நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 16, 2013

துலா ஸ்நானம்

திருமயிலாடுதுறை!..

இத்தலம் - மாயூரம் என்றும் வழங்கப்பெறும்.  


''ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிக பிரசித்தமானது. 

என்ன காரணம்?...

சிவபெருமானின் ஜடாமகுடத்திற்குள் அடங்கியிருந்த - கங்கைக்கு அன்று போதாத நேரம்!.. 

''.. என்னால் தான் மக்களின் பாவங்கள் தொலைகின்றன!.. நான் மட்டும் பொங்கிப் பெருகவில்லை எனில், பாவத்தின் பாரம் தாங்க மாட்டாமல் பூமி பொலிவு இழந்து போயிருக்கும்!..'' 

- என்று எண்ணி கர்வம் கொண்டாள். 

அவ்வளவு தான்!.. 

அந்த எண்ணத்தால் - கங்கை தான் - தன் பொலிவினை இழந்தாள்.. 

மதி கலங்கியதால் - நதி எனும் புனித கங்கை - கதி கலங்கிப் போனாள்!.. 

ஈசனின் சிரத்தில் இருந்தும் -  தகாத எண்ணத்தால் - தனக்கு விளைந்த பாவம் நீங்க பிராயச்சித்தம் அருளுமாறு, இறைவனை நாடி கங்கை பணிந்து வணங்கி நின்றாள்.. 

கங்கையின் பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன் - மயிலாடுதுறை எனும் பதியில் காவிரி ஆற்றின் துலா ஸ்நான கட்டத்தில் நீராடும்படி ஆணையிட்டார். 


அப்படி என்ன பெருமை  - அந்த மயிலாடுதுறைக்கும், காவிரிக்கும்!..  

கங்கை அதிசயித்தாள்.

அந்த பெருமையை - நந்தி தேவர் - கங்கைக்கு விவரிக்கலானார்.

முன்னொரு சமயம்  ஈசன் வேதத்தின் பொருளை அம்பிகைக்கு விவரித்த வேளையில் - திருக் கயிலையின் சாரலில் மயில் ஒன்று தனது அழகிய தோகையை விரித்து ஆடியது. அந்த அழகில் அம்பிகை - ஒரு நொடிப்பொழுது மனம் லயித்தாள். அதைக் கண்டு சினந்த பெருமான் - அம்பிகையை மயிலாகவே - பிறக்கும் படியாக சாபமிட்டு விட்டார். 


அம்பிகை - ஏற்கனவே, இமவான் மகளாகப் பிறந்தபோது இமயாசலத்தில் மயிலாக ஆடிக் களித்தவள் தானே!..  அவளுக்குக் கசக்குமா - மயிலாகப் பிறந்து ஈசனைத் துதிப்பதற்கு!..

அதே வேளையில், காவிரியும் கடும் தவம் செய்து கொண்டிருந்தாள்.. எம்பெருமானையும் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும் என்று!..

எல்லாம் ஒன்றாகக் கூடி வர -

அம்பிகை மயிலாக உருமாறி காவிரிக் கரையினில் சிவ வழிபாடு செய்தனள்.  


காலம் கனிந்தது. 

அம்பிகையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் தானும் மயிலாகத் தோன்றி உமாதேவியுடன் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்.. காவிரியும் அற்புதக் காட்சி கண்டு பெறற்கரிய பேறு கொண்டனள்..


அந்தத் தாண்டவமே மயூர தாண்டவம். மயூரம் என்றால் - மயில். 

ஈசனும் அம்பிகையும் மயிலாகத் தாண்டவமாடிய  தலமே மயிலாடுதுறை. 

இப்படிப் பெருமை கொண்ட திருத்தலமாகிய - மயிலாடுதுறையில் - 

ஈசன் ஆணையிட்டபடி, கங்காதேவி துலா மாதமாகிய  ஐப்பசியில் காவிரி நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கி பாவம் நீங்கினாள் என்பதும், ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை காவிரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே பிரவாகமாகி கலந்திருப்பதாகவும் ஐதீகம்... 

அதன்படி ஐப்பசி முழுதும் மக்கள் காவிரியில் நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட வேளையில், 

வெகு தொலைவில் இருந்து காவிரியில் நீராடுதற்காக திரண்ட அடியார்களுள் நடக்க இயலாத ஏழை ஒருவரும் தன் அளவில் முயற்சிக்க - 

ஐப்பசி கடைசி நாளும் ஆகிவிட்டது.. 

உடன் வந்தவர்கள் விரைவாய் சென்றுவிட நடக்க இயலாதவர்  நிலை பரிதாபமானது.. மனம் உடைந்த அவர் கண்ணீர் மல்கி கசிந்து உருகினார்.  ஐப்பசி கடைசி நாள் மாலைப் பொழுதுக்குள்  காவிரியில் நீராட இயலாத தன் நிலையை எண்ணிக் கதறினார்.. 

ஏழை அழுத  கண்ணீர் ஈசனின் திருவடிகளை நனைத்தது!. அன்பே  வடிவான சிவமும் அந்த ஏழைக்கு அருள் பொழிய நினைத்தது!..

ஈசன் அடியவர் முன் தோன்றி, 

'' வருந்தற்க!. நாளை கார்த்திகை முதல் நாள் - உம் பொருட்டு கங்கை காவிரியிலேயே கலந்திருப்பாள்!.. நீராடி மகிழ்க!..'' 

- என்று அருள் புரிய, அது முதற் கொண்டு கார்த்திகையின் முதல் நாளும் புனித நாளாயிற்று. 

அதன்படி ஐப்பசி தொடங்கி கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) வரை பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்படிக்கு காவிரியே கங்கையாகத் திகழ்கிறாள்..

இன்று - ஐப்பசி மாத துலா ஸ்நானத்தின் கடைசி நாள் - கடை முழுக்கு!..

நாளை  - கார்த்திகை முதல் நாள் - முடவன் முழுக்கு!..


மயிலாடுதுறை - எனும் மாயூரம் திருவிழாக்கோலம் பூண்டு விளங்குகின்றது. மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள - காவிரியின் துலா ஸ்நானகட்டத்தில் - தீர்த்த வாரி நிகழ்கின்றது. 

இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி.


ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!.. 

''தண்ணீரும் காவிரியே!..'' - என்ற திருவாக்கின் படி -   எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!..

பரந்து விரிந்த பூவுலகில்- எங்கிருந்த போதும் சரி!..

நீராடும் போது  - ஒரு சொம்பு நீரை எடுத்து,

ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் நமோ நம:

- என்று சிந்தித்து வணங்கி - நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!..


இன்று இயலாவிட்டாலும் நாளையாவது - முடவன் முழுக்கு - நன் நீராடி - முன் வினை முழுதும் முற்றாக நீங்கப் பெறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

4 கருத்துகள்:

 1. நீங்கள் உரைத்தது அனைத்தும் உண்மையே... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. பெயரில்லா17 நவம்பர், 2013 12:27

  மயிலாடுதுறையின் சிறப்பினை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.
  செந்தில் குமார். குவைத்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் செந்தில் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..