நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

உவரியில் திருவிழா

உவரி.

கடம்ப மரத்தினடியில்  சிவலிங்கம் தோன்றிய திருத்தலம்.  ஸ்வாமிக்கு சுயம்பு லிங்கம் என்றே திருப்பெயர். இத்திருத்தலத்தில் -


இன்றும் - அரைக்கப்பட்ட சந்தனச் சாந்துதான் - பிரதானமான பிரசாதம்.

ஏன்!..

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென - எல்லாம் வல்ல சிவம்  - இங்கு நின்று ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியது.

ஒற்றையடிப் பாதையில் இடையூறாக இருந்தது கடம்ப மரத்தின் வேர் - என எண்ணிய மக்கள் , அதனை வெட்டி - அகற்றியபோது விளைந்த விபரீதத்தின் காரணமாக, வேரிலிருந்து குருதி பெருக - திருமேனி வெளிப்பட்டது. 

அந்த குருதியினை நிறுத்துதற்காக சந்தனம் அரைத்து சாற்றப்பட்டது. இறை நாட்டத்தின் விளைவாக -  இறைவனுக்கு மருந்தாகப் பூசப்பட்ட அந்த சந்தனமே பின்னர் - மக்களுக்கும் மருந்தாகி நிலைத்தது. அதனால் தானே -  


இத் திருத்தலத்தில், பலவகையான நோய்கள் தீர்கின்றதென மக்கள் அலை அலையாக ஆர்ப்பரித்து வந்து ஐயன் ஸ்ரீ சுயம்புலிங்க மூர்த்தியை வணங்கி வழிபட்டு வளமும் நலமும் பெறுகின்றனர்.

அலை அதிரும் வங்கக் கடலில் நீராடிய பின், திருக்குளத்திலும் மூழ்கி எழுந்து - திருக்கோயிலின் அருகே இயற்கையின் அற்புதமாக விளங்கும் நல்ல தண்ணீர் கிணற்றிலும் நீராடி - ஈர உடையுடன் - எம்பெருமானைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு , அவர்கள் திருக்கோயிலின் உள்ளே நுழையும் முன்பே - முதலில் வழங்கப்படுவது சந்தனச் சாந்து!..

திருநீறு - மூலஸ்தான மூர்த்தியைத் தரிசித்த பிறகுதான்!..

ஆண்கள் சட்டை அணிந்து கொண்டு கோயிலுக்குள் வருவதில்லை. அதனால், ஆண்களும் பெண்களும் சகல நோய்களையும் தோஷங்களையும் நீக்கும் சந்தனக் குழம்பினை உடலில் பூசிக் கொள்கின்றனர். நெற்றியில் திலகமாக தரித்துக் கொள்கின்றனர். 


வம்சத்தைக் காத்து அருளும் பெருமானை - கைகூப்பி வணங்கியவாறு, ஆனந்தக் கண்ணீர் பெருக - சுயம்பு லிங்க ஸ்வாமியின் சந்நிதியில் தம்மை மறந்து நிற்கின்றனர். 

குலம் காக்கும் தெய்வம் அல்லவா!.. ஆத்மார்த்தமான அன்பு பரிமாற்றம் ஆகின்றது!.. கடந்து வந்த பாதையில் - மலையாய் நின்ற துன்பம் எல்லாம் பெருமானின் திரு அருளால் பொடியாய்ப் போனதை உணர்கின்றனர். 

மேனி சிலிர்க்க, கண்கள் பனிக்க, பார்த்த விழி பார்த்தபடியே - பரவசம் மேவி, சொல்வதற்கு ஏதும் இன்றி,  சிவானந்தப் பெருவெளியில் திளைக்கின்றனர்.

எந்த வினையானாலும் வந்த வழியே போய் விடுகின்றது!..

மனநோயால் பீடிக்கப்பட்டவர்களும் பேய் பிசாசு என தீய மாந்திரீகத்தால் பீடிக்கப்பவர்களும் 41 நாட்கள்  - இங்கே தங்கி வழிபட - தொல்லைகள் இல்லை என்றாகின்றன!..

தம்மை வழிபடும் அன்பர்களுக்கு - அவர்களுடைய வாழ்வில் எந்தப் பிரச்னையும் நேராமல் சுயம்பு லிங்கப் பெருமான் காத்தருள்கின்றார்.


அதனால் அல்லவோ - கடலில் நீராடி, ஈரத்துணியுடன் ஓலைக் கூடையில் கடல் மண்ணைச் சுமந்து கரையில் போட்டு - தத்தம் அன்பினை நேர்த்திக் கடனாக வெளிப்படுத்துகின்றனர்.

கல்யாண வரம், குழந்தை வரம் - என , வேண்டுவோர் வேண்டி வணங்கி, வரங்கள் பெற்று மகிழ்வது காலங்காலமாக,  கண்கூடாகக் கண்டு வரும் உண்மை!..

இத்தகைய பெருமைகளுடன் கூடிய உவரி -

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம்,  மணப்பாடு வழியாக நாகர் கோயில் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. (திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை வழியாக 70 கி.மீ.) திருச்செந்தூரிலிருந்து செல்லும் போது கூட்டபனை எனும் சிற்றூருக்கு அடுத்தது உவரி.

திருக்கோயிலின்  அருகிலேயே பேருந்துகள்  நிறுத்தப்படுகின்றன. 

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலின் கடற்கரையை தமிழக அரசு சுற்றுலா தளமாக அறிவித்துள்ளது.

இத்திருத்தலத்தைப் பற்றிய முந்தைய பதிவு -->  உவரி தலவரலாறு

இங்கே - உவரி திருக்கோயிலில் - தானே எல்லாமுமாக, தனித்து விளங்கும் சுயம்பு லிங்கத்தின் மகத்துவம் மிகப்பெரியது. கருவறையில் - அம்பிகை மனோன்மணியாக உறைகின்றனள். எனவே தனியாக அம்பாள் சந்நிதி  கிடையாது. மேலும், இங்கே நவக்கிரக பீடமும்  கிடையாது.

மார்கழி மாதம் முழுதும், உதித்தெழும் சூரியன் காலையில் 7 மணியளவில் - மூலஸ்தானத்தில் தன் பொற்கிரணங்களால் ஈசனைத் தழுவி, வணங்கி வழிபடுகின்றான்.

கன்னி விநாயகர் சந்நிதி
திருக்கோயிலின் கன்னி மூலையில்  விநாயகர் திருக்கோயில் கொண்டு விளங்க -  தென்புறம் பூரண கலா, புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஹரிஹர புத்ரனாகிய ஸ்ரீ ஐயனார் - வன்னியடி சாஸ்தா என - திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

ஸ்ரீ சாஸ்தா சந்நிதி
பாருக்குப் படியளக்கும் பரமேஸ்வரி - இத்திருக்கோயிலில் - ஸ்ரீபிரம்ம சக்தி அம்பிகையாக ஸ்ரீகாளி ரூபங்கொண்டு விளங்குகின்றனள். அவளுக்கு பரிவாரங்களாக - ஸ்ரீபேச்சியம்மனுடன்,

ஸ்ரீ மாடசாமியும் ஸ்ரீ இசக்கி அம்மனும், ஸ்ரீ முன்னோடியாரும், தத்தம் சேனை நாயகர்களுடன் விளங்குகின்றனர்.

பேர் விளங்கக் காக்கும் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகைக்கு -  ஆவணி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையைப் பிரதானமாகக் கொண்டு  - திங்கள் மற்றும் புதன் கிழமையுடன் மூன்று நாட்களுக்கு கொடை விழா நிகழ்கின்றது!.


மங்களகரமாக திங்கள் அன்று திருக்காட்சி அருளும் அம்பிகை, செவ்வாய் அன்று நடுப்பகலிலும் நள்ளிரவிலும் ஆர்ப்பரித்து விளங்குகின்றாள். உச்சிப் பொழுதுகளில் , ஊர் காக்க வேண்டி பூங்கரகத்துடன் எழுந்தருளும் போது,

ஸ்ரீ பேச்சியம்மன்  - தானும் வெளிப்பட்டு, வெறும் கையில் அக்னி ஏந்தி வலம் வருகின்றாள்.

திருக்கயிலாய மாமலையில் சிவபெருமானின் மனம் அறிந்து பணிபுரியும் அதிகார நந்தி - இங்கே - உவரியில் தர்மத்தின் தலைவனாக  ஸ்ரீ மாடஸ்வாமி என திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

இவர் சந்நிதியை விட்டு வெளியே எழுந்தருள்வது இல்லை. எனினும்,  கொடை விழாவின்  போது , உச்சிப் பொழுதுகளில் செண்டை மேளத்தின் உச்ச கதியில் அதிர்ந்து,  சிவன் அணைந்த பெருமாள் என சந்நிதியில் இருந்து வெளிப்பட்டு - ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையுடனும் ஸ்ரீ பேச்சியம்மனுடனும் ஊர் சுற்றி வருகின்றார்.

தஞ்சம் அடைந்தவர் வாழ்வில் தடைகளைத் தகர்த்து, அல்லல்களை அகற்றி அடங்காத பேய்களை அடித்து விரட்டி - மக்களைக் காத்தருள்கின்றார்.

செவ்வாய் அன்று நள்ளிரவில் ஊர் மக்கள் மங்கலகரமாக மஞ்சள் பெட்டி காணிக்கை எடுத்துக் கொண்டு, மேள தாளத்துடன் வரும்போது சின்னஞ்சிறு பெண் குழந்தைகளின் மீது, ஸ்ரீ பேச்சியம்மன்  எழுந்தருள்கின்றாள்.

ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையை,  ஸ்ரீ பேச்சியம்மனை, ஸ்ரீ மாடசாமியை குல தெய்வமாகக் கொண்டு எங்கெங்கோ வாழ்பவர் எல்லாம் குடும்பத்துடன், அந்த நடுச்சாம வேளையில் - கைகட்டி வாய் மூடி நிற்க - ஒவ்வொருவரையும் அழைத்து -

''அஞ்சாதே!..'' - என அபயம் அளித்தருளும் காட்சி காணக் கிடைக்காதது.

மனஅழுத்தமா, உடற்பிணியா,  ஊழ்வினையா, வினைப்பகையா - அனைத்துக்கும் விடை கிடைக்கும் அப்போது!..

மறுநாள் விடியற்பொழுதில் - நள்ளிரவில் நிவேதிக்கப்பட்ட படைப்புச் சோறும்  பழங்களும்  எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. பிரசாதத்தைப் பெறுவதற்காகவே காத்திருந்த மக்களும் பெறும் பேறு எனக் கொண்டு, கூடிக் களித்து உண்டு மகிழ்கின்றனர்.

புதன் கிழமை, அம்மையாகிய ஸ்ரீ பிரம்ம சக்தி - கொதிக்கும் மஞ்சள் நீரில்,  நீராடி மகிழ்கின்றாள்!.. மக்களைக் காத்து அருள்கின்றாள்!..

அந்த வைபவத்துடன், விடையாற்றி வருடாந்திர கொடை விழா இனிதே நிறைவுறுகின்றது!..

இங்கே  -  உயிர் பலி ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 27 அன்று -  ஆவணி இரண்டாம் செவ்வாய்!.. 

அந்த நாளிற்காகவே -  ஆண்டு முழுதும் காத்துக் கிடக்கின்றது நெஞ்சம்!..

உவரியில் தேர் திருவிழா
கடல் தாண்டிக் கிடந்தாலும் - என் உள்ளம், உவரியில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. குடி காக்கும் குல தெய்வம்  - குடி கொண்ட வீடு அல்லவா!..

அறியப்பட்டதால் ஆயர் குல மக்களுக்கும், பனை ஓலைப் பந்தலில் உளங் குளிர்ந்து அமர்ந்ததால் நாடார் குல மக்களுக்கும் உவரியே தாய் வீடு!..

கடற்கரையின் வெண்மணலில் காலார நடந்தால் - மனம் குளிர்கின்றது!..

கூடவே - பனங்கிழங்கையும் வேர்க்கடலையையும் தின்றபடி - சுவையான மோர் பருகினால் வயிறு குளிர்கின்றது!..

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, பிரசாத சந்தனத்தைத் தரித்துக் கொண்டால்,

உடலும் உள்ளமும் ஒருசேர குளிர்கின்றது!.. மணக்கின்றது!..

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்  - வங்கக் கடலின் காற்றோடு காற்றாகக் கலந்து - எங்கோ போய்விடுகின்றன!..

வினையும் பிணியும் தீர்கின்றன!.. 
நலமும் வளமும் சேர்கின்றன!..

உவரியம்பதிக்கு வாருங்கள்!..   
உளங்குளிர்வதைப் பாருங்கள்!..

10 கருத்துகள்:

 1. உவரி எங்கே இருக்கிறது?
  நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் போது அகோவிலையும் ஈஸ்வரனையும் தரிசிக்க மனம் விழைகிறது.
  திருச்செந்தூர் அருகில் இருக்கிறதோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக!.. அவசரத்தில் தவறு நேர்ந்து விட்டது!.. திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 45 கி.மீ தொலைவில், உவரி - உள்ளது.

   நீக்கு
 2. உவரி எங்கே இருக்கிறது ?

  எனக்கும் அதே கேள்வி தான்.

  உள்ளுவதெல்லாம்
  வற்றிடா அருள் புரியும்
  ரிஷப வாகனன்

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக!.. அவசரத்தில் தவறு நேர்ந்து விட்டது!.. திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 45 கி.மீ தொலைவில், உவரி - உள்ளது. பதிவில் விவரம் இணைத்துள்ளேன்!..

   நீக்கு
 3. குலம் காக்கும் தெய்வம் அல்லவா!.. ஆத்மார்த்தமான அன்பு பரிமாற்றம் ஆகின்றது!.. கடந்து வந்த பாதையில் - மலையாய் நின்ற துன்பம் எல்லாம் பெருமானின் திரு அருளால் பொடியாய்ப் போனதை உணர்கின்றனர்.

  நிறைவாய் திகழும் பதிவுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 5. குலதெய்வத்தின் கோவில் அதுதான் உங்களை எப்படி கடல் தாண்டினாலும் இறைவனை நினைக்க வைக்கிறது.
  நல்லதொரு பதிவிற்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா..
   தாங்கள் வருகை தந்து பாராட்டி கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..