நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 09, 2021

துள்ளி வருகுது வேல்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


ஆறுமுகன் தான் இருக்க
அவன் அருள் துணையிருக்க
ஆடும் மயில் தான் இருக்க
அணிசேவல் சிலிர்த்திருக்க
பாடும் தமிழ் அமிழ்திருக்க
பண்பும் தலை நிமிர்ந்திருக்க
துயரினைத்  தொலைத்தழிக்க
பயத்தினைப் பிளந்தழிக்க
துள்ளி வருகுது வேல்
பகையே சுற்றி நில்லாதே போ!..

அகத்தினில் அறிவிருக்க
அறிவினில் அழகிருக்க
அகத்தினில் தனித்திருக்க
அன்பினில் லயித்திருக்க
புறந்தனில் பொலிந்திருக்க
புலனைந்தில் விழித்திருக்க
நோயினைத் தான் தடுக்க
தூய்மையில் தான் சிறக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

ஊரும் ஓய்ந்திருக்க
உயிரும் விழித்திருக்க
ஊழும் முன்னிருக்க
உதிரம் கொதித்திருக்க
வாழ்வும் தவித்திருக்க
வயிறும் பசித்திருக்க
நெஞ்சம் பிழைத்திருக்க
அஞ்சலென்று ஒலித்திருக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

வள்ளல் எனக் கொடுத்திருக்க
வாங்கும் மனம் சிரித்திருக்க
வாழ்வதுவும் தழைத்திருக்க
வந்த கலி தொலைந்திருக்க
எங்கும் இனி மகிழ்ந்திருக்க
ஏற்றம் அது நிறைந்திருக்க
வன்கணமும் அழிந்திருக்க
வையகமும் செழித்திருக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

***







காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

9 கருத்துகள்:

  1. முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு  முற்றிய வினைகள் தீருமே..    முருகனைச் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
  2. கதைவடைப்பில் வீட்டில் எங்கே இருக்க?  அலுவலகம் செல்லவேண்டும்.  வண்டி இல்லாமல் கடும் சிரமம்.

    பதிலளிநீக்கு
  3. வருவான் வடிவேலன் வந்த வினைகளை களைவான்.
    கவிதை அருமை.

    வையகம் வாழ வரம் தருவான் வடிவேலன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை. வடிவேலன் அருள் அனைவருக்கும் வேண்டும். வேல் துள்ளி வந்து அனைத்துத் துயரமான சம்பவங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டும். வேலிருக்கக் கவலை இல்லாமல் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  5. அண்ணா வழக்கம் போல் கவிதை உங்கள் தமிழில் மிளிர்கிறது!

    புராணங்களில் எல்லாம் மாயமாய் மறைந்து இருந்து தாக்கும் அசுரர்களை எல்லாம் இறைவன் கொன்றதாகச் சொல்லப்படும். அது போல்தானே இந்த மாயாவியும் மறைந்திருந்துதானே தாக்கு தாக்கு என்று தாக்குகிறது?

    விரைவில் அது ஒழிந்து எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அழகான கவிதை. எப்போதும் போல் கவிதை மலர் உங்கள் திறமையான தமிழாற்றலுடன் மிகவும் அழகாக மலர்ந்திருக்கிறது. ரசித்தேன்.முருகனின் பாதங்கள் பணிந்தேன். அவனருள் கண்டிப்பாக நம் அனைவர்க்கும் கிடைக்கும்.

    வேல் கொண்டு நம் வினையகற்ற
    வெகு விரைவில் வடிவேலவன்
    நம் வேண்டுதலுகிணங்கியே
    விண்ணைத்தாண்டி வந்திடுவான்.

    தாய் தந்த தவவேலினால்
    தளராதிருக்கும் இப்பிணியகற்றி
    தங்கும் இன்பம் என்றும்
    எங்கும் நிறைந்து பொங்கவென,
    தாய்மை இட்ட கட்டளையை
    தலைமேல் தாங்கும் தங்க மகனும்
    தனி ஒருவனாய் தரணியில் நின்று
    தக்க சமயத்தில் வென்றிடுவான்.

    அன்னையர் தினத்தில் அவனை
    அன்பாகவே அழைத்ததினால்
    அகமகிழ்ந்து அன்னையும் அன்புடன்
    ஆறுமுகனை அனுப்பி வைப்பாள்.

    வேலுடன் வேண்டிய போதினில்
    சூலமும் பாய்ந்து வேரற்ற மரமாக
    குலத்துடன் தோன்றும் இக்கொடிய
    அசுரனை கொன்று அழித்து விடும்.
    ஆச்சரியத்துடன்,அகிலம் ஆனந்தமடையும்,
    அந்த நாளும் வெகு தொலைவில்லை.

    கந்தா சரணம், முருகா சரணம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பாய்ந்து வருகுது முருகன் வேல்
    பாழும் கொரொனா இனி தூள்..தூள் !

    முருகன் என்றதும் காங்கோ -கின்ஷாசா நகரின் இந்துக் கோயிலில் சனிக்கிழமை காலை பூஜைகளின்போது பாடிய முருகன் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. கூடவே நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட் சுவையான பிரசாதங்கள், ஊர், உலக அரட்டை..

    பதிலளிநீக்கு
  8. இறையே துணை வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பாடல்.

    நலமே விளையட்டும். தீநுண்மியின் கொடுமை விலக பிரார்த்தனை செய்து கொள்வோம். தேவையான பாதுகாப்புடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..