நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 18, 2016

மாமதுரைத் திருவிழா 4

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
ஏழாம் திருநாள் மற்றும் எட்டாம் திருநாள் நிகழ்வுகளை - 
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!.. (050)
-: அபிராமி பட்டர் :- 
***

அதோ.. அங்கே நின்று கொண்டிருக்கின்றனர் 
கயிலாசம்பட்டி கனகசுந்தரமும் மச்சக்கன்னியும்!..

இன்றைக்கும் அவர்கள் கலகலப்பாக 
பேசிக்கொண்டிருக்கின்றனர்..
(நாம் ஒட்டுக் கேட்கவில்லை!.. ஆனாலும்)
நமக்குக் கேட்கின்றது...
***

மச்சான்.. வாழப்பழத்தத் தின்னுட்டு தோலைக் கீழே போடாதே!...

ஏம்...புள்ளே?..
சாமி வர்ற வீதில.. குப்பையப் போடலாமா?.. அங்க பாரு.. பொண்ணு புள்ளைங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா ஆடிக்கிட்டு வருதுங்க... நாம நாலு பேருக்கு ஒத்தாசையா இருக்கணும்.. உபத்திரவம் செய்யப்படாது!..

சரிதான்... அப்ப இந்த தோலை எல்லாம் எங்க போடறது?...

இந்தா பாரு..  ஒரு பை கொண்டாந்திருக்கேன்.. இதுக்குள்ள போடு!..

என் ராசாத்தி!.. எவ்வளோ அறிவு!...கொஞ்சறதுக்கு இப்பதான் நேரம் பார்த்தியா!.. அந்தாக்கில ஆனை வருது.. பின்னாலயே சாமிங்க வருது.. பாரு!..

ஆமாமா!.. தெய்வமே.. குத்தங்..கொறையெல்லாம் மறந்து எல்லாரையும் காப்பாத்தணும் தாயே!.. மீனாச்சி!..

ஏ.. ஆயா!..பெத்தவளே.. பெரியவளே!.. பெரிய மனசு வைக்கவேணும்... புள்ளகுட்டியோட எல்லாரையும் நல்லபடியா ஆதரிக்கவேணும்... காடு வெளையணும்.. கம்மாய் நெறையணும்!.. ஆடு மாடு எல்லாம் அம்சமா இருக்கணும்!..

அதெல்லாம்... ஆத்தா பாத்துக்குவா.. ஏம்..புள்ளே.. கண்ணு கலங்குது!..

இல்லே.. மச்சான்.. மனசு நெறஞ்சிருக்கு.. தன்னால கண்ணுல தண்ணி வருது!.. அவ.. ஆத்தா!.. நான் புள்ளை.. எதுக்குக் கலங்கணும்!... சந்தோஷம் மச்சான்!.. அங்க.. பாரு.. ஐயரு பூ கொடுக்குறாரு.. வாங்கிட்டு...வா.. மச்சான்!..

இந்தா புள்ள.. மல்லி.. மதுர மல்லி!.. ஆத்தாளே.. கொடுத்த மாதிரி.. யப்பா!.. உடம்பெல்லாம் சிலுத்துப் போச்சு... கண்ணுல ஒத்திக்க...ஆத்தாளை... பாத்தியா மச்சான்!.. எம்பூட்டு அழகு!.. எம்பூட்டு அழகு!.. ஐயருங்க எல்லாங் கொடுத்து வைச்சவங்க.. எப்ப பார்த்தாலும் கிட்டக்கவே இருந்து வேணுங்கிறதை செஞ்சிக்கிட்டு இருக்காங்க!..

ஏம்..புள்ளே.. நாம செய்ய முடியாதா.. என்ன!..

ஏஞ்.. செய்யமுடியாது?.. வாடியம்மா..ன்னு கூப்புட்டா வராமயா போய்டுவா!.. வந்தவளுக்கு சிங்காரம் செய்ய முடியதா நம்மால?..

வருந்தி நா அழைச்சேன்.. வாடியம்மா.. வாசலுக்கு..
தெரிஞ்சி நா அழைச்சேன்.. வாடியம்மா.. பூசனைக்கு!..
வெள்ளிப் பெரம்பெடுத்து.. வெளையாடி வாடியம்மா..
தங்கப் பெரம்பெடுத்து.. சதிராடி வாடியம்மா!..

ஒருவாய் சோறெடுத்து ஊட்டிவிட மாட்டேனா..
மகவாய் மடிதாங்கி மையெழுத மாட்டேனா!..
சீவி சிணுக்கெடுத்து கொண்டையிட மாட்டேனா..
செந்தாழம் பூவெடுத்து சடைமுடிக்க மாட்டேனா!..

சிங்காரப் பொட்டு வெச்சி சீராட்ட மாட்டேனா..
செவத்த பட்டுடுத்தி தோள்சுமக்க மாட்டேனா!..
நீயும் மகளாகி மடியிருக்க மாட்டாயோ?..
நானுந் தாயாகி மாரணைக்க மாட்டேனோ!..

ஏ..ஏ.. ராசாத்தி!.. இங்கே பாரு!.. என்ன ஆச்சு உனக்கு?..

ஒன்னுமில்ல மச்சான்.. ஆத்தாள பார்த்துக்கிட்டு இருந்தேனா!.. 
அப்படியே தன்னால பாட்டு வந்திடுச்சு!..

கேட்டுக் கொண்டிருந்த நமக்கும் ஆனந்த அதிர்ச்சி!..

இது தான் எசப்பாட்டு என்பதோ!.. 

எத்தகைய வெள்ளை உள்ளம்.. அந்தப் பெண்ணுக்கு!.. 
நம்முடைய மனமே கரைகின்றதென்றால் - 
மங்கலம் அருளும் மதுரைக்கு அரசி மனம் இரங்க மாட்டாளா!..

அதற்குள் - அருகிலிருந்த பெண்கள் எல்லாம் மச்சக்கன்னியின் பாட்டைக் கேட்டு விட்டு ஆளாளுக்கும் பாராட்டுகின்றார்கள்..

ஒரு இளம்பெண் - மச்சக்கன்னியை நெருங்கி மறுபடியும் பாட்டைப் பாடச் சொல்லி - அதனை தனது Android - ல் பதிவு செய்து கொண்டாள்...

அப்போது அருகில் வருகின்றனர் - அந்தத் தம்பதியர்..
அவர்கள் கையில் இரு பைகள்.. அவற்றுக்குள்....

வணக்கம்..

வணக்கமுங்க... யாரு நீங்க தெரியலையே!..

நாங்க...  ஊரு முழுக்க சுற்றி முடிஞ்ச தர்மங்களைச் செய்றவங்க!.. மனசு சந்தோஷமா.. இந்த சின்ன உதவிய ஏத்துக்க வேணும்!...

என்னங்க இது?..

இது புது வஸ்த்ரம்.. உங்க ரெண்டு பேருக்கும்!..

ஐயா.. நாங்க ஏழை.. பாழை.. இல்லீங்க... வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கு!..

உங்களுக்குக் கொடுக்கணும்..னு மனசுக்குப் பட்டது!.. அதான்!.. 

மச்சான்.. அவங்க வயசுல பெரியவங்க.. ஏதோ பிரியமா செய்றாங்க.. அவங்க மனசு வருத்தப்படாம வாங்கிக்கிறது தான் முறை.. நேத்து போய் அன்னதானம் சாப்பிட்டோமே.. நம்ம கிட்ட சாப்பிட வழி இல்லாமயா இருந்துச்சு... இதுல ஒரு சேதி இருக்கு.. அவங்க வசதிக்கு அவங்க நமக்குக் கொடுக்குறாங்க.. நாம நம்ம வசதிக்கு யாருக்காவது கொடுப்போமே!.. 

நல்ல பொண்ணு.. புரிஞ்சுகிட்டா!..


நன்றி - சரண் சந்தர்
மீனாக்ஷியப் பற்றிப் பாடினாள்.. அவ மகாராணி இல்லையா!.. உடனே பரிசு கொடுத்துட்டாள்!.. வேணாம்..ன்னு சொல்லாம மீனாட்சி கொடுத்ததா நெனைச்சி வாங்கிக்குங்க!..

அருகிலிருந்தவர்கள் சொன்னார்கள்..

தீர்க்காயுஸ்மான் பவ.. தீர்க்க சுமங்கலீ பவ!.. 

- என்று வாழ்த்தியபடி புதுத்துணிகளை அவர்களிடம் வழங்கிச் சென்றனர் - அந்தத் தம்பதியினர்...

ஏம்.. புள்ளே!.. ஐயரு என்னமோ மந்திரம் சொன்னாரே.. என்னா அது?..

அது மந்திரமில்லே மச்சான்... நாம நல்லாருக்கணும்..ன்னு ஆசீர்வாதம் சொன்னாங்க... நீ தீர்க்க ஆயுசா இருக்கணும்.. நானும் கட்டுக்கிழத்தியா மஞ்ச குங்குமத்தோட இருக்கணும்.. அப்படின்னு.. சொன்னாங்க!..

நல்ல மனசு.. இருந்தாலும்... தமிழ்ல.. சொல்லியிருக்கலாம்.. இல்லே?..

ஐயருங்க.. அப்படித் தான் சொல்லுவாங்க!.. 

என்னா.. இருந்தாலும்!...

ஏன்.. நீ கூடத்தான்.. ஹேப்பி பொங்கலு..ங்கறே.. பொங்கலு கிரீட்டிங்.. ங்கிறே!.. எல்லாம் இங்கிலீசு.. தமிழ்.. வாய்ல.. வர மாட்டேங்குது!..

அதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் கலகல.. என சிரித்தார்கள்..

அந்த சிரிப்பொலியில் கனகசுந்தரமும் மச்சக்கன்னியும் சேர்ந்து கொண்டனர்..
***

இன்றைய பதிவின் படங்களை வழங்கிய 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், 
ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


ஏழாம் திருநாள் (16/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
ஸ்ரீ கங்காள நாதர் மாசி வீதிகளில் எழுந்தருளினார்.

-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசர் அதிகார நந்தி வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை யாளி வாகனத்திலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். 

எட்டாம் திருநாள் (17/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
தங்கப் பல்லக்கு ஸ்ரீ சபாநாயகர் எழுந்தருளல்.
கீழச் சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதிகளில் பவனி.  

-: இரவு :-
மங்கையர்க்கரசி மரகதவல்லிக்கு பட்டாபிஷேகம்.
வெள்ளி சிம்மாசனம்


மாமதுரையின் அரசியாக அன்னை முடி சூட்டப்பட்டாள்..
அன்னை மீனாட்சிக்கு கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கப்பட்டது.

சித்திரை முதல் ஆவணி வரை 
அன்னை மீனாட்சி கொலுவிருந்து அரசாட்சி 
நிகழ்த்துவதாக ஐதீகம்..

நல்லோர் நடுவிருந்து
நல்லாட்சி தருபவள்
அவள் மட்டுமே!..

நாயகி அவளைச் சரணடைவோம்..

மீன் - தன் குஞ்சுகளைப் பார்வையால் வழிநடத்துவதைப் போல - 
நம்மை நடத்துபவள். அதனாலேயே மீனாட்சி எனும் திருப்பெயர்..

அவள் - கருங்கண்ணி.. கயற்கண்ணி.. அங்கயற்கண்ணி!..

பாண்டியர்க்குரிய வேப்பம்பூ மாலையைத் தரித்துக் கொண்டு -
நம் குலம் விளங்க பவனி வருகின்றாள்!..

படியளக்கும் பராசக்தி - பட்டம் ஏற்று வருகின்றாள்!..
பாதமலர்களில் தலை வைத்து வணங்குவோம்..
வேண்டியதை அருள்வாள் - வேதநாயகி!..சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப்பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறீயும் சிவலோகமும் சித்திக்குமே!.. (28)
- அபிராமி அந்தாதி -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *

5 கருத்துகள்:

 1. அன்பின் ஜி தம்பதிகளின் உரையாடல் கலக்கல்
  அழகிய புகைப்படங்கள் வாழ்த்துகள் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 2. திருவிழாவுக்கு செல்லாத குறையை தீர்த்து விட்டீர்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. ஐயாவின் பதிவுகளில் புகைப்படங்கள் தான்
  என் ரசனையே....

  பதிலளிநீக்கு
 4. சித்திரை மாதம் பிறந்தாலேயே கோவிகளிஒலெல்லாம் தேரோட்டம் தான் எங்கள் கிராமத்திலும் திருவிழா அழைப்பிதழ் வந்திருந்ததுநானும் அது பற்றி முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தேன் : ஊரைக்காட்ட தேரைக்காட்ட ” என்று.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா மச்சக்கன்னியின் உரையாடல் மாமாவுடன்,, அருமையான தொகுப்பு அன்னையின் ஆசி அனைவருக்கும் ஆகட்டும்,, பகிர்வுக்கு நன்றி,,

  பதிலளிநீக்கு