நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 04, 2015

சிவ ஞானசம்பந்தர்

திருமருகல்.

சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருவூர்..

சீரும் சிறப்பும் மிக்க அவ்வூரில் பெரும் சிவாலயம் ஒன்று இருந்தது



இறைவன் ரத்னேஸ்வரர். அம்பிகை வண்டுவார்குழலி.

வங்கக் கடல் துறை நோக்கிச் செல்லும் சாலை திருமருகல் வழியே சென்றதனால் - திருக்கோயிலின் அருகே வழிச்செல்வோர் தங்கும் மடமும் அன்ன சத்திரமும் இருந்தன.

அறமும் மறமும் தழைத்திருந்தது - திருமருகலில்!..

அவனுக்கும் இவளுக்கும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறைதான்!.. -  என்று இருந்தாலும், 

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த பண்பாடு தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்த பொற்காலம்!.. 

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டாதிருந்து தான் - 
திருமாங்கல்ய தாரணம் எனும் மங்கலப் பேற்றினை எய்தவேண்டும்.

அப்படியின்றி - மணம் செய்து கொள்ளும் முன்னரே - மனம் தடுமாறி ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டுவது - பெருங்குற்றம் என்பதை அந்த காலத்தின் இளையோர் அறிந்திருந்தனர்..

இப்படியெல்லாம் கட்டுப்பாடும் எல்லாவற்றுக்கும் மேலாக சுய ஒழுக்கமும் மேவியிருந்த காலகட்டம் அது!..

மது உண்டு மயங்கிய வண்டுகளைக் கண்டிருந்தனரே - அன்றி.,
மது உண்டு கிறங்கிய மண்டுகளைக் கண்டதில்லை யாரும்!..

தென்னையும் பனையும் கனத்த குலைகளினால் தவித்திருந்தன!..

இப்படி - மண்ணும் மக்களும் பசுமையுற்றிருந்த நாட்கள் - ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்!.. 

திருமருகலின் அருகில் பெருங்கிராமம். 
அங்கே பெரும் செல்வந்தன் ஒருவன். 
அவனுக்குப் பல ஊர்களிலும் வணிக நிலையங்கள் இருந்தன.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய -  துறைமுகங்களின் வழியாக பலநாடுகளுக்கும்,

வயதாகி இறந்த யானைகளின் தந்தம், 
இயற்கையாக உதிர்ந்த மயில் தோகை,
இயற்கை எருவில் விளைந்த உயர்ரக செந்நெல்,
தென்பாண்டிச் சீமையின் வெண்முத்து, 
அரசு அனுமதியுடன் பெறப்பட்ட சந்தனம் மற்றும் செம்மரக் கட்டைகள், 
விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து பெறப்பட்ட ஏலக்காய், கிராம்பு 

- என பலவிதமான பொருட்களை ஏற்றுமதி செய்தான். 

அவ்வண்ணமே பலநாடுகளில் இருந்தும் நல்ல பொருட்களை அரசு அனுமதி பெற்று முறையான சுங்கத் தீர்வைகளைச் செலுத்தி இறக்குமதி செய்தும் பெரும் வணிகம் செய்து வந்தான்..

அதேசமயம் - 

உண்பவர் உயிருக்கு உலைவைக்கும் நச்சுப் பொருட்கள் கலந்த  உணவுப் பொருட்களை மலிந்த விலைக்கு இறக்குமதி செய்ததில்லை.. 

முச்சந்தியில் ஆடல் பாடல்களுடன் விளம்பரம் செய்ததில்லை.
மாயாஜால வார்த்தைகளால் அப்பாவி மக்களை ஏமாற்றியதில்லை.

கண்டதையும் மக்கள் தலையில் கட்டி - அதன் மூலம் பணப்பெட்டியை நிரப்பிக் கொள்ளும் மாபாதகத்தை ஒருநாளும் செய்ததே இல்லை..

யாராவது நாக்குக்கு அடிமையாகி - சீனத்திலிருந்தும் யவனத்திலிருந்தும் உணவுப் பண்டங்களை வாங்கி வரும்படியாகச் சொன்னால் - 

இங்கே விளையுது - கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை - அப்படின்னு.. அதை வாங்கித் தின்னு நல்லபடியா உடம்பைப் பாத்துக்குங்க!.. அதை விட்டுட்டு.. சீனத்து சங்கதி உங்களுக்கெதுக்கு!.. அவன் பாம்பு திங்கின்றான்!.. பல்லி திங்கின்றான்!.. அதெல்லாம் நமக்கு வேணுமா?..

- என்று நல்ல விதமாகப் பேசி அனுப்பிவிடுவான்..

அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவன்.. 
ஆனாலும், அந்தஸ்து கௌரவம் - என்பன அவனை ஆட்டிப் படைத்தன.. 

குடும்ப நலத் திட்டங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் வணிகன் ஏழு பெண் மக்களுக்குத் தந்தையாக இருந்தான்..

இத்தகைய செல்வந்தன் - தன்னுடைய பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாக வாக்களித்திருந்தான். 

அது பல ஆண்டுகளுக்கு முன்!.. அப்போது வணிகன் - சாதாரணன்!..

இப்போதோ - அவன் வீட்டின் காவல் நாய்க்குக் கூட தங்கச் சங்கிலி!.. 

பட்டு, பொன், வைரம் - என சர்வாலங்காரத்துடன் திகழ்ந்த தன் மகள்களுள் எவரையும் - இன்னும் ஏழையாகவே இருக்கும் தன் சகோதரி மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விருப்பமே இல்லை!..

அதனால், ஒவ்வொரு பெண்ணாக - பொன் பொருளின் வளமை கருதி - பிறருக்கு திருமணம் செய்து வைத்தான். 

வளமை குன்றியதால், இளமை நலம் இருந்தும் உறவினனான மருமகனை மனதிலிருந்தும் உறவு முறையிலிருந்தும் ஒதுக்கி வைத்தான்.

வாக்குத் தவறிய - தகப்பனின் மனப்போக்கினை உணர்ந்தாள் - ஒரு மகள். 

தன் தகப்பன் முன்னரே வாக்கு கொடுத்திருந்தபடிக்கு -  
''...தன் மனம் நிறைந்த மாமன் இனியவன். இனி அவனே எனக்கு மணாளன்!..'' 
என மனதில் கொண்டு, பெற்றோர் அறியாதபடி அவனுடன் வீட்டை  விட்டு வெளியேறினாள். 

ஒருவருக்கொருவர் துணையென - நெடுவழிச் செல்லுங்கால் மாலை மயங்கி இரவாயிற்று. 

திருமருகல் திருக்கோயிலின் அன்ன சத்திரத்தில் இரவு சாப்பாடு. 

பொழுது எப்படி விடியுமோ!.. - என்ற கவலை.. எனினும் வயிறார உண்டனர்.

அருகே இருந்த தங்கும் மனையில் இருவரும் தங்கினர். தர்ப்பைப் புல்லை நடுவில் அரணாக வைத்து விட்டு இருவரும் ஒருபுறமாகத் துயின்றனர்.

என்னென்ன கனவுகளோ!.. - அந்த இளையோர் நெஞ்சில்..   

பொழுது புலரும் நேரம்.

சட்டெனத் துடித்து எழுந்தான் அந்த இளைஞன்.. உடன் வந்த காதலாளும் பதறி எழுந்தாள்..

அவனைத் தன் கொடும் பற்களால் தீண்டி விட்டு - நாகம் ஒன்று படமெடுத்து நின்றிருந்தது.

வீறிட்டு அலறினாள் - மங்கை நல்லாள்..

நாகம் தீண்டியதால் -  விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்த வேளையிலும் - தன்னுடன் வந்த காதலிக்கு - ஏதும் துன்பம் நேரக்கூடாது!.. என பரிதவித்தான். 

கண்களில் நீர் வழிந்த வேளையில் வாயிலும் நுரை வழிந்தது..

இறைவா!.. - என்ற முனகலுடன் அவன் உயிர் பிரிந்தது.

என்ன செய்வாள் - அந்தப் பேதை!.. 

நீயே என் துணை.. - என, உன்னை அழைத்து வந்து - காலனுக்கு கையளித்து விட்டேனே!.. நீயன்றி இனி எனக்கு வாழ்வு தான் ஏது!.. இனியும் இந்தக் கொடுமையைத் தாங்குவேனோ!..

- என பதறித் துடித்தாள். கதறிக் கண்ணீர் வடித்தாள்..

ஒருவரை ஒருவர் மனதில் கொண்டோம். வழித்துணையாய் நடந்து வந்தோம். நாங்கள் செய்த பாவந்தான் என்ன!.. ஏதிலியாக ஆனதுவும் முறையோ!..

முன்அறியாத ஊரில், அரவந்தீண்டி மாண்டு கிடக்கும் அன்பனை -ஆரத்தழுவி

''அன்பே!..'' என்று அழுவதற்குக்கூட - உரிமை அற்றவளாக 

- திருக்கோயிலினுள் வீற்றிருக்கும் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். 

இந்த அபலையின் கதறல்  அவள் செய்திருந்த நல்வினையின் பயனாக -  
அதே இரவில் திருத்தல தரிசனத்திற்காக - திருமருகலுக்கு வந்து, 

அருகிலேயே, வேறொரு திருமடத்தில் அடியார்களுடன் எழுந்தருளியிருந்த ஞானச்செல்வனின் திருச்செவிகளை எட்டியது.



அந்த ஞானச்செல்வன் - திருஞானசம்பந்தப் பெருமான்!..  

இவளின் அழுகையும் ஆற்றாமையும் கதறலும் கண்ணீரும், கண்டு பெருமான் இரக்கங்கொண்டார். 

உடனிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்றனர். 
வெளியே - நடந்ததை அறிந்து வந்து பெருமானின் திருமுன்பாகக் கூறினர்.



உடனே - தாம் தங்கியிருந்த திருமடத்தினின்று வெளியே வந்தருளினார் ஞானசம்பந்தப்பெருமான். 

ஆற்றாது அழுது கொண்டிருந்த மங்கை நல்லாளின் முகம் பார்த்து - 
''அஞ்சேல்!..'' - என அபயம் அளித்தார். 

ஊர் மக்களும் ''விஷம் தீண்டிய விஷயம்'' அறிந்து திரளாகக் கூடிவிட்டனர். திருக்கோயிலின் திருக்கதவங்கள் திறக்கப்பட்டன. 


இறைவனின் திருமுன்னிலையில் - மாண்டு கிடந்த  இளைஞனின் உடல் கிடத்தப் பெற்றது. திருஞானசம்பந்தப்பெருமான் -பெருங்கருணையுடன், 

சடையா எனுமால் சரண்நீ எனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே!.. (2/18)

எனத் தொடங்கி திருப்பதிகம் பாடியருளினார். 

மாண்டு கிடந்தவன் மீண்டு எழுந்தான். அவனைக் கண்டு மலர்ந்தாள் - மங்கை.

பேருவகைப் பெருக்கினால் சம்பந்தப்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்

ஆற்றாது அழுத கண்ணீர் ஆனந்தக் கண்ணீரானது!..

இதற்குள் விஷயம் அறிந்த பெருவணிகன் அலறியடித்துக் கொண்டு வந்தான்.

தன் பிழை தனை உணர்ந்து - தலை வணங்கி நின்றான்..

அனைவருக்கும் நல்லுரை வழங்கி வாழ்த்தியருளிய - ஞானசம்பந்த மூர்த்தி, 

நங்கைக்கும் நம்பிக்கும் இறைவன் சந்நிதியில்  திருமணம் செய்வித்து அருளினார். 



நெறி தவறாத அன்பினைத் தெய்வம் நிறைவேற்றித் தரும்!.. 

என்பதே இந்தத் தல வரலாறு நமக்கு உணர்த்தும் திருக்குறிப்பு.

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருட்துணையாகப் பொலிந்தவர் -
திருஞானசம்பந்தப் பெருமான்!.. 

அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல!..


பழி பாவம் - முன்வினை அச்சம் என்பனவற்றிலிருந்து மீட்டு மக்களை சிவநெறியில் செலுத்தியவர்.

திருப்பதிகங்களில் செந்தமிழைப் புகழ்ந்து போற்றியவர்.

அப்பர் பெருமானுடன் இணைந்து நின்று திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று - மக்களின் பசிப்பிணி போக்கியவர். பஞ்சம் தீர்த்தவர்.

திருநனிபள்ளி எனும் திருத்தலத்தில் நெய்தல் நிலத்தை வயற்பொழிலாய் மாற்றி வழங்கியவர்.


தென் மதுரையில் சைவ சமயத்தை மீட்டருளிய பெருமான் - 
திருமயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்தருளினார்.

திருச்செங்கோட்டில் - நோயுற்றிருந்த மக்களைத் திருப்பதிகத்தால் மீட்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக - தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட -
திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் நட்பு கொண்டவர்.

இசைவாணராகிய திருநீலகண்டருடன் அவரது மணைவி மதங்க சூளாமணி அம்மையாரையும் தன்னுடன் பேணிக் காத்தருளியவர். 

அவர்கள் இருவரையும் - திருத்தலங்கள் தோறும் தன்னுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தவர்.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகங்களை - 
திருநீலகண்டர் தான் - தனது யாழில் மீட்டினார்.

இதுதான் - பேதங்களைக் கடந்த - உயரிய நிலை!.. 

இத்தகைய உயரிய நிலையை -
சிவநேசச்செல்வர்களுக்கு அருளிய - ஞானகுரு திருஞானசம்பந்தப்பெருமான்.

போற்றுதற்குரிய திருஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜை இன்று!..


நல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் - நம்பியாண்டார் நம்பிகளின் திருமகள் தோத்திர பூர்ணா எனும் நங்கையை  பெருமானுக்கென குறித்தனர். 

திருமண வேளையில்,  

பெருமானின் திருக்கரத்தில் - நம்பியாண்டார் நம்பி  மும்முறை மங்கல நீர் வார்த்துத் தமது மகளைக் கன்யா தானம் செய்து கொடுத்தார். 

ஞானசம்பந்தர், தோத்திரப் பூரணாம்பிகையின் திருக்கரம் பற்றி அக்னியை  வலம் வந்தார்.

அவ்வேளையில் - 

இவளொடும் சிவனடி சேர்வன்!.. - என திருஉளங்கொண்டார்.

திருப்பதிகம் பாடியருளினார். சிவப்பெருஞ்ஜோதி ஆங்கே மூண்டெழுந்தது. 

காதல் மனையாளின் கரம் பிடித்தபடி - ஜோதியை வலம் வந்த ஞான சம்பந்தப் பெருமான் - அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியவாறே - அதனுள் புகுந்தார்.

அவருடன் - திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருநீலநக்க நாயனார், முருக நாயனார்,  திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவி - ஆகியோரும் அந்தப் பிழம்பினுள் புகுந்தனர். அழியாஇன்பம் அடைந்தனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சிவஜோதியுட் கலந்தனர்

ஞான சம்பந்தர் அழியா முத்தி நலம் எய்திய நாள் வைகாசி மூலம்..
பெருமான் அருளிய வழியில் நம் மனம் செல்வதாக!.. 

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறையில்லை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளுடன் பெருந்தகை இருந்ததே!..

ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி!..
திருச்சிற்றம்பலம்.
* * * 

17 கருத்துகள்:

  1. வணக்கம்.அன்றைய இளைஞர்களின் நிலை, திருஞானசம்பந்தர் வரலாறு, அதனின் அபலையின் கதறல் என கலவையில் எழுந்த பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. திருஞான சம்பந்தர் பற்றி அறிந்தோம் ஐயா. என் அண்ணணின் பெயரும் இது தான். எங்கள் ஐயா சிவபக்தர். அவர் சூட்டிய பெயர் தான் அண்ணனுக்கு.பழைய நினைவுகள் போய் வந்தேன். மகா சிவராத்திரி அன்று 3 காலம் கண்டு 4 காலம் காண வருகிறேன் என்று சொல்லி இல்லம் சென்று சற்று ஒருமாதிரி இருப்பதால் ஓய்வுக்கு வந்தவர்கள்.சிவபதம் அடைந்தார்கள். பார்க்க சிவ பழம் மாதிரி இருப்பார்கள். புகைப்படத்தில் தான் கண்டு இருக்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஒருகணம் திகைத்து விட்டேன்.. மிகப்பெரிய புண்ணியம் செய்திருந்தாலே - இப்படியான பேறு கிட்டும்.. சிவசாயுஜ்யம் பெற்றவர் அனைவருக்கும் நல்லாசிகளை வழங்கட்டும்..

      சிவம் சங்கரம் சர்வமங்களாதிபம்..
      சிவஓம் நம சிவாயம்!..

      நீக்கு
  3. திருஞானசம்பந்தர் வரலாறு தங்களால் அறிந்து கண்டேன் நண்பரே நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்லூர்ப்பெருமணம் உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்றுள்ளேன். இருப்பினும் தங்களது பதிவுகள் மூலமாக ஞானசம்பந்தப்பெருமானுடன் நாம் அனைவரும் தல யாத்திரை சென்றது போலிருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நல்லூர் பெருமணத்தை இன்னும் தரிசனம் செய்ததில்லை..

      தங்களுடன் பயணிப்பதும் மகிழ்ச்சியே.. நன்றி..

      நீக்கு
  5. என் ஞாபக சக்தியில் எனக்கு சந்தேகம் எழுகிறது. திரைப்படம் ஒன்றில் அப்பராக நடித்த சிவாஜி கணேசன்தானே பாம்பு தீண்டிய சிறுவனுக்கு உயிர் மீட்டுக் கொடுப்பார், அது இது அல்லவா, ?இந்தக் கதை புதியது .எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தஞ்சைக்கு அருகில் உள்ள திங்களூர் எனும் தலத்தில் அப்பூதி அடிகள் என்பவரின் மகன் பாம்பு கடித்து இறந்து விட - அச்சிறுவனை திருநாவுக்கரசர் மீட்டுக் கொடுப்பார்.

      பதிவில் உள்ளது - திருமருகலில் நிகழ்ந்த திருவிளையாடல்..

      சுந்தரமூர்த்தி சுவாமிகளும் - அவிநாசியில் முதலையால் கொல்லப்பட்ட பாலகனை மீட்டுக் கொடுத்துள்ளார்.

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. அருமையான பகிர்வு... திருஞானசம்பந்தப் பெருமான் பற்றி சொல்ல ஓரிரு பதிவுகள் போதாது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிச் சொல்ல ஓரிரு பதிவுகள் போதாது தான்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சோழ நாட்டு திருமருகல் போய் வந்த மாதிரி இருக்கிறது உங்கள் பதிவைப்படித்ததும்! புராணக்கதையும் இடையே இடைச்செருகலாக இன்றைய வணிகர்கள் மீதான சாடலும், திருஞான சம்பந்தர் பற்றிய விபரங்களும் அருமை! திருமருகல் திருவாரூர் அருகே எனக் கேள்வியுற்றிருக்கிறேன்.தஞ்சையிலிருந்து எவ்வாறு திருமருகல் செல்வது என்ற விபரம் எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..

      திருவாரூரில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. திருவாரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் - சன்னா நல்லூரில் இருந்து கிழக்காகச் சென்றால் திருக்கண்ணபுரம் - திருப்புகலூர் ஆகிய தலங்களைக் கடந்து திருப்புகலூர் சென்றடையலாம்..

      அருகிலேயே திருச்செங்காட்டங்குடி..

      இத்தலத்தில் ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகம் - திருமணத் தடைகளை நீக்க வல்லது என்பர் ஆன்றோர்.

      தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. ஞானசம்பந்தரைப் பற்றிய அருமையான பதிவு.....நாயன்மார்களைக் குறித்துச் சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் இல்லையா ஐயா! அம்மையே ஞானம் புகட்டிய குழந்தை....அருமையான கதையுடன் கூடிய விளக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உண்மைதான்..
      நாயன்மார்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இந்த பதிவில் திருஞன சம்பந்தரை பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..