நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 18, 2014

அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி.

இந்தியாவை வலம் வரும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.


இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11)  நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சிறப்பு ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியைக் கண்டு மகிழ மாணவ மாணவிகளும் பொதுமக்களும் இன்று காலை பத்து மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி என அறிந்து - நானும் சென்றேன்..


இந்த அறிவியல் கண்காட்சி ரயில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் இயக்கப்படுகின்றது. 

இந்த அறிவியல் கண்காட்சி ரயிலின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் நீர் நில வாழ்விகளைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் விரிவான விளக்கப் படங்கள் நிறைந்திருக்கின்றன.

அவை மட்டுமல்லாமல் - ஒளி ஒலி காட்சிகளும் தொடுதிரைகளும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் வழிகாட்டுதலாக - ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தெளிவான விளக்கங்களையும் வழங்குகின்றனர்.
இந்தியாவில் நீரிலும் நிலத்திலும் வாழும் புழு பூச்சிகளின் வகைகளும் அவற்றின் வாழ்வியலும் தனித்தனி அரங்குகளில் வண்ணமயமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஊர்வன பறப்பன மற்றும் பலவகையான விலங்குகளின் அழகான படங்களும் அவற்றின் வடிவமைப்புகளும்  இடம் பெற்றிருக்கின்றன.

இமய மலை சார்ந்த பகுதிகள், கங்கைச் சமவெளி, தக்காண பீடபூமி பற்றியும்,

அற்புதங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும் மற்றும் சதுப்பு நிலங்கள் இவைகளைப் பற்றியும்  

ராஜஸ்தான் பாலைவனத்திலும்  அஸ்ஸாம் நாகாலாந்து காடுகளிலும், 

அந்தமான் நிக்கோபார் - தீவுகளைச் சூழ்ந்துள்ள கடல்பகுதிகளிலும் - 

காணக் கூடிய உயிரினங்களைப் பற்றியும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. 

அரிய வகை உயிரினங்கள் இந்தியாவில் காணப்படும் இடங்களும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும் விவரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருட்களினால் நிலத்தடி நீர் மாசு படுவது கூறப்படுகின்றது.

நிலத்தடி நீர் சேகரிப்பது பற்றியும் அழகான வடிவமைப்புகளின் மூலமாக விளக்கப்படுகின்றது.  

சுற்றுச்சூழல் மாசுபடுவது பற்றியும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவது பற்றியும் விளக்கங்கள் கிடைக்கின்றன.

பல்லுயிர் பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.

பல்லுயிர் வாழ்க்கை முறையும் அதன் அவசியமும் அதனைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமும் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றது.

மாணாக்கர்களுக்கான அறிவியல் செயல் முறைக் கல்வியாக - ஆய்வகமும் அறிவியல் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளன.

தஞ்சை மாநகரின் பொதுமக்களும்  மாணவ மாணவிகளும் - ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினைக் கண்டு மகிழ்கின்றனர்.  

கடந்த 2007ல்  தனது பயணத்தைத் தொடங்கிய இந்த அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் இது வரை 1,15,000 கி.மீ தூரத்தையும் 364 நிலையங்களையும் கடந்திருக்கின்றது.


இதுவரையிலும் - நாடு முழுதுமான பயணத்தில் - பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஒருகோடியே இருபது லட்சம் பார்வையாளர்கள் வருகையளித்துள்ளனர்.

இந்த சிறப்பு ரயிலில் பதினாறு பெட்டிகள். முழுமையாக குளிரூட்டப்பட்ட இணைப்புப் பெட்டிகள் காட்சி அரங்கங்களாக விளங்குகின்றன.

பலவித உயிரினங்களின் அழகிய படங்கள் ஒட்டப்பட்டு வெள்ளை நிறத்தில் பொலிகின்றன ரயில் பெட்டிகள்..
காட்சி அரங்கங்களில்  படம் எடுப்பதும் செல்போன் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சியினைக் காண்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11) தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.அறிவியல் கண்காட்சி மிகவும் சிறப்பான தகவல்களுடன்  மாணவ மாணவிகளுக்கும் மற்றோர்க்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.

நேற்று (17/11) சேலத்தில் இருந்து இன்று தஞ்சை ஜங்ஷனில் இருக்கும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் அடுத்து 20/11 மற்றும் 21/11 தேதிகளில் ஈரோடு செல்ல இருக்கின்றது.

மேலதிக விவரங்களை -

http://www.sciencexpress.in/

- எனும் தளத்தில் கண்டு மகிழ்க..

உற்சாகம் பொங்க -  மாணவ மாணவிகளுடன் நானும் ஒரு மாணவனாக கண்காட்சியைக் காண நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்தூறும் அறிவு.

வாழ்க நலம்!..
***

20 கருத்துகள்:

 1. மக்களுக்குச் செய்தி சொல்ல இது போன்ற காட்சி அரங்குகள் பயன் படுகிறது. இதற்கான விளம்பரங்கள் தஞ்சையில் இருந்ததா.?தேர்ந்தெடுத்த படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   இதற்கான விளம்பரம் ஜங்ஷன் வாசலில் இருந்தது. நான் தினமணி நாளிதழ் மூலமாக தெரிந்து கொண்டேன்..

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 2. மிக நல்ல தகவல்! மட்டுமல்ல மிக அருமையான விஷயம்! படங்களும் அருமை. பரவாயில்லை. நல்ல ஒரு விஷ்யம் மக்களையும் மாணாக்கர்களையும் சென்று அடைந்திருக்கின்றதே! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா! அருமையாக விளக்கி உள்ளீர்கள். நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   பிறர் பயனடையும் வண்ணம் நம்மால் செய்ய முடிந்த செயல் - இது.

   பொதுமக்களும் மாணாக்கர்களும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 3. பயனுள்ள பதிவு. மாணவர்கள் அதிகம் பயன் பெற வாய்ப்புண்டு. படம் எடுக்க தடை என்ற நிலையிலும் எந்த வகையில் படம் எடுக்க முடியுமோ அந்த அளவு எடுத்து அனைவரையும் கண்காட்சியைப் பார்க்கும் அளவு ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   ரயில் பெட்டியினுள் படம் எடுக்க முடியவில்லை. பெட்டியின் வெளியே எடுக்கப்பட்ட படங்கள் தான் பதிவில் உள்ளவை.

   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. தஞ்சை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு உபயோகமான செய்தியை புகைப் படங்களோடு
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ஆ ... ஊ ... என்றால் புகைப்படத்திற்கு தடை என்று சொல்லி விடுகிறார்கள். சாட்டிலைட் மூலம் எல்லாமே போய்க் கொண்டுதான் இருக்கிறது. இதில் என்ன பெரிய ரகசியம் இருக்கிறது என்று தெரியவில்லை.

  ஆகக் கூடி நீங்கள் இப்போது தஞ்சாவூரில்தான் இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் கூறுவது மிகச் சரி..படங்களின் மூலமாக தகவலைப் பகிர்ந்து கொள்வது - பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்டுவதற்காக!..

   அது ஏனோ சில சமயங்களில் வாய்ப்பதில்லை..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. மாணவர்களுக்காக பயனுள்ள பதிவை இட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. உங்கள் பதிவுகள் எப்போதும் பிறருக்கு மிகவும் பயன் தரும் வண்ணமே இருக்கும் . இப்போதும் அதுபோலவே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அறிவியல் கண்காட்சி ரயில் குறித்த பகிர்வு அனைவரும் அறிய வேண்டிய பகிர்வு. அருமையான தகவல் சேகரிப்பு...
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 9. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் தகவலுக்கு நன்றி..
   அன்பின்ன் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 10. 1970 ம் ஆண்டு கோவையில் பள்ளியில் படிக்கும் போது இப்படி ரயிலில் அறிவியல் கண்காட்சி பார்த்த நினைவுகள் மனத்திரையில் விரிகிறது.

  அழகாய் அங்கு காட்சி அமைக்கப்பட்டவைகளை சொல்லி விட்டீர்கள்.
  படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
  பகிர்வுக்கு நன்றி.
  படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு