நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 25, 2016

உன்னோடு என்மனம்..

மச்சான்!..

என்ன புள்ளே?..

மனசு என்னமோ மாதிரி இருக்கு மச்சான்!...

எனக்கும் தான்டி ராசாத்தி!..நாம... சம்சாரிங்க!.. நமக்கே மனசு கேக்குதில்லை.. எந் நேரமும் சாமிய நெனச்சுக்கிட்டு இருக்குற சன்னியாசி... சாமியாருங்க இவங்களுக்கு எல்லாம் எப்படியிருக்கும்?..,

இந்த காலத்துல எந்த சந்நியாசி..  சாமிய நெனச்சுக்கிட்டு இருக்கா?... இப்படி எல்லாம் நெனைச்சாத் தான் ஊரு உலகம் எப்பவோ உருப்பட்டு இருக்குமே!... அதெயெல்லாம் பேசப் போனா... சரி.. சரி.. நமக்கெதுக்கு அதெல்லாம்.. விடு!...

நீ சொல்றதும் சரிதான் மச்சான்... இந்தக் காலத்துல சாமியாரு...ன்னு சொல்லிக்கிட்டு அலையறவங்கள விட சம்சாரிங்க நாம எவ்வளவோ மேலு!..

சரி.. நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்!..  மருதைக்கு வந்து பதினஞ்சு நாளாவுது.. அழகரு மலைக்குக் கெளம்பிட்டாரு!... ஜனங்க முகத்தில பாத்தியா... சாமி நம்ம கூடவே இருக்காதா.. ந்னு எவ்வளவு ஏக்கம்.. கண்ணுல தண்ணியா நின்னுச்சு புள்ள...

ஆமா.. மச்சான்.. வெள்ளந்தியா ஜனங்க... விடிய விடிய மறு பேச்சில்லாம.. பெருமாளே.. பெருமாளே!.. கோவிந்தா.. கோவிந்தா!.. ந்னு தன்னால மனசு கெறங்கிக் கெடந்ததுங்க... ஆனாலும் அழகரு.. மனசைக் கல்லாக்கிக் கிட்டு கெளம்பிட்டாரு!...

ராசாத்தி... அழகர் மனசு கல்லுன்னா... நெனைக்கிறே... அது ஒரு பூ மாதிரி.. பச்சைப் புள்ள மாதிரி.. ஒன்னுஞ்சொல்ல முடியாம அழகரு கோயிலுக்கு திரும்பிப் போறாரு!.. பாவம்... அவரு மனசுக்குள்ள என்னென்ன ஆசை கெடந்து அடிச்சுக்குதோ.. ஆரு கண்டா?...

வாசலைத் தெளிச்சு கோலம் போட்டு நல்ல வெளக்கேத்தி வெச்சி.. பழத் தட்டு பணியாரத் தட்டு..ன்னு படையல் வெச்சி... அழகரு.. அழகரு..ன்னு வாய் நெறைய மனசு நெறைய சொல்லிச் சொல்லி கும்புட்டாக.. 

சக்கரை சொம்புல சூடம் ஏத்தி... என்னா ஒரு சந்தோஷம்... யாருமே அது வேணும் இது வேணும்.. ன்னு கேக்கலை பாத்தியா!.. அழகரே நம்ம கூட இருக்குறப்ப - அதுக்கு மேல என்னா வேணும்?...

அன்னைக்கு அழகரு ஆத்துல இறங்குனப்ப.. அம்புட்டு கிட்டக்க பார்ப்பேன்னு... கனவுல கூட நெனைக்க இல்ல.. பச்சைப் பட்டு கட்டிக்கிட்டு... மணக்க மணக்க மல்லியப்பூ வெட்டி வேரு சம்பங்கி ரோஜா மாலைகளப் போட்டுக்கிட்டு.. ஏ.. ஆத்தாடி... இந்த பொறப்புக்கு இது போதும் மச்சான்!..

சரி.. மூட்டை முடிச்செல்லாம் சரியா இருக்கா...ன்னு ஒருதரம் பார்த்துக்க!.. அண்ண வர்றேன்..னாக!.. இன்னும் காணலையே!.. 

பெரிய மச்சானுக்கு என்ன சோளியோ.. எங்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காகளோ?..

அந்தாக்கில.. பாரு.. ஆயுசு நூறு.. வாங்கண்ணே.. இப்பத்தான் பேசுனோம்...

கனகு கெளம்பிட்டியா!... கூட இருந்து இன்னும் நாலு இடம் சுத்திக்காட்ட முடியலே!.... 

திருவுலா சோளி..ன்னா அப்படித்தான் இருக்கும்!.. நீங்க எதுக்கும் யோசிக்க வேணாம்!..

ஏ.. புள்ள ராசாத்தி கழுத்துல காதுல எல்லாம் பத்திரம்!...

ஆகட்டும் ... மச்சான்... நீங்க ஒருவட்டம் வீட்டுக்கு வந்துட்டு வரலாம் தானே...

வர்றேன்.. வர்றேன்!.. குழந்தை குட்டி..ன்னு குடும்பம் வெளங்கட்டும்.. எல்லாரையும் பார்க்க வர்றேன்!..

எலே.. ராசாமணி.. நம்ம தமுக்கு இந்தா நிக்கிறான் பாரு..லே!... நல்லா.. ருக்கியா ராசா?.. உன்னைய எங்கெல்லாம் தேடுனோம்.. காணக் கிடைக்கலையே!..

வாங்க.. வாங்க.. ஐயா.. வாங்க... நா... சப்பரம்.. பல்லாக்கு இதுகளோடா போவேன்.. வருவேன்... அத விட பெரிய சோலி வேறன்ன இருக்கு?.. சொல்லுங்களேங்!...

ஆமாமா!.. ஆனாலும் அந்த போலீசுகாரவுக வளையங் கட்டில்ல வந்தாங்க.. கிட்ட நெருங்க முடியலையே!.. இவுங்கள்ளாம் யாரு?..

தம்பியும் அவன் சம்சாரமும்!.. வடக்கே கயிலாசம் பட்டி!..

ஆகா!... நல்லாருங்க நல்லாருங்க!... மருதைக்கு வந்து திருவுலா.. எல்லாம் பாத்துட்டு கெளம்பிட்டியளாக்கும்!...

சரி.. நாங்களும் கெளம்புறோம்.. வெல்ல மண்டியில வேலை கெடக்கு.. ஆமா.. ஒரு சேதி கேக்க மறந்துட்டேங்.. உன்ன தமுக்கு தமுக்கு.. ந்னே கூப்புடுறேன்... நெசத்துல ஒம்பேரு என்ன ராசா!...

மாடசாமி!...

அடி.. ஆத்தீ!.. எங்க சாமி பேரு ஆச்சே!..

நமக்குத் தெற்கே தானே பூர்வீகம்... வையை தாண்டுனா.. தாமிரவருணி.. திருநெவேலி!... அதான எங்க முப்பாட்டன் பூமி!..

அப்படியா.. ரொம்ப சந்தோசம்.. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு..ன்னு ஆகிட்டோம்... எல்லாம் அந்த ஆயி மீனாச்சி செஞ்ச வேலை.. வா.. ஐயா.. மாடசாமி.. வா... தாயி.. நீயும் வா... ஒரு வாய் காபி குடிச்சிட்டு ஊரப் பாக்க கெளம்புவோம்.. அங்கால ஆவணி..  இன்னும் மூணு மாசந்தேன்... தாயி புள்ளையா வந்து பார்த்துக்க வேண்டியது தான்!.. என்ன நாஞ்சொல்றது?..

ஐயா.. சொன்னா சரிதானுங்க!..

எலே.. ராசாமணி!... உடுக்கை அடிக்காதே...ன்னு எத்தனை தரம் சொல்லுறது?.. 

அது எங்க பங்காளி உலகம்பட்டி உலக நாத பூசாரிகிட்ட கத்துக்கிட்டதுங்கோ!..

அனைவரும் சிரிக்கின்றனர்...கடந்த புதனன்று (20/4) அழகர் மலையிலிருந்து புறப்பட்ட அழகர்

கோலாகலமாக வெள்ளியன்று வைகையாற்றில் இறங்கினார்..

சனிக்கிழமை மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளினார்..
அன்றிரவு ராமராயர் மண்டகப்படியில் முத்தங்கியில் சேவை சாதித்தார்..
அத்துடன் விடிய விடிய தசாவதாரத் திருக்காட்சியும் நிகழ்ந்தது..

ஞாயிறு காலை ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்கத் திருக்கோலங்கொண்டு வைகை ஆற்றின் திருக்கண் மண்டகப் படியில் மாலை 4.00 மணியளவில் எழுந்தருளினார்..

அங்கிருந்து கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் வையாழி நிகழ்ந்தது..

அதன்பின் - சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்..

அங்கு பூப்பல்லக்கில் கள்ளழகராக எழுந்தருளி -
இன்று காலை அழகர் மலைக்கு புறப்பட்டார்..

வந்த வழியிலேயே பயணித்து மூன்று மாவடிக்கு எழுந்தருளினார்..


மக்கள் விடை கொடுக்கும் வண்ணமாக சிறப்பு பூஜைகளை நிகழ்த்தினர்...
மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்டு அழகர் மலைக்குப் புறப்பாடாகினார்..

வழி நெடுக திருக்கண்களில் எழுந்தருளியவாறு - 
நாளை (26/4) மதியத்திற்குள் திருமாலிருஞ்சோலையை அடைகின்றார்..

நாளை மறுநாள் (27/4) கள்ளழகருக்கு கண்ணேறு கழிக்கப்படும்..

மாபெரும் திருவிழா - உற்சவ சாந்தி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் மங்கலகரமாக நிகழ்வுறும்..
***

வழக்கம் போலவே - திருவிழாவின் நிகழ்வுகளை
அழகிய படங்களாக வழங்கிய
திரு.குணா அமுதன் மற்றும் திரு. ஸ்டாலின் 
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.. 

இந்த அளவில் மாமதுரையின் சித்திரைத் திருவிழா பற்றிய பதிவுகள் நிறைவு பெற்றாலும் - 

வண்ணமயமான படங்களுடன் - இன்னும் சில பதிவுகள் தொடரக்கூடும்...


உவகையும் நிறையப் பெற்றேன்
ஊழ்வினை அகலப் பெற்றேன்..
உணர்வதும் உணரப் பெற்றேன்
ஊரெலாம் புகழப் பெற்றேன்..

உனதருள் நலமும் பெற்றேன்
உளமெலாம் மகிழப் பெற்றேன்..
உந்தனோடு அன்பில் உற்றேன்
உயிரினில் ஒளியைப் பெற்றேன்..

கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..  
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

8 கருத்துகள்:

 1. அன்பின் ஜி கிராமிய நடையில் நன்று
  அழகர் ஆற்றில் இறங்கியதை தங்களால் இணையத்தில் கண்டேன் காணொளி நன்று தொடர்ந்து வரட்டும் ஆன்மிக பதிவுகள் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு நண்பரே.....

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான நடையில் தங்களின் ஆன்மீகப்பதிவுகள் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. உங்களுடன் பயணித்தோம், ரசித்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அடி ஆத்தி இந்த கூத்து எப்ப????? பல வேலையால் தொடர இயலவில்லை,, பகிர்வு அருமை,,

  பதிலளிநீக்கு
 5. அடி ஆத்தி இந்த கூத்து எப்ப????? பல வேலையால் தொடர இயலவில்லை,, பகிர்வு அருமை,,

  பதிலளிநீக்கு
 6. அழகான பகிர்வு...
  ரசித்துப் படிக்க வைத்தது....
  அழகு மலையானை நேரில் தரிசிக்க முடியாத கவலையை போக்கும் அழகிய படங்கள்....

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வு.
  அழகான படங்கள், காணொளி
  பகிர்வுக்கு நன்றி.
  பூபல்லக்கு பார்த்து வந்தேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..