நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

திகழொளி ஞாயிறு 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்
***

இன்று 
ஆவணி மாதத்தின்
நான்காம் ஞாயிறு..


அம்பிகையின்
மலரடிகளை
மனதில் கொண்டு வாழ்த்துவோம்..

பழந்தமிழகத்தின்
இலக்கியங்கள் கூறுகின்ற
தொன்மையான விளையாட்டு
அம்மானை..


தமிழ் பாடும்
பிள்ளைத் தமிழில்
அம்மானையும் உண்டு..

மாணிக்கவாசகப் பெருமான்
அம்மானை பாடியுள்ளார்..

இளங்கன்னியர்கள்
மூவர், ஐவரெனக் கூடி
ஐந்து, ஏழு - என
கழங்கெடுத்து 
விளையாடுவர்..

கழங்கு எனப்படுவது
கூழாங்கல்..

பொன் முத்து பவளம் எனக்
கொண்டு அக்காலத்தில்
அரச மகளிர்
ஆடியிருக்கின்றனர்..

ஒற்றைக் கல்லை மேலே எறிந்து அது கீழே இறங்குவதற்குள்
மற்றொன்றை எறிந்து
கீழே வரும்
கழங்கினைப் பிடிக்க
வேண்டும்..

இப்படி விளையாடும் போது
இயல்பாகப் பாடுவது உண்டு..

ஒருத்தி பாட்டோடு
கேள்வி கேட்பதும்
மற்றவள் அதனோடு
பதில் சொல்வதும்
அந்த காலத்துக்
கிராமங்களில்
ஆனந்தம்...

தஞ்சை வட்டாரத்தில்
கல்லாங்காய் விளையாட்டு
எனப்படும் இது
இன்றைய நாட்களில்
வழக்கொழிந்து போனது..

ஆயினும்
அங்கு இங்கென்று
யாராவது விளையாடலாம்..

இதனை
எளியேன் மனதில் கொண்டு
எந்த ஒரு ஒழுங்கும் இன்றி
அன்னையின் திருப்பெயரை
சிற்சில வரிகளில்
எழுதி அம்மானை என்று
இந்தப் பதிவில்
வழங்கியுள்ளேன்..


அம்மானைப் பந்தெடுத்து 
அம்மானும் தேடி வர
அம்மானை முன்னெடுத்து
அம்மானை பாடுங்களே..

அம்மானைக் கொண்டவனின்
பொன்மானும் ஆடி வர
பொன்மானின் பேரெடுத்து
அம்மானை பாடுங்களே...

கைவளைகள் ஆடிடவே
கன்னியரே பாடுங்களே..
பூவிழிகள் ஆடிடவே
அம்மானை பாடுங்களே..

அஞ்சு வண்ணக் கல்லெடுத்து
அம்மானை ஆடடியோ.
அஞ்சுகத்து சொல்லெடுத்து
அம்மானை பாடடியோ...

அம்மானைப் பாடடியோ
இம்மானும் மகிழ்ந்திடவே
அம்மானும் நெகிழ்ந்திடவே
அம்மானை பாடடியோ!..


மூக்குத்திப் பூவில் ஜோதி
என முன்னை
மூண்டு வரும் தமிழ் நீதியென
மூன்று கடல் அலை மத்தியிலே நின்ற முத்தழகி பெயர் சொல்லடியோ!..

மூன்று கடல் அலை பேர் பாட
அங்கு 
முந்துதமிழ் நின்று பண் பாட
நின்றவள் நித்தியக் கன்னியடி
தமிழ்த் தென்திசைக் குமரி அன்னையடி!..

மூங்கில் வனத்தினில் மூண்டெழுந்த அந்த மூர்த்தியின் தோள் தொட்டு நின்றவள் யார்?..
மூக்குத்திப் பொன்னொளி வீசிடவே நீயும்
முன் வந்து சொல்லடி செல்லக் கிளி!..


மூங்கில் வனத்தில் வந்துதித்த அந்த
மூர்த்தியின் தோள்
தொட்ட பைங்கிளியாள்
காந்திமதி என்று சொல்லடியோ
அவள் குங்குமம்
எடுத்து சூடடியோ!..


தந்தன  தந்தன தந்தனத் தோம் எனத் தண்டை 
குலுங்கிட ஆடி நின்றாள்!..
ஆகாசம் ஆடிட ஆடியவள் அன்று யாரென்று சொல்லடி செல்லப் பெண்ணே?..

விண்ணும்  இடிபட மண்ணும் பொடிபட
தண்டை குலுங்கிடத்
தான் ஆடினாள்..
தில்லை வனத்தினில் தீயானவள்
பத்ரகாளியின்
மஞ்சளைச் சூடடியோ!..


புன்னை வனத்தினில் புற்றாகி அதில்
புண்ணியம் பொங்கிடும் ஊற்றாகி
நஞ்சை நிலந்தனில் வாழ்வாகி வந்த
நாயகி யாரவள் ஞானப் பெண்ணே!..

தஞ்சை நிலத்தினில் தாயாகித் தளிர் வேம்பெனத் தழைத்து வந்தவளாம்..
வஞ்சமழித்திடும் மாரியவள்
அவள் பாதமலர் தனைச் சூடடியோ!..


முத்தமிழ் மூன்றும் முன் விளங்க அன்று அக்கினியில் வந்த கோமகளாம்
அண்டம் அளந்தவன்
தங்கை என வந்த
நங்கையும் யாரெனச் சொல்லடியோ!..

தேனவள் மானவள் தென்னவள் ஆனவள் 
தித்திக்கும் தமிழும் சொல்லுமடி..
அத்திசை எட்டுடன் அன்பர்கள் போற்றும்
அங்கயற் கண்ணியைப் பாடடியோ!..


மன்னவன் பெயரை
நாவில் கொண்டாள்
அந்த மங்கையும் மா மயில் கோலங் கொண்டாள்
மா வனம் தன்னிலே ஆடியவள் அவள் 
மங்கலம் தன்னைக் கூறடியோ..

மங்கையும் மா மயில் கோலங் கொண்டாள்
பொங்கும் காவிரிக் கரையில் ஆடி நின்றாள்
மன்னவன் மகிழ்ந்து
ஆடியே வந்தான்..
அந்த அஞ்சொல்லாள் பாதங்கள் தஞ்சமடி..


ஐயன் அளந்திட்ட நாழி நெல்லைக் கொண்டு
முன்னை நலந்தனைச்
செய்தவள் யார்?..

காஞ்சியின் கண்ணவள்
காவிரிப் பெண்ணவள்
ஐயாற்றின் கரையில்
அன்னையடி?..

ஆதியும் அந்தமும்
தானாகி யன்று
நாவல் வனத்தினில் வந்தவளாம்
நன்று விளைந்திட நின்றவளாம்
அந்த நாயகி பேரென்ன சொல்லடியோ..

ஆனையும் கும்பிட்டு நின்றதடி அங்கு
ஆனதும் சிலந்திப்
பந்தலடி அன்னையும் உகந்து வந்தனளே அவள்
அகிலம் ஆண்ட ஈஸ்வரியே!.


சஞ்சலம் தீர்த்திட
வந்தவள் யார்
இங்கு சந்நதி கொண்டு நின்றவள் யார்?..

சஞ்சலம் தீர்க்க
வந்தவளும் அந்த
சமய புரத்து சங்கரியாம்
சண்பகம் மல்லிகை சந்தனம் வைத்து
சந்ததமும் பதம் பாடடியோ!..


அற்புத அன்பினில் ஆர்த்தவளே பொற்
பூவெனத் தமிழில் பூத்தவளே..
அன்னைத் தமிழின் வண்ணத்திலே அந்த
அம்மானை நெஞ்சில் சேர்த்தவளே..

புன்னகைப் பூவின்
பூங்குயிலே
புன்னை வனத்தில்
ஆடும் பொன்மயிலே..
பொன் எனப் பூவெனப் பொன்னி நதியென
வண்ணத் தமிழில்
வந்த அன்பினளே..

கைவளை குலுங்கக் கழங்கெடுத்தோம்
கனித் தமிழும் குலுங்கப் பூத்தொடுத்தோம்
மைவிழி அம்பிகை  நல்கினளே அருள்
பொன் மலர்ப்  பாதங்கள் நாவினிலே...

ஒன்றாங் கல்லில் உமையவள் போற்றி
இரண்டில் மூன்றில் முன்னவள் போற்றி
நாலில் ஐந்தில்
அம்பிகை போற்றி
ஆறில் ஏழில்
ஈஸ்வரி போற்றி!..

போற்றி போற்றி போற்றியே!.. ..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. அருமை. உங்கள் கவிதைகள் ஆன்மீக திசையில் அழகாக அமைகின்றன. இவ்வளவு நீண்ட பாமாலை அமைத்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு..
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் சக்தி..

      நீக்கு
  2. வரகவி. அருமையான பாடல். அதுவும் இத்தனை நீளமாக! அற்புதம். உங்கள் திறமையை எண்ணி எண்ணி வியப்பாய் இருக்கு! வாழ்க வளமுடன், நலமுடன். அருமையான பாமாலையால் அன்னையைத் துதித்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. மனதில் தோன்றியதை
      எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
      வரகவி என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயம்..

      தங்களது கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. உங்கள் அன்பில் ஆர்த்தவள். உங்கள் அழகிய தமிழில் பூத்தவள்.
    அன்னையின் பாமாலை அற்புதம். சஞ்சலங்கள் தீர்க்க வரட்டும் சமயபுரத்து சங்கரி.நீயே கதி ஈஸ்வரி.

    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    அம்பிகையின் தரிசனத்துடன் உங்கள் கவிதை ஞாயிறு சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு மிக அருமை. பழங்கால பெண்கள் விளையாடும் அம்மானை விளையாட்டை விபரமாக விவரித்த விதத்தை கண்டு என் மனம் மகிழ்கிறது.

    அத்தோடு ஒவ்வொரு அம்மனோடும் இணைத்து இன்று தந்த அம்மானை பாடல்கள் மிக நன்றாக உள்ளது. ரசித்துப் பாடி மகிழ்ந்தேன். மனதிற்கு பாடல் வரிகள் அத்தனை இதமாக இருக்கிறது. அத்தனை தெய்வங்களின் அருள் உங்களுக்கு பூரணமாக நிச்சயமாக கிடைக்கும். நானும் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தங்களது திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழன்னைதான் தங்களிடம் எப்படி கட்டுண்டு இருக்கிறாள் என எண்ணி எண்ணி அம்பிகைகளுக்கு தாங்கள் ஒவ்வொரு பாமாலைகள் தரும் போதும் வியக்கிறேன். பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். உங்களால் எத்தனை சுவையான தமிழ் பாமாலைகளை நாங்கள் சுவைக்கிறோம். இதற்கு எத்தனை நன்றிகள் கூறினாலும், தங்கள் தமிழ் புலமைக்கு முன் ஈடாகாது. உங்கள் திறமைக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகை நீண்ட நாடுகளுக்குப் பிறகு... அதுவே மகிழ்ச்சி...

      என்னிடம் தமிழ்ப் புலமை என்றெல்லாம் சொல்கின்றீர்கள்... அப்படியேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..

      பதிவில் கருத்துரை தந்தமைக்கு நன்றி..

      நீக்கு
  5. அண்ணா கலக்கறீங்க! ஹப்பா இனிய தமிழ்!!! உங்கள் கவித்திறமை செம!

    கழங்கு என்பது கூழாங்கல் என்பதையும் அறிந்தேன் அண்ணா!!

    மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் துரை அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கீதா..
      தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா... இன்பத் தமிழில் இனிமையான பாடல் ஐயா. மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆஹா! அற்புதமான வரிகள். அம்மானை பாடி அம்மனை துதிக்கும் உங்கள் ஆற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழிய நலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படிக்காமல் விட்டுப் போன பதிவுகள் எல்லாவற்றையும் படித்தேன். அற்புதமான கவிதைகள். பதிவுலக உறவுகள் எல்லோருடைய நலத்தையும் வேண்டி எழுதப்பட்டிருக்கும் கவிதை நெகிழ்ச்சி! கலை மகளின் அருள் பரிபூரணமாய் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வாழிய நலம்.

    பதிலளிநீக்கு
  9. கடந்த பதிவுகளைத் தாங்கள் படிக்க வில்லையே - என்றிருந்தேன்...

    தற்போது தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..