நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 29, 2024

கடைத் தெரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12 
 செவ்வாய்க்கிழமை

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி..

சம்பந்தம் இல்லாமல்
எல்லா தரப்பினருக்கும் கொண்டாட்டம்
மகிழ்ச்சி.. ..


தஞ்சை - நகர பேருந்து நிலையத்திற்கும் புது ஆற்றுப் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்று அந்தப் பகுதியில் தீபாவளிக்கு என
அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் அதற்றப்பட்டுள்ளன.



இதனால்   பேருந்து நிலைய சாலையில் கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, தெற்கு அலங்கம் இங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை நாடிச் செல்கின்றனர்..


பாவம் எளிய வியாபாரிகள்..
இவர்களுள் தமிழ் மக்களுடன் வட புலத்து மக்களும் கடை விரித்து இருப்பர்..
 
முதல் போட்டு பொருட்களை வாங்கியிருப்பார்கள்.. நஷ்டப்படாமல் இருக்க வேண்டும்..



அடித்தட்டு மக்களின்  சந்தோஷம் இந்த மாதிரியான கடைகளில் தான்..
சாதாரண மக்களால்
கைக்கு எட்டிய விலையில்
 பெரிய கடைகளில் வாங்கவே முடியாது.என்பது எல்லாருக்கும் தெரியும்..

பல ஆண்டுகளாகவே தஞ்சை காந்திஜி  சாலையில 
தீபாவளிக்காக தற்காலிக கடைகள் அமைத்திருப்பார்கள்.  தீபாவளி வரையில் தான்..
 

இந்த வருடம் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தரைக் கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 

இத்தனை வருடங்களாக தீபாவளி நேரத்தில் இப்படித் தான் நெரிசல்..


மாநகரின் ஏனைய சாலைகள் மாற்றுச் சாலகளாகி விடுவது இயல்பு.
 
பேருந்து கார்கள் சுற்றிக் கொண்டு செல்கின்ற மக்கள எவ்வித சிரமத்தையும் உணர்ந்ததில்லை. 


போக்குவரத்து நெரிசல் காரணமாகக் காட்டப்பட்டாலும் உண்மை எது என்று தெரியவில்லை. 

தீபாவளி சமயத்தில் நகரில் உள்ள பெரிய துணிக் கடைகளை விட  இந்தத் தரைக் கடைகளில் தான் மக்கள் கூட்டம் அலை மோதும்...



50,100 என்றெல்லாம் வசதிக்கேற்றபடி கிடைக்கின்ற புதுத் துணிகள் முதற்கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும் 
மனம் மகிழ்ச்சி கொள்ளும் அடித் தட்டு மக்களும் இருக்கிறார்கள்..



தீபாவளி முதல் நாள் இரவு வரை  இந்தத் தரைக் கடைகளில் தான் அதிக பொருட்களை வாங்கி மகிழ்வர்..

தீபாவளி நேரத்தில் வாரம் முழுதும் பகல் இரவு - என, காவல் துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்ற நிலையில்  - பெருத்த அசம்பாவிதங்கள் ஏதும் நடந்ததில்லை..


காந்திஜி சாலையின்  நெரிசலில்  மகிழ்ச்சியுடன்
நடந்து சென்ற நாட்கள் நெஞ்சில்  அலை மோதுகின்றன..

படங்களுக்கு நன்றி
நம்ம தஞ்சாவூர
ஃஃ

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை

முருகா முருகா
முருகா முருகா
***


திங்கள், அக்டோபர் 28, 2024

பஜ்ஜி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஐப்பசி 11
திங்கட்கிழமை


வாழைக்காய் பஜ்ஜி 

அந்த காலத்தில்
இதனை தஞ்சாவூர் கைப்பக்குவம் என்பார்கள்..

தேவையான பொருட்கள் :

முற்றிய மொந்தன்
வாழைக்காய் ஒன்று
கடலை மாவு 200 கி
அரிசி மாவு 100 கி
மிளகுத் தூள் 1 tsp
மஞ்சள் தூள் சிறிதளவு
பெருங்காயத் தூள்  சிட்டிகை
கல் உப்பு தேவைக்கு
கடலெண்ணெய் தேவையான அளவு

செய்முறை :
மொந்தன்
வாழைக் காய்கள் தனித்துவமானவை..
முற்றிய காய்களை சுட்டு விரலால் தட்டினால் நங் நங் என்று சத்தம் வரும்..

முற்றிய மொந்தன்
வாழைக்காய்களின் தோலை நீக்கி விட்டு குறுக்காகவோ நெடுக்காகவோ ஓரளவுக்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே  இளஞ்சூட்டில் சற்றே புரட்டி எடுத்துக் கொள்ளவும்..

மாவு ஆறியதும் அத்துடன் நுணுக்கி வைத்துள்ள கல் உப்பு,  மிளகாய்த் தூள் பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசறிக்   கொள்ளவும்.

இந்த மாவில் ஒரு டீ ஸ்பூன் கடலை எண்ணெயுடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதமாக கரைத்துக் கொள்ள வேண்டும்.. 

வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டில் காய வைக்கவும்..

கரைத்த மாவில் வாழைக்காய் வில்லைகளைத் தோய்த்து எடுத்து எண்ணெயில் இட்டு பக்குவமாகப் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் பஜ்ஜி தயார்..

 நன்றி இணையம்

இப்படியான சூழ்நிலையில் இளங்குளிர் காற்று 
வீசினால்...

ஆகா!..

இளங்காற்று 
வீசுவதோடு இருக்க வேண்டும்..
பெருமழையாகி வீட்டுக்குள் சாலைத் தண்ணீர் வந்து விட்டால் -

என்னத்த சொல்றது!?..

வாழைக்காய் பஜ்ஜி.. இதற்கு தேங்காய்ச் சட்னி நல்ல துணை..

சோடா உப்பு, நிறமி போன்றவை சேர்க்கப்படவில்லை. இவற்றைச் சேர்க்கவும் வேண்டாம்..

தரமான
உணவுகளை
ஆதரித்தல் நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
***

ஞாயிறு, அக்டோபர் 27, 2024

உணவு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 10
 ஞாயிற்றுக்கிழமை

கண்டதும் கேட்டதும்
இப்பதிவில்..


வழிச்செல்வோர் தங்கி இளைப்பாறுதற்கு இடமும், உண்டு பசியாறுதற்கு அறுசுவை உணவும் எவ்வித பிரதிபலனும்  எதிர்பாராது நமது மக்கள் வழங்கி இருக்கின்றனர்..

இப்படியான இடங்களே அன்ன சத்திரங்கள் எனப்பட்டன.. 

தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை இப்படியான சத்திரங்களைக் கட்டி பெருமளவில் நிதி வழங்கி தர்ம பரிபாலனம்  செய்திருக்கின்றனர் மராட்டிய மன்னர்கள்..

 நன்றி இந்துதமிழ்
தஞ்சை  - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் சத்திரம் என்ற் பெயருடன் பல ஊர்கள் இன்றும் இருக்கிறன..

இதெல்லாம் அந்தக் காலத்தில்...

இப்படிப்பட்ட தர்மம்  பூமியில் இன்றைக்கு உணவு வர்த்தகப் பொருள் ஆகி விட்டது..

ஆக்கப்பட்டு விட்டது..

விளக்கு வைத்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பது நமது சம்பிரதாயம்..

ஆனால்,நாகரீக மனிதர்கள் அரை இருட்டில் சிற்றுண்டி அருந்தி மகிழ்கின்றனர்..

இதில் - நட்ட நடு ராத்திரியிலும் விருந்து கேளிக்கை.

விழித்திருக்கின்ற நேரம் எல்லாம்  எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று மக்களும் நினைக்கின்றனர் ..

ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பும் இப்படி மாறிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌

அல்லது 
ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பையும் இப்படி மாற்றிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌


ஆனால்
சாப்பிடும் உணவுகளில் எதுவுமே வழக்கமான ஆரோக்கியமான உணவு  கிடையாது. 




இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என்பன எல்லாம் ஏளனத்துக்கு உரியதாகி விட்டன..




பல உணவகங்களில் இவற்றை முறையாகத் தயாரிப்பதும் இல்லை.

ரொட்டி, பரோட்டா - (எல்லாமே மைதா மாவு) மற்றும் இறைச்சி - இவை  மட்டுமே இரவு உணவு என்று மக்களுக்குப் பரிமாறப்படுகிறது. 
மக்களும் விருப்பத்துடன் சாப்பிடுகின்றனர்..

மதிய வேளையில் கூட சாம்பார் சோற்றை விடப் பிரியாணி , பரோட்டா ஆகியவற்றுக்கு ஆலாய்ப் பறக்கின்றனர் மக்கள்.. 

இதனால் 
இங்கே  சாக்கடைகளின் ஓரத்தில் கூட அவசர பிரியாணிக் கடைகள் அதிகமாகி விட்டன..

Corn Flakes  போன்ற லொட்டு லொசுக்குகள் வந்து விட்டாலும் தற்போதைக்கு காலை உணவு மட்டுமே பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தோன்றுகின்றது..

விரைவில் இதனையும் உணவு வணிகத்தினர் மாற்றி விடுவர்..




குதிரையும் இன்ன பிற வர்க்கமும்  தின்று தீர்த்துக் கொண்டிருந்த Oates,
மலச்சிக்கலை ஏற்படுத்துகின்ற Bun, Bread,
Burger, Sandwich ..
என்னவென்றே புரியாத Noodles, Pasta - போன்ற உணவு வகைகளால் உண்பவர் வயிறு நிறைகின்றது... அத்துடன் ஆரோக்கியம் குறைகின்றது..

தொ. கா. நிகழ்ச்சிகளின் ஊடாகத் தொடர் விளம்பரங்கள் அதனைத் தான் செய்து  கொண்டிருக்கின்றன..

கிடைத்த  உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு நிறைந்த ஆரோக்கியத்துட.ன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த நடுத்தர குடும்பங்கள் 
கூட இன்றைக்கு  இரண்டு  மூன்று வகை உணவுகளை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர். 

இந்த மாற்றத்திற்கான காரணம் அதீதமான பணப்புழக்கமா.. உணவின் மீதான பெருவிருப்பமா..
தெரியவில்லை. 

ஆனால், இவையெல்லாம் கடந்த சில வருடங்களில் நடந்தேறியிருக்கிறது என்பது மட்டும் தெளிவு.. . 

இந்த விஷயத்தில்
ஏனைய ஊடகங்களின்  - ரைஸ் செய்வது எப்படி?.. - என்பது மாதிரியான உணவுப் பதிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அனைத்து அரேபிய  உணவுகளும் தமிழகத்தில் விற்பனை ஆகின்றன..

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் ஷவர்மா..

ஷவர்மா கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகின்றன..

இன்னொன்று பேக்கரி..


நகரின் புறவழிச் சாலை எங்கிலும்  
Bakery & Snacks.. 

அங்கு விற்கப்படும் பொருட்கள் அங்கேயே செய்யப்பட்டதற்கான உத்தரவாதம் இல்லை, 

எங்கிருந்தோ வருகின்றன... எப்படியோ விற்றுத் தீர்கின்றன.. 

உணவின் தரம்  அவ்வப்பொழுது  மாறுபட்டு வாந்தி பேதி ஏற்பட்டாலும் யாரும் அதைப் பொருட்படுத்தவது இல்லை..


இதே போல இனிப்பு வகை விற்கப்படும் கடைகளின் எண்ணிக்கையும்  பெருகிவிட்டது..


வீடுகளில் முறுக் முறுக் என்றிருந்த முறுக்கு - இன்றைக்கு மாறி விட்டது.. 

சில முறுக்குகளைத் தின்றதும் நாக்கிலும் உதடுகளிலும் நம நம என்று ஏதோ ஒரு உணர்வு..

முறுக்கு - வணிகச் சந்தைக்கு வந்த பிறகு - பல மாதங்களுக்கு நறுக் முறுக் என்று  இருக்க வேண்டும் என்பதற்காக அத்துடன் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக பேசிக் கொள்கின்றனர்..


மேலும்
இப்படியான தயாரிப்புகளில்
தரமான நெய் அல்லது வனஸ்பதி  சமைப்பதற்கான நல்ல எண்ணெய் ஆகியவை சந்தேகத்திற்கிடம் என்றால்!?.. 


சந்தையில் வண்ணமயமான
 உணவுகள்.. அவற்றின் பல நிலைகளிலும் 
ரசாயனக் கலப்பு மிகுந்து விட்டதாக மருத்துவர்கள் 
சொல்கின்றனர்..

மாநிலத்தில்  மருத்துவ மனைகளும் நோயாளிகளும்
பெருகி இருக்கிறனர்..

சமீப காலங்களில் ஷவர்மா எனும் அரேபிய உணவு சரியில்லாததாக இருக்கின்றது..

அரேபிய நாட்டிற்கு அந்த உணவு சரி தான்.. அங்கே தரக் கட்டுப்பாடுகள் மிக அதிகம்..

இங்கே அதைத் தயாரிக்கின்ற முறையில் தான் குறைபாடு..

இதைத் தின்று விட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவது குறிப்பிடத் தக்கது..

தமிழ் மரபின் பாரம்பரிய சிறு தீனிகளை வீட்டில் செய்வது குறைந்து விட்டது.. 

கடைகளில் வாங்கித் தின்பது என்பதே வழக்கமாகி விட்டது..

தரமான சிறு தீனிகளைத் தயாரித்து விற்பனை செய்த குடும்பங்கள்  நசிந்தே விட்டன... 


அந்நிய உணவு வகைகளாலும்
 மரபை மீறிய தின் பண்டங்களினாலும்
 நமது பாரம்பரிய உணவுகளும் நமது ஆரோக்கியமும் அழிந்து கொண்டு இருக்கின்றன..

மருத்துவ மனைகளுக்கு அருகிலேயே அதீத சுவையுடைய இனிப்புப் பண்டங்கள்  ரசாயனக் கலப்புடைய நொறுக்குத் தீனிகள் மற்றும்  Bakery & Snacks.. விற்கின்ற கடைகள் இயங்குகின்றன என்றால் யாரை நொந்து கொள்வது??..

இந்த உளைச்சலுக்கு நாமே காரணம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

சனி, அக்டோபர் 26, 2024

கலியுகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
சனிக்கிழமை


கலியுகம் எப்படியெல்லாம் இருக்கும் 
கலியுகத்தில்
என்னவெல்லாம் நடக்கும்
என்பதை  துவாபர யுகத்திலேயே தர்ம புத்திரர் சொல்லி வைத்திருக்கின்றார்.. 

அரசனின் ஊழியர்களே மக்களுக்கு இடையூறாக இருப்பார்களாம்...

என்றாலும் -
இப்படியெல்லாம் நடப்பதற்கு மக்களாட்சி முறையில் சாத்தியமில்லை.. 

மேலும் - 
மன்னராட்சியைத் தான் ஒழித்தாயிற்றே!.. -  என்று நிம்மதியைத் தேடுவோம்..

ஆனாலும், தர்மத்தின் வாக்கு!.. நடந்தே தீரும்..

மனதிற்கு சங்கடமாக இருக்கின்றதே என்றால் -
காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
என்ற பாடலைப் பாடியவாறு மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்வோம்..


காணொளிக்கு நெஞ்சார்ந்த நன்றி
 

நம்ப வைத்து கூட்டிச் செல்ல
நாலுபேர் வழியில் உண்டு
நம்பிக்கைக்குப் பாத்திரமாய்
இறைவன் ஒருவன் உண்டு..
-: கவியரசர் :-

ஓம் ஹரி ஓம் 
நம  சிவாய நம 
ஓம்
***

வெள்ளி, அக்டோபர் 25, 2024

வழித் துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 8
வெள்ளிக்கிழமை


தனதன தான தனதன தான தனதன தான ... தனதான

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ... பெருமாளே..

 
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே...
-: கந்தரலங்காரம் :-

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், அக்டோபர் 24, 2024

காரோகணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 7
வியாழக்கிழமை

திருத்தலம்
குடந்தைக் காரோணம்


இறைவன் 
சோமேசர்
வியாழ சோமேசர்

அம்பிகை 
சோம சுந்தரி,
 தேனார் மொழியாள்.  

தல விருட்சம் 
வில்வம்
தீர்த்தம் 
சோம தீர்த்தம் மகாமகத் தீர்த்தம் 
 
 சந்திரன் வியாழன் 
வழிபட்ட தலம்

சிவபெருமான்  காயாரோகணர் - என, விளங்குகின்ற
தலங்கள் மூன்று..

குடந்தைக் காரோணம்
கச்சிக் காரோணம்
நாகைக் காரோணம்


 ஊழிக் காலத்தில் இறைவன் சகல ஆன்மாக்களயும் தன்னுள்
ஐக்கியமாக்கிக் கொள்வதால் காயாரோகணேஸ்வரர் எனப்படுகின்றார்..

இவ்வகையில் இத்தலங்களை மூன்றாகப் பகுத்துள்ளனர் ஆன்றோர்..

அதன்படி

ஊழியின் போது
அம்பிகை - இறைவனின் திருமேனியில் ஆரோகணித்து ஐக்கியமாகிய தலம்  - குடந்தைக் காரோணம்..

ஊழிக் காலத்தில்
பிரம்மன், நாரணன்  திருமேனிகளைத் தமது தோளில் தாங்கி  தாண்டவம்  புரிந்த தலம் - கச்சிக் காரோணம்..

சிவபெருமான் புண்டரீக முனிவரைத் 
தழுவி வரவேற்ற தலம் - நாகைக் காரோணம்..
 
இப்பதிவில் ஆன்மாக்களுக்கான
குடந்தைக் காரோணம் பற்றி ..

குடந்தைக் காரோணம் :
ஊழிக் காலத்தில் இறைவன் சகல ஆன்மாக்களையும் தன்னுள்
ஐக்கியமாக்கிக் கொள்வதால் இத்தலம் காரோணம் எனப்படுகின்றது..


அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலம் ஆதலின் காரோணம் என்றாயிற்று..

ஸ்ரீராமபிரான், இராவணனை அழிப்பதற்காக  வழிபட்டு திருமேனியில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்ற தலம்..

இத்தலம் குடமூக்கு குடந்தை என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் கோயிலின் பெயர் குடந்தைக்  காரோணம்..

இக்கோயில் - ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள பொற்றாமரைக் குளத்தின்
கீழ்க்கரையில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் வடபுறத்தில் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில்.. 

இதுவன்றி
மகாமகத் திருக்குளத்தின் வடகரையில் இருக்கின்ற
காசி விஸ்வநாதர்  கோயில்  தான்  குடந்தைக் காரோணம் என்று சொல்வதும் உண்டு.  

திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் " தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே " என்று குறிப்பிட்டுள்ளார்..

தேனார் மொழியாள் என - அம்பிகையின் பெயர் வழங்கும் தலம் 

சோமேசம் -
(சக - உமேசம்) ..

சோமன் ஆகிய சந்திரன் வழிபட்ட தலம்..

ஆதலின்  சோமேசர் திருக்கோயிலே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

காசி விஸ்வேசம் எனப்படுவது மகாமகத் திருக்குளத்தின் வடகரையில் மேற்கு நோக்கியதாக விளங்குகின்ற
ஸ்ரீ விசாலாட்சி உடனுறை
காசி விஸ்வநாதர் கோயிலாகும்.. 

சோமேசர் 
கோயிலானது தற்சமயம் - கும்பகோணத்தில் வியாழசோமேசர் கோயில் என வழங்கப்படுகின்றது..

வியாழ சோமேசர் கோயிலை பல முறை தரிசித்து இருந்தாலும் - கோயில் காட்சிகள் தற்சமயம் கைத்தல பேசியில் இல்லை..

விரைவில் தருகின்றேன்..

ஊனார்தலைகை ஏந்தி உலகம் பலிதேர்ந்து உழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியின் உடையார் கரியின் உரிபோர்வை
தேனார்மொழியார் திளைத் தங்காடித் திகழுங் குடமூக்கில்
கானார்நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே.. 1/72/3
-: திருஞானசம்பந்தர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 23, 2024

நினைவெல்லாம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 6
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

உயர்நிலைக் கல்வி..

ஒன்பது பத்து பதினொன்று என்ற மூன்று வகுப்புகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி.. 

அந்தப் பள்ளியில்
ஆறு ஏழு எட்டு என்ற மூன்று வகுப்புகளும் இருந்தன..

தமிழாசிரியர்களாக வந்தவர்கள் திரு K. குஞ்சிதபாதம் ஐயா அவர்களும்  வித்வான் பால சுந்தரம் ஐயா அவர்களும்...  
திரு குஞ்சிதபாதம் அவர்கள் ஆங்கில வகுப்புகளும் நடத்துவார்.. 

திரு தங்கராசன்  M.A., திரு வைரக்கண்ணு M.A., எனும் முது நிலை ஆசிரியர்கள் 9B 10B 11B வகுப்புகளில் தமிழ் நடத்துவர்.

நான் மூன்று வருடங்களுமே
9A 10A 11A ( மாணவர்களுடன் மாணவியரும் பயிலும்) வகுப்புகளிலேயே இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது

9A 10A 11A  என்ற மூன்று நிலைகளிலும் வகுப்பு (ஆங்கில) ஆசிரியராக வந்தவர் திரு .A.சுப்ரமணியன் ஐயா அவர்கள்..

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ண மூர்த்தி M.A., அவர்கள்..  மிகவும் கண்டிப்பானவர்.. 

ஒன்பதாம் வகுப்பின்
மனப் பாடப் பாடல்கள் இன்றைய பதிவில் :


நாராய் நாராய்
 செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் மனையும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனையாளைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே..
 -: சத்திமுற்றப் புலவர் :-

தமிழரின் பரந்த அறிவுக்கு இப்பாடலும் சான்று.


ஏழையாளன்... 

ஏதோ ஒரு சூழ்நிலையில்
நாடு விட்டு நாடு பொருள் தேடச் சென்று  -  உடலையும் மனதையும்  வாட்டுகின்ற 
வாடைக் காற்றிலும்
பனிச் சாரலிலும் சிக்கிக் கொண்டு விட்டான்..  

மேல் துணி இல்லாமல் வாடுகின்ற காலத்திலும் கூட வலசை எனும் பறவைகளின் இடப் பெயர்வினைக்  கவனிக்கத் தவறவில்லை.. 

இணையாகப் பறக்கின்ற பறவைகளை நட்புடன் அழைத்து மழைக்குத் தாங்காத இற்றுப் போன கூரைக் குடிசையில் - பல்லியின் சகுனத்திற்காகக் காத்திருக்கும்
தனது அன்பு மனையாளுக்குத் தூது அனுப்புகின்றான்..

பாண்டிய நாட்டில் தான்  - பத்திரமாக இருப்பதைச் சொல்லி அனுப்புகின்ற போதும் வீட்டின் அடையாளத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குத் தவறவில்லை.. 

அத்தோடு நிற்காமல் தமது ஊர்க் குளத்தில் விருந்தினராகத் தங்கிச் செல்லும் படியும் அந்த நாரைகளிடம் கேட்டுக் கொள்கின்றான்.. 

என்னே மாண்பு!..

இதைத் தான் வறுமையிலும் செம்மை என்றனர்..

வாடைக் காற்று உடலை வாட்டுகின்ற பனிக்காலத்தில் புலவர் மதுரையில்
இருக்கின்றார். 

வானில் வடக்கு நோக்கி செங்கால் நாரைகள் பறந்து கொண்டிருக்கின்றன..

செங்கால் நாரை  வடக்கே சைபீரியாவில் இருந்து தெற்கே  வந்து குமரியில் நீராடி மகிழ்ந்து விட்டு திரும்புகின்ற காலம் மார்கழி
(நவம்பர்)..

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்ற சொல் வழக்கும் நம்மிடையே இருக்கின்றது..

பனிக் காலம் என்பதும் இத்துடன் சரியாகப் பொருந்துகின்றது..

அரிய செய்திகளுடன் கூடிய இனிய தமிழ்ப் பாடல்..

இத்தனை நயம் மிக்க பாடலை இயற்றிய புலவரது பெயர் தெரியாததால் அவர் குறிக்கின்ற சத்தி முற்றம் எனும் ஊர்ப் பெயரே குறியீடு ஆயிற்று.. 

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ளது  சத்திமுற்றம்.. 
**

வீட்டு வாசலில் சிவனடியார்.. உணவு கேட்டு  நிற்கின்றார்.. 

மழை வேறு தூறிக் கொண்டு இருக்கின்றது..

அடியாருக்குக் கொடுக்கத் தக்கதாக வீட்டில் எதுவுமே இல்லை.. 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள - பெருமழை பிடித்துக் கொண்டது..

அப்போது தான் இளையான்குடி மாறனாருக்கு காலையில் வயலில் நெல் விதைத்தது
நினைவுக்கு வருகின்றது.. 

அந்த நெல்லைத் திரட்டி அள்ளிக் கொண்டு வந்தால் அடியாருக்கு ஏதாவது செய்து கொடுக்கலாமே!..

உற்சாகத்துடன் இரவுப் போதில் மழையின் ஊடாக ஓடுகின்றார் வயலை நோக்கி..

அப்படியான இரவுப் பொழுதை சேக்கிழார் பெருமான்  இப்படி வர்ணிக்கின்றார்..

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிருளின் கணங் கட்டுவிட்டு
உருகுகின்றது போன்றது உலகெலாம்.. 15

ஆகாயத்தினின்றும் பெருமழை பொழிகின்றது.. எதிரிலிருக்கும் ஏதொன்றையும் அறிய இயலாதபடி இருள் சூழ்ந்த நள்ளிரவு.. 
கரிய நிற மை மேலும் கருகியதைப் போல இருளானது உருகி நிறைந்திருக்கின்றநிலையில்  ஊரும் உலகமும் இருந்தன..

பெரிய புராணப் பாடலை இப்படி விளக்குகின்ற போது - பாலசுந்தரம் ஐயா அவர்களின் கண்கள் குளமாகி இருக்கும்..

ஐயா அவர்கள் தன் விருப்பமாக துணைப் பாட நூலில் இருந்து நடத்திய மெய்ப்பொருள் நாயனாரின்  மெய்த் திறம் கூறுகின்ற திருப்பாடல் இது..


கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேடமே மெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.. :-
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுரம் ஆதீனம்..
**
நினைவெல்லாம் தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

செவ்வாய், அக்டோபர் 22, 2024

பயணங்களில்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 5
செவ்வாய்க்கிழமை


அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை தொடங்கி தாம்பரத்தில் இருந்து 
வண்டி எண் 06191 இயக்கப்படுகின்றது..

தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணியளவில் புறப்பட்டு செங்கல்பட்டு மேல்மருவத்தூர் திண்டிவனம் விழுப்புரம் திருப்பாதிரிப் புலியூர்,சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக திருச்சிராப்பள்ளியை இரவு 11:35 மணியளவில் சென்றடைகின்றது.. 

Intercity Express எனப்படும் இந்த ரயில் வாரத்தில் ஐந்து நாட்கள் (செவ்வாய் புதன் வெள்ளி சனி ஞாயிறு) இயக்கப்படுகின்றது..


அடுத்து
வண்டி எண் 06184 தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு.. வாராந்திர (வெள்ளி ) சிறப்பு ரயில் ..  

தாம்பரத்திலிருந்து மாலை 6:00 மணி அளவில் புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம் பண்ருட்டி திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஒடடன்சத்திரம் பழனி, உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி கிணத்துக்கடவு போத்தனூர்  வழியாக மறுநாள் காலை 8:10   மணியளவில் கோயம்புத்தூருக்கு சென்று சேர்கின்றது. 

டெல்டா மக்கள்  பழனி மலை செல்வதற்கு ஏதுவாக இருப்பதால் மகிழ்ச்சி..


அடுத்து 
முன் பதிவு தேவையில்லாத
விரைவு ரயில் (06008)  தஞ்சாவூரில் புறப்பட்டு திருவாரூர்  வழியாக தாம்பரம் சென்றடைகின்றது.

வெள்ளிக் கிழமையன்று
(11.10.2024) இரவு 11:55 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு நீடாமங்கலம், திருவாரூர், பேரளம் மயிலாடுதுறை,  சிதம்பரம், பரங்கிப்பேட்டை  கடலூர் துறைமுகம், , விழுப்புரம்,  வழியாக தாம்பரம் சென்றடைந்துள்ளது.. 

இது பண்டிகைக் கால நெரிசலைக் குறைப்பதற்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்..

தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் - விழுப்புரம்  -  தாம்பரம்  வழித்தடத்தில் இது முற்றிலும் புதியது.. 

நீடாமங்கலம் திருவாரூரில் இருந்து சென்னை  செல்வதற்கும்,   திரும்புவதற்கும் இந்த ரயில்  பயனுள்ளதாக இருக்கின்றது..

இப்போதைக்கு சிறப்பு ரயில்
 என்றாலும் இந்த வழித் தடத்தில் இந்த ரயில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என ,  இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.. 

கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர் ஜங்ஷனில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூபள்ளி ஜங்ஷன் வரை (திருச்சி, கரூர் சேலம் பெங்களூரு வழியாக) வாராந்திர விரைவு வண்டி ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கின்றது..


எதிர் வருகின்ற நாட்களில் இந்த சேவைகளில் இன்னும் பல நல்ல மாற்றங்கள் வரலாம்.. வர வேண்டும்..

இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்போம்..

வாழ்க தஞ்சை
வலர்க தஞ்சை

ஓம்  சிவாய நம ஓம்
***