நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 06, 2021

என் கடன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று சித்திரைச் சதயம்..

ஸ்ரீ அப்பர் பெருமான்
சிவப் பரம்பொருளுடன்
ஜோதியாய்க் கலந்த நாள்..

நேற்று மதியத்திலிருந்து
இன்று மதியம் வரை
சதய நட்சத்திரம்
பயின்று வருகின்றது..


அப்பர் ஸ்வாமிகள்
அருளிச் செய்த
திருப்பதிகங்களே
தேவாரம் எனப்படுபவை..

இப்பெயர் கொண்டே
ஞானசம்பந்தப்பெருமான்
அருளிச் செய்த
திருக்கடைக் காப்பையும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
அருளிச் செய்த
திரு அர்ச்சனைப் பாட்டையும்
உள்ளடக்கிய
ஏழு திருமுறைகளும்
வழங்கப் பெறுகின்றன..

அப்பர் ஸ்வாமிகள்
அருளியவற்றுள் நமக்குக்
கிடைத்திருப்பவை
312 திருப்பதிகங்களே!..

அத்திருப்பதிகங்கள்
நான்கு, ஐந்து, ஆறு - என,
மூன்று தொகுப்பினுள்
இலங்குகின்றன...


உழவாரப் படை கொண்டு
சிவாலயங்களையும்
மக்களின் வழித் தடங்களையும்
செம்மை செய்தும்
பஞ்சம் உற்ற காலத்தில்
அன்னசாலை நிறுவியும்
மக்கட் பணியாற்றிய
மகானுபாவர் அவர்..

அடியார்க்கும் அடியாராய்
விளங்கிய ஐயன் அவர்...

மண் தடம் செம்மையாயின போல்
நமது மனத் தடமும்
செம்மையாவதற்கு
பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகங்களில் இருந்து
திருப்பாடல்கள்
இன்றைய பதிவில்!..


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே!..
(4/11)

மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி
சினமெனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும் போதறிய ஒண்ணா
துனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே!.. (4/46)


பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே!.. (5/88)

கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துந்தன் நாமம்
பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே!.. (4/94)


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!.. (4/23)


நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..
(5/19)

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் எனப் பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே!..( 5/60)

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண் குமரித் துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே!.. (5/99)


 தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்  மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன் தானே!.. (6/23)
**"

அப்பர் பெருமான்
திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

9 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அடியவருக்கு அடியாராக விளங்கிய அப்பர் பெருமான் பற்றி விளக்கமான பதிவாக தந்ததை படித்து மகிழ்ந்தேன். அவர் அருளி செய்த தேவார பாடல்கள் அனைத்தும் பாடுவதற்கு இனிமையாக உள்ளது. அதையும் பாடி களிப்படைந்தேன். எங்கும் நிறைந்திருக்கும் ஜோதிஸ்ரூபமாகிய சிவபெருமான் நம் மன இருளையும் அகற்றி, தூய நல்லொளியில் நம்மை சங்கமித்திட செய்ய வேண்டுமாய், அப்பர் பெருமானின் திருவடி போற்றி வணங்குவோம். சிவாய நம ஓம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. அப்பர் பாடிய தேவாரம்...   அமுதம்.

  பதிலளிநீக்கு
 3. அப்பர் பற்றிய தகவல்களுக்கும் தேவாரங்கள் பகிர்வுக்கும் நன்றி. சதய நக்ஷத்திரம் என்றாலே ராஜராஜ சோழன் மற்றும் /ராஜேந்திர சோழன் நினைவு தான் வருது.

  பதிலளிநீக்கு
 4. அப்பர் பற்றிய தகவல்கள் சிறப்பு. தேவாரங்கள் இனிமை.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஓம் நம சிவாய.... பதிவு அருமை.

  நல் துணை ஆவது நமசிவாயமே

  பதிலளிநீக்கு
 6. அருமையான தேவார பதிகங்கள். அடிக்கடி பாடும் பதிகங்கள்.
  பதிகங்கள் பகிர்வுக்கு நன்றி.
  நற்றுணை ஆவது நமசிவாயமே !

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா31 ஜனவரி, 2023 13:28

  ஓம் நமசிவாய ஓம். திருச்சிற்றம்பலம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..