நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 26, 2018

திருமலை தரிசனம் 2

முன்னொரு காலத்தில் -
திருமலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான புளிய மரம் இருந்தது..
அங்கிருந்து தான் பக்தர்கள் கூட்டமாகத் திருமலைக்குப் பயணப்பட்டனர்.. 

இதனாலேயே அடிபுளி என்று அந்த இடம் வழங்கப்பட்டது.. 

அடிபுளி என்ற வார்த்தைதான்
பின்னாளில் அலிபிரி என்றாயிற்று - என்று சொல்லப்படுகின்றது..


இன்றைய நாளில் அங்கு புளிய மரம் ஏதும் இல்லை..

சாலையின் நடுவில் பெரிய திட்டு..
அதன் நடுவே அளவில் பெரிதாக கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார்..

பலத்த பாதுகாப்பு வளையம் அதைக் கடந்தே மலையேற வேண்டும்..

சாலையின் இடப்புறத்தில் பொருள் பாதுகாப்பு வளாகம்..

அதன் அருகில் மலையேறும் சாலைக்குக் கீழாக அமைக்கப்படுள்ள பாதை
அப்புறத்தில் திருமலையின் அடிவாரத்தை இணைக்கிறது...

ஸ்ரீ பத்மாவதியைத் தரிசனம் செய்த பிறகு
திருச்சானூரில் இருந்து புறப்பட்டு
திருமலையின் அடிவாரமாகிய
அலிபிரியை அடைந்தபோது இரவு மணி எட்டு!..

நுண்ணலைபேசியையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டு
மற்றவற்றை அங்கேயுள்ள பொருள் பாதுகாப்பு மையத்தில்
ஒப்படைத்தோம்.. ரசீது கொடுத்தார்கள்...

கடைசி படிக்கட்டுக்கு அருகிலுள்ள மையத்தில்
வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்...

அந்த வளாகத்திலேயே தண்ணீர் வசதி..
கைகால் முகங் கழுவிக்கொண்டு புறப்பட்டோம்...

பொருள் பாதுகாப்பு வளாகத்தில் ருந்து அடிவாரத்திற்குச்
செல்லும் வழியில் வனதெய்வம் விளங்குகின்றது..

கற்பூரங்கள் ஜோதிப் பிழம்பாக எரிய -
நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைபட்டுக் கொண்டிருந்தன...

அவ்வண்ணமே வழிபட்டு பாதையைக் கடந்தோம்...
அப்போது இரவு மணி 8.20.

அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான 
ஆண்களும் பெண்களும் கூடியிருந்ததால்
நிழற்படம் ஏதும் எடுக்க இயலவில்லை...

அங்கிருந்து நடக்க - சாலையின் அப்புறத்தில்
ஸ்ரீ லக்ஷ்மிநாராயணப் பெருமாள் திருக்கோயில்...
ஸ்வாமியை வலம் வந்து வணங்கினோம்...

எதிர்புறத்தில் ஸ்ரீவாரி பாதால மண்டபம்...

ஸ்ரீ வெங்கடேசப் பெருமான் - தனது பாத அணிகளை 
இவ்விடத்தில் விட்டுவிட்டு மலை மேல் சென்றதாக ஐதீகம்..

இங்கே ஸ்ரீ பாதால வெங்கடேசர் சந்நிதி உள்ளது..

ஸ்வாமியின் முன்பாக ஏராளமான காலணிகள் - பித்தளையில்...

நாம் கேட்டுக் கொண்டால் - சிறு காணிக்கையின் பேரில்
பாத அணிகளைத் தருகின்றார்கள்..

அவற்றைத் தலைமேல் தாங்கிய வண்ணம்
சந்நிதியைச் சுற்றி வந்து ஒப்படைத்து விட்டு
மலையேறத் தொடங்குதல் சம்பிரதாயம்...

அவ்வண்ணமே ஸ்ரீ பாத அணியைத் தலையில் சுமந்து 
சந்நிதியைச் சுற்றி வந்து வணங்கி மலையேறத் தொடங்கினோம்...


2015 ல் எடுக்கப்பட்ட படம்..
( 2015 ) 
முதல் ராஜகோபுரம்.. 
இந்த ராஜகோபுரம் இருக்குமிடமே முதல் மலையாகிய நாராயணாத்ரி...

மெல்ல நடக்கத் தொடங்கினோம்..

தஞ்சையிலிருந்து வரும் வழியில்
திருவாரூரில் எங்களுடன் ஒருவர் சேர்ந்து கொண்டார்..

திருமலையிலிருந்து திரும்பி வரும்வரை எங்களுடனே பயணித்தார்..
எங்களுடன் அவரையும் சேர்த்து நான்கு பேர்...

என் மகனும் அவரும் முன்னே செல்ல
நானும் என்மனைவியும் பின்னே தொடர்ந்தோம்...

வழியில் ஸ்வாமியின் தசாவதார மண்டபங்கள்.. 
அந்த மண்டபங்களில் ஆண்களும் பெண்களுமாக - பக்தர்கள்..
அவர்களுள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில்!..

அங்கெல்லாம் படம் ஏதும் எடுக்கவில்லை...

மலையேற்றத்தில் -
முதலில் படமெடுக்கக் கிடைத்தது - ஸ்ரீ வராஹ ஸ்வாமி மண்டபம்...


ஸ்ரீ வராஹ மூர்த்தி 
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே..(685)
-: குலசேகராழ்வார் :-


பெருமானின் திருமலை மீது ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பரபரப்புடன் கடந்து கொண்டிருக்க -
நானும் என் மனைவியும் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தோம்...

எங்களைத்தான் பலரும் கடந்து சென்றார்களே தவிர
நாங்கள் யாரையும் கடக்கவில்லை...

திருமலைப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 3550.



அடிவாரத்திலிருந்தே - இப்படிக்கட்டுகளில்
மஞ்சள் தடவி குங்குமம் வைத்துக் கொண்டு செல்ல 
பின் தொடர்வோர் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றிவைத்துச் செல்கின்றனர்..

முதலாவது ராஜ கோபுரத்தை அடுத்து 
இருநூற்று ஐம்பதாவது படிக்கட்டில் மைசூர் கோபுரம்...

தசாவதார மண்டபங்கள் வழிநெடுக இருந்தாலும்
எல்லா இடங்களிலும் படமெடுக்கும் சூழல் இல்லை...

வழி முழுதும் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள்..
பணியாளர்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றனர்... 
அதேபோல சிற்றுண்டி குளிர்பானக் கடைகளும் ஏராளம்...


மானேய்கண் மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானேநானா விதநரகம் புகும்பாவம் செய்தேன்
தேனேய்பூம் பொழில்சூழ் திருவேங்கட மாமலைஎன்
ஆனாய்வந் தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..(1029)
-: திருமங்கையாழ்வார் :-

காலி கோபுரத்தில் சுடர் விடும் ஸ்ரீசக்கரம்
ஆங்காங்கே அமர்ந்து சற்று இளைப்பாறிச் சென்றாலும்
மூன்றில் இரண்டு பங்கு தூரத்தைக் கடந்தாயிற்று...

இதோ - படிக்கட்டு எண் 2083..

காலி கோபுரம்...

பெரிய அளவிலான திருநாமமும் இரண்டு புறமும்
சக்கரமும் சங்கும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன...

மலையேறத் தொடங்கிய - ஒன்றரை மணி நேரத்தில் -
நள்ளிரவு 10 மணியளவில் காலி கோபுரத்தை வந்தடைந்து விட்டோம்...


குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தெய்த்து ஒழிந்தேன்
நலந்தான் ஒன்றுமில்லேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திரு வேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. (1031) 
-: திருமங்கையாழ்வார் :-
***

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

ஆனாலும்,
ஆரம்ப நாளில் இருந்தே மனதுக்குள் கலக்கம்..
நம்மால் முடியுமா!.. - என்று...

ஆயிற்று.. 
2083 படிக்கட்டுகளைக் கடந்தாயிற்று...
அவனருளால் இவ்வண்ணம் ஆயிற்று...

இனி மீதம் உள்ளனவும்
இவ்வண்ணமே ஆகும்..

ஓம் ஹரி ஓம்..
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. காலை வணக்கம். அடிபுளி அலிபிரி விளக்கம் புதிது.

    பதிலளிநீக்கு
  2. பாதங்களைத் தலையில் தாங்கி... நான் 20ஒ இல் நடைபயணமாக ஏறியபோது அப்படி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  3. நான் படிக்கட்டுகள் வழியாகச் செல்லவில்லை. மலைப்பாதையில் அல்லவா ஏறினேன்? முதலில் சில படிக்கட்டுகள் கடந்தபிறகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ? நான் சிறு வயதாக இருந்தபோது மலைப்பாதையில் நடந்தது ஞாபகம் இருக்கு. 87ல் இருந்து அங்கு படிக்கட்டுகள்தானே.

      நான் நடக்கும்போது காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருப்பேன். அனேகமாக எல்லோரும் காலணி இல்லாமல்தான் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் வெட்கப்படும்படியாக, சிறுவர்களும் ஜம்மென்று நடந்து செல்வார்கள்.

      பொதுவா, 3 லிருந்து 4 மணி நேரமாகும் நடக்க.

      மலைக்குச் செல்ல இன்னொரு பாதை இருக்கிறதாம். அதில் 1 1/2 மணி நேரத்தில் நடந்துவிடலாமாம். ஆனால் அந்தப் பாதையில் செருப்பு அணிந்து செல்லக்கூடாதாம்.

      நீக்கு
    2. சொல்லியிருக்கேனே... 2002 இல்.

      நீக்கு
  4. எங்க பையர் எப்போப் போனாலும் நடந்தே போவார். ஆனால் நான் ஒரு முறை கூட நடந்து போனதில்லை. என் கணவர் ஒரே ஒரு முறை நடந்து போயிருக்கார். ஆனால் பாதை மலைப்பாதை என்பார்கள். இப்படி எல்லாம் சம்பிரதாயங்கள் இருப்பதும் தெரியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் மூன்று முறை போய் இருக்கிறோம். படிக்கட்டுகள் வழியாக சென்றது இல்லை.

    படி 3550 என்று கேட்கும் போது மலைப்பாய் இருக்கிறது.படியை பார்த்து மலைக்காமல் மலையப்பனை தரிசனம் செய்து வந்து விட்டீர்கள்.
    படிகளை மனதால் வணங்கி தரிசனம் செய்து கொண்டேன்.

    பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஓம் நமோ நாராயணா..


    மிக அருமையான தகவல்கள்...

    பகலில் செல்லும் போது இந்த காட்சிகள் எல்லாம் மிக ரம்மியமாக இருக்கும்...

    பக்தர்கள் வசதிக்காக அங்கு செய்ய பட்டுள்ள வசதிகள் எல்லாம் பாராட்டதக்கவை...

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஜி தரிசன விவரிப்பு அருமை வாழ்க நலம் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. நாங்கள் முதல்முறை(1970 என்று நினைக்கிறேன் ) ம்லைப்பாதைவழியே நடந்து சென்றோம் நான் என் மனைவி மச்சினன் என்மூத்தமகன் நண்பன் அவன் தம்பி ஆறு பேர் என் நண்பனை ( இப்போது அமெரிக்காவில்)
    அண்மையில் சண்டித்தபோது நான் திருமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்ததை நினவு கூர்ந்தான் ஆனால் அது பற்றி எனக்கு நினைவு ஏதுமில்லை அங்கு குளத்தில் நீரடியது நினைவில் இருக்கிறது இனி மலைக்குப் போக முடியுமா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் திருமலைக்கு நடந்து செல்லவேண்டும் என்ற ஆவலை உண்டுபண்ணிவிட்டீர்கள். தக்க துணை இருந்தால் உடனே கிளம்பிவிடுவேன்.

    திருமலை தரிசனம் ஏராளமான தடவை எனக்கு வாய்த்திருக்கிறது, அவன் அருளால். பலமுறை நடந்தும் சென்றுள்ளேன். கடந்த இரண்டு முறை நடந்தபோது சிரமத்தை உணர்ந்திருக்கிறேன்.

    இப்போது காலி கோபுரம் அருகே 'நடந்து தரிசனத்துக்குச் செல்கிறார்' என்ற சீட்டு கொடுக்கிறார்களா? மூன்றாவது ஸ்டேஜில் எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று அறிய ஆவல். (அங்குதான் முழங்கால் முறிச்சான் என்ற இடம் வரும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்ற முறை சென்ற போது காலி கோரத்தின் அருகில் கொடுத்தார்கள் கையில் கட்டிவிட்டார்கள். நான் சொல்லுவது 3 வருடங்கள் முன்பு. அதன் பின் தான் முழங்கால் முறிச்சான் படிகள்...ஏறும் போது சிரமமாக இல்லை. ஆனால் இரவு படுத்த பிறகு காலில் தொடையில் வலி இருந்ததுதான் இறங்கியதும் மலைப்படிகள் வழியாகத்தான் இறங்கினோம். இறங்கும் போது தெரிந்தது.

      கீதா

      நீக்கு
  10. செடியாய வல்வினைகள் - எத்தனையோ எத்தனை பிறவிகளில் நாம் சேர்த்த வல் வினைகளைத் தீர்ப்பவனை, திருமங்கையாழ்வாரின், 'தாயே தந்தை என்னும்' பதிகத்திலிருந்து, இரண்டு பாடல்களைப் போட்டுத் துதித்திருப்பது என்னைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் ஒரு முறை நடந்து சென்று மலை ஏற வேண்டும் என்று விருப்பம் உண்டு. முடியுமா? என்னும் தயக்கமும் உண்டு. பார்க்கலாம். உங்களோடு சேர்ந்து படியேறுவது போன்று ஒரு உணர்வு.

    பதிலளிநீக்கு
  12. ஆவ்வ்வ்வ்வ் அருமையான தரிசனம்.. 3350 படிக்கட்டுக்களையும் எப்படி ஏறி முடிச்சீங்க?...

    பதிலளிநீக்கு
  13. துரை அண்ணா உங்க வர்ணனை எனக்கு இப்பவே மலை ஏறும் ஆசை வந்துவிட்டது. மலையைச் சுற்றியும் வரணும் என்ற ஆசை...இரவு ஏறினால் நன்றாக இருக்கும் ஆனால் காட்சிகள் பார்க்க முடியாதே...அருமை அடுத்த பகுதியும் உங்களுடன் ஏறுகிறோம் அதுவரை ரெஸ்ட் காலி கோபுரத்தின் அருகில் ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்காவது நீங்கள் குழாமுடன் செல்வதாக இருந்தால் சொல்லுங்கள். நானும் சேர்ந்துகொள்கிறேன் கீதா ரங்கன் அக்கா.

      நீக்கு
  14. நானும் உங்களுடன் படிகளில் ஏறிச் செல்லும் உணர்வு. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னர் திருமலை சென்றது. அப்போதும், முன்னரும் பேருந்தில் தான் சென்றிருக்கிறேன். நடந்ததில்லை. அவன் அழைப்பு வரவேண்டும். பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..