நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 06, 2013

கந்த சஷ்டி

திருச்செந்தூரில் சஷ்டிப் பெருவிழா -வெகு சிறப்புடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

தண்ணீர் கூட அருந்தாமல் கடும் விரதம் ஏற்று, 


திருவடி மலர்களை மட்டும் சிந்தித்தவாறு -  விரதம் மேற்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தண்ணருள் புரிய -

வெற்றி வடிவேலனாகிய -திருச்செந்திற்குமரன் தங்கத்தேரில் எழுந்தருள்கின்றான்.

திருச்செந்திலாதிபனாகிய ஜயந்தி நாதன் - நாளும் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாக எழுந்தருளி மெய்யன்பர்களுக்கு அருள்புரிகின்றான்.

அவரவர் சக்திக்கேற்றபடி, நோற்கும் விரதங்களில் பலவிதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் சஷ்டி விரதம் நோற்கும் போது சில மிளகுகளும் ஒரு வாழைப்பழமும் சிறிது பால் அல்லது இளநீர் மட்டுமே!.. 

சமயங்களில் முருகனுக்கு நிவேதிக்கப்பட்ட பானகம்!.. 

இப்படி ஆறு நாட்கள் மேற்கொள்ளும் விரதம் சூர சம்ஹார நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.

ஐப்பசி அமாவாசையை அடுத்த பிரதமை முதற்கொண்டு, முருகனின் சந்நிதியில் சங்கல்பத்துடன் காப்பு கட்டித் தொடங்கும் இத்தகைய கடும் விரதத்தின் தலையாய நோக்கம் - ஆணவ, மாயா, கன்மம் எனும் மும்மலங்கள் நம்மை விட்டு நீங்குதற்கே!.. 

எனினும் சஷ்டி விரதம் நோற்பவர் தம் வேண்டுதல்கள் பரிபூரணமாக நிறைவேறுவதை கண்கூடாகக் காண்கின்றோம்.


முருகன் முன்னின்று காத்து அருள் புரிவதை ,

வேலும் மயிலும் துணியாய் வருவதை - மனமார உணரலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் - என்று சொல்லப்படுவது பழைமையான - சொல்வழக்கு.

இதன் உட் பொருள், 

சஷ்டி எனும் விரதம் மேற்கொண்டு - இறையருளைச் சிந்தித்திருந்தால் - அகப்பையாகிய கருப்பையில் - வம்ச விருத்திக்கான தளிர் தழைத்து வரும் . வளரும். 

- என்று பெரியோர்கள் விளக்குகின்றார்கள்.

அத்தகைய சஷ்டி அன்றுதான் - சூரபத்மனின் மும்மலங்களும் அழிக்கப் படுகின்றன. சங்கரிக்கப்படுகின்றன.

இந்த சூர சம்ஹார நிகழ்வு - தேவாரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

சமரசூர பன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆளுடையார்களே!..(5/64/10)

என்றும்,

அன்பர்களுக்கு அருள்புரிய எல்லாம் வல்ல சிவபெருமான் எழுந்தருளும் போது - அவருடன், 

படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் 
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்!..(6/18/4) 

என்றும் அடையாளம் கூறி மகிழும் திருநாவுக்கரசர்

கூரிலங்கு வேற்குமரன் தாதை போலும் 
குடந்தைக் கீழ்க் கோட்டத்து எம்கூத்தனாரே!..(6/75/7)

என்று புகழ்ந்துரைக்கின்றார்.


மேலும் - திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத் திருப்பதிகத்தில்,

நம் செந்தில்மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!..(6/23/4)

என்று செந்திற்பதியையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.

இத்தகைய சிறப்பு மிக்க செந்திற்பதியும் - 1649ல் இருந்து 1655ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் டச்சு மற்றும் போர்ச்சுக்கீசிய வந்தேறிகளால் பாழ்படுத்தப்பட்டது.

அப்போது மதுரையை ஆண்டு கொண்டிருந்த திருமலை நாயக்கரின் தயாள குணத்தினால் - வியாபாரம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்த ஐரோப்பியர்கள், திருச்செந்தூர் ஷண்முகநாதனின் திருக்கோயில் வளத்தினைக் கண்டு பிரமித்து - நயவஞ்சகமாக வன்முறையைப் பிரயோகித்து கைப்பற்றி - அங்கே பாசறையும் அமைத்துக் கொண்டனர்.


அவர்களுடைய தகாத செயலை எதிர்த்து  ஊர்ப் பொதுமக்களுடன் திருக்கோயிலின் திரிசுதந்திரர்களுடன் கூடி கைகலப்பில் ஈடுபட இருபுறமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. கோயிலில் இருந்து வெளியேற பெருந்தொகை கேட்டு நிர்பந்தித்தனர் - ஐரோப்பியர்.

அரச பிரதிநிதியாக இருந்த வடமலையப்பபிள்ளை அவர்களின் மூலம் நிலைமை அறிந்து மதுரையில் இருந்து பெரும்படை வருவதற்குள், திருக்கோயிலில் இருந்த நடராஜர் திருமேனியையும், ஜயந்தி நாதர் திருமேனியையும் களவாடிக் கொண்டு - தங்கள் கப்பலில் ஏறி பயணப்பட்டனர்.



அந்தோ பரிதாபம்!.. சிறிது தூரம் பயணம் செய்வதற்குள்ளாகவே - இடியும் மின்னலும் சூறைக் காற்றும் பலத்த மழையும் ஐரோப்பிய களவாணிகளைச் சூழ்ந்து கொண்டது. இதனால் பயந்து நடுங்கிய பாதகர்கள் - களவாடிய திருமேனிகளைக் கடலில் போட்டு விட்டு உயிர் தப்பி ஓடிப் பிழைத்தனர்.


களவு போன விக்ரகங்களுக்கு மாற்றாக - புதியன செய்யும் முயற்சியில்  - வடமலையப்பபிள்ளை ஈடுபடும் போது, அவருடைய கனவில் தோன்றிய செந்திலாதிபன் - கடலில் தானிருக்கும் இடத்தை உணர்த்தி மறைந்தார்.

மறுநாள் -   சிவந்தி ஆதித்தன், ஆலந்தலை பிச்சை, பெர்னாந்து என்னும் அடியார்களும் மற்றும் சிலரும் உடன் வர, வடமலையப்ப பிள்ளை - கடலுக்குள் சென்றார்.


அங்கே - கடலில் எலுமிச்சம்பழம் மிதக்க கருடன் மேலே வட்டமிட்டுப் பறந்து அடையாளங் காட்டியது.


அதைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்த அன்பர்கள் -  நடராஜர் திருமேனியையும், ஜயந்தி நாதன் திருமேனியையும் ஜயகோஷத்துடன் மீட்டெடுத்தனர்.

அதன்பின், நாளும் கோளும் கூடிய நல்லவேளையில் -


திருக்கோயிலை  புனருத்தாரனம் செய்து - திருமேனிகளை ஸ்தாபித்து மகிழ்ந்தனர்.

ஐரோப்பிய வந்தேறிகளால் களவாடப்பட்டு - பின் மீட்கப்பட்ட ஜயந்தி நாதன் திருமேனிதான் - இன்று திருக்கோயிலில் திருமூலத்தானத்தை அடுத்து தெற்கு நோக்கி விளங்குகின்றது.

இந்த வரலாறு - திருச்செந்தூர் தலவரலாற்றில் இடம் பெற்றுள்ளதோடு, திருக்கோயிலின் பிரகாரத்தில் பெரிய அளவிலான வண்ணப் படங்களாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று நாம் திருச்செந்தூரில் -

செந்தில் நாதனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் - அன்று அவன் கடலிலிருந்து மீள்வதற்குக் காரணமாக இருந்த,

வடமலையப்ப பிள்ளை,  சிவந்தி ஆதித்தன்,  ஆலந்தலை பிச்சை, பெர்னாந்து - எனும் நல்லோர்களை நன்றியுடன் நினைவு கூர்வது அவசியம்.


திருச்செந்திலாதிபனின் திருவடித் தாமரைகளில்- நாம் தலை வைத்து வணங்கினால் - பிரம்மன் நம் தலையில் தன் கைப்பட எழுதிய எழுத்து - அழிந்து போகும் என்று கந்தர் அலங்காரத்தில் - அருணகிரி நாதரின் திருவாக்கு.

சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் 
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் 
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் 
கால்பட்டழிந்தது இங்கு எந்தலைமேல் அயன் கையெழுத்தே!.. 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹா சேனாய தீமஹி 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்:

முருகன் திருவருள் முன்னின்று காக்கும்!..
வெற்றிவேல்.. வீரவேல்!..

12 கருத்துகள்:

  1. படங்களும் தகவல்களும் அசத்தல். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. அன்பின் துரைராஜு, சூர சம்ஹாரத்தை தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு. என் பதிவுகளில் கடவுளர்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் முருகனை பற்றி எழுதியதே அதிகம் ”முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்” “எனக்கு நீ என்ன செய்தாய்”.” முருகா நீ என்ன அப்பாவியா” “ சூரனின் சதியா” போன்றவை எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா1.. தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!.. நானும் தங்கள் வலைப் பதிவில் அடிக்கடி வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.. அவசியம் - தாங்கள் குறிப்பிடும் பதிவுகளை படிக்கின்றேன்.

      நீக்கு
  3. செந்தில் ஆண்டவர் பெருமை சொல்ல ச் சொல்ல வளர்வதன்றோ? தங்கள் படைப்பு இனியது. அரியது. அழகியது.

    Typed with Panini Keypad

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அழகிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி!..

      நீக்கு
  4. உங்கள் பதிவைப் வேணும் என்று படித்தவுடன் திருச்செந்தூர் செல்ல அவா எழுகிறது.
    நடராஜர் சிலையையும், முருகன் சிலையையும் நமக்கு காப்பாற்றி கொடுத்த பெரியோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..

      நீக்கு
  5. வணக்கம் அய்யா. தங்கள் பதிவு என் கண்ணில் தாமதமாகப் பட்டிருக்கிறதே. தாமதத்திற்கு மன்னிக்கவும். திருச்செந்தூர் முருகனின் திருவருள் அனைவருக்கும் கிட்டட்டும். அனைத்து தகவல்களும் அசர வைக்கிறது. அழகான படங்களோடு பதிவைப் பகிர்ந்தமை சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்!.. தங்கள்து வருகையும் அழகான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு
  6. என் அப்பன் முருகனின் திருவிளையாடலை
    நீங்கள் வரைந்த எழுத்துக்கள் மூலம்
    நான் தெரிந்து கொண்டேன் ஐயா
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சுரேஷ்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..