நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 25, 2018

ஸ்ரீ சொரிமுத்து ஐயனார்

ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் - திருக்கல்யாணத் திருக்காட்சியை
பொதிகை மலைச்சாரலில் (பாபநாசம்) தாமிரபரணிக் கரையில் தரிசித்த
அகத்தியர் பெருமான் - அங்கிருந்து மேலே தனது பயணத்தைத் தொடர்ந்தார்...

நாற்புறமும் இயற்கை அழகு சூழ்ந்திருக்க
நடுவினில் வழிந்தோடும் தாமிரபரணியில்
தீர்த்தமாடி - அதன் கரையில் தியானத்தில் அமர்ந்தார்...

தியானத்தில் அமர்ந்த அகத்தியர் -
தர்ம சாஸ்தாவாகிய ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் 
தனது பரிவாரங்களுடன் சிவபூஜை நிகழ்த்தும்
அருங்காட்சியினை ஜோதி வடிவாகக் கண்டார்...

அவ்வண்ணமே தரிசனமும் வேண்டி நின்ற அகத்தியருக்கு
பெருங்கருணையுடன் ஈசன் அந்தத் திருக்காட்சியினை நல்கினார்..

ஸ்ரீ தர்ம சாஸ்தா தனது பரிவாரங்களாகிய
ஸ்ரீ சுடலை மாடன் , ஸ்ரீ பிரம்மரக்ஷகி (பிரம்ம சக்தி),
ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஆகியோருடன்
ஸ்ரீ மகாலிங்கப் பெருமானை வழிபடும் திருக்காட்சியினைக்
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்..

அவ்வண்ணமே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்..

தர்ம சாஸ்தாவை மூல மூர்த்தியாகக் கொண்டு
ஏனைய பரிவார மூர்த்தி பீடங்களையும் அமைத்து
நாளும் வழிபடலானார்...

இவ்வேளையில், ஈசனிடமிருந்து -
அகத்தியர் பெருமான் தமிழகம் முழுதும் சஞ்சரிக்கும்படியான
ஆக்ஞை பிறந்தது..

அதனை சிரமேற்கொண்ட அகத்தியரும்
மற்ற திருத்தலங்களை நோக்கிப் புறப்பட்டார்...

அகத்தியர் அங்கிருந்து புறப்பட்டதும்
அவர் வழிபட்ட சிவ மூர்த்தங்களை
பூமாதேவி தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டாள்..

கால சூழ்நிலை மாறியது...

பாண்டி நாட்டிலிருந்து சேரநாட்டிற்குச்
செல்லும் சாலை இவ்வழியே அமைந்தது...

மாட்டு வண்டிகளில் மக்கள் தங்கள் பொருள்களுடன்
இவ்வழியில் பயணித்தனர்..

நல்ல நாள் ஒன்றில் வண்டிக் காளையின் கால் குளம்பு பட்டு
சாலையின் ஓரமாக இருந்த கல்லில் இருந்து குருதி வழிந்தது...

பதறித் துடித்த மக்கள் ஓடிச் சென்று மன்னரிடம் விவரம் அறிவித்தனர்...

ஊர் திரண்டு வந்து கூடியது..

பொங்கலும் பூசையும் அமர்க்களப்பட்ட வேளையில்,
பல நூறு ஆண்டுகளுக்கு முன் -

ஸ்ரீஹரிஹரபுத்ரன் சிவ பூஜை செய்த நிகழ்வும்
ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியையும் ஸ்ரீஹரிஹரபுத்ரனையும்
அகத்தியர் வழிபட்ட நிகழ்வும் வெளிப்பட்டன..

அதையொட்டி அங்கே திருக்கோயில்கள் எழுப்பப்பட்டன..

குடமுழுக்குடன் ஆராதனைகள் நிகழ்ந்தவேளையில் வானிலிருந்து
பொன்னும் மணியும் முத்தும் மழை போல சொரியப்பட்டன..

அதனாலேயே
ஸ்ரீஹரிஹரபுத்ரன் - சொரிமுத்து ஐயனார் என்று வழங்கப்பட்டார்...

திருத்தலம் - காரையாறு (பாபநாசம்)

மூலஸ்தான மூர்த்தியின் திருத்தோற்றம்
ஸ்ரீ பூர்ணகலாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத 
ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்

தீர்த்தம் - தாமிரபரணி
தலவிருட்சம் - இலுப்பை

திருமூலத்தானத்தில் 
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்
வலது பக்கம் சற்றே சாய்ந்தபடி பட்டபந்தனம் தரித்து
திருக்கரத்தில் தாமரைச் செண்டு தாங்கிய
திருக்கோலத்தில் அருளாட்சி செய்கின்றார்...

முன்மண்டபத்தில் சப்தகன்னியரும் எதிரில் 
ஸ்ரீ வைரவரும் திகழ்கின்றனர்..ஸ்வாமியின் சந்நிதி முன்பாக 
நந்தி, யானை மற்றும் குதிரை வாகனங்கள் ஒரே பீடத்தில் திகழ்கின்றன...

கோயிலுக்குப் பின்புறத்தில் பாறைகளின் ஊடாக
சிறு கிளையாகத் தவழ்ந்து வரும் - தாமிரபரணி
சற்று தூரம் ஓடி சரிவினில் சென்று வேகம் எடுக்கிறாள்..

இதன் கரையில் தலவிருட்சமான இலுப்பை..

மணி விழுங்கி இலுப்பையின் அடியில் வழிபாடு
இலுப்பை மரத்தின் அடியில்,
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாதாளபூதம், ஸ்ரீ சங்கிலியார், ஸ்ரீ வனபேச்சியம்மன்
மற்றும் வனதேவதைகள் திகழ்கின்றனர்...

பக்தர்கள் ஸ்வாமியிடம் நேர்ந்து கொண்டு
இலுப்பை மரத்தில் மணிகளைக் கட்டுகின்றனர்...

இப்படிக் கட்டப்படும் மணிகளை நாளடைவில்
இலுப்பை மரம் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்கின்றது ..

இதனால், இலுப்பை மரத்திற்கு -
மணி விழுங்கி மரம் என்று பெயராகி விட்டது..

மேள தாள திருக்கூட்டத்தார்
இங்கே 
ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி, ஸ்ரீ சொரிமுத்து ஐயனார்,
ஸ்ரீ சங்கிலி பூதத்தார், ஸ்ரீ பிரம்மரக்ஷகி ( பிரம்ம சக்தி)
ஸ்ரீ தளவாய் மாடசாமி,  ஸ்ரீ தூசி மாடசாமி மற்றும்
ஸ்ரீ பட்டவராயர் 
- என, ஏழு திருக்கோயில்கள்..
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் கோயிலில் 
ஸ்ரீ அகத்தியர் பெருமான் வீற்றிருக்கின்றார்..

ஸ்ரீ பேச்சியம்மன் - ஸ்ரீ பிரம்மரக்ஷகி அம்மன் - ஸ்ரீ சுடலை மாடசாமி

ஸ்ரீ பிரம்மரக்ஷகி கோயிலில் ஸ்ரீ பேச்சியம்மனும்
ஸ்ரீ சுடலை மாடஸ்வாமியும் திகழ்கின்றனர்...
மற்றும் அடுத்தடுத்த சந்நிதிகளில்
ஸ்ரீ கரடி மாடசாமி, ஸ்ரீ தூண்டி மாடசாமி, 
ஸ்ரீ கருப்பசாமி - கருப்பாயி அம்மன், 
ஸ்ரீ இசக்கி அம்மன், ஸ்ரீ இருளப்பன்,
ஸ்ரீ மந்த்ரமூர்த்தி, ஸ்ரீ மேலவாசிபூதம்
ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ பாதாள பூதம்
- என காவல் மூர்த்திகளும் திகழ்கின்றனர்..

இவர்களுடன்,
ஸ்ரீ கச மாடசாமி தனது தேவி ஸ்ரீ கச மாடத்தியுடன் திகழ்கின்றார்..

தேவியருடன் ஸ்ரீ பட்டவராயர்
ஸ்ரீ பட்டவராயர் -
ஸ்ரீ பொம்மக்கா, திம்மக்கா - என,
இரு தேவியருடன் தனிக் கோயிலில் விளங்குகின்றார்...

ஸ்ரீ பட்டவராயரின் இயற்பெயர் முத்துப்பட்டர்..
அந்தணராகிய இவர் வாட்போரில் வல்லவர்..

அருந்ததியர் குலத்துப் பெண்களாகிய -
பொம்மக்கா, திம்மக்கா எனும்
சகோதரிகளைக் கண்டு காதல் கொண்டார்..

காதல் கைகூடிக் கல்யாணமும் நடந்தது..

ஸ்ரீ பட்டவராயர் திருக்கோயில்
தனது மாமனாரின் விருப்பத்தின் பேரில்
செருப்புகளைத் தைக்கும் கலையையும் கற்றுத் தேர்ந்தார்...

மகிழ்ச்சியான வாழ்க்கையின் இடையே ஒருநாள் -
அவர்களுக்குச் சொந்தமான பசுக்களைக் கவர்ந்தது கள்வர் கூட்டம்..


அப்போது நடந்த சண்டையில் பட்டவராயர் வீரமரணம் எய்தினார்...
அவருடன் அவரது தேவியரும் ஆவி துறந்தனர்...

பசுக்களையும் மக்களையும் காத்து நிற்பேன் - என,
பட்டவராயர் வாக்குறுதி அளித்து
ஸ்ரீ ஐயனாருடைய திருவடி நிழலில் கலந்தமையால்
ஸ்ரீ ஹரிஹரபுத்ரனின் பரிவார மூர்த்திகளுடன்
ஸ்ரீ பட்டவராயரும் அவர் தேவியரும் மக்களால் வழிபடப்பட்டனர்...

ஸ்ரீ பட்டவராயருக்குக் காணிக்கை
ஸ்ரீ பட்டவராயருக்குக் காணிக்கையாக
புத்தம்புதிய செருப்புகளை வழங்குகின்றனர்...

ஸ்ரீ பட்டவராயர் அவற்றை அணிந்து கொண்டு
காவல் மேற்பார்வை செய்வதாக ஐதீகம்...

புதிய செருப்புகளும் நாளடைவில் தேய்ந்து காணப்படுவது
பக்தர்களின் நம்பிக்கைக்கு உரமூட்டுகின்றது...

இத்திருத்தலம் -
பாபநாசம் திருக்கோயிலிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ளது..

அமாவாசை தினங்களில் விசேஷ வழிபாடுகள்..
என்றாலும், ஆடி அமாவாசை மகத்தான திருவிழா...

பங்குனி உத்திரமும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது...

ஐயப்பனின் திருத்தலங்களுள்
இத்திருத்தலம் - மூலாதாரம் என்று சிறப்பிக்கப்படுகின்றது...

சித்திரை விஷூ மற்றும் கார்த்திகை மார்கழியில்
சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் இங்கு வந்து செல்வதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர்...


ஸ்ரீ ஐயனார் சந்நிதி தவிர்த்த
மற்ற சில சந்நிதியின் மூர்த்திகளுக்காக
கிடா வெட்டி பூஜைகள் நடத்துகின்றனர்...

சமையலுக்காக நிறைய அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன..

முதல்முறையாக இங்கே வந்த ஆண்டு 1990.. அதன்பின் 1991..

அதற்குப் பிறகு - இப்போது தான்...

ஆனாலும், ஸ்வாமியை மறந்திருந்ததாக இல்லை...

தகப்பனுக்கும் பிள்ளைக்குமான உறவு
எந்த காலத்தில் பிரியக்கூடும்!...

என் அப்பனைத் தரிசித்த பரவசத்துடன்
அந்த வெளியினை சுற்றி வந்து
இங்கே பதிவாகியுள்ள படங்களை எடுத்தேன்...

மேலும், சில படங்கள் அடுத்த பதிவினுக்காக!..

சொரிமுத்து ஐயனார் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

20 கருத்துகள்:

 1. குட்மார்னிங். ஹரிஹரபுத்ரனின் பூஜையை மனத்தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார் அகத்தியர். இணையம் அன்றே இருந்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. கோவிலின் வரலாறு அறிந்துகொண்டேன். மணிவிழுங்கி மரம் சுவாரஸ்யமான, மற்றும் ஆச்சர்யமான தகவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை சென்று வாருங்கள்..

   நன்றி..

   நீக்கு
 3. அப்போதே கலப்புக் கல்யாணங்கள் நடந்திருக்கின்றன. அழகிய படங்களுடன் தரிசனம் செய்வித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அப்போதே கலப்புக் கல்யாணங்கள்...//

   இது ஏதோ ஒரு காலகட்டத்தில் தடைபட்டுப் போனது...

   ஆனாலும் இதற்குள் ஒரு ரகசியம் இருக்கிறது....

   அதை அப்புறம் பேசுவோம்...

   நன்றி..

   நீக்கு
 4. நல்ல பதிவு. பல தகவல்கள் புதியன என்றாலும் சொரிமுத்து ஐயனார் எங்க உறவினர்கள் பலருக்கும் குல தெய்வம். இந்தக் கோயில் பற்றி அப்போது அறிந்திருக்கவில்லை. இல்லை எனில் சென்றிருக்கலாம். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பு வருகைக்கு மகிழ்ச்சி...

   குல தெய்வ அடையாளம் தெரியாதவர்கள் சொரிமுத்து ஐயனாரையே குல தெய்வமாகக் கும்பிடலாம் என்கிறார்கள்...

   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. தகவல்கள் அனைத்தும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பல் வருடம் ஆகி விட்டது ஐய்யனாரைப் பார்த்து.
  உங்கள் பதிவை படித்தவுடன் மறுபடியும் அவரை பார்க்கும் ஆவல் வந்து விட்டது.

  அனைத்து தகவல்களும் மிக சிறப்பு.
  வாழ்த்துக்கள்.
  படங்கள் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஆஜர்....பதிவு வாசித்துவிட்டு வரேன்..சில கடமைகளும்

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அண்ணா பல வருடங்கள் முன் சென்றதுண்டு. அப்போது கோயில் இப்படி இருந்தது போல் இல்லை. கோயிலின் அருகில் தாமிரபரணி ஓடுவது சிறிதாக இருந்தாலும் சல சலத்து ஓடுவது அழ்கு...பூதப்பெரும்படையான் அருகில் ஓடுவது மரங்கள் சூழ்ந்து அழகோ அழகு...அங்கும் இறங்கி விளையாடியதுண்டு...பல நினைவுகள்...இக்கோயில் சென்றது திருமணத்திற்கு முன். அதன் பின் பாபநாசம் சென்றாலும் பாணதீர்த்தம் சென்றாலும் இக்கோயில் செல்லவில்லை.

  பதிவு அருமை அண்ணா....அகத்தியர் அருவி செல்லவில்லை இல்லையா...அங்கு கூட படிகள் ஏறினால் பெரிய ஆழமான பாறைகள் சூழ்ந்து தடாகம் கல்யாணி தீர்த்தம் இருக்குமே அங்கு ஒரு சிறிய சிவன் கோயில் உண்டு, தண்ணீர் ஸ்படிகமாக இருக்கும் அதற்கு மருத்துவ குணங்கள் நிறைய என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த இடம் மிக மிக அழகான இடம். நான் அகஸ்தியர் அருவி செல்லும் போதெல்லாம் அங்கு சென்று அமர்ந்து விடுவதுண்டு. வன தேவதை என்று சொல்லப்படும் கிருஷ்ணவேணி அம்மா அங்குதான் இருந்தார். பேச மாட்டார். அவரை ஒரே ஒரு முறை கண்டதுண்டு. அவரை சித்தர் என்றும் சொல்லுவார்கள் அவருக்கும் அங்கு ஆஸ்ரமம் இருக்கிறது. அவர் சில வருடங்களுக்கு முன்னால் தான் இறைவனடி சேர்ந்ததாக அங்கிருக்கும் என் அத்தை பெண் சொன்னாள். அங்கு பல அமானுஷ்யங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த இடம் அது...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கோவில் தரிசனம் கண்டேன். நான் கிட்டத்தட்ட கடைமடை தாமிரவருணிக்காரன். பாபநாசம் தாமிரவருணி நதியை நீங்கள் குறிப்பிடும்போது மனதுக்கு நெருக்கம் உண்டாகிறது.

  அஷ்டபந்தனம், சேதுபந்தனம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். பட்டபந்தனம் என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   ஸ்ரீ ஐயப்பன் இருகால்களையும் சேர்த்து இடுப்புடன் பிணைத்துக் கொண்டுள்ள வஸ்திரம் தான் யோக பட்டம் அல்லது பட்ட பந்தனம் என்று குறிப்பிடப்படும்..

   ஸ்ரீ விநாயகர். ஸ்ரீ நரசிம்மர் இத்தகைய பட்ட பந்தனத்துடன் அமர்வர்..

   இங்கே ஐயன் இடக்காலை இணைத்து பட்டபந்தனம் தரித்துள்ளார்...

   தங்களது கருத்துரைக்கு நன்றி...

   நீக்கு
 10. அன்பின் ஜி தகவல்கள் அருமை வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 11. ஆஹா மிக அழகிய தரிசனம்..

  எங்க அய்யனாரை பார்த்த மாதரி இருக்கு..

  நிறைய ஒற்றுமை எங்க கோவிலுக்கும் இந்த கோவிலுக்கும்..

  இதே மாதரி தான் அமர்ந்து இருப்பார் ஆனால் சாயாமல்..அவர் திருப்பெயர்..

  பூரண புஷ்கலா அம்பிகை சமேத கரைமேல் அழகர் காடைப் பிள்ளை அய்யனார்

  இது போல் அங்கும் பட்டவர் செவந்தியாண்டி கோனார் சந்ததியும்..

  மதுரை வீரன் ,..பரிமண சாமி எல்லாரும் இருகாங்க..

  பூஜை யும் நீங்க சொன்ன மாதரி முதலில் அய்யனுக்கு பொங்க பூஜை முடித்து கதவை அடைத்து மற்றவர்களுக்கு கிடா வெட்டு வாங்க..

  எங்க கோவில் காவேரி கரையில்..


  மிக நன்றி இந்த அய்யனையும் காண கொடுத்தமைக்கு ..

  பதிலளிநீக்கு
 12. புதியதோர் ஆலயம் அறிந்து கொண்டேன். அதுவும் தாமிரபரணிக் கரையில். இந்த இடங்கள் எதுவும் சென்றதில்லை. உங்கல் பதிவு விவரணங்கள், படங்கள் எல்லாம் மிகவும் அருமை ஐயா.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு