நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 26, 2021

முருகா வருக

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று வைகாசியின்
நிறைநிலா நாள்...

முருகப் பெருமான் அவதரித்த விசாகத்தை முன்னிட்டு
நேற்று வெளியாகி இருக்க வேண்டிய பதிவு இது..
தாமதமாகி விட்டது..

மேலும்
கடந்த சில பதிவுகளாக
தளம் தேடி வருகை தரும்
தங்களை எல்லாம்
வரவேற்று நன்றி நவிலாமல்
இருப்பதற்கு வருந்துகின்றேன்..

குறையேதும் கொள்ளாமல்
வாருங்கள்...
குமரனின் சந்நிதியில்
விளக்கேற்றுவோம்..


குடி கொண்டு அருள்கின்ற
குமரேசன் இருதாளில்
குறை சொல்லி
 சுடர் ஏற்றினேன்..

மடிகின்ற நலம் கண்டு
மருள்கின்ற மனம் கண்டு
மயிலோனும் வருக என
மலர் சாற்றினேன்..

அப்பா நீ அருளாமல்
ஆர் துணையும் அடையாமல்
ஆருயிர்கள் மாள்வதும் சரியோ..
ஆகாத அதர்மங்கள்
அணி கொண்டு எதிர் வந்து
கொள்ளை என்றாவதும் முறையோ..

தப்பான தடம் சென்ற
தருக்கர் நிலை தான் வென்ற
தமிழ் வேலன் தண்முகம் வருக..
சங்கடம் தனைப் போக்க
சஞ்சலம் தனை நீக்க
சரவணன் சண்முகம் வருக..


சுரலோக அமுதினை
அருட்கரம் ஏந்திடும்
குஞ்சரி அவளோடு வருக..
மலை தந்த தேனமுது
மான்மகள் வள்ளியுடன்
மயிலேறி வந்து நீ தருக..

வேல் தந்த நெடுங்கண்ணி
வினை தீர்த்து நின்றனள்
வேளூரில் வைத்திய நாயகி..
அவளிடம் கேட்கவும்
அருமருந்து நல்குவாள்
அதையேந்தி வருக முருகா..

ஆருயிர் பிழைக்கவும்
அடியவர் தழைக்கவும்
அருள் புரிக செல்வ முருகா..
அங்கிங் கெனாதபடி
எங்கும் திளைக்கின்ற
தெய்வ மணி சித்தனே முருகா..

சித்தமும் ரத்தமும்
சிவமயம் சிவமயம்
செல்வனே சிவமுத்துக் குமரனே..
சித்தா அமிர்தமும்
சரவணத் தீர்த்தமும்
வரும்பிணி தீர்த்தருள்கவே..

சேவலின் குரல் கேட்டு
கொடுநோயும் குழிவீழ
குமரனே வழி காட்டுவாய்..
பெருந்தோகை மயிலதுவும்
பிரமித்து ஆடிட
பிணி தீர்த்து ஒளி ஏற்றுவாய்..
***



இன்றைய சூழ்நிலையில்
மக்கட் பணியாற்றும்
மருத்துவர்களும் செவிலியர்களும்
காவல் துறை அலுவலர்களும்
தம்முயிரைப் பணயம் வைப்பது
பற்றி வெளியாகின்ற
செய்திகளைக் கண் கொண்டு படிக்க இயலவில்லை..


கொரானாவுக்கு எதிராக
பணி புரிந்து கொண்டிருக்கும்
மருத்துவர்களையும்
செவிலியர்களையும்
காவல் துறை அலுவலர்களையும்
துப்புரவுப் பணியாளர்கள்
மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களையும்
என்றும் காத்து நிற்க
இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. 

காக்க காக்க கனகவேல் காக்க

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

7 கருத்துகள்:

  1. பெருந்தோகை மயிலதவும்
    பிரமித்து ஆடிட
    பிணி தீர்த்து ஒளியேற்றுவாய்.. //

    ஆடட்டும் மயில் - அலறி
    ஓடட்டும் விஷமி

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை.
    குமரன் வழி காட்ட வேண்டும். பாடலை பாடி வேண்டிக் கொண்டேன்.

    கொரோனாவை ஒழிக்க பணிபுரிந்து கொண்டு இருக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை வழக்கம் போல் அருமை.

    முருகன் துணை நின்று அருள் புரிய வேண்டும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. வரிகள் அருமை ரசித்தேன் துரை அண்ணா.

    எப்படா இது ஒழியும் என்று மனது எண்ணிக் கொண்டே இருக்கிறது.

    தன்னலம் பாராமல் இந்த நேரத்தில் உதவும், பாதுகாப்பு அளிக்கும் அனைத்து தன்னார்வல்ர்கள், மருத்துவ சேவகர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். நல்லது நினைப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அடுத்த மாதம் 18-க்குப் பிறகு தீநுண்மி தொற்று இருக்காது என்று நேற்று ஒரு தகவல்... எனக்குத் தெரிந்து முதலில் பரவிய நல்ல தகவல்...!

    முருகா...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை. வேல் கொண்டு வினை தீர்க்க முருகன் வந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை.  தினமும் காலை கண்விழித்து எழுந்து வந்தததும் தரிசனம் செய்வது முருகனைதான்.  கந்தன் எல்லோரையும் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..