நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 13, 2023

சொல்லழகா!..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 30
சனிக்கிழமை


நெல்லழகா புல்லழகா
நிறைந்து வரும் நீரழகா
கோலழகா குழலழகா
கோகுலத்து நிறையழகா
கண்ணழகா கருத்தழகா
கனிந்துவரும் கலையழகா
மாலழகா தோளழகா  
மனங்குளிரும்
மலையழகா 8


கள்ளழகா நல்லழகா
கண் காட்டும் கருத்தழகா
மண்ணழகா விண்ணழகா
மாயவனே பேரழகா
பேரழகா ஊரழகா
ஊர்காட்டும் சீரழகா
மாரழகா மணியழகா
மன்னவனே மதியழகா 16


ஓரழகா ஈரழகா
எமையாளும் நூறழகா
அன்பழகா அருளழகா
அழகு நிறைத் தமிழழகா
கல்லழகா கனியழகா
காணவந்த கலையழகா
பொன்னழகா பூவழகா
பொன்போலும் சிலையழகா..24


தொல்லழகா துணையழகா
துணையருளும் நல்லழகா
சொல்லழகா சொல்லழகா
சுந்தரனே வில்லழகா
நல்லருளும் நல்லழகாய் 
நல்குவையே கள்ளழகா!..
பண்ணருளும் கண்ணழகா
பதமருள்வாய் கள்ளழகா!.. 32
**

ஓம் ஹரி ஓம்
***

புதன், பிப்ரவரி 22, 2023

அழகே.. அருளே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 10
   புதன்கிழமை

அன்றைக்கு
காணும் பொங்கலன்று 
எழுதிய கனவுப் பாட்டு.


பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

வாத்யாரே.. 
இது உமக்கே நியாயமா!?..
(இல்லை தான்!..)

கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!..
***
அது அப்படியே
மாறி விட்டது..

அதன் புது வடிவம் 
அம்பிகையிடம்
வேண்டுதலாக - 
இன்று..

அப்போதே இது
கூடிவந்தாலும்
இப்போது தான்
இன்றைய பதிவில்!..


ஆடிவரும் தென் காற்றே
அன்னையிடம் செல்வாயா
அன்னையிடம் செல்லுங்கால்
அன்புடனே சொல்வாயா!..

அவளிடத்தில் சொல்லுதற்கு
அடியேனின் ஆசை ஒன்று..
ஆதரவு என்று அளித்தால்
அன்பில் மனம் வாழும் நின்று..

பாதமணிக் கொலுசுக்குள்ளே
பவளம் எனப் பதிந்தாலும்
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து தினம் பணிவேனே!..

செங்காந்தள் கரந்தனிலே
செவ்வளையாய் சேர்ந்தாலும்
செந்தமிழின் சொல்லெடுத்து
சிறு கவியாய் இழைவேனே!..

காதோரம் குழையானால்
குன்றாமல் குளிர்வேனே..
கரு மையாய கண்ணருகில் 
கலையாமல் வாழ்வேனே!..

பனிமுல்லைப் பூவானால்
பூங்குழலில் சேர்வேனே
செந்தூரத் துகளானால்
பிறைநெற்றி வாழ்வேனே!..

கன்றாத தமிழெடுக்கக்
கைகொடுக்கும் அன்னையவள்
கால்மலரில் மலராகிக்
காலமெல்லாம் வாழ்வேனே!..
**
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம்
***