நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 07, 2016

சிவமயம்

இன்று மகாசிவராத்திரி!..


மகாப் பிரளயத்தின் போது சர்வ லோகங்களும், அனைத்து உயிர்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கி அமைதியுற்றன. 

மீண்டும் உலகமோ  உயிர்களோ தோன்றவில்லை. 

எம்பெருமான் கங்காளர் எனத் திருக்கோலங் கொண்டு - 
திருக்கரங்களில் வீணையினைத் தாங்கி வாசித்துக் கொண்டிருக்கின்றார். 

இதனை - 

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்ற  எம்மிறை நல் வீணை வாசிக்குமே!..

- என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருள்கின்றார்.

இந்நிலையில் -

அம்பிகையிடம் தாய்மை உணர்வுடன் எல்லையில்லாக் கருணை பொங்கிப் பிரவாகமாக வழிந்தது.

அண்டங்கள் மீண்டும் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனைத் தியானம் செய்தாள்.  

அம்பிகையின் தியானத்திற்கு இரங்கிய எம்பெருமான் அம்பிகையுடன் மாதொருபாகனாக - திருக்கோலங்கொண்டார்.

சக்தியும் சிவமும் இரண்டறப் பொருந்திய வேளையில் -  
ஒடுங்கி இருந்த உலகங்கள் மீண்டும் உண்டாகின.

அதில் பல்வேறு வகையான உயிர்களை -  பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் படைத்தருளினர். 

அதனால் மனம் நிறைவடைந்த அம்பிகை -

ஐயனே!. நான் தங்களை மனதில் தியானித்து வணங்கிய காலம் "சிவராத்திரி" என விளங்க வேண்டும். அதனை அனுசரிப்பவர்கள் எவராயினும் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும்!..

-  என்று பிரார்த்தித்துக் கொண்டாள். 

இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார்.

அருகிருந்த நந்தியம்பெருமான்,
தானும்  சிவராத்திரி விரதத்தினை அனுசரித்தார். 

அதன் பின்னர் சிவராத்திரி விரதத்தின் சிறப்புகளை முனிவர்களுக்கும் கணங்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் நந்தியம்பெருமான் உபதேசிக்க அவர்களும் சிவராத்திரி விரதம் அனுசரித்து மேன்மையுற்றனர்.

நமது பண்டைய கால அளவின்படி  - ஒரு நாள் என்பது 60 நாழிகை.
இதில் பகல் 30 நாழிகை ( 4 சாமம்).  இரவு 30 நாழிகை ( 4 சாமம்).

ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை.
ஒரு நாழிகை என்பது  24 நிமிடங்கள்.
ஒரு சாமம்  என்பது 180 நிமிடங்கள்.
இன்றைய அளவில் மூன்று மணி நேரம்.

ஆக, சிவராத்திரி அன்று,

மாலை 6 - 9 மணிக்குள் முதற்காலம்.
முன்னிரவு 9 - 12 மணிக்குள் இரண்டாம் காலம்.

நள்ளிரவு 12 - 3 மணிக்குள் மூன்றாம் காலம்.
பின்னிரவு 3 - 6 மணிக்குள் நான்காம் காலம்

- என நான்கு கால பூஜைகள் நிகழ்வுறுகின்றன. 

இந்த கால அளவினுள்ளும் அதன் மத்திய காலம் சிறப்பானது என்பர்.

மூன்றாம் காலத்தின் மத்திய காலமான ஒன்றரை மணி தான் மகாசிவராத்திரியின் லிங்கோத்பவ காலம்...

ஸ்ரீ கபாலீஸ்வரர் - கற்பகவல்லி
அம்பிகை தனித்திருந்து, ஈசனை வழிபட்ட பொழுது தான் சிவராத்திரி..

எனினும் - பின்னர் விரதங்களும் பூஜைகளும் அனுசரிக்கப்பட்ட  காலத்தில் - 

முதற்கால பூஜையினை -  நான்முகன் நடத்துவதாகவும்,
இரண்டாம் காலத்தினை மஹாவிஷ்ணு நடத்துவதாகவும் உணரப்பட்டது.


லிங்கோத்பவ காலமாகிய மூன்றாம் கால பூஜை அம்பிகையினால் ஏகாந்தமாக நிகழ்த்தப்படுவது..

விடிவதற்கு முன் நான்காவது கால பூஜை தான், சிருஷ்டிக்குப்பின் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் ஆத்மார்த்தமாக - சிவபெருமானை பூஜிப்பதற்காக என்று கருதப்படுகிறது.

ஆலயங்களுக்குச் சென்று நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க  இயலாதவர்கள் வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் இயன்றவரை பூஜை செய்தல் நலம். 

பூஜைக்கு உரிய பொருட்கள் எவை என்பது நாம் அறிந்திருக்கின்றோம். 

நல்ல பழங்கள், கற்கண்டு, தேங்காய், தாம்பூலம், நறுமணமுள்ள மலர்கள் - இவைகளுடன் -

நிவேத்ய பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் போன்ற சித்ரான்னங்களை சமர்ப்பித்து,

நெய் விளக்கேற்றி வைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து

தேவார திருவாசக பாராயணம் செய்து - தூப தீபஆராதனையுடன் வணங்குதல் உத்தமம். 

வழிபாட்டின் போது '' அது வேண்டும் ... இது வேண்டும் '' என்று கேட்காமல் அன்பினால் பணிதல் வேண்டும். 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிவு உடையவன்   - இறைவன்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே!..

நான்முகனும் மாலும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு  அரியவனாகத் தோன்றிய எம்பெருமானே!... என்னை நின் பணிக்கு ஆளாகக் கொண்டு, நான் வேண்டிக் கேட்காமலே எனக்கு வேண்டியவைகளை அருளும் உன்னிடம், நான் வேண்டிக் கேட்பதெல்லாம் - நான் உன்னிடம் என்றும் மாறாத அன்பு கொள்ளவேண்டும்  என்ற  ஒன்று தான்!..

- மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் நமக்கு வழிகாட்டுகின்றார்.

நமக்குத் தேவையானவற்றை  -  பரம்பொருளாகிய இறைவன்  அளிப்பான்.

ஏனெனில் - நம்மைப் பெற்றெடுத்த தாயும் பேணிக் காத்த தந்தையும் அவனே!..

மகாசிவராத்திரி விரதத்தை அனுசரித்து, அம்மையப்பனை வழிபட்டு, எல்லோருடைய நல்வாழ்விற்கும் வேண்டிக் கொள்வோமாக!.. 

ஆனந்த,  ஐஸ்வர்ய,  ஆரோக்கிய, ஆயுள் - என குறைவற்ற செல்வங்களை அடைவோமாக!..

திருக்காளத்தி நாதர்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!.. (2/106)
-: திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ கும்பேஸ்வரர்
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே!.. (7/29)
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-

ஸ்ரீ பெருவுடையார்
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ!.. (5/2)
-: திருநாவுக்கரசு ஸ்வாமிகள் :-
***

தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!...போற்றி!...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

22 கருத்துகள்:

  1. அன்பின் ஜி கால அளவுகள் குறித்து இன்று தங்களால் அறிந்தேன் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்களும் தகவல்களும் நன்று. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மகாசிவராத்திரி பதிவு கண்டேன். புதிய செய்திகள் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஐயா...

    இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

    http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நீண்டநாட்களுக்குப் பிறகு, தேவார, திருவாசக பதிகங்களை மீண்டும் படிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தங்கள் பதிவினில் எதிர்பார்த்தேன். நானும் இரண்டு காலபூஜைகளில் கலந்துக்கொள்ள முடிந்தது. நல்ல படங்களுடன் தொகுப்பு அருமை, அழகு, தொடருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பொதிகை தயவில் ஈஷாமையத்தின் சிவராத்திரி ஆராதனைகள் சிலவற்றை நேரலையில் ஒளிபரப்பியது கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்களுடன் நல்ல தகவல்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. சிவராத்திரிப் பதிவை நீங்கள் பதிவிட்ட போது - நாங்கள் எதிர்பார்த்த ஒன்று என்பதால் - வாசித்தோம் ஆனால் பதில் அன்று இட முடியாமல் போனது. அதன் பின் அப்படியே கடந்துவிட்டது.

    படங்களுடன் அழகான சிறப்பானத் தகவல்கள் அறிந்து கொண்டோம் ஐயா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பினுக்கு நன்றி...
      வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..