்றில் இறங்கினார் - அழகர்!...



கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

தங்க மழை பெய்ய வேணும்..
தண்ணிப் பஞ்சம் தீரவேணும்..
மண்ணு மனை குளிர வேணும்..
மக்கள் குறை தீரவேணும்!..


கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

கட்டுக் கடங்காத மக்கள் வெள்ளம்..
எங்கெங்கு நோக்கினும் மக்கள்.. மக்கள்..

வைகையில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நீரைப் பீய்ச்சியடித்து ஆனந்தமடைகின்றனர் - பக்தர்கள்..

கோவிந்தா.. கோவிந்தா!.. - என முழங்கியவாறு -
சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி - கண் குளிர வழிபட்டனர் மக்கள்..

மலர்.. அந்த சர்க்கரைச் செம்பு எடுத்து.. கற்பூரம் ஏற்று!..
எல்லோரும் நல்லபடியா வாழணும்..ன்னு வேண்டிக்குங்க!..


மலர் சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி அழகரை ஆராதித்தாள்..

நண்பர் சந்திரசேகர் (இது தான் வாத்யாரின் பெயர்) கண்களில் நீர் வழிந்தது..

பிரமிப்பில் ஆழ்ந்து கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தனர் கூட வந்த சிறுவர்கள்...

இன்று விடியற்காலையில் நிகழ்ந்த 
திருவிழாவின் காட்சிகள்
இன்றைய பதிவில் வெளியாகியுள்ளன..







கண்ணாரக்
கும்பிட்டுக் கொள்ளுங்கள்!...

பெருமாளே.. பெருமாளே!..
கோவிந்தா.. கோவிந்தா!..
***

6 கருத்துகள்:

  1. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மதுரையில் இருக்கும் வருடங்களிலேயே அழகர் ஆற்றில் இறங்குவதை நேரில் சென்று கண்டதில்லை! கூட்டம் எனக்கு அலர்ஜி! அதற்கு காரணம் தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் கூட்டத்தில், மாட்டி வேஷ்டி இழந்து மானத்தை மறைக்க ரிக் ஷாவில் குறுகி அமர்ந்து வீடு திரும்பிய அனுபவம்!!!

    பதிலளிநீக்கு
  2. கள்ளழகரைக் கோவிலில் சென்று வழிபட்டதுண்டு. ஆற்றில் இறங்கும்போது பார்த்ததில்லை. இன்று உங்கள் தளத்தில் பார்க்க வசதி செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே!

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  3. இதுவரை ஒரு முறை கூட கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் எனும் எண்ணம் உண்டு!

    ஸ்ரீராம் - :) கூட்டம் என்றால் அலர்ஜி என்றாலும் சில நிகழ்வுகளுக்குக் கூட்டம் தானே அழகு!

    பதிலளிநீக்கு
  4. நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஜி தங்களது நடை.

    பதிலளிநீக்கு
  5. காணொளியும் படங்களும், விவரங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நேரில் கண்டோம் கள்ளழகரை. கள்ளழகரின் பெயரே கள்ளழகர் என்று சொல்லிப் பழகிவிட்டதால் அவரது பெயரே மனதில் பதியாமல் போய்விட்டது. கோயில் சென்றதுண்டு. ஆனால் ஆற்றில் இறங்கும் வைபவம் பார்த்ததில்லை. உங்கள் பதிவு வழி கண்டாயிற்று. முதல் படம் அழகு என்றால் அழகு!! நல்ல நேர்த்தியான புகைப்படம். புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..