நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 21, 2020

ஸ்ரீ மஹாசிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி..

மாசி மாதத்தின் தேய்பிறை திரயோதசி.. பிரதோஷ நாள்..

இத்துடன் மஹாசிவராத்திரி
புண்ய காலமும் கூடி இருக்கின்றது..


இன்றிரவு அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நிகழ்வுறுகின்றன..

முதல் கால பூஜையை ஸ்ரீ நான்முகனும்
இரண்டாம் கால பூஜையை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மூன்றாம் கால பூஜையை ஸ்ரீ பராசக்தி அம்பிகையும்
நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் சித்தர்களும் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இந்த நான்கு காலங்களிலும் ஈ எறும்பு முதற்கொண்டு மனிதர் வரை எண்ணாயிரங்கோடி ஜீவராசிகளும் வழிபட்டு உய்வடைவதாக ஆன்றோர் வாக்கு..

முதல் கால பூஜை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக நிகழும்..

இரண்டாம் கால பூஜை மாலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் கால பூஜை மாலை நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து பின்னிரவு மூன்று மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது (ஒன்றரை மணி) -
லிங்கோத்பவ காலம் என்று குறிக்கப்படுகின்றது..

இவ்வேளையில் தான் ஈசன் எம்பெருமான் அடிமுடி அறியவொண்ணா
அனல் மலையாகத் தோன்றினன் என்பது திருக்குறிப்பு..

நான்காம் கால பூஜை பின்னிரவு மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிக்குள்ளாக நிகழும்..


நான்கு கால பூஜைகளிலும் 
சிறப்பான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன..

சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்பல.. ஆனாலும்,
நேரிய நினைவுகள் நிறைந்திருந்தால் நெஞ்சகமே கோயிலாகின்றது..

எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்ததால் ஆணவமுற்ற நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

தலை கீழாக அதள பாதாளத்தில் வீழ்ந்ததால்
அவனது தலை ஆயிரம் பிளவுகளாகச் சிதறிப் போனது..

தானுற்ற பழியினின்று நீங்குதற்காக -

முதற்காலத்தில் திருக்குடந்தை
இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம்
மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம்
நான்காம் காலத்தில் திருநாகைப்பட்டினம்

- ஆகிய திருத்தலங்களில் நாகராஜன் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

ஆணவம் நீங்கப் பெற்று ஈசனைச் சரணடைதலே
சிவராத்திரியின் மகத்தான தத்துவம்..

இந்நிலைக்கு 
எல்லாம் வல்ல சிவம் நம்மையும் உய்விக்குமாக!..
 ***

இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த 
திருக்கடவூர்த் திருப்பதிகம்..


ஏழாம் திருமுறை
இருபத்தெட்டாவது திருப்பதிகம்பொடியார் மேனியனே புரிநூலொருபாற் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..01

பிறையாருஞ் சடையாய் பிரமன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையாரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..02


அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்திரு வீரட்டத்துள்
என்றாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே..03

போரா ருங்கரியின் உரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் குழலாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..04மையார் கண்டத்தினாய் மதமாஉரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..05

மண்ணீர் தீவெளிகால் வருபூதங்களாகி மற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணாருண் மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..06


எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியாருஞ் சுடலை நகுவெண்தலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..07

வேறா உன்னடியேன் விளங்குங் காதுடையாய்
தேறேன் உன்னையல்லால் சிவனே என்செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர் தனுள் வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே..08அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த் திருவீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார் துணைநீயலதே..09

காராரும் பொழில்சூழ் கடவூர்திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே..10


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. அழகான காட்சிகளுடன் விளக்கம் நன்று ஜி

  இவ்வருடம் நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாது.
  (அண்ணி மரணம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களுக்கு நல்வரவு... வருகைக்கு நன்றி...

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. ஓ சிவராத்திரியுடன் இன்று பிரதோசமும் கூடி வருதோ.. வெள்ளிக்கிழமை வேறு, மொத்தத்தில் இன்று நல்லதொரு நாளாக இருகுதே..

  சிவராத்திரி வாழ்த்துக்கள் துரை அண்ணன், சிவபெருமானின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. படிக்கும் காலத்தில், சேர்ந்து நித்திரை முழிச்ச நினைவுகள் எல்லாம் வருது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிராவின் அன்பு வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

   நீக்கு
 4. இன்று சிவதரிசனம் மிக அருமை.
  சிறப்பு பதிவு கண்டு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு.  சிவராத்திரியும் ப்ரதோஷமும் இணைந்து வருவது சிறப்பு.  சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு பதிவுக்கு நன்றி. சிவராத்திரி குறித்த தகவல்களுடன் கிடைத்த தெய்வ தரிசனத்துக்கும் நன்றி. சிவராத்திரியும் பிரதோஷமும் எப்போதுமே திரயோதசி திதியில் தானே வரும்? ஆனால் இங்கே வடகிழக்கு மாகாணங்களில் நேற்றே வியாழன் அன்றே கொண்டாடி விட்டார்கள். நாங்க இன்னிக்குத் தான் சாயங்காலம் சிவன் கோயிலுக்குப் போகப் போகிறோம். நாளைக்கு ம்ருத்யுஞ்சய ஹோமம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரயோதசி பிரதோஷம் இரண்டுமே சேர்ந்து வருவது தான்... சந்தர்ப்ப வசமாக சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி வரக்கூடும்...

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 7. சிறப்பான தகவல்கள். காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.

  எல்லாம் வல்ல ஈசன் அனைவருக்கும் நல்லதே வழங்கட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..