நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 28, 2016

ஏழூர் திருவிழா

அந்த வீட்டின் கூரை பழுது பட்டிருக்கின்றது..

ஆனாலும், உணவு வழங்குவதில் அந்தக் குடும்பமே ஈடுபட்டிருந்தது கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்..

நடந்து வரும் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்காக நிழல் பந்தலிட்டு அதில் வாடகை நாற்காலிகளை வைத்திருந்தார்கள்..

இவ்வாறு -
சோழ நாட்டின் விருந்தோம்பலைக் கண்ணாரக் கண்டதாக - Facebook ல்
திரு. வடிவேல் பழனியப்பன் என்பவர் மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார்..

மிகவும் பெருமையாக இருக்கின்றது..

சரி...

இந்த மாதிரி வழி நெடுக ஒவ்வொரு வீட்டிலும் -
உணவு, தண்ணீர், மோர் - எல்லாம் வழங்கி உபசரித்தது எங்கே?.. எதற்காக!..

திருஐயாற்றிலிருந்து புறப்பட்டு -
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -

ஆகிய திருத்தலங்களை வலம் வந்து - மீண்டும் திருஐயாற்றை அடையும்
சப்த ஸ்தானம் எனப்படும் ஏழூர் திருவிழாவின் போது!..


பங்குனி புனர்பூசத்தன்று (மார்ச்/18) அன்று திருமழபாடியில்,நந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்தது நினைவில் இருக்கும்..

திருமணம் நடந்த வேளையில் - அங்கே கூடியிருந்த மக்கள்,
மணமக்களை தங்கள் ஊருக்கு வந்தருளுமாறு அன்புடன் அழைத்தனர்..

அது கேட்ட எம்பெருமான் - சித்திரை விசாகத்தன்று - தாமே அழைத்து வருவதாக அருளினார்..


அவ்வண்ணமாக - திருஐயாறு பஞ்சநதீஸ்வரத்தில் சித்திரைப் பெருவிழா நிறைவடைந்ததும்,

கடந்த சித்திரை பத்தாம் நாள் விசாகத்தன்று ( 23/4)
அருள்தரும் அறம் வளர்த்த நாயகியுடன் -
நந்தீசனையும் சுயம்பிரகாஷினியையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமான் - மேற்குறித்த ஆறு திருத்தலங்களுக்கும் கோலாகலமாக எழுந்தருளினார்..

கடந்த 12/4 முதல் 22/4 வரை வெகுசிறப்பாக சித்திரைப் பெருவிழா திருஐயாற்றில் நிகழ்ந்தது..




ஒவ்வொரு நாளும் - சேஷ வாகனம்,  பூத வாகனம், ரிஷப வாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், கோரதம் - என திருவீதி எழுந்தருளிய பெருமானும் அம்பிகையும்

20/4 அன்று திருத்தேரில் எழுந்தருளினர்..



திருத்தேரோட்டம் நிறைவுற்றதும் -

21/4 அன்று மஞ்சள் நீராட்டு, கொடியிறக்கம்.. சப்த பிரதக்ஷிணம்..

22/4 அன்று பிட்சாடனர் திருவீதி எழுந்தருளினார்..

23/4 அன்று சித்திரை விசாகத்தன்று அதிகாலையில் ஐயனும் அம்பிகையும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தீசனும் சுயம்பிரகாஷினி தேவியும் வெட்டி வேர் பல்லக்கிலும் எழுந்தருளினர்..

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -

எனும் ஆறு திருத்தலங்களிலிருந்தும் அம்பிகையும் ஈசனும் பல்லக்குகளில் எழுந்தருளி ஐயாறப்பர் பல்லக்குடன் இணைந்து கொண்டனர்..

வழி நெடுக - பல்லக்குகள் சிறப்புடன் வரவேற்கப்பட்டன..

உடன் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.. 

வருவோர் தம் தாகத்திற்கு நீரும் மோரும் வழங்கியதுடன்  -  இல்லங்கள் தோறும் அன்புடன் விருந்து உபசரிப்பு நிகழ்த்தினர் - அப்பகுதியின் மக்கள்..

அன்றிரவு காவிரியில் திருப்பாதம் தாங்கி - வாணவேடிக்கை நடத்தப்பட்டது..










மறு நாள் (24/4) திருநெய்த்தானத்தில் இருந்து புறப்பட்டு -
திருஐயாற்றை அடைந்தபோது ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியிருந்து எட்டு பல்லக்குகளையும் வரவேற்று மகிழ்ந்தனர்..

ரத வீதிகளில் பல்லக்குகள் எழுந்தருளிய பின் -
ஐயாறப்பர் பல்லக்குக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது..

மகாதீப ஆராதனைக்குப் பின் -

ஐயாறப்பரின் திருப்பல்லக்கு பாண்டரங்கம் எனும் ஆட்டத்துடன் திருக்கோயிலுக்குள் ஏகியது..


உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களும் கண் கொள்ளாக் காட்சியாக தரிசித்து மகிழ்ந்தனர்..

மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவியருள் -
பட்டத்தரசியார் மகாராணி ஒலக மாதேவி..

இவரே - ஐயாறப்பர் திருக்கோயிலுக்குள் வட கயிலாயத்தை எழுப்பியவர்..

திருக்கோயிலுக்கு பொன்னும் பொருளுமாக நிறைந்த செல்வத்தை வழங்கிய மாதரசி..

ராஜராஜசோழனின் பெருந்தேவியாகிய ஒலக மாதேவியார் தான் -
சப்த ஸ்தானப் பெருவிழாவுக்குக் காரணம் - எனக் கூறுகின்றனர்...

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் நடைபெற்று வரும் சீர்மிகு திருவிழா தான் - சப்தஸ்தானப் பெருவிழா..

சிறப்புறும் ஏழூர் திருவிழாவினை அருணகிரிநாத ஸ்வாமிகள் தரிசித்து திருப்புகழ் அருளியுள்ளார்..

திருஐயாறு சப்த ஸ்தானத் திருவிழாவினைப் போலவே -
குடந்தை மற்றும் சக்கராப்பள்ளி ஆகிய தலங்களிலும் வேறு சில தலங்களிலும் நிகழ்கின்றது..

தஞ்சாவூர் - கரந்தையில் நிகழ்ந்த சப்தஸ்தானம் நின்று போய் ஆண்டுகள் பலவாகி விட்டன..

குடந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் சப்தஸ்தானம் நடைபெற்றது..

வெகு காலமாக நின்று போயிருந்த சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் மீண்டும் சில வருடங்களாக சில பிரச்னைகளால் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகின்றது..


திருவிழாவின் நிகழ்வுகளை வழங்கிய தம்பிரான் ஸ்வாமிகளுக்கு நன்றி..

இணைய இணைப்பு தடைபட்டிருந்ததால் 
இந்தப் பதிவு - சில தினங்கள் தாமதமாகி விட்டது..
***

வழிவழியாக வரும் பெருமைக்குரிய 
கலாச்சார நிகழ்வுகள் காக்கப்பட வேண்டும் - 
என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது..

இனிவரும் ஆண்டுகளிலும் 
ஏழூர் பெருவிழா மேலும் சிறப்புடன் நிகழ்வதற்கு
எல்லாம் வல்ல எம்பெருமான் நல்லருள் புரிவானாக..

இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

9 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி அழகிய புகைப்படங்களுடன் ஏழூர் திருவிழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் வாழ்க நலம்.

      நீக்கு
  2. சிறுவயதில் வருடாவருடம் திருவையாறு சென்று ஏழூர் திருவிழா பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. பதிவும் புகைப்படங்களும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
  4. அறியாத செய்தியை அழகான புகைப்படங்களுடன் அளித்ததற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    பதிலளிநீக்கு
  6. ஆஹா ஒரு முறை நானும் ஏழூர் சுற்றினேன். அருமையான பகிர்வு, ஆங்காங்கே தரும் உணவு,நீர் மோர், விசிறி,,, ம்ம் இப்போவெல்லாம் போக முடியல,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இரு முறை சப்தஸ்தான விழாவின்போது பல்லக்குகளுடன் சென்றுள்ளேன். வித்தியாசமான அனுபவங்கள். சப்தஸ்தானம் என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் நான் ஒரு பக்கம் ஆரம்பித்துள்ளேன். சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை,நாகப்பட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் சப்தஸ்தான விழா கொண்டாடப்படுவதாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. ஏழூர் சப்தஸ்தான பெருவிழா படங்கள் செய்திகள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..