நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 29, 2021

காழி நின்ற கார்முகில்

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
 நேற்று வைகாசி
 மூல நட்சத்திரம்..

திருஞானசம்பந்தர்
சிவசாயுஜ்யம் பெற்ற நாள்..


திருமுருகனின் அம்சமாக
திருஞானசம்பந்தர்
அவதரித்தார்
என்பது அருணகிரி நாதரின் அருள்வாக்கு..

சைவம் தழைக்கும் பொருட்டு
சீர்காழியில் தோன்றி
அம்பிகையின் ஞானப்பாலினை
அருந்தியவர்
காழிப் பிள்ளையாகிய
திருஞானசம்பந்தர்..


திருநாவுக்கரசரை அப்பர் என்றழைத்து அகங்குளிர்ந்தவர் ஞானசம்பந்தர்..

திருக்குலத்தவராகிய
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்
அவரது மனைவியாகிய
மதங்க சூளாமணி அம்மையையும்
தமது திருக்கூட்டத்தினராக
ஏற்று மகிழ்ந்திருந்தவர்..

பதினாறு ஆண்டுகளே
இவ்வையகத்துள் வாழ்ந்திருந்த
ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த
திருப்பதிகங்கள் 16000..

அவற்றுள் ராஜராஜ சோழன் வழியாக நமக்குக் கிடைத்திருப்பவை 383 மட்டுமே..

இவையே
திருக்கடைக் காப்பு
எனப்படுபவை..

ஞானசம்பந்தர் அருளிச் செய்த
திருப்பதிகங்கள்
முதன் மூன்று திருமுறைகளாக
இலங்குகின்றன..

ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த
திருப்பதிகத்
திருப்பாடல்களுள்
ஒரு சில இன்றைய பதிவில்.. 

நேற்று வெளியாகி இருக்க வேண்டிய பதிவு இது.
கால தாமதமாகி விட்டது..
 

தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய
 பெம்மான் இவனன்றே.. (1/1)

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள்
மழலைம் முழவதிர
அண்ணாமலை தொழுவார் வினை 
வழுவா வண்ணம் அறுமே.. (1/1)


எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரமபுரத் துறையும் வானவனே.. (2/40)

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.. (2/66)


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த
வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.. (3/22)

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து வந்து எய்த்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.. (3/22)


சீர்காழியை அடுத்துள்ள
ஆச்சாள்புரத்தில்
திருஞான சம்பந்தருக்கும்
தோத்திரப் பூர்ணாம்பிகா
எனும் நங்கைக்கும்
திருமணம் நிகழ்வுற்றது..

அவ்வேளையில்
ஆங்கு மூண்டெழுந்த சிவஜோதியுள்
திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருமுருக நாயனார், திருநீலநக்க நாயனார்,
திருநீலகண்ட நாயனார் அவரது மனைவி மதங்க சூளாமணியார்
மற்றும் தாய் தந்தை ஏனையோருடன்
ஞானசம்பந்தப் பெருமான்
தனது மங்கை நல்லாளுடன்
இரண்டறக் கலந்து
சிவலோகம் சென்றடைந்தார்..

கீழுள்ள காணொளி
திரு மயிலை
கபாலீச்சரத்தில்
ஞான சம்பந்தப் பெருமான்
சிவிகையில் எழுந்தருளிய
திருக்காட்சி..

உடன்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்,
திருமுருக நாயனார் - என
மூவரையும் தரிசிக்கலாம்..

காணொளி வலையேற்றிய
அன்பர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி.


திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.. போற்றி..
***
நேற்று (28/6) வெள்ளிக்கிழமை
எங்களது 
ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயிலில்
வருடாந்திர உற்சவத்தின்
முதல் நாள்..

ஊரடங்கு விதிகளை அனுசரித்து
சந்நிதி முறைகள் மட்டுமே..

நேற்று நிகழ்ந்த 
மகா அபிஷேக அலங்கார
தீப ஆராதனை தங்களுக்காக!..தேடி வந்து நின்றாய் காளி
தீமை யாவும் வென்றாய்..
பாடி உன்னைப் பணிவேன் காளி
பக்கம் நின்று அருள்வாய்!..

அன்னை உந்தன் அருளில்
எங்கள் அகமும் குளிருதம்மா..
அன்பின் வடிவமாக ஆங்கோர்
மழலை வளருதம்மா!..

அருளி வந்த நீயும் ஆங்கே
அமர்ந்து காக்க வேண்டும்..
கருவும் கொண்ட மகளைத் தாயே
கருதி நோக்க வேண்டும்..

வண்ணம் கொண்டு வந்தாய் காளி
வாழ்வு மலர வந்தாய்..
சொன்ன சொல்லில் நின்றாய் தாயே..
சூழ்ந்து உன்னைத் தொழுவேன்!..
ஃஃஃ

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.

ஃஃஃ

17 கருத்துகள்:

 1. இரண்டு காணொளிகளும்  கண்டேன்.  அதைவழி தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.  கவிதை அருமை.  தீநுண்மி மற்றும் அதன் சகோதர பூஞ்சை நோய்கள்  விரைவில் இந்த உலகை விட்டு ஒழிய வேண்டும் என்கிற ஒரே பிரார்த்தனைதான் இப்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   கொடுநோய்களான பலவும் குறுகி அழிவதற்கு வேண்டிக் கொள்வோம்..

   நன்றி..

   நீக்கு
 2. காணொளியில் தரிசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 3. காணொளிகள் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.. படங்கள், தேவாரம் எல்லாம் அருமை.
  உங்கள் காளி கவிதை அருமை. வளரும் மழலைக்கு வாழ்த்துக்கள்.கருகொண்ட மகள் வாழ்க!

  தீநுண்மி மறைய இறைவன் அருள்வார் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   உலகம் நலம் பெறுவதற்கு வேண்டிக் கொள்வோம்.. நன்றி..

   நீக்கு
 4. காணொளி வழி தரிசனம் பெற்றேன். விரைவில் இந்த நிலை மாறி நல்ல காலம் பிறக்க வேண்டும் வேண்டுவோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசி..
   தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. காளி பாடல் அருமை, அண்ணா. படங்கள் தேவாரப்பாடல்கள் எல்லாமே சிறப்பு காணொளி வழி தரிசனமும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நன்றி கீதா..

   நீக்கு
 6. நேற்று எப்படி இது கண்களில் படவில்லை எனப் புரியலை. என்றாலும் அருமையான பதிவு. நல்ல தொகுப்பு. கவிதை எப்போதும்போல் சிறப்பாக வந்துள்ளது. ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களைத் தான் எங்க பொண்ணு தினமும் போட்டுக் கேட்கிறாள். அவள் வயிற்று நோய் நீங்க வேண்டும் என்பதால் குறித்துக் கொடுத்திருக்கேன். கவலை தரும் தொற்றுக் குறைந்து அனைவரும் நலமாக வாழவும் சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் அருள் செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   தங்கள் மகளின் வயிற்று நோய் விரைவில் தீரும்..வேண்டிக் கொள்வோம்.. நன்றியக்கா.

   நீக்கு
 7. பழந்தமிழ்ப்பாடல்கள் யாவும் படிக்கப் படிக்க இனிமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. இரண்டு காணொளிகள் கண்டு மகிழ்ச்சி. சிறப்பான தரிசனம் கிடைத்தது.

  பாடல்களும் படித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..