நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

திகழொளி ஞாயிறு - 2

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..


சென்ற ஞாயிறன்று
வெளியாகிய பதிவிற்கான
கருத்துரையில் -
சமயபுர மாரியம்மன்
தஞ்சாவூர் மாரியம்மன்
நார்த்தாமலை மாரியம்மன்
அன்பில் மாரியம்மன்
ஆகிய தெய்வ அம்சங்களை
சகோதரி எனக் கருதும் பாவனையைப் பற்றி
எழுதுங்கள - என்று
மதிப்புக்குரிய
பானுமதி வெங்கடேஸ்வரன்
அவர்கள் கேட்டிருந்தார்கள்..

அது பற்றி எந்தவொரு
தெளிவான கருத்தையும்
என்னால் எய்த முடியவில்லை.

பராசக்தியாகிய அம்பிகையின்
திருத் தோற்றங்களில்
ஸ்ரீ மாரியம்மனின் திருக்கோலம்
ஏழை எளிய மக்களுக்கானது..

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து
குறை தீர்த்து நிற்பவள்
மகமாயி..

இன்று
நமது வலைதள உறவுகள்
அனைவருக்குமாக
குறையிரந்து  இக்கவி மாலையை
அவளது திருவடிகளில் அன்புடன்
சமர்ப்பிக்கின்றேன்..


நாவணி தமிழால் வரம் பெற வந்தேன்
பாவணி தன்னைப் பணிவுடன் தந்தேன்
பூவணிப் பொன்மகள் புன்னகை கொள்வாய்
ஆவணி உடையாய் அருள்நலம் தருவாய்..

ஆயிரம் கண்கள் உடையவளே பெற்ற
தாயெனப் பிரியம் பொழிபவளே
நோயெனக் குறையென அணுகாமல்
மாயவன் சோதரி எமைத் தேற்று..

அன்புடை நல்லோர் நலமுடன் வாழ
அம்பிகை உன்னிடம் வரங் கேட்டேன்..
பண்புடை உலகைப் பாலிக்கும் தேவி
நம்பிக்கை விளக்கில்  முகங் காட்டு..


வாழிய வல்லி அம்மையின் நலமே
வாழிய சோதரி கீதையின் நலமே
வாழிய கோமதி அம்மையின் நலமே
வாழிய கமலை பானுவின் நலமே..

சோதனை வேதனை எளியவர்க் கென்றால்
எவ்விடம் சென்று அதைத் தீர்க்க?
ஆதரவளித்து ஆறுதல் தன்னை
அவ்விடம் மாற்றிய அம்பிகை காக்க!..

மனையுடன் மக்களும் சூழ்ந்திடும் சுற்றமும்
நன்றாய் வாழ வழி கொடுத்தாய்..
வினையுடன் வேதனை சூழ்ந்திட்ட போதில்
என் தாய் எந்தன் உயிர் காத்தாய்...

நட்பினில் நல்லோர் நலமுடன் வாழ
கருணையின் கொடையாய் வரங் கேட்டேன்
வாழும் வகையினில் வளம் கொண்டு
தமிழே உன்னிடம் நலம் கேட்டேன்..

அற்புதங் காட்டும் ஆனந்த வல்லி
பொற்பதம் போற்றித் தமிழ் தொடுத்தேன்..
கற்பகக் களிறினைப் பெற்றவள் உந்தன்
நற்பதம் நாடி நான் பிடித்தேன்...


நீயே வழியென நீயே கதியென
நித்தமும் போற்றும் குரல் கேட்பாய்..
நினதருள் வேண்டி ஏந்திடும் கைகளில்
நின்னருள் அமுதை நீ சேர்ப்பாய்..

தளிரெனத் தழைத்துப் பயிரென செழித்த
பண்புடை நெஞ்சங்கள் நலமுடன் வாழ்க
மலரென முகிழ்த்து மகிழ்வினில் திளைத்த
மாண்புடை மனங்கள் வளமுடன் வாழ்க..

உலைக்களம் என்னும் உலகியல் வாழ்வில்
வலைத்தளம் தன்னில் வளர்தமிழ் வரைந்து
கலைக்களம்  காட்டும் ஸ்ரீராம் வாழ்க
நிலைக்கள அன்பில் அனைவரும் வாழ்க..

மூத்தவர் ஐயா மனம் தொட்டு
தென்னவன் தேவ கோட்டையும் வாழ்க
சேர்த்திடும் அன்பில் சிறந்தவர்
நல்லோர்
கன்னல் தமிழுடன் கவினுற வாழ்க..

அன்பினில் மலரும் அரும்புகள் அன்ன
அன்பர்கள் அனைத்து வளமுடன் வாழ்க..
அணிகொள் தமிழாய் அன்பின் அமுதாய்
மணிகொள் ஒளியாய் மாண்புடன்  வாழ்க..


அவ்வினை இவ்வினை எவ்வினை ஆயினும்
நல்வினை அருளும் நாயகி வாழ்க..
செவ்விய மலரடி தலையினிற் கொள்ள
புல்வினை அகன்று புண்ணியம் சூழ்க..

தளர்வுறும் பொழுதில் தளிர்க்கரம் காக்க
அயர்வுறும் போதில் அருள்விழி காக்க
வலிதரு வேதனை வாராமல் காக்க
நலிவுறு சோதனை சேராமல் காக்க..

கற்பக வல்லி கனிவுடன் காக்க
மரகத வல்லி மகிழ்வுடன் காக்க
சிற்சபை திகழும் சிவையே காக்க
பரனிடை பொலியும் பரையே காக்க..

தடங்கண் உடையாள் தயவுடன் காக்க
கயற்கண் உடையாள் கனிவுடன் காக்க
நெடுங்கண் உடையாள் நிதமும் காக்க
கருங்கண் உடையாள் கணமும் காக்க..


பாராமுகத்தாள் எனும் பழி எங்கும்
வாராதிருக்க வரம்  தனை அருள்வாய்
ஆராவமுதாய் வாராஹி வருவாய்
தீராநலமாய் தினம் தினம் தருவாய்...

நோய்நொடி குறைகள் சேரா வண்ணம்
நீலாம்பிகை நின் மலரடி சரணம்..
வேய்ங்குழல் கோவிந்த சோதரி போற்றி
சூழ்வினை தீர்த்திடும் திருவடி போற்றி!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. வணங்குகிறேன்.  வாழ்த்துகளுக்கு நன்றி.  அழகு தமிழில் பாமாலை புனைந்தது விட்டீர்கள்.  வலையுலக சொந்தங்களின் பெயர்களைத் தவிர்த்து விட்டால் நித்தம் பூஜையில் இதையே சேர்த்துக் கொள்ளலாம்.  

    இல்லை, அவைகளுடன் சேர்த்துதான் சொன்னாலென்ன, இல்லையா...   அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு...
      வெள்ளிக்கிழமை நள்ளிரவு இதனை எழுதினேன்.. நண்பர்கள் அனைவருக்கும் ஆனது இது.. ஆயினும் அனைவரது பெயர்களையும் சேர்க்க முடியவில்லை என்பதில் வருத்தம்...

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஶ்ரீராமையும் தேவகோட்டையாரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. இருவருமே பொருத்தமானவர்களே! அழகான பாமாலை புனைந்து அம்மையைப் போற்றிப் பாடி அனைவருக்குமாகப் பிரார்த்தித்துக் கொண்டு இந்நாளைச் சிறப்பாக்கி விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தங்களையும் இதனுள் குறிப்பிட்டுள்ளேன்..

      இனிய கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
    2. ஆமாம், பார்த்தேன், குறிப்பிட மறந்துட்டேன். கமலா, கோமதி, பானுமதினு எல்லோரையுமே சொல்லிட்டீங்க! :)

      நீக்கு
  3. சிறப்பான பாமாலை.

    ஓம் சக்தி! அனைவருக்கும் அன்னை அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      அவ்வண்ணமே பிரார்த்திப்போம்...
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கைதேர்ந்த புலவர்கள் நடையில் சந்தம் பொங்க பக்தி உருக எளிமையாக இயற்றிய விதம் அருமை. வாழ்த்துகள்!💐

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..