நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவாதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 13, 2017

திருவாதிரைக் களி 2

தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்திலும் 
மற்ற சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரையன்று
ஆருத்ரா  தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.

சிதம்பரம் என்றால் என்ன பொருள்?..

சித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி. 


இங்கே வெட்ட வெளி என்பது எது?..

நடராஜர் சந்நிதியின் உள்ளே வலப்புறத்தில்  தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. 

பொதுவாகக் காண முடியாதபடி திரையினால்  மறைக்கப்பட்டிருக்கும். நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும். 

அங்கே என்ன இருக்கிறது? என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும். 

இறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது. 

எனவே  தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகின்றது...

வருடம் முழுதும் விசேஷங்கள் என்றாலும் ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் மிகச் சிறப்பானவை..

திருவாதிரை அன்று நடராஜருக்கு நைவேத்யம் களி. 
திருவாதிரைக் களி என்றே பிரசித்தம்...

ஏன்?.. என்ன காரணம்?..

வாருங்கள்.. தில்லை மூதூருக்குச் செல்வோம்..


தில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர் ...
யார் இவர்!?..

பூம்புகார் நகரில் வைரத் தூண் நட்டு வைத்து வாணிகம் செய்து வந்த திருவெண்காடரின் கணக்கர்..

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!..  - எனும் சொல்லால் எல்லாவற்றையும் ஒரு நொடியில் துறந்தார் திருவெண்காடர்...

இவருடைய துறவு கண்டு  இவரைப் பட்டினத்தார் - என்றழைத்தனர் மக்கள்..

தனது முதலாளி துறவு கொண்டபின் தன் நிலையையும் மாற்றிக் கொண்டார் - சேந்தனார்...

தாமும் சிவனடியார் ஆனார்..

தினமும்  எவருக்காவது உணவளித்த  பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டார்..

வயிற்றுப்பாட்டிற்காக - வனங்களில்  பட்டுப் போன மரங்களை மட்டும் -  வெட்டி, விறகாக்கி விற்றார்.. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தாமும் உண்டு எளியவர்க்கும் உணவளித்தார்.. 

ஏழை என்றான பின்னும்  அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை...

இவ்வேளையில் தான் -

சேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன்,  திருவுள்ளம் கொண்டார். 

அப்போது தில்லையில் மார்கழித் திருவிழா நடந்து கொண்டிருந்தது..

காலமல்லாத காலமாக மழையும் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது

திருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும்   தஞ்சையம்பதியில் இருந்து தில்லைத் திருச்சிற்றம்பலத்திருக்கு வந்திருக்கின்றார்... 


தில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைக் கண்ணாரத் தரிசனம் செய்த பின் அரச மாளிகைக்குத் திரும்பினார் - கண்டராத்தித்தர்..

முன்னிரவுப் போதில் மீண்டும் தமது மாளிகையில் சிவ வழிபாடு நிகழ்த்தினார்..

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ!..

மனமுருகிப் பாடிய கண்டராதித்த சோழர் - 
எதற்காகவோ உற்று கவனித்தார்..

என்றைக்கும் கேட்கும் தண்டையொலி இன்றைக்குக் கேட்கவில்லை..

யாருடைய தண்டையொலி?.. ஈசனின் தண்டையொலி!..

கண்டராதித்தர் வழிபாட்டினை முடித்ததும் ஈசனின் தண்டையொலி கேட்கும் படியான வரத்தைப் பெற்றிருந்தார்..

ஈசனின் தண்டையொலியைக் கேட்காததால் மனம் கலங்கியது..
அந்த நிலையிலேயே உறங்கச் சென்றார்..

தில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவர் பராந்தக சக்ரவர்த்தி..
இவருடைய புதல்வர் மூவருள் நடுவானவர் கண்டராதித்தர்(950 - 957).. 

மூத்தவர் ராஜாதித்த சோழர்..
இளையவர் அரிஞ்சய சோழர்..


கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவ பக்தர்.. 
அரச மாளிகையை விட அரன் கோயிலையே மனதார விரும்பியவர்..

இவரது துணைவியார் மாதரசி செம்பியன் மாதேவியார்..

கண்டராதித்தரின் தம்பியாகிய அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்..

சுந்தர சோழரின் மக்களே - ஆதித்த கரிகாலன்.. குந்தவை நாச்சியார்...
அருள்மொழி வர்மன் எனப் பெயர் கொண்ட ராஜராஜ சோழன்..

இந்த வகையில் கண்டராதித்தர் -   
ராஜராஜ சோழனின் பெரிய பாட்டானார் ஆவார்..

அன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடுமையான மழை. 

சேந்தனாருக்கு  விறகு விற்று, பொருளீட்டி அடியாருக்கு உணவு அளிக்க முடியாத நிலை. வீட்டிலும் வெளியில் சொல்ல முடியாத நிலை. தவித்தார்.  தத்தளித்தார். 

தவறி விடுமோ அடியவரை உபசரிப்பது?.. என்று , தணலில் விழுந்த புழுவாய்த் துடித்தார்.

இரவாயிற்று.. ஏதும் இயலாதவராய் முடங்கிக் கிடந்தார். 
திடீரென குடிசையின் வாசலில் - திருச்சிற்றம்பலம்!... என்ற குரல்...

எழுந்து வெளியே வந்தவர் மழைத் தூறலில் வயதான சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டார். 

அன்புடன் வரவேற்று குடிசையின் உள்ளே உணவருந்த வருமாறு அழைத்தார். 

சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை. இருப்பினும் சேந்தனாரின் மனைவி  கொடி அடுப்பில் தீ மூட்டி  ஒருபுறத்தில் தண்ணீரை ஏற்றினாள்..

குடிசையின் மூலையில் இருந்த பானைகளைத் துழாவினாள்...

இரு கையளவு பச்சரிசிக் குறுநொய்யும் சிறிதளவு பயற்றம் பருப்பும் கொஞ்சம் வெல்லமும் கிடைத்தன..

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது?.. - என்று யோசித்தாள் அந்தப் புண்ணியவதி..

கொடி அடுப்பின் மறுபுறம் பழஞ் சட்டியை வைத்து அரிசியையும் பருப்பையும் சற்றே வறுத்து பொடியாக நுணுக்கினாள்..

அதற்குள் தண்ணீர்  கல... கல... என்று கொதித்திருக்க
அரிசி பருப்புப் பொடியைப் போட்டு கிளறினாள்.. 
வெந்து வரும் வேளையில் வெல்லத்தையும் போட்டு மேலும் கிளறினாள்..

பாத்திரத்தில் தள... தள.. என்று நிறைந்து வந்தது.. மனம் போல!..

இதற்கிடையில் -
இந்த இரவிலும் தன்னைத் தேடி ஒரு அடியார் வந்திருப்பது குறித்து சேந்தனாருக்கு பெரு மகிழ்ச்சி. 

அடியாருக்கோ - சேந்தனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் -

இந்த இரவுப் பொழுதிலும் நமக்கு சமைத்துப் போட ஒருவன் இருக்கின்றானே!.. - என்று....

அன்றைக்கும் இப்படித்தான் -
மழை பெய்யும் இரவில் சுடச்சுட  - இளையான்குடியில் சாப்பிட்டது. 

அதன் பிறகு - செங்காட்டங்குடியில் கேட்டு வாங்கி சாப்பிட்டது  - இன்று வரைக்கும் பிரச்னையாகி விட்டது... ம்ஹும்.. இனி அந்த வேலை வேண்டாம்..

மதுரையில் வந்தியிடம் உதிர்ந்த பிட்டு  வாங்கித் தின்றதற்கு 
உழைத்துக் கொடுத்து முதுகில் அடியும் வாங்கியாகி விட்டது.. 
ஏனென்று யாரும் கேட்கவில்லை!..

அரிவாள் தாயனிடம் செங்கீரைச் சோறும் மாவடுவும்.... 

காரைக்காலில் புனிதவதி கையால் மாம்பழத்துடன் தயிர் சோறு..
ஆகா... அருமையான உபசரிப்பு... ஆனால், அவள் பேயாகிப் போனாள்!.. 

காளத்தி மலையில் மட்டும் என்ன சாதாரண கவனிப்பா!... 
கண்ணுக்குள்ளேயே நிற்கின்றான் கண்ணப்பன்!.... 

சோமாசி யாகம் என்று கூப்பிட்டான்.. 
சரி.. கூப்பிட்டானே.... என்று குடும்பத்தோடு போனால்.... 
இருந்தவன் எல்லாம் எழுந்தோடிப் போனான்!.. 


சிவனே!.. - என்று இருந்த இடத்தில் இருந்ததற்கு....
விஷத்தை அல்லவா  கொண்டு வந்து கொடுத்தார்கள்!.. 
அன்றைக்கு அவள்  அபிராமவல்லி மட்டும்  பக்கத்தில் இல்லை என்றால்?.... 

ஏதோ... இந்தக்  காலத்தில் சேந்தன் மாதிரியும்... சில பேர்!...

சிந்தனையில் சற்றே கண்ணயர்ந்த பெரியவரை எழுப்பினார் சேந்தன்....

ஐயா.. உணவருந்த வாருங்கள்!..

ஆவியுடனும் அன்புடனும் அடியவர்க்கு இலையில் பரிமாறப்பட்டது களி..... 

பெரியவர்  ஆனந்தமாக உண்டார்... 
முகக் குறிப்பை அறிந்து மறுபடியும், களிப்புடன்  பரிமாறினர் - களியை...

போதும் என்று தோன்றியது பெரியவருக்கு.... இலையை விட்டு எழுந்தார்... 

சேந்தனார் கேட்டார் -  ஐயா.. இன்னும் கொஞ்சம் உண்ணலாமே!..

அப்படியா!.. இன்னும் இருக்கிறதா?.. சரி... அதையும் கொண்டு வா!... 

களியைக் கேட்டு வாங்கி,  இடுப்புத் துணியில் முடிந்து கொண்டார்... 

மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தினார்.. திருநீறு வழங்கி விட்டு புறப்பட்டார்.. 

சேந்தனார்க்கும் அவருடைய மனைவிக்கும் மிக மிக திருப்தி...

எதுவும் சாப்பிடாமலேயே - ஓலைப் பாயை விரித்து அந்த ஏழையர் நிம்மதியாக உறங்கினர்.. 

அதே இரவில் தான் - கண்டராதித்த சோழர் 
ஈசனின் தண்டை ஒலி - கேட்காததைக் குறித்து  நிம்மதியிழந்தவராக
பஞ்சணையில் புரண்டு கொண்டிருந்தார் - தூக்கமின்றி!..

விடிந்த பொழுதில்,  கோயிலைத் திறந்த  தில்லைவாழ் அந்தணர்கள் 
ஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும்  களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்தனர்...

மன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்.. 
மன்னர் மேலும் குழம்பினார். 

ஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார். 
தில்லை அம்பலம் திருவிழாக்கோலம் பூண்டது.

எல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது... 
அவர் மனைவியுடன் ஆதிரைத் திருநாள் காண சென்றார். 

அங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது 
நின்று கொண்டிருந்தது...

ஆனையும் சேனையும் திருத்தேரை இழுக்க முயன்று தோற்றுப் போனதாக மக்கள் பேசிக் கொண்டனர்..

என்ன பெருங்குற்றம்  நேர்ந்ததோ?.. - என்று எல்லோரும்  அஞ்சி நின்றனர்.. அவ்வேளையில்,

சேந்தனே!.. தேர் நகர்வதற்குப் பல்லாண்டு பாடுக!..  

- என,  இறை வாக்கு வானில் ஒலித்தது...

அதைக் கேட்டு ஊரெல்லாம் திகைத்து நிற்க - சேந்தனார், 

ஐயனே!.. ஏதும் அறியாத மூடன்.. எங்ஙனம் பாடுவேன்?.. - மனம் உருகினார்..

ஆகும்.. உன்னால் ஆகும்.. களி படைத்துக் களிப்படைந்தவன் அல்லவா!.. பாடுக!.. - என வாழ்த்தினான் பரமன்..

யார் இந்தப் புண்ணியர்?.. - என்று ஊரெல்லாம் உற்று நோக்கியது..

சேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டார்..

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே!..

ஆனந்தக் கண்ணீர் வழிய பல்லாண்டு பாடினார் - சேந்தனார்..

ஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின. 

மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது... 


விடை வாகனத்தில் உமையாம்பிகையுடன் தோன்றிய மகேசன் அறிவித்தான்...

நேற்றிரவு சேந்தனின் குடிசைக்குச் சென்றிருந்தோம்.. அங்கே விருப்புடன் களி உண்டோம்.. அதனாலேயே - கண்டராதித்தனின் வழிபாட்டில் தண்டை ஒலி கேட்கவில்லை!..

சேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்...

மன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்...

சேந்தனாரையும் அவரது மனைவியையும்  பணிந்து வணங்கினார்கள்... போற்றி மகிழ்ந்தார்கள்...

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது...

கண்டராதித்தர் பாடிய கோயில் திருப்பதிகமும்
சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் 
ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்று விளங்குகின்றன...

இருப்பவர் தம் மாளிகையை விடவும்
இல்லாதோர் இல்லங்களே இறைவனுக்கு உகப்பு..

பொன் பொதிந்த கோட்டங்களை விடவும்
அன்பு நிறைந்த நெஞ்சங்களே ஐயனுக்குத் தித்திப்பு..


அவர் தரும் அடிசில் அமுதினும் தித்திப்பு..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

செவ்வாய், டிசம்பர் 17, 2013

தில்லை சிற்றம்பலம்

தில்லை திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் - நாளை (18.12.2013) புதன்கிழமை - திருவாதிரை தரிசனப் பெருவிழா!.. 

நால்வருடன்- புண்ணியர் பலரும் பரவித் துதித்த திருத்தலம் - தில்லையம்பதி.


சைவத்தில் கோயில் என்று பொதுவாக வழங்கினாலே  அது - சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும்.

தலத்தின் திருப்பெயர் தில்லை. திருக்கோயில் - சிதம்பரம்.

இன்று தலத்தின் பெயர் - சொல்வழக்கில் இருந்து மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகின்றது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. இம்மரங்கள் பிச்சாவரத்திற்கு அருகிலுள்ள கடல் உப்பங் கழியின் கரைகளில் காணப்படுகின்றன.

சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் பூலோக கயிலாயம்,


இறைவன் - நடராசப்பெருமான், கூத்தபிரான், அம்பலவாணன், கனக சபாபதி.

அம்பிகை - சிவகாம சுந்தரி.

தீர்த்தம்  - சிவகங்கை. தலவிருட்சம் - தில்லை.

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் பிற கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்குள்ள மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு என உள்ள  ஐந்துபடிகளும்  - பஞ்சாக்கரப் படிகள் என வழங்கப்படுகின்றது.;

சிற்சபையில்  நடராசப் பெருமானுக்கு வலப்புறம் உள்ளது - சிதம்பர ரகசியம்  .

இறைவனின் யோக வடிவத்தில் திருவாரூர் மூலாதாரம், திருவானைக்கா உந்தி. திருவண்ணாமலை மணிபூரகம், திருக்காளத்தி கழுத்து. காசி புருவ மத்தி, சிதம்பரம்  - இருதய ஸ்தானம்.

பஞ்சபூத தலங்களுள் இது ஆகாயத் தலம். பஞ்ச சபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை எனவும் வழங்குவர்.  இத்திருக்கோயிலுள் - சிற்றம்பலம், பொன்னம்பலம் (கனகசபை), பேரம்பலம், நிருத்தசபை, இராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.

சிற்றம்பலம்  - நடராசப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம். இதற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தக சோழன் பொன் வேய்ந்தான்



பொன்னம்பலம் (கனகசபை) பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம்.
பேரம்பலம் - இது தேவசபை எனப்படும்.
நிருத்த சபை - ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம்.
இராஜசபை - இது ஆயிரக்கால் மண்டபமாகும். பண்டைய காலங்களில் சோழ மன்னர்களுக்கு முடி சூட்டப்படும் இடம்.

வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பதஞ்சலி ஆகியோர் பூஜித்த தலம். 


திருநாவுக்கரசர் அங்கப் பிரதட்சணம்  செய்த திருத்தலம்.

திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தில் தங்கியிருக்க அஞ்சி அருகிலுள்ள திருவேட்களத்தில் தங்கி இருந்து - நாளும் இங்கே வந்து வழிபட்டார்.

சுந்தரர் - தில்லையம்பதியை மிதிக்க அஞ்சி ஊருக்கு வெளியே நிற்க , பெருமான் விரும்பி அழைத்த தலம்.

மாணிக்கவாசகர்  ஊமைப் பெண்ணைப் பேசுவித்து பெளத்தரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டிய பெரும்பதி.



வைணவத்தில் திருச்சித்திர கூடம் என்று புகழப்படும் திருத்தலம். 

மாணிக்க வாசகர், நந்தனார், கணம்புல்ல நாயனார் - ஆகியோர் முக்தி நிலை எய்திய திருத்தலம். திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்த தலம்.. 

திருஆதிரை அன்று வீதியில் - தடைப்பட்டு நின்ற தேர் சேந்தனார் திருப் பல்லாண்டு பாடியதும் மீண்டும் இலகுவாக ஓடிய தலம்.

இராசராசன் வேண்டுதலின் பேரில் -  பொல்லாப் பிள்ளையாரின் துணையால் -  நிலவறையில் இருந்த மூவர் தேவாரம் வெளிப்பட்ட திருத்தலம். பின்னர் இதையே, நம்பியாண்டார் நம்பி - ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார்.

சேக்கிழார் - திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு, ஈசன் - அடியெடுத்துத் தந்து திருத்தலம். திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றச் செய்யப்பட்ட  தலமும் இதுவே.. 

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் அபிமான திருத்தலம்.

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
திருநாவுக்கரசர் தேவாரம்

சிவாய திருச்சிற்றம்பலம்!..