நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2025

காதலாகி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
பஞ்சாட்சர திருப்பதிகம்

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 49
 
காத லாகிக்
  கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
  நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
  மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
  நம சிவாயவே  1 

 நம்பு வாரவர்
  நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர்
  வார்மது ஒப்பது
செம்பொ னார்தில
  கம்உல குக்கெலாம்
நம்பன் நாமம்
  நம சிவாயவே  2  

நெக்கு ளார்வ
  மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ
  டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ
  ராத்தகு விப்பது
நக்கன் நாமம்
  நம சிவாயவே  3  

இயமன் தூதரும்
  அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல்
  லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை
  வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம்
  நம சிவாயவே  4  

கொல்வா ரேனுங்
  குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும்
  இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும்
  நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம்
  நம சிவாயவே  5  

மந்த ரம்மன
  பாவங்கள் மேவிய
பந்த னையவர்
  தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை
  செல்வமும் மல்குமால்
நந்தி நாமம்
  நம சிவாயவே.  6  

நரகம் ஏழ்புக
  நாடின ராயினும்
உரைசெய் வாயினர்
  ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு
  வித்திடு மென்பரால்
வரதன் நாமம்
  நம சிவாயவே.  7  

இலங்கை மன்னன்
  எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல்
  சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி
  செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம்
  நம சிவாயவே.  8  

போதன் போதன
  கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி
  நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி
  தாகி அலந்தவர்
ஓதும் நாமம்
  நம சிவாயவே  9  

கஞ்சி மண்டையர்
  கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர்
  விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள்
  வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன்
  நம சிவாயவே.  10  

நந்தி நாமம்
  நம சிவாய எனுஞ்
சந்தை யால் தமிழ்
  ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்
  தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம்
  அறுக்கவல் லார்களே.  11

திருச்சிற்றம்பலம்
 
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

இது தான்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை


' ஊ ஊ... ஊவ்.. "

எஞ்சினின் நீண்ட சத்தத்தினால் ரயிலடி வாசல் பரபரப்பானது.. 

திருச்சிராப்பள்ளி வண்டி வந்து விட்டது.. அந்தப் பக்கம் நாகூர் வண்டியும் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்து விட்டது.. ரெண்டு பாசஞ்சரும் பதினைஞ்சு நிமிசம் லேட்.. 


வண்டி மாடுகள் இன்னும் உறக்கம் கலையாது இருக்க வண்டிக்காரர்களிடம் இருந்து ' ஹை.. ஹை.. ' - என்ற சத்தம்..

ஜட்கா வண்டிகளில் பூட்டப்படிருந்த குதிரைகள் வடக்கு ராஜ வீதி பக்கமாகப் பாய்வதற்குத் துடியாய் இருந்தன..

திபு திபு  - என ஜனங்கள்..  அக்கம் பக்கம் பார்த்தபடி அவரவர் பிரச்னைகளை  பேசிக் கொண்டு ஸ்டேசனில் இருந்து வந்தார்கள்.. 

ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒரு பரபரப்பு.. என்ன என்று புரியவில்லை..

இதற்கிடையே -

" வெண்ணாற்றங்கரை மாமணிக் கோயிலுக்குப் போகணும்.. எவ்வளவு கேட்கிறீர்?.. "

"  மூனு மைல்  தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபாய் கொடுங்க சாமீ!.. "

"ரெண்டு ரூபாயா.. ஜாஸ்தியா.. ன்னா இருக்கு?.. "

" சீரங்கத்துல இருந்து எங்க ஊருக்கு வர்றீங்க..ன்னு தெரியுது.. பெருமாள் புண்ணியம் எல்லோருக்கும் ஆகட்டுமே!.. நாலணா குறைச்சுக்கங்க சாமி...  வண்டிலே ஏறி உட்காரும்மா குழந்தே!.. " - என்றபடி, வண்டிக்குள் கிடந்த வைக்கோல் மெத்தையைக் கைகளால் தட்டி சமப்படுத்தி விட்டு - அந்த இளைஞனின் கையில் வைத்திருந்த டிரங்கு பெட்டியை வாங்கி வண்டியின்  முன் பக்கம் வைத்தார் வண்டிக்காரர்..

நெற்றிச்சுட்டி, காதோர குஞ்சஙகள், கண் அடைப்பு, கடிவாளம் இன்னபிற அலங்காரங்களுடன் நின்றிருந்த குதிரை  தலையை சிலுப்பிக் கொண்டது..

" ஏறிக்கோ.. பார்கவி!.. "

நெற்றியில் சூரணம் மினுமினுக்க நின்றிருந்த அந்தப் பெண் வண்டியின் பின்புற பாதப் படியில் கால் வைத்து வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.. 
தொடர்ந்து அந்த இளைஞன் ஏறிக் கொண்டதும் வண்டியின் முன்புறம் சுருட்டி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலையை இறக்கி விட்ட வண்டிக்காரர் மிக்ஸர் கடை மாரியப்பனைப் பார்த்து கை காட்டினார்..

" திரைச் சீலை வேணாம் பெரியவரே!.. இப்போ தான் ஜென்மாவில் முதல் தரமா தஞ்சாவூர் திவ்ய தேசத்துக்கு வந்திருக்கோம்.. க்ஷேத்ர லாவண்யத்தை எல்லாம் நன்னா பார்த்துண்டு வர்றோமே!.. "

" ஓ.. நல்லா பாருங்க சாமீ!.. " - என்றபடி திரைச்சீலையை மீண்டும் சுருட்டிக் கட்டிய வண்டிக்காரர் லகானை உதறியபடி குதிரையை உசுப்பி விட - அது    கனைத்தபடி நகர்ந்தது.. 

" பெரியவங்க நீங்க.. என்னை ஏன் சாமி.. சாமி.. ன்றேள்... மனசு கஷ்டப்படறது..  "

" அப்படியே பழகிப் போச்சு.. அது ஒரு பிரியத்துல தான்..  பெத்த பிள்ளைகளை ஐயா..ன்னும் அப்பா.. ன்னும் கூப்பிடறோமே.. அது மாதிரி!.. " - என்றார் வண்டிக்காரர்..

" எம்பேரு வரதன் ஆராவமுதன்.. எப்படி இஷ்டமோ அப்படிக் கூப்பிடுங்கோ.. "

" என்னவோ உங்களப் போல ஒரு சில பேர் தான் இந்த மாதிரி பெருந்தன்மையா இருக்காங்க.. "

" இந்த லோகம் - வஸூதைவ குடும்பகம்.. ன்னு வேதோபநிஷத் ல சொல்லியிருக்கா.. "

" அப்படீன்னா?.. "

" இந்தப் பூவுலகமே என்னோட குடும்பம்.. ன்றது அர்த்தம்.. இதுவே தான் நம்ம தமிழ் லயும் சொல்லப்பட்டிருக்கு.. யாதும் ஊரே.. யாவரும் கேளிர்.. ன்னு.. "

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்..

" ஆனாலும் அந்த மாதிரி இருக்கறதுக்கு எல்லா நேரத்திலயும் முடியறதில்லையே!.. துஷ்டனைக் கண்டா தூர விலகு.. ன்னும் சொல்லி இருக்காங்களே!.. "

பெரியவரின் ஆதங்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டது..

" உயர்ந்த சிந்தனைக்கு நம்ம மனஸ் இடமாயிடுத்துன்னா துஷ்டங்கள் தன்னால விலகிப் போய்டும் ன்றதும் தாத்பர்யம்.. "

" நல்லா விவரமாத் தான் பேசறீங்க.. கோயில் யாத்திரையா வந்திருக்கீங்களா?.. "

" விவாஹம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகறது.. மாமனாரோட தம்பி அகத்துக்கு வந்திருக்றோம் பெரியவரே!.. "

மெல்லிய புன்னகையுடன் நாணம் சேர்ந்து கொள்ள அந்தப் பெண் பார்கவியின் கண்களும் கை விரல்களும் பேசாமல் பேசின  - ' வண்டிக்காரர் கேட்டபடியே  ரூபாயைக் கொடுத்துடுங்கோ!.. '  

' ஓ.. கொடுத்துடலாமே!.. ' - இங்கிருந்தும் கண்கள் பேசின..

" அப்போ எங்க ஊருக்கு விருந்தாளியா வந்திருக்கீங்க...  " வண்டிக்காரர் சிரித்தார்..

' டொக்.. டொக்..டொக்.. டொக்.. '
குளம்புகளின் சீரான சத்தம்...
வண்டி ஓட்டத்துக்கு வெள்ளைக்காரன் போட்டு வைத்திருந்த அகலமான  சிமெண்ட் சாலை இதமாக இருந்தது.. 

நடைபாதையில் குடை விதித்திருந்த வாத நாராயண மரங்களில் குருவிகளின் கூச்சல அதிகமாக இருக்க - 

" இதோ.. இதுதான் முனிசிபல் ஆபீஸ்.. " - வண்டிக்காரர் கை காட்டினார்..

வண்டிக்குள்ளிருந்த
இருவரும்  ஆர்வத்துடன் வெளியே நோக்கினர்... 

குதிரையின் ஓட்டம் சற்றே வேகமாகியிருந்தது.. 

" இதோ போறதே... இந்த ரோட்ல தான் கலெக்டர் ஆபீஸ்.. எதிர்த்தாற்போல கோர்ட் கச்சேரி.. "
:
" ம்ம்.. " 

" இது என்ன காவேரி ஆறா?.. "

" காவேரி ஓடறது திருவையாத்திலே... இதுக்குப் பேரு புது ஆறு.. கல்லணையில இருந்து பிரிஞ்சு வர்றது.. " 

" ஓஹோ!.. "


" தோ பாருங்க.. மணிக் கூண்டு..  ராஜா காலத்ல கட்னது.. எவ்ளோ ஒசரம்!.. அதோ அதுதான் சுதர்சன சபா!.. இதுல வந்து நாடகம் 
போடாதவங்களே கிடையாது.. கச்சேரி பாடாதவங்களே கிடையாது!.. " 

" பெரிய கோயில்.. பெரிய கோயில்.. ன்னு சொல்றாளே.. அது எங்கே இருக்கு?.."

" இதுக்குப் பக்கத்து ரோட்ல  இருக்கு பெரிய கோயில்!.. " மேற்கு திசையில் கை காட்டினார் வண்டிக்காரர்..

"  பெரிய கோயிலுக்கு ஒரு நாள் போகலாமா.. ன்னா!. "

அந்தப் பெண் பார்கவியின் ஆவலான கேள்வி..

" சிவன் கோயில் போறதுக்கு மாமா ஒத்துப்பாரா தெரியலையே.. " 

" ஏன்.. இப்டி சொல்றேள்?.. அந்த பேதம் எல்லாம் இங்கேயும் இருக்றதா!..  "

" அப்படி இருக்றதா தெரியலை.. இருந்தாலும்.. அவங்க சம்ப்ரதாயத்லே.. "

" ஈஸ்வரனும் பெருமாளும் வேற வேற சாமிகளா?.. " -
குறுக்கிட்ட வண்டிக்காரருக்கு வியப்பு..

" தெய்வம்.. ங்கறது  ஒன்னுதான்.. எது.. ங்கறது தான் பிரச்னை.. "

மதுரை செல்லும் பேருந்து -
' பாம்.. பாம்.. ' என்ற சத்தத்துடன்   பஸ்டாண்டில் இருந்து வெளியே வந்து விரைந்தது..  

வழியெங்கும் காஃபி மணம்..  ராஜவீதி, அரண்மனை - என்று கடந்த குதிரை -  பரபரப்பு குறைந்திருந்த சாலையில்
வேகமெடுத்து ஓடியது..

" அப்போ... ஆளுக்கு ஒரு சாமின்னு இருக்குதுங்களா.. " 

" அப்படியெல்லாம் இல்லை.. ஏதேதோ சம்ப்ரதாயங்கள்.. சடங்குகள்.. எல்லாமே அவங்க அவங்க க்ஷேமத்துக்காகத் தான்.. "

" அப்போ இந்த லோகத்துக்குன்னு 
உபதேசம் உபசாரம் ஒன்னும் கிடையாதா?.. "

" ஏன் இல்லாம.. எத்தனையோ பெரியவங்க - மனுஷாள் யோக்யாம்சமா வாழறதுக்கு எவ்வளவோ உபதேசம் செஞ்சு வெச்சுருக்கா..  "

" மனுச செம்மம் தான் நல்லதைக் கேக்கறது இல்லையே!.. " 

" அவா அவாளும் பெரியவா சொல்லியிருக்றதக் கேட்டு நடந்தா பிரச்னை இல்லாம இருக்கலாம்.. பிரச்னை இல்லாம க்ஷேமமா இருந்தா ஊருக்கு நல்லது.. ஊர் ஒன்னொன்னும் க்ஷேமமா இருந்தா லோகத்துக்கு நல்லது தானே!.. "

" கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க சம்பிரதாயம் தான பெருசா இருக்கு!.. "
- வண்டிக்காரர் சிரித்தார்..

" ஞானிகளுக்குப் பேதம்.. ன்றது கிடையாது.. தர்க்க ரீதியா வர்றவாளுக்குத் தான் அவங்க அவங்க சம்ப்ரதாயம் - நியாயம் பெரிசாப்படறது.. " 

கேட்டுக் கொண்டிந்த பார்கவி 
கண்களை மலர்த்தி - வலக் கையின் சுட்டு விரலைப் பெரு விரலுடன் சேர்த்து  -  ' நன்று ' என - அபிநயித்தாள்..

"  ரூபாய் நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு தானே!.. "

புன்னகையுடன் இளைஞனின் கேள்வி..

" ஒரு ரூபாய்க்கு என்ன.. எல்லா காசுக்கும் தான் ரெண்டு பக்கம் இருக்கு..
ரெண்டு பக்கம் இல்லாம உலகத்துல எந்த விசயமும் கிடையாதே!.. " - வண்டிக்காரரின் ஆச்சர்யம்..

" மனுஷாளுக்கு - சொல்றது
 அதாவது  பேசறது சக்தி.. ன்னா ஒரு நாணயத்துக்கு செல்றது அதாவது செல்லுபடியாகறது சக்தி.. இல்லையா!.. "

இளைஞனின் கேள்வி..

" கையில இருக்குற காசு செல்லுபடியாகலை.. ன்னா யாருக்கு என்ன பிரயோசனம்?.. "

" இது தான் தத்வம்.. கையில இருக்குற காச செல்லுபடியாக்கறது தான் சக்தி..  இது தான் தத்வம்!.. "

" எனக்கொன்னும் புரியலையே.. " - வண்டிக்காரர் குழம்பினார்..

"  ஒவ்வொரு காசுக்கும் பூ.. ன்னும்  தலை.. ன்னும் ரெண்டு பக்கம் இருக்றது.. பூ இல்லாம தலை இல்லை.. தலை இல்லாம பூ இல்லை.. சரியா?.. "

" சரி.. "

" அதுல ஒரு பக்கம் ஹரி அதாவது பெருமாள்.. மறு பக்கம் ஹரன் அதாவது சிவன்.. னு வச்சுக்கிட்டா அதோட பெறுமானம் தான் சக்தி.. மஹாலக்ஷ்மி..   "

" அடடே!.. "

" பூ , தலை.. ரெண்டு பக்கம் இல்லாத காசுன்னு எதுவும் கிடையாது.. ரெண்டு பக்கமும் ஒன்னா இருக்கறப்போ செல்லுபடிங்கற சக்தியும் தன்னால வந்துடுது..
புரிறதா தத்வம்!.. இப்போ ஹரி..ன்றது எது?.. ஹரன்..றது எது?.. "

இளைஞனின் முகத்தில் மந்தகாசம்..

" சரி தான்.. ஒரு காசு ன்னா ரெண்டு பக்கம்.. அதுக்கு செல்லுபடியாகற சக்தி...
இப்படி இருக்கறப்ப பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம் ஏது?..
எது எதுக்குப் பெருசு?.. "

வண்டிக்காரர் முகத்தில் புன்னகை அரும்பியபோது குதிரை வண்டி திவ்ய தேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது..
***


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, ஆகஸ்ட் 16, 2025

கிருஷ்ணா

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச 
நந்த கோப குமாராய கோவிந்தாய நமோ நம: 


என்றென்றும்
துணை வருவாய் ஐயனே..

ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2025

வெள்ளி 5

   

நாடும் வீ
டும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
ஐந்தாம் வெள்ளி


ஸ்ரீஸ்ரீ விஜயாலய
சோழரின் ஆட்சி மலரும் போதே
தஞ்சை மாநகரில் 
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது.. 


சிறப்புறு  ஸ்ரீ வடபத்ர காளியம்மனின் தரிசனம் இன்று..

படங்கள் : 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்





பைரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலினி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே.. 77
-: அபிராமி பட்டர் :-

இன்று
சுதந்திர தினம்

அனைவருக்கும்
அன்பின்
நல்வாழ்த்துகள்





ஜெய்ஹிந்த்

ஜெய் பாரத்

ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2025

காபி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 
செவ்வாய்க்கிழமை

இந்தச் சிறுகதை முன்பே எங்கள் தளத்தில் வெளியாகியிருக்கின்றது..

" காபி "



" காபி.. "

செய்தித்தாளில் இருந்து முகம் திருப்பிய சுந்தரத்தின் கண்களில் இளந்தேவதை தெரிந்தாள்...

அந்தத் தேவதையின் பெயர் காமாட்சி..

வெள்ளித்தட்டு.. அதில் ஒரு வெள்ளிக்குவளை..  அதில் நுரையும் மணமுமாக இருந்தது டிகிரி காஃபி..

காஃபிக்குள் காஃபி என்றால்
 தஞ்சாவூர் டிகிரி காஃபி தான்..
.
காமாட்சியின் கைகளில் இருந்து காஃபியை வாங்காமல் கண்களால் அளவெடுத்தான் சுந்தரம்...

நேற்று விடியற்காலை சுபமுகூர்த்தத்தில் மாங்கல்யதாரணம்...

அனைத்தும் சுபமங்கலமாக நிகழ்ந்து மதியத்திற்கு மேல் முதல் அழைப்பு முடிந்து இங்கே மணமகள் இல்லத்தில் திருப்பள்ளி.. 

அங்கிருந்து பெரிய அக்காவும் வேறு சில உறவினரும் பேச்சுத் துணைக்கு வந்திருக்கின்றனர்..

யார் பேச்சுக்கு யார் துணை!..

விடியும் முன் தலை குளித்தது.. உலரட்டும் என்று தளர்வாகப் பின்னப்பட்ட  கூந்தலில் கமகம என்று மல்லிகைச் சரங்கள்..  எல்லாம் பெரிய அக்காவின் வேலையாகத் தான் இருக்கும்..  

நேற்று இரவு அணிந்திருந்ததை விட நகைகள் அதிகம்.. 

நெற்றிக்கு மேல் இருபுறமும் சூரிய சந்திர வில்லைகள்.. வகிட்டில் நெற்றிச்சுட்டி..
காதுகளில் வேறு விதமான தொங்கல்கள்.. கழுத்தில் சிவப்புக் கல் அட்டிகையும் வேறு சில சங்கிலிகளும்..

ராத்திரி சத்தமில்லாது இருந்த கொலுசுகள் இப்போது  சலசலக்கின்றன..

எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சள் இழையில் திருமாங்கல்யம் மின்னிக் கொண்டிருந்தது..

கவனமாக காமாட்சியின் முன் கையைப் பற்றினான் சுந்தரம்... 

காபித் தம்ளர் இருந்த வெள்ளித் தட்டு நடுங்கியது.. கையில் கூடுதலாக இருந்த வளையல்களும் சிலுசிலுத்தன.. 

இதென்னடா வம்பாப் போச்சு.. என்று நினைத்துக் கொண்ட சுந்தரம் - காமாட்சியின் கைகளில் இருந்த தட்டை வாங்கி அருகிருந்த சிறு பலகையில் வைத்து விட்டு காமாட்சியை பக்கத்தில் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்..

கைகளில் தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களும் இருந்தன.. 

பகல் பொழுது  கலகலத்துக் கொண்டிருக்கட்டுமே - என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்!.. 

விரல்களில் மருதாணிச் சிவப்பு.. இடது சுட்டு விரல் பெரு விரல்களைத் தவிர்த்து மற்ற விரல்களில் மோதிரங்கள்..

சிவந்திருக்கும் விரல்களைப் பற்றியபடியே காமாட்சியின் முகத்தை நோக்கினான் சுந்தரம்.. 

அந்தக் காலைப் பொழுதிலும்
முகத்தில் மேலுதட்டில் சற்றே வியர்த்திருந்தது.. தனது கைப்பிடிக்குள் இருந்த அவளது கை விரல்களைக் காட்டி கண்களால் கேட்டான்..

" எட்டு மோதிரம் போட்டுக்கக் கூடாதாம்.. நீங்க காபி குடிங்க.. "

" நீ குடிச்சியா?.. "

காமாட்சியின் முகத்தில் வெட்கம்..

வெள்ளித் தம்ளரை எடுத்து காபியை அருந்தியதும் சுந்தரத்தின் முகம் மாறியது..

" காஃபி நல்லா இருக்கு... அருமை அருமை!.. "

காமாட்சியின் முகத் தாமரை மலர்ந்தது.. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!..

மேல் விழிகளால் காமாட்சியின் வேல் விழிகளை விழுங்கிக் கொண்டே சுந்தரம் காஃபியை அருந்த - மெல்லிய புன்னகை காமாட்சியிடம்..

இதற்குள் -
கூடத்தில் பேச்சு சத்தம்..

" வாங்க.. வாங்க.. நமஸ்காரம்.. "

" நேத்து தான்  மாயவரத்து ல மச்சினர் மகனுக்கும் முகூர்த்தம்... "

" அதான் ரெண்டு நாளைக்கு முன்னால வந்து விஷயம் சொன்னீங்களே!.. "

" வீட்ல யும் புள்ளைங்களும் மாயவரத்து ல தான் இருக்காங்க.. நான்  போட் மெயிலப் புடிச்சி விடியக் 
காலயில வந்தேன்.. மளியக் கடை மாடு கன்னு ன்னு இருக்கு.. நாமளும் உஷாரா இருக்க வேண்டியதா இருக்கே.. "

கீழத் தெரு மளிகைக் கடைக்காரர் கல்யாணம் விசாரிப்பதற்காக வந்திருக்கின்றார்..

" ஆமா.. ஆமா.. இங்கேயும் அப்படித்தான்.. எல்லாம் நேத்து சாயங்காலமே கிளம்பிட்டாங்க..  நேத்து அழைப்புக்கு வந்த சொந்தங்க  மட்டுந்தான் இப்போ வீட்ல.. நம்ம காலம் மாதிரி ஒரு வாரத்து கலியாணம் எல்லாம் இப்போ ஏது?.. " - ஆமோதித்தவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார்..

" யார் வந்திருக்காங்க பாருங்க.. சந்தனம் எடுத்து வாங்க.. பட்சணமும் தாம்பூலமும் கொண்டு வாங்க.. " 

சுந்தரமும் காமாட்சியும் உள் அறையில் இருந்து கூடத்துக்கு வந்தபோது - சமையல் கூடத்தில் இருந்து
காமாட்சியின் அம்மாவும் பெரிய அக்காவும் வெள்ளித் தட்டுகளுடன் வெளிப்பட்டனர்..

ஒன்றில் ஜிலேபி, பால்கோவா, முறுக்கு, சோமாசா என பட்சணங்கள்.. மற்றொன்றில் சந்தனமும் விபூதி மடலுடன் குங்குமமும் இருந்தன..

புதுமணத் தம்பதியினர்
இருவரும்  வந்திருந்த பெரியவரை கை கூப்பி வணங்கியபடி தண்டனிட்டு எழுந்தனர்..

" பெத்தவங்க பெரியவங்க மனச குளுர வைக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணா இருக்கணும்..  மகமாயி என்னிக்கும் துணை இருப்பா!.. " - என்றபடி மடலில் இருந்து விபூதி குங்குமம் எடுத்து மணமக்களுக்குப் பூசி வாழ்த்தினார்..

இடுப்புப் பட்டையில் இருந்து மோதிரம் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் விரலில் அணிவித்து விட்டு மீண்டும் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் கையில் கொடுத்து காமாட்சிக்கு அணிவிக்கச் சொன்னார்..  

" பத்து மணியப் போல சம்பந்தி புரம் ரெண்டாம் அழைப்புக்கு வர்றாங்க.. மத்தியானம் எல்லாருக்கும் விருந்து.. அவசியம் வந்து கௌரவிக்க வேணும்.. " காமாட்சியின் அப்பா விண்ணப்பித்துக் கொண்டார்..

" அதுக்கென்ன வந்துடுவோம்.. ஆனா ரெண்டு மணியாகுமே.. "

 தட்டில் இருந்து ஜிலேபி ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்..

" அதனால என்ன.. நாங்க எல்லாம் காத்திருக்கோம்.. "

பெரிய அக்கா உள்ளே சென்று காஃபியும் தாம்பூலமும் எடுத்து வந்தாள்..

" சிவ சிவா.. அப்படியெல்லாம் இருக்க வேணாம்.. சின்னஞ்சிறுசுங்க.. அதுங்கள முதல் ல சாப்பிட வெச்சுடுங்க.. நீங்களும் காலத்துல சாப்பிட்டுடுங்க.. எங்கூட இருந்து சாப்பிட ஒருத்தர் போதும்..  ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடறேன்.. அப்போ நா புறப்படுறேன்.. நாலு நாள் ஆச்சு கடை திறந்து.. "

- என்றபடி காஃபியை அருந்தியவர் தாம்பூலம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்..

அவர் சென்றதும் -  " பெரியவங்க  பெரியவங்க தான்.. " என்ற பெரிய அக்கா தொடர்ந்தாள்..

" மாமாவுக்கு காபி?.. " 

காமாட்சியின் அப்பா பெரிய அக்காவுக்கு மாமா முறை தானே.. 

பெரிய அக்கா இப்படி உரிமையுடன் கேட்டதும் அவளது அன்பினையும் பண்பினையும் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி..

" இப்பதானே இட்லி சாப்பிட்டாங்க.. உங்க மாமா!.. " - காமாட்சியின் அம்மா பதில் கூறவும் - 

" அப்பா.. "  - காமாட்சி மற்றொரு காஃபியுடன் வந்தாள்..

"  மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தீங்களா!?.. "

அவருக்கு வீட்டுக்குள்  நடக்கின்ற எல்லாம் தெரியும்.. இருந்தாலும் அன்பின் விசாரிப்பு..

" ம்ம்.."  புன்னகை ததும்ப காமாட்சி உள் அறைக்குள் சென்றாள்... பின்னாலேயே சுந்தரமும் சென்றான்.. அறைக்குள் சென்ற காமாட்சி அந்த வெள்ளித் தம்ளரை நோக்கினாள்..

சுந்தரம் அருந்தியது போக மீதம் அரை தம்ளர் காஃபி  இருந்தது.. சற்றும் யோசிக்காத காமாட்சி அதை எடுத்து மெல்ல அருந்தினாள்..

பின்னால் வந்த சுந்தரம் அப்படியே காமாட்சியை 
சிறைப்படுத்திக் கொண்டு காது மடலின் அருகாக சுவாசித்தான்.. காதலின் கவிதை வாசித்தான்..

" காமாட்சி.. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.. "

வெளியில் இருந்து பெரிய அக்காவின் குரல்..

" நல்லவேளை நான் தப்பிச்சேன்.. " காமாட்சியின் முகத்தில் புன்னகை..

சுந்தரத்திற்கோ ஏமாற்ற்ம்..

இர்ண்டாம் மூன்றாம் அழைப்புகளுக்குப் பின் சுந்தரம் காமாட்சி தம்பதியர்க்கிடையே தொடர்ந்த கோலாகலத்தில் ஆர்த்தியும் அருணும்.. 

ஆர்த்தி பெங்களூரில் குடியேறி விட அருண் - கைக்கு அருகில்..

பெரிய அக்காவும் சின்ன அக்காவும் பூர்வீக சொத்து வேண்டாம் என்று சொல்லி விட தங்கை மட்டும்.. 

அடுத்த சில மாதங்களில் அவளும் நல்ல விதமாக கரையேறி விட அடுத்த ஓராண்டில் சுந்தரத்திற்கு வங்கியில் வேலையும் கிடைத்து விட்டது.. 

காமாட்சி வீட்டுக்கு வந்த யோகம் தான்  எல்லாம் - 
என்று பேசிக் கொண்டனர்..

பூர்வீக சொத்தும் வங்கி வேலையும் சுந்தர - காமாட்சி குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அடித்தளம் ஆகின..

சில மாதங்களுக்கு முன் அருணுக்கும் நித்யா வந்து சேர்ந்திட சுந்தர - காமாட்சி தம்பதியருக்கு நிம்மதிக்கு மேல் நிம்மதி.. 

இப்போது அறுபதைக் கடந்து விட்டார் சுந்தரம்.. காதுகளின் பக்கமாக நரை..

" காபி.. இந்தாங்க.. "

ஊஞ்சலில் அமர்ந்திருந்த சுந்தரம் வாங்கிக் கொள்ள - காமாட்சியம்மாள் அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்..

" காஃபி நல்லா இருக்கு... அருமை.. அருமை!.. "

காமாட்சியம்மாளின் முகத்தாமரை மலர வேறென்ன வேண்டும்!..

" அன்னைக்கு காதுக்குள்ள
கவிதை ஒன்னு சொன்னீங்களே.. "

" என்னைக்கு?.."

" அதான் அன்னைக்கு!.. "

மஞ்சள் முகத்துத் 
தாமரையே
மங்கலம் ஆகிய 
பூ மழையே
சுந்தரன் நெஞ்சினில் 
காமாட்சியே
சூழ்ந்திடும் நலங்கள் 
தேனாட்சியே!..

சுந்தரன் தோளில் 
இளங்கிளியே
புதுமலர் பூத்திடும் 
பூங்கொடியே
வசந்த மலர் என
வரும் நிலவே
வரம் எனக் கிடைத்த 
வடிவழகே!..

காஃபியும் அன்றைக்கு மாதிரியே இருக்க கவிதையும்  அன்றைக்கு மாதிரியே இருந்தது..

கணவரின் தோளில் புன்னகையுடன் சாய்ந்து கொண்டார் காமாட்சியம்மாள்...
***


ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2025

வெள்ளி 4

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
நான்காம் வெள்ளி

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை
நல்வாழ்த்துகள்

இன்று
ஸ்ரீ ரங்கநாயகி
திவ்ய தரிசனம்






யா தேவி சர்வ பூதேஷு  வித்யா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


யா தேவி சர்வ பூதேஷு  லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யா தேவி சர்வ பூதேஷு  சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


ஓம் மஹாலக்ஷ்ம்யை நம

சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2025

ஆடிப்பெருக்கு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
ஆடிப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை


அன்னை 
காவிரிக்கு 
அடியேனின் பாமாலை

தங்கி வளம் தழைத்திடவே
தங்க மகள் பெருகி வந்தாள்
மங்கலங்கள் செழித்திடவே
எங்கும் விளைவாகி வந்தாள்..

தமிழ் மூன்றும் தழைத்திடவே
தானுவந்து ஓடி வந்தாள்
அமிழ்தென்று மகிழ்ந்திடவே
ஆனந்தமாய் பாடி வந்தாள்..

மாவிலையும் தோரணமும்
பொலிந்திடவே வருக
மஞ்சளுடன் செங்கரும்பும்
துலங்கிடவே வருக..

பசுமை எங்கும் நிறைந்திட வருக
செழுமை இங்கே சிறந்திட வருக
பகையும் பிணியும் நீங்கிட வருக
பாரில் தமிழகம் ஓங்கிட வருக..

நீரின்றி அமையாத உலகம்  தன்னில்
நின்புகழே எங்கும் துலங்கிட வேண்டும்
நெஞ்சார நின்னை நினைப்பவர் தம்மை
நீயே தாயாகி வாழ்த்திட வேண்டும்..


பெற்று வந்த வளங்களுடன் 
நெல் மணிகள் நிறைவாகி
உற்ற பசி தீர்ந்திடவே
உன் பாதம் சரணம் அம்மா..

காவிரி போற்றுதும்
காவிரி போற்றுதும்..

ஆடிப் பெருக்கு 
நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

வெள்ளி 3

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 
பாடிய பாடல்

பாடல் : திரு உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : திரு TK புகழேந்தி

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கையற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (மங்கலம்)

திங்களைச் சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை (மங்கலம்)

சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி (மங்கலம்)


தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரைக் குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக் கொரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவசக்தி (மங்கலம்)


பாடலைக் கேட்பதற்கு -
https://youtu.be/HzHvuUZSrec?si=poGRllZfUjP18Qw0

மீனாட்சித் தாயே போற்றி
சொக்கநாதப் பெருமானே போற்றி
**