நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சமூக அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 08, 2015

இதுவா மானிடம்?..

நாளுக்கு நாள் பற்பல கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில்  -

மேலும் ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது - திருவண்ணாமலைக்கு அருகில்!..


பச்சிளம் பாலகன் ஒருவனை - பீர் குடிக்கச் செய்திருக்கின்றனர் - சில கொடூரர்கள்..

எங்கே போய்க்கொண்டிருக்கின்றது - தமிழகம்!?...

இந்தக் கொடுமையையை முன்னின்று நடத்தியன் சிறுவனின் தாய் மாமன்!..

மாமன் என்ற சொல்லின் மதிப்பினை மகத்துவத்தினை மரியாதையினைக் கெடுத்தவர்கள் தமிழர்கள்!..

போதாக்குறைக்கு - இப்படியோர் இழிசெயல்!..

சிறுவனின் மாமன் எனப்பட்டவனோடு -  நண்பர்கள் என - மேலும் நான்கு பேர் சேர்ந்து கொண்டு - இதைப் பார்த்துப் பரவசமாகியிருக்கின்றனர்..

பரவசம் தாங்க முடியாமல் தவித்த நிலையில் -
இதை எல்லோரும் கண்டு இன்புறவேண்டும் என்ற ஆசையின் காரணமாக -

கையிலிருந்த செல்போன் மூலமாகப் படமாகப் பிடித்து -
தாம் செய்த கொடுமையைப் பலருக்கும் பகிர்ந்து அளித்திருக்கின்றனர்..

சருகில் பற்றிய தீயாக - இந்தச் செய்தி எங்கும் பரவியது..

சம்பவ இடத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் நிறுத்தப்பட்டிருக்க - 
அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு - திருவண்ணாமலை காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை சிறைப் பிடித்துள்ளனர்.

வெளியிடப்பட்ட காட்சியில் -    

அந்தச் சிறுவன் ஏதுமறியாமல் - பீர் அருந்துவதுடன் எதையோ தின்கின்றான்.

அவனைச் சுற்றி நின்று கொண்டு -
மிகுந்த குதுகலத்துடன் சிரிக்கின்றனர். ஆரவாரிக்கின்றனர்..

அடப்பாவிகளே!... உங்களில் ஒருவருக்குக் கூட நல்ல மனம் கிடையாதா!..

இதே நிலையில், சிறுவனுக்குப் பதிலாக சிறுமி - எனில்!?..

நெஞ்சம் பதறுகின்றது..

அடேய்!.. உங்களையெல்லாம் பூமி - விழுங்கித் தொலைக்கவில்லையே ஏன்?..

நஞ்சுடைய பாம்பு வந்து நச்சென்று கடிக்கவில்லையே ஏன்?..

அப்படியெல்லாம் - அற்புதங்கள் நிகழாது - இந்தக் கலியுகத்தில்!..

ஆனாலும் - 

இப்போதே - இவர்கள் பூமியால் தின்னப்பட்டவர்கள் தான்!.. 

நஞ்சுடைய பாம்பினால் கடிக்கப்பட்டவர்கள் தான்!..


ஆயினும் - 

இவர்களுக்கு எதிராக வழக்கு நடக்கும்.. 

அதன் பேரில் - இவர்களுக்கு ஆதரவாக எதிர்காலத்தை முன்வைத்து யாராவது வாதிடக் கூடும்..

அதன்பின் என்ன ஆகுமோ?.. ஏது நடக்குமோ!..

எது நடந்தாலும் - இந்த மூடர்கள் செத்து ஒழியும் வரை நடை பிணங்களே!..

இந்த சமூக அவலம் - நமக்குச் சொல்வதென்ன?

மதுவுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - என்பதாகக் கொள்ளலாம்..

காலங்காலமாக - பனங்கள்ளும் தென்னங்கள்ளும் தமிழர்களின் வாழ்வினைத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன..

ஆனாலும் இத்தகைய கொடூரம் நிகழ்ந்ந்ததாகக் கேட்டதில்லை..

மதுவினால் விளைந்த கொடுமைகள் ஆயிரம் ஆயிரம்!.. 

அவை எல்லாவற்றையும் விவரிக்க நம்முடைய ஆயுள் போதாது..

பாரம்பர்யமான கள்ளுடன் பகட்டான சாராயமும் சேர்ந்து கொண்டது..

விளைவு!..

பைத்தியம் பிடித்த குரங்கைத் தேள் கொட்டிய மாதிரி ஆகிவிட்டது..



தமிழகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த மது அரக்கனை விடுவித்த பெருமை யாருக்கு உரியது!?..

நெருப்பு வளையத்தின் நடுவில் இருக்கும் கற்பூரம் போல தமிழகம்!.. 

- என, வார்த்தைகளால் நியாயம் - அப்போது கற்பிக்கப்பட்டது..

வஞ்சகச் சொற்களால் வலை விரிக்கப்பட்டது.. 

மதுவை மறந்திருந்த தமிழக மக்கள் - மடை மாற்றப்பட்டனர்..

1971ல் நிகழ்ந்தது அந்த சோகம்!..

அதன் பின் - ஆட்சி மாற்றத்தால் மீண்டும் மதுவிலக்கு!..

மறுபடியும் - ஏதேதோ காரணங்களால் - மீண்டும் மதுக்கடைகள்!..

அப்போதெல்லாம் - குடிகாரனுக்குக் கல்யாணம் நடப்பது அரிதாக இருந்தது..

இப்போது -  முதல்நாள் அருந்திய மது மயக்கத்துடன் -
மணமகன் வருகின்றான் - திருமண மேடைக்கு!..


மதுக் கூடத்தில் - மாணவர்கள் மது அருந்திய அவலத்தையும் மீறி -
கல்விக் கூடத்தில் மது அருந்திக் களித்த கொடுமையும் நடந்திருக்கின்றதே..

இதை என்னென்று சொல்வது!.. 

Thanks - Twitter
மதுவினால் மதி மயங்கி -
சீருடைய மாணவர்கள் சீருடையுடன் சாக்கடையில் வீழ்ந்து கிடந்ததை -
நேரில் கண்டிருக்கின்றேன் - தஞ்சையில்!..

இப்படியான சம்பவங்கள் - தமிழகத்தின் பலபகுதியிலும் நிகழ்ந்துள்ளன.

ஆணுக்குப் பெண் சமம்!.. ஆதலால்,

பெண்களும் மது அருந்துவது - நயத்தகு நாகரிகமாகி விட்டது..

குறிப்பாக கல்லூரி மாணவிகள் - மது அருந்தி விட்டு -  அலங்கோலமாக ஆடிக் களிப்பதை அவ்வப்போது ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..

தெருவில் குடிபோதையுடன் - கணவன் மயங்கிக் கிடப்பதைச் சகிக்காத பெண்கள் - வீட்டுக்குள்ளேயே குடித்து விட்டுக் கிட!.. - என்று, 
தண்ணீர் தெளித்து விடுவதையும் பார்த்திருக்கின்றேன்..

நான் மட்டுமல்ல!.. 

பல இடங்களிலும் இப்படி நிகழ்வதைப் பலரும் பார்த்திருப்பீர்கள்!..


சென்ற மாதம் - குடிகாரத் தகப்பனின் மீது வெறுப்பு கொண்டு - மகன் ஒருவன் நஞ்சருந்தி தன்னை மாய்த்துக் கொண்டதையும் தமிழகம் கண்டது.

குடிகாரக் கொடியவர்களால் எத்தனை எத்தனையோ பெண்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டிருக்கின்றது..

கொலை, களவு, தகாத உறவு - எனும் பாதகங்கள் அனைத்திற்கும் அடிப்படை மது!..

ஒழுங்காக வளராத அல்லது வளர்க்கப்படாத வண்கணாளர்கள் தாம் செய்த கொடூரத்தை வலைத் தளத்தில் பரப்பியுள்ளது வக்கிரத்தின் உச்சம்!..

இந்த மூடர்களால் - எதிர்கால சமுதாயத்திற்கு ஆபத்துகளும் அவலங்களுமே!.

இந்தக் கயவர்களின் கல்வித் தகுதியைப் பற்றி எதுவும் இதுவரை தெரிய வில்லை.

என்ன படித்திருந்தாலும் சரி!..

நல்லொழுக்கத்தைப் பயிலவில்லை என்பது மட்டும் உறுதியாகின்றது.

மதி கெட்ட மடையர்கள் - மனிதாபிமானற்றவர்கள் - மனங்கொண்டு செய்த
இந்த ஈனத்தினால் - மண் களங்கமாகி இருக்கின்றது..

அதனை எப்படி நீக்கப் போகின்றது அரசு!..

நாளுக்கு நாள் - மது விற்பனையைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் முனைப்பாக இருக்கும் அரசு - 

இதைப் பற்றி பெரிதாக ஒன்றும் கவலை கொள்ளாது..

மது அருந்துக - என்று யாரையும் வற்புறுத்தவில்லையே!.. தனி நபர் ஒழுக்கம் அது!.. - என ஒதுங்கிப் போகலாம்..


இன்றைய சூழ்நிலை - இளம் பருவத்தினரின் கவனம் சிதறிப் போவதற்கான அனைத்துக் காரணிகளாலும் நிறைந்துள்ளது..

சக மாணவியிடம் - சாதாரண பென்சில் இரவல் கேட்பதற்கும் அச்சம் கொண்ட  மாணவர்கள் நிறைந்திருந்தனர் - அன்றைய பள்ளிகளில்!..

ஆனால் - இன்றைக்கு ஏதொன்றும் சொல்லுவதற்கில்லை!..

மாணவன் ஆசிரியையுடன் காணாமல் போகின்றான்..

ஆசிரியர் மாணவியுடன் தலைமறைவாகின்றார்..

ஆனால் - 

தனி மனிதர்களின் ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் - 
அனைத்தும் அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது நலம்..

இளஞ்சிறார்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை அறியாத மூடர்களுக்கு எதிராக நாட்டிலுள்ள நல்லவர்கள் குரல் கொடுத்துள்ளனர்..

சிறுவனின் பெற்றோருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது..

அந்தக் குழந்தையின் உடல் நிலை எப்படியுள்ளதோ தெரியவில்லை..

குடி குடியைக் கெடுக்கும்..
மது மதியைக் கெடுக்கும்!..

- என்று , கதறிக் கண்ணீர் வடித்தாலும் கேட்பதாக இல்லை.

பாதகச் செயல்களில் மூழ்கித் திளைக்கின்றது நாடு..

பச்சிளம் பாலகனுக்கு மது ஊற்றிக் கொடுத்த - மூடர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கமுடியாது.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!..

- என்று பாடி வைத்தார் - மகாகவி பாரதியார்..

ஆனாலும் -

திருவள்ளுவர் மெய்யாகவே சிறப்பிக்கப்பட்டாரா!..
திருக்குறளும் மெய்யாகவே தமிழர் தம் வாழ்வியல் நூலாகிப் பொலிந்ததா?..

1967ல் இருந்து - நம்மை ஆளுங்கட்சிகள் - திருவள்ளுவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதாக பாவனை செய்கின்றன!..

விழுந்தால் வீட்டுக்கு!..
விழாவிட்டால் நாட்டுக்கு!..

- என்ற முழக்கத்துடன் - புதிய வகை சூதாட்டம் வீட்டுக்கு வீடு அறிமுகம் செய்யப்பட்டது.

உழைக்கிற நோக்கம் உறுதியாகிட்டால்
கெடுக்கிற நோக்கம் வளராது!..

- பட்டுக்கோட்டையாரின் உயரிய வரிகள் - அரசியல் காற்றில் பறந்தன..

தமது தேவைகளுக்காக எதையும் செய்திடும் மனோபாவம் மக்களிடையே வளர்ந்தது.

ஒருவழியாக - லாட்டரி சீட்டு ஒழிக்கப்பட்டது. ஆயினும், அரசே நடத்தும்
மது விற்பனையால் அரசின் கருவூலம் கோடிகளால் நிறைகின்றது. 

அரசு - அந்த கோடிகளைச் செலவழித்து -
மாநிலங்கடந்தும் - திருவள்ளுவருக்கு சிலைகளை எழுப்புகின்றது. 

திருக்குறளைத் தெருவில் பேருந்தில் - எங்கும் எழுதிவைத்து மகிழ்கின்றது..

இதிலெல்லாம் மனம் அமைதியுறாமல் - கடல் நடுவில் கற்சிலையாக வடித்து வைத்தும் பராமரித்தும் களிப்பெய்துகின்றது..

இவற்றால் தமிழகம் கண்ட பயன் என்ன!..

அன்பும் பண்பும் அதோகதி ஆனது தான் மிச்சம்!..

ஊழலில் அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் ஊறித் திளைக்கின்றனர்.

பாமரர்களால் கட்டிக் காக்கப்பட்ட ஏரியும் குளமும் மடுவும் மலையும் -
படித்தவர்கள் செய்த செயலால் காணாமல் போயிருக்கின்றன..

அரசு அலுவலர்கள் - மக்கள் பணிக்காக மக்களிடமே கைநீட்டுகின்றனர்..

கற்ற கல்வியினால் நல்லறிவு விளையவில்லை - அவர்களிடத்தில்!..  

உயர்கல்வி கற்றவர்களே இப்படியிருக்கும் போது - 
கல்லாதவர்களின் நிலை?..

பல சாட்சிகள் காணக் கிடைக்கின்றன.. அதில் ஒன்று மட்டும்!..

Thanks -Twitter
ஜூன்/ 27 அன்று - ஆம்பூரில் மூவாயிரம் பேர் கூடி நிகழ்த்திய வன்முறையில் -

மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 54 பேர் -
பெண் காவலர்கள் உட்பட - ரத்தக் களறி ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

காவல்துறை அலுவலருக்கு காலில் 92 தையல்கள் இடப்பட்டுள்ளன.

வழியும் குருதியுடன் - உயிருக்கு அஞ்சி ஓடிய பெண் காவலர்களின் சட்டை பிடித்து இழுத்து கிழிக்கப்பட்டிருக்கின்றது..

நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் லாரிகள் தாக்கப்பட்டன.
வீதியில் மருத்துவமனை உட்பட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
போலீஸ் மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தக் கலவரத்திற்கு மூல காரணம் - முறை தவறிய காமம்.

நல்லொழுக்கத்தை இழந்த - ஆண் பெண் இருவரால் நேர்ந்திருக்கின்றது..


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே!..

- என்றார் முன்னாள் அரசவைக் கவிஞர் புலமைப் பித்தன்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்லவராக வளர்த்து ஆளாக்குவதில் முனைப்பாக இருக்க வேண்டும்..

நற்பண்புகளில் தாமே முன்னோடிகளாகத் திகழ வேண்டும்..

பள்ளிகளில் கல்வியுடன் நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும்சொல்லிக் கொடுக்கவேண்டும்.

நல்லொழுக்கத்தைப் பேணுவதில் பெருமை கொள்ளவேண்டும்.

தன் நடத்தையில் தன்மானம் கட்டிக் காக்கப்படவேண்டும்..

தன் அருமையை - தனது குடும்பத்தின் பெருமையைக் காக்க விரும்பும் ஒருவருக்கே இதெல்லாம் சாத்தியமாகக் கூடியவை..

ஆனாலும் - மிகவும் பேராசை தான் நமக்கு!..

இந்த ஆசையெல்லாம் 
இன்றைய சூழலில் நிறைவேறக்கூடியதா!?..

குடிப்பவரால் அரசுக்கு பல கோடிகள் சேர்கின்றன - இந்நாளில்!..
குடிப்பவனுக்கும் ஒரு கோடி வந்து சேரும் - கடைநாளில்!..


தவறு செய்வதற்கு நாணுவதே நற்பண்பு..

அந்த நாணம் - ஒருவனையோ ஒருத்தியையோ விட்டு விலகி நின்றால் 
அவர் எதற்கும் - எந்த நிலைக்கும் துணிந்து விடுகின்றனர்..

அதனால் தான் அவலங்கள் நேர்கின்றன..
- - -

வள்ளுவப்பெருந்தகையின் திருவாக்கு இது!..

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.. (924)

மண் பயனுற வேண்டும்!.. 
* * *