நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 15, 2021

வெற்றித் திருநாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின்
மகத்தான வைபவம்
நவராத்திரி..


முதல் மூன்று நாட்கள்
ஸ்ரீ துர்காம்பிகையாகவும்


அடுத்த மூன்று நாட்கள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியாகவும்
வழிபடப்பெற்ற அம்பிகை


நிறைவான மூன்று நாட்களில்
ஸ்ரீ மஹா சரஸ்வதியாகவும்
வணங்கப் பெற்றாள்..

இன்று
பத்தாம் நாள்
விஜய தசமி..
வெற்றித் திருநாள்..

கடந்த புதனன்று
எங்கள் பிளாக்கில்
கேள்வி ஒன்று..

கொலு வைக்கும் பழக்கம்
எப்போது தோன்றியது?..
என்று..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
எப்போது மகிஷனை
வீழ்த்தினாளோ
அப்போது என்று என்மனதிற்குத் தோன்றியது..

மகிஷமர்த்தனம்
எல்லாருக்கும் தெரிந்த
ஒன்று தான்..

இருப்பினும்
மீண்டும் ஒருமுறை!..


மகிஷாசுரனின் கொடுமைகளைத் தாங்க இயலாத தேவர்கள் கண்ணீர் சிந்தியபடி எல்லாம் வல்ல பரம்பொருளைச் சரணடைந்து நின்றனர்..
அவர்களது துன்பங்களைக் கண்டு மனம் இரங்கிய திரிபுர சுந்தரி ஆகிய அம்பிகை - வாலை எனத் தோன்றி நின்றாள்..

" இவளா!.. இந்தச் சின்னஞ்சிறு பெண்ணா அக்கொடியவனை மாய்க்கப் போகிறாள்?.. "

வாலை என வந்தவளைக் கண்டதும் மேலும் குழப்பம் எய்தினர் தேவர்கள்..

' இளம் பெண் ஒருத்தி தான் 
தனக்கு முடிவுரை எழுத வேண்டும்!.. ' - என்று இறுமாப்புடன் வரம் ஒன்றினை வாங்கி வைத்திருக்கின்றான் மகிஷன்  - என்பதை மறந்து விட்ட தேவேந்திரன் வழக்கம் போலத் தடுமாறி
நின்றான்...

அவள் -
சின்னஞ்சிறு பெண் போல
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே
வீற்றிருக்கும் ஸ்ரீ துர்கை!..
- என்பதனை அவன் உணர்ந்தானில்லை..

சின்னஞ்சிறு பெண்ணாக மலர்ந்திருக்கும் ஸ்ரீ துர்கை
சீற்றம் மிகவானவள்..
சிந்தூர வண்ணம் தானானவள்..
சிம்மம் ஒன்றை வாகனம் எனக் கொண்டவள் - என்பதை எல்லாம்
தேவேந்திரனும் ஏனையோரும் சிந்தித்து அறியவில்லை..

சிரித்தான் மகிடன்..
தனது மகுடம் மண்ணில் விழப் போவதையும் 
சிரம் அறுபடப் போவதை அறியாமல்
ஆணவத்திற்குள் அவன் ஆழ்ந்தான்..

அண்ட பகிரண்டமும் நடுக்கத்துடன் நடக்கப் போவதைப் பார்த்திருக்க பெரும் போர் மூண்டது..

மாயையில் உதித்த மகிடனின் வேலைகள் மகாமாயையிடம் செல்லுபடியாக வில்லை.. 

மகிடனின் அறியாமையைக் கண்டு மீண்டும் புன்னகைத்த அம்பிகை பேருருவம் கொண்டாள்..


பதினெட்டுத் திருக்கரங்களுடன்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக
விளங்கி நின்றாள்...

அத்தனை திருக்கரங்களிலும் விவரிக்கொணாதபடிக்கு ஒளி ததும்பும் ஆயுதங்கள்..
பெருங் கர்ஜனையுடன் பாய்ந்த சிங்கத்தைக் கண்டு மனம் பதைத்த மகிடன்
மயக்குற்று
 மண்ணில் வீழ்ந்தான்...

அன்பெனும் வலையுள்
அகப்படும் அமுதை
ஆயுதங்கொண்டு
எதிர்க்க முனைந்த அசுரன்
அடியற்ற மரம் போல்
அதிர்ந்து விழுந்தான்..

தேவியின் திரிசூலம் தீயவனின் நெஞ்சைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது..

அக்கினி விழிகளால் அவனைச் சுட்டு சாம்பலாக்கி இருப்பாள் தான்..

ஆனால், அவன் ஈசன் எம்பெருமானிடம் வரங்களைப் பெற்றவன்..  அந்த மேலைத் தவத்தால் தான் இப்போது வையம் துரகம் மதகரி மா மகுடம் 
சிவிகை செய்ய கனகம் பெருவிலை ஆரம் - என, மேன்மை மிகு சின்னங்கள் பலவற்றைத் தாங்கியிருக்கின்றான்..

அறிவற்ற மகிஷன்  - தன்னை அழிவற்றவன் என எண்ணிக் கொண்டு -  அருளற்ற அசுரர் குழாங்களைக் கூட்டிக் கொண்டு அவர் தமக்குத் தலைவன் தானே!.. என்று இருளுற்ற மனத்தினனாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றான்..

 பஞ்ச மா பாதங்களுக்கும் உறைவிடமான அவன் -
பெண்களைப் பிழையாக நினைத்தவன்.. வதைத்தவன்..
மங்கல மங்கையரை
மதிக்க மறந்தவன்..
நல்ல எண்ணங்களைத் துறந்தவன்..

இதெல்லாம்
சிந்தனைக்கு வந்ததும்
தாள முடியாதபடிக்குக் கோபம் மூண்டெழுந்தது துர்காம்பிகைக்கு..


" டேய்!.. " - பேரிரைச்சலுடன் மகிடனின் தலை மேல் தனது பத்ம பாதத்தினைப் பதித்தாள் - அந்தரி நீலி அழியாத கன்னிகையான அம்பிகை..

அடியார்க்கும் அன்புடை நெஞ்சினர்க்கும் கோயில்களுக்கும் குளங்களுக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் அடாததைச் செய்த மகிடன் மண்ணோடு மண்ணாக மடங்கிப் போனான்..
ஆவி அடங்கிப் போனான்.. அம்பிகையின் அடியிணை பட்டு அழிந்து போனான்..


இப்பிறப்பில் யாதொரு
அறமும் புரியாமல்
இத்தனை நலங்களும்
நம்மை வந்து சேர்ந்தனவே..
என்று மகிழ்ந்து வாழாது
தர்மத்தின் வாழ்வதனைத்
தடம் மாற்ற முயன்று
தருக்கித் திரிந்ததால்
அன்றோ
மகிஷன் தலையற்று
வீழ்ந்தான்!..

இதையெல்லாம் கண்ட
தேவர்கள் நடுநடுங்கித் திகைத்தனர்..
வெட்கம் அவர்களை
சூழ்ந்து கொண்டது..

" நாமும் வீரர் என்று வீண் பேச்சு பேசிக் கொண்டு ஆயுதங்களைத் தாங்கினோமே!.. " - என்று மனம் வெறுத்து ஆயுதங்களைத் துறந்தனர்.. 

நிராயுதபாணியாக நிமலையின் பாதக் கமலங்களில் சரணம்.. சரணம் என்று விழுந்தனர்..

 மண்ணும் விண்ணும் பதைபதைத்து பதுமைகளாகி நின்றன..
பஞ்ச பூதங்களும் செயலற்று சிலைகளாகித் தவித்தன..

இதைத் தான் கொலு எனக் கொண்டாடிக் களிப்பு எய்துகின்றோம்..

இதையெல்லாம் கண்டு நகைத்த  புவனேஸ்வரி தேவர்களைத் தேற்றி மீண்டும் பணி செய்யப் பணித்தாள்..

அந்த அளவில் அமரர்கள் மீண்டும் தத்தமது ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு அவையெல்லாம் அம்பிகையின் அருட் பிரசாதங்கள் என்று பூஜித்து வணங்கி தலைமேற்கொண்டு ஆடி மகிழ்ந்தனர்..

இதையே
நாம் ஆயுத பூஜை என்கின்றோம்..

மகிடனின் தலைமேல் அம்பிகை திருவடிகளை வைத்திருந்த போது தேவேந்திரன் விண்ணப்பித்துக் கொண்டான்..

* தாயே.. அவனைப் பாதாளத்தில் அழுத்தி அழித்து விடாதீர்கள்... பாருலகுக்கு இவனுமொரு பாடமாக அமையட்டும்!. "


மகிடனின் முண்டம் 
ஸ்ரீ துர்க்காம்பிகையின் திருவடிகளுக்குக் கீழ் இருக்க -
மற்ற தண்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக மறைந்து போயின..

மகிடன் இன்றும்  பாருலகிற்குப் பாடமாகத் தான் இருக்கின்றான்..
நாம் தான் இன்னும்
பால பாடம் கூட படித்துக்
கொள்ள வில்லை...

அன்னை கிளியுடன்
கொஞ்சியபடி சாந்த ஸ்வரூபிணியாக இருந்தாலும்
அவளது ஆயுதங்கள் அனைத்தும் முனை மழுங்காமல் பளபளத்துக் கொண்டு தான் இருக்கின்றன..
-:-
காத்யாயனாய வித்மஹே
கன்ய குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:-:-:-

10 கருத்துகள்:

  1. அழகான வார்த்தைக்கு கோவைகளில் சிறப்பான விளக்கம்.  விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தப்பட்ட பதிப்பு !!  : அழகான வார்த்தைக்கோவைகளில் சிறப்பான விளக்கம்.  விஜயதசமி வாழ்த்துகள்.

      நீக்கு
  2. அருமையான விளக்கங்கள். அம்பிகையின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள். அன்னையின் படங்களும், அன்னை மகிஷாசுரனை அழிந்த கதையுமாக இன்றைய சிறப்பு பதிவு மிகவும் அருமையாக உள்ளது. கொலு வழிபாட்டை நாம் தொடர்ந்து பின்பற்றி வருவதற்கான விளக்கங்கள் படிக்க நன்றாக உள்ளது. சிறப்பாக வார்த்தைகளை அலங்காரம் செய்வித்து அன்னையின் வீரத்திற்கு பரிசாக மாலையாக அணிவித்திருக்கிறீர்கள். அருமை. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவு மிகவும் அருமை.
    விஜய தசமி வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவு இன்று தேவி மகாத்மியம் படித்த்து போல் இருந்தது.
    நீங்கள் சொன்னது போலவே அந்த காலத்தில் மகிஷ்னை வதம் செய்ததிலிருந்து மண்ணால் அம்மன் விக்கிரகம் செய்து 9 நாட்கள் வழிபட்டு வரும் பழக்கம் இருந்து இருக்கிறது .


    தேவிமகாத்மியம் கதையில் இப்படி வருகிறது: - தேவிமகாத்மியம் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைசியனும் நதியின் திட்டில் மூன்றாண்டுகள் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்து பூஜித்தனர்.

    அம்பிகை தோன்றினாள், என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள், வைசியன் வைராக்யம் மேலிட்டு ஞானத்தை வேண்டினான்.

    அரசனோ மறுபிறவியிலும் நீங்காமல் இருக்கும்படி இழந்த அரசை வேண்டினான் . அம்பிகை அவ்விதமே அருளினாள். அவ்வரசனே மறுபிறப்பில் சூரியனுக்கு பிறந்து ஸவர்ணி என்ற மனுவாக ஆனான். ( 71 தேவயுகம் கொண்டது ஒரு மனுவின் காலம் இதையே மன்வந்திரம் என்று கூறுவது வழக்கம்) காமதேனுவைப் போன்று எல்லா வற்றையும் சளைக்காமல் கொடுக்க வல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரராகுதல் மனிதப் பிறவி எடுத்ததன் பலன் ஆதலின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் "தேவீமகாத்மியத்தை " படியுங்கள் என்று சொல்லபடுகிறது.

    மண்ணல் உறுவம் செய்து 10 நாள் முடிந்தவுடன் வட நாட்டில் துர்கையை கரைக்கிறார்கள்.


    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கம்



    அருமையான விளக்கம்! அழகான ஓவியங்கள்! அதுவும் மகிஷாசுரனின் வதம் கொண்ட ஓவியம் மிகவும் அழகு!


    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பதிவு. வெற்றித் திருநாள் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. இந்தச் சின்னஞ் சிறு பெண்ணா? என்ற வரியை வாசித்ததுமே, எனக்கு உடன் நினைவுக்கு வந்த் பாடல் சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி....பார்த்தால் நீங்களும் சொல்லியிருக்கீங்க அண்ணா...

    நல்ல விவரிப்பு. விஜயதசமி வாழ்த்துகள் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..