நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 21, 2016

மாமதுரைத் திருவிழா 7

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
பதினொன்றாம் திருநாளாகிய நேற்று கோலாகலமாக 
திருத்தேரோட்டம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைகடலெனத் திரண்டு வந்து திருத்தேரின் வடம் பற்றி இழுத்தனர்.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த நெடுந்தேர்கள் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து மங்கலகரமாக தேரடியில் நிலைபெற்றன.முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவதுநீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவதுநீறு திருஆல வாயான் திருநீறே!.. (2/66)
-: திருஞானசம்பந்தர் :-
* * *

இன்றைய பதிவின் படங்களை வழங்கிய 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்., 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


பதினொன்றாம் திருநாள் (1/5) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: இரவு :-  
அருள் தரும் ஐயன் சுந்தரேசப்பெருமானும்
அன்னை மீனாக்ஷி அம்பிகையும்
சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி
மாசி வீதிகளில் வலம் வந்தருளினர்.


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கென்னை இனிப் படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!.. (84)
-: அபிராமி பட்டர் :-

ஸ்வாமியும் அம்பாளும் திருக்கோயிலுக்குத் திரும்பியதும் -
சித்திரைத் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட ரிஷபக்கொடி இறக்கப்படும்.
* * *

பன்னிரண்டாம் திருநாள் (21/4) வைபவம் 
மாசி வீதிகளில் திருவீதி உலா!..

-: காலை :-
பொற்றாமரைத் திருக்குளத்தில் தீர்த்தம் அளித்தல்.
தொடர்ந்து தேவேந்திர பூஜை நிகழ்ந்தது.-: இரவு :-
பதினாறு கால் மண்டபத்தில் 
திருப்பரங்குன்றம் ஸ்ரீபவளக்கனிவாய்ப் பெருமானும் 
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியும் விடை பெற்றுக் கொள்வர்.வெள்ளி விடை வாகனங்களில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசரும் 
அங்கயற்கண் அம்பிகையும் திருவீதி எழுந்தருள்வர்.

பன்னிரண்டாம் திருநாளுடன் மதுரையம்பதியில் சித்திரைத் திருவிழா மங்கலகரமாக நிறைவு பெறுகின்றது. 

மாமதுரையில் சீர்மிகு சித்திரைத் திருவிழா 
நிறைவுபெற்ற வேளையில் - 

நேற்று (20/4 புதன்) மாலை 6.45 மணியளவில் 
தலைமுடித்துக் கொண்டையிட்டு கண்டாங்கிப் பட்டுடுத்தி 
கையில் நேரியல் கம்புடன் - தங்கப்பல்லக்கில் எழுந்தருளி
சிறப்பு பூஜைகள் நிகழ்ந்தபின் இரவு 8.00 மணியளவில்
ராஜ கோபுரத்தில் வீற்றிருக்கும்
பதினெட்டாம்படி ஸ்ரீகருப்பஸ்வாமியிடம்
விடை பெற்றுக்கொண்டு
மதுரையம்பதியை நோக்கிப் புறப்பட்டார் - கள்ளழகர்.. கள்ளழகர்.. கள்ளழகர்!..

இன்று காலை 6.00 மணியளவில் மூன்றுமாவடியை வந்தடைந்த 
அழகருக்கு எதிர்சேவை சிறப்பாக நடைபெற்றது..புதூரிலும் எதிர் சேவையை ஏற்றுக் கொண்டருளும் அழகர்
பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி
சேவை சாதிக்கின்றார்..

இன்று இரவு
தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் 
திருக்கோயிலில் அழகருக்கு திருமஞ்சனம்.. 

 நாளை அதிகாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் ஆரோகணித்து
தல்லாகுளம் ஸ்ரீ கருப்பஸ்வாமி திருக்கோயிலின் முன்
ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை சாதிக்கின்றார்..
***

நாளை காலை 6.20 மணியளவில்
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு
வளம் தரும் வைகை நதியில்
திருவடித் தாமரைகளைப் பதிக்கின்றார்!..

கள்ளழகர் கழலடிகள் போற்றி.. போற்றி!..  
* * *

அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாய் என்நெஞ்சஞ் துறப்பிப்பாய்நீ
இப்பொன் நீ இம்மணிநீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்
* * *  

4 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  வழக்கம்போல தங்களது வர்ணனை விபரங்களும், புகைப்படங்களும் கண் கொள்ளாக்காட்சி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 2. அடடடடா திருவிழாவே
  நம்மைத் தேடி வருதே....
  பதிவும் படங்களும்
  திருவிழாவை நேரில்
  கொண்டு வந்து தருகிறதே...

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்களும் அழகிய தமிழில் தங்கள் வர்ணனைகளும் தகவல்களும் அருமை

  பதிலளிநீக்கு
 4. புகைப்படங்கள் எல்லாம் மிக அழகு.
  விவரங்கள் அருமை.
  பல வருடங்களுக்கு பிறகு தேர்த்திருவிழா பார்த்தேன். , இரவு காட்சியும் பார்த்தோம்.
  அழகர் திருவிழா பார்க்க வில்லை. மனம் எல்லாம் முன்பு அம்மா தம்பி, தங்கைகளுடன் பார்த்த அழகர் திருவிழா நிறைந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு