நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 19, 2014

திருவேதிகுடி குடமுழுக்கு

திருமணத் தடைகளை நீக்கி மணமாலை அருளும் திருத்தலம். திருவேதிகுடி.

ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனாகிய ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு 
ஸ்ரீ விஜய வருடம் பங்குனி மாதம் ஐந்தாம் நாள் புதன் கிழமையாகிய 
இன்று காலை  {9.00 -10.30}  மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!..


திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம். 
மூன்றாம் திருமுறை . திருப்பதிக எண் - 78.

நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்த இடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே!..

சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே!..

போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே!.. 

காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே!.. 

சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே!..

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே!..


உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே!..

உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே!..

பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே!..

வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே!..

கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே!.. 

ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தின் பலன் கூறி அருளும் போது - ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்து.
 
அந்த,  ஐந்தினுள்  ஒன்று - திருவேதிகுடிக்கு உரியது!..


அப்பர் சுவாமிகள் அருளிய திருப்பதிகம். 
நான்காம் திருமுறை . திருப்பதிக எண் - 90 .

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. 

கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.

முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை உடையனை நாமடைந் தாடுதுமே.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.

ஆனணைந் தேறுங் குறிகுணம் ஆரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.

எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே.

 
ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமுதை அடைந் தாடுதுமே.

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொரு வன்தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க ளோடடைந்து ஆடுதுமே.

மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆராஅமுதினை நாமடைந் தாடுதுமே.

வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்திரு வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
 
 
 
     

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அருளிய திருப்பதிகங்கள் இரண்டிலும் - ஏழாவது திருப்பாடலில் - மங்கல மணவினைகளும் மங்கலத் திருக்கோலமாகிய மங்கையோர் திருப்பாகம் எனும் அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலமும் பயின்று வருவதைக் காணலாம்.

கும்பாபிஷேக தினத்தன்று மாலை - ஸ்ரீ மங்கையர்க்கரசி அம்பிகைக்கும் ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமிக்கும் மஹா அபிஷேகம். திருக்கல்யாண வைபவமும் ஸ்வாமி திருவீதி உலாவும் நிகழ்வுறும்.

சோழ வளநாட்டில், காவிரிக்குத் தென்கரைத் தலங்களுள் - பதிநான்காவது திருத்தலம்  - திருவேதிகுடி.

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாற்றுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன.

திருவையாற்றிலிருந்து கண்டியூர் வழியாக - திருவேதிக்குடிக்கு சிறு பேருந்துகள் இயங்குகின்றன. திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.
ஸ்ரீ மங்கையர்க்கரசி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் 
திருவடிகள் போற்றி!.. போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. அர்த்த நாரீஸ்வரர் படம் மிக அழகு....

    தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. பாடல்கள் + படங்கள் அற்புதம் ஐயா...

    மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தகவல்கள் பலருக்கும் உதவும்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. எம் பெருமானின் பெருமாட்டியின் சிறப்புகளைச் சொல்லிச்
    செல்வதே இன்பம் என்று வாழும் தங்களின் ஒவ்வொரு
    பகிர்வின் மூலமாகவும் நாம் அறியாத பல சமயம் சார்ந்த
    நிகழ்வுகளையும் ,அதிசையங்களையும் அறிந்து கொள்கின்றோம்
    இந்தப் பெருமை என்றென்றும் நிலைத்திக்க என் அன்பு கலந்த
    வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரையில் மனம் நெகிழ்ந்ததம்மா..
      தங்களது இனிய வாழ்த்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  4. திருவேதிக்குடிக்குடி திருத்தலம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு - நன்றி..

      நீக்கு
  5. Please tell about the remaining four aanaiyitta thiruthalam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தாங்கள் கேட்டிருக்கும் தலங்களை - சில தினங்களில் தனிப் பதிவாகத் தருகின்றேன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  6. Thanks a lot Durai Selvaraju Sir. Your contributions are great and I am an ardent follower of your words.

    Last time I went to kumbakonam visited Korukkai for my avittam nakshatram temple, Tirucherai for my debt removal (11 week procedure) but not able to visit Thiruvedhikudi and its nearby temple Thiruchotruthurai. I was really saddened, but I think God will give me appointment at the right time.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் எண்ணங்கள் எல்லாம் இனிதே நிறைவேறும் அஞ்சற்க..
      வாழ்க நலம்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..