நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 02, 2025

வீழிமிழலை

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

கோகுலாஷ்டமி பதிவில் அன்பின் நெல்லை அவர்கள் வழங்கியிருந்த கருத்துகள்..

1
இரண்டு படங்களும் மிக அழகு.

உங்களுக்குத் தெரியுமா? கோகுலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்ததாக நம்பப்படும் நந்த பவனில் முக்கிய சன்னிதி சிவன் சன்னிதி. அங்குதான் பிரசாதங்களை வைத்து கண்டருளப் பண்ணுகிறார்கள்..

2
எதற்காக முந்தைய கருத்து என்றால், கிருஷ்ணனை மடியில் வைத்திருக்கும் யசோதை நெற்றியில் முழுமையாக விபூதி இருப்பதைப் பார்த்ததும் தோன்றியது..

அன்றைய பதிவில் இருந்த படங்களுள் ஒன்று தான் இங்கே..


திரு.நெல்லை அவர்களது கருத்திற்குப் பிறகே பதிவிட்டிருந்த படத்தைக் கவனித்தேன்... பரவசமானேன்...

ஸ்ரீ நாராயண மூர்த்தி சக்ராயுதத்தைப் பெறுவதற்காக (திருநீறு பூசி) சிவ வழிபாடு செய்ததாக அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுகின்றார்... 

ஸ்ரீ நாராயண மூர்த்தி  சிவ வழிபாடு செய்த தலங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு...

இத்தலங்களில் தலபுராணங்களும் ஒன்றே..

நாராயணர் திருநீறு பூசி சிவவழிபாடு செய்த புராணம் அறிந்து தான் யசோதையும் நெற்றியில் திருநீறு பூசிய வண்ணம் காட்சி தருகின்றனள் போலும்..

திருமலையில் பெருமான் சிவராத்திரி 
மூன்றாம் காலத்தின் போது நெற்றியில் விபூதிப் பட்டையுடன் உள் வீதி வலம் வருகின்றார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...


நீற்றினை நிறையப் பூசி 
  நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று 
  குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி 
  அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி 
  மிழலையுள் விகிர்தனாரே. 4/64/8
-: திருநாவுக்கரசர் :-


திருநீற்றை நிறையப் பூசி  நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு மலர் குறையவே அப்பூவினுக்கு இணையாக தனது விழிகளில் ஒன்றினை தாமரை மலராகக் கொண்டு அர்ச்சித்த பக்தி உடைய திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கி -  திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்து திருவீழிமிழலையில்
நிறுவிய விமானத்தின் கீழ் வீற்றிருந்து  விகிர்தனார் அனைவருக்கும் அருள் செய்கிறார் ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஈசனிடம் திருமால் சக்ராயுதம் பெற்றததை ஞானசம்பந்தப் பெருமானும்  குறித்திருக்கின்றார்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

திங்கள், செப்டம்பர் 01, 2025

தேங்காய்ப் பால்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை


தேங்காய்ப் பால் இல்லாத தமிழ்ச் சமையல் மிகவும் அரிது..

தேங்காய்ப் பால் என்றால் என்ன?.. என்று  கேட்பர் - இன்றைய அந்நிய உணவுப் பிரியர்கள்.. 

இன்றைய தலைமுறையினருக்கு தேங்காய்ப் பாலைப் பற்றித் தெரியுமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்..


சின்ன வயதில் இருந்தே எங்கள் வீட்டில் வாரத்தில் சில நாட்கள் தேங்காய்ப் பால் அருந்துவது வழக்கம்..

தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.. 
நாகரிக வாழ்வில் வாழ்கின்ற
பெரும்பாலானவர்களுக்கு இது ஆகாது என்பது இன்றைய மருத்துவம்..

வயிற்றில் சூட்டினை குறைப்பதிலும்  புண்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் தோல் திசுக்களுக்கும் தோலின் பளபளப்புக்கும் தேங்காய் பால் முக்கிய பங்காற்றுகின்றது என்பது சித்த மருத்துவம்..

இன்று வரை எனக்கு வயிற்றில் வலி போன்ற எதுவும் ஏற்பட்டதே இல்லை.. 

வெறும் வயிற்றில் தேங்காய்ப் பால் அருந்துவதால் செரிமானம் செம்மையாகின்றது, அத்துடன் இதய ஆரோக்கியமும் மேம்படுகின்றது, 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைகின்றது . 

நிறைந்த பல ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது தேங்காய்.. தேங்காய்ப் பாலும் அப்படியே.. 

நவீன உரங்களால் தென்னையும் தேங்காயும் பாதிப்பு எய்தியிருந்தாலும் நவீனத்தைப் புறந்தள்ளி விட்டு இயற்கை எருக்களுடன்  தென்னை விவசாயமும் நடைபெறுகின்றது..


இருப்பினும், தேங்காய்ப் பாலில்  கொழுப்பும்  கலோரிகளும் அதிகம் என்றும் அதிகப்படியான பயன்பாட்டினால் இதய நோய்கள் வரலாம் - என்றும் உடல் எடை அதிகரிக்கலாம் என்றும் இன்றைய
அச்சுறுத்தல்கள்..

உடல் உழைப்பு இல்லாதோருக்கு எல்லாமும் இடையூறுகள் தான்..

எனினும், இதனைக் கவனத்தில் கொள்வது நல்லதே...

தேங்காயும்  துருவலும் பாலும் எண்ணெயும் ஆபத்து மிக்கவை என்று மேலை மருத்துவம் சொல்வதைக் கேட்பதும் அதன்படியே நடப்பதும் அவரவர் விருப்பம்..


கையளவு அவலுடன் தேங்காய்த் துருவல்  சிறிதளவு சேர்த்து தண்ணீர் தெளித்துக் கிளறி செவ்வாழைப் பழம் ஒன்றுடன் சாப்பிட சிறப்பான காலை உணவு .. இனிப்பு அவரவர் தேர்வு..

சமீப காலமாக இது எனது வழக்கத்தில்... 

அதிக உடல் உழைப்பு உடையோருக்கும் அவல் உணவு பொருந்தும்.. 

இன்றைய நாகரிக வாழ்வில் வாரம் ஒரு நாளாவது தேங்காய்ப் பால் அருந்துதல் நல்லது...

தேங்காய்ப் பால் இல்லாத
தமிழ்ச் சமையல் மிகவும் அரிது.. 

தேங்காய்ப் பால் குழம்பில் வற மிளகாயின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பது பொது... மிளகாய்த் தூளை அதிகமாக  சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..

தேங்காய்த் துருவல் பூரணம் (கொழுக்கட்டை), தேங்காய்ப் பால் சோறு, தேங்காய்ப் பால் குழம்பு, ரசம், 
தேங்காய்ப் பால் கலந்த அவியல் - என,  சிறப்புகள்..

அரைத்து விட்ட 
தேங்காய்ப் பால் 
 சாம்பார் என்பது தஞ்சை வட்டாரத்தில் சிறப்பு..

தேங்காய்ப் பால் ஆப்பம், இடியாப்பம் இவற்றையும்
தேங்காய்ப் பாறை, தேங்காய் பால் திரட்டு  ஆகிய இனிப்பு வகைகளையும் மறக்கத் தான் முடியுமா!?..

நமது ஆரோக்கியம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
**

சனி, ஆகஸ்ட் 30, 2025

ஸ்ரீமுஷ்ணம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை

கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்து - ஸ்ரீ முஷ்ணம் தரிசனம் (உத்தேசமாக 25 கிமீ)..

ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலுக்குப்  பயணம்..

மேற்கு நோக்கிய ஸ்வயம்வியக்த க்ஷேத்திரம்.. 

ஸ்ரீ மகாவிஷ்ணு, இத்தலத்தில் வராக மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் இரு திருக்கரங்களுடன்  திகழ்கின்றார்...
கைகளை இடுப்பில்
வைத்த திருக்கோலம்..

 நன்றி இணையம்

திரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருமேனி.. தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..

தாயார் அம்புஜவல்லி.. கிழக்கு நோக்கியவாறு தனிச் சந்நிதி..

கருட மண்டபம் அற்புத கலா நிலையமாகப் பொலிகின்றது.. 

சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு போதுமான வெளிச்சம் அமையாதது நமது துரதிர்ஷ்டம்..

இயன்ற வரை படம் பிடித்துள்ளேன்.. 




திருப்பதியில் இருக்கின்ற மாதிரி - சாலை நடுத்திட்டில் கருடன் சிற்பம்..

















திருக்கோயிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீ சப்த கன்னியர் சந்நிதி..









திருக்கோயிலுக்கு எதிரில் கிழக்கு முகமாக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோயில்..

சந்நிதி தரிசனம் மட்டுமே.. ராமர் கோயிலை வலம் வருவதற்கு இயலாதவாறு முட்புதர்கள்.. 

அவனருளாலே அவன் தாள் வணங்கிய பிறகு ஜெயங்கொண்டம் கீழப் பழுவூர் வழியே நல்லபடியாக தஞ்சை வந்து சேர்ந்தோம்..


ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2025

சோழேச்சரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை




ஒன்பதாம் திருமுறை

சுருதி வானவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ழேச்சரத்தானே..
-: சித்தர் கருவூரார் :-


வேதங்களை ஓதும் பிரமனாகவும்  நீள்வடிவு எடுத்த திருமாலாகவும் அழகிய வானத்தின் தலைவனாகிய இந்திரனாகவும் சூரிய தேவனாகவும் விரிந்து படர்ந்த சடைமுடியுடன் மூன்று கண்களை உடையவனாகவும் உலகத்தில் உயிர்களைத் தழைப்பிக்கும் அமுதமாகவும் காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த
மாவீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார்க்கு வேண்டும் வடிவத்தில் வரம் அளிப்பவனாகவும் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் வீற்றிருக்கின்ற ஈசனே விளங்குகின்றான்..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

தரிசனம் 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வியாழக்கிழமை

தமிழ் வாழ்வியலின் படி வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் புனிதத் தலம் கங்கை கொண்ட சோழபுரம்..







அன்பின் ஸ்ரீராம் அவர்களது கவனத்திற்கு
சிதைவுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருமேனிகள் வடக்குப் பகுதியில் வெட்ட வெளியில் 
வரிசைப்படுத்தப் பட்டுள்ளன..




கொள்ளையர் அழித்தது போக -  திருமாளிகைச் சுற்றின் மிச்சம்





நாகலிங்க விருட்சம்





இந்த அளவில்
ஆலயத்தில் இனிதே தரிசனம் நிறைவுற்றது..

கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி நன்கறிவோம்..
அதனால் தான் மேல் விவரங்கள் அதிகம் சொல்லவில்லை..

இருப்பினும் 
தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இந்தப் பதிவிற்கே இரு வாரங்கள் ஆகி இருக்கின்றன..


அங்கைகொண்டு அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண்டு அடியேன் சென்னிவைத்து என்னை
உய்யக்கொண்டு அருளினை மருங்கிற்
கொங்கைகொண்டு அனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என்று அவிர்சடைமுடிமேற்
கங்கைகொண்டு இருந்த கடவுளே கங்கை
கொண்ட சோழேச்சரத் தானே..
-: சித்தர் கருவூரார் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**