நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 04, 2019

பிள்ளையார் தரிசனம் 1

வேழ முகத்து விநாயகனைத் தொழ 
வாழ்வு மிகுத்து வரும்...
வெள்ளிக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி ஓடும் தொடர் வினைகளே!...

இந்தப் பழம்பாடல் அந்தக் காலப் பள்ளிக் கூடங்களில் பால பாடம்!..

பிள்ளைகள் மனதில் பிள்ளையாரை உற்ற தோழனாக
உருவகப்படுத்திய பாடல் இதுவே...

இந்நிலையில்,
பிள்ளையாரை - பிள்ளை யார்?... - என்று கேட்டு
நம்மவர்கள் சிலர் குதுகலப்படுவதும் வழக்கம்...

ஸ்ரீ மஹாகணபதி - தஞ்சை பெரியகோயில் 
பிள்ளை யார்!?..

இதற்கு நிறைய சொல்லலாம்...
ஆனாலும் ஒன்றினை மட்டும் சிந்திப்போம்...

தேவாரத்தில்
ஞானசம்பந்தப் பெருமானும், நாவுக்கரசரும்
பல இடங்களில் பிள்ளையாரைக் குறிக்கின்றார்கள்...

சுந்தரரரோ -
பல தலங்களிலும் பிள்ளையாரைத் தரிசிக்கின்றார்...

விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்தில்
இறைவன் சுந்தரர்க்கு பொற்காசுகளை அருளுகின்றார்...

அருகிலுள்ள பிள்ளையாரைச் சாட்சி வைத்துக் கொண்டு
மணிமுத்தாற்றில் அவற்றை இடுகின்றார்...

திரு ஆரூர் திரும்பிய சுந்தரர் அங்குள்ள கமலாலயத் திருக்குளத்தில் அவற்றை எடுக்கும் போது அவற்றை உரசிப் பார்த்து தரமானவை என்று சான்றளித்தவர் பிள்ளையார்...

இதனாலேயே திருஆரூர் குளக்கரைப் பிள்ளையாருக்கு
மாற்றுரைத்த பிள்ளையார் என்று திருப்பெயர்...

கண்டியூரிலிருந்து திருஐயாற்றுக்குச் செல்ல வேண்டும்..

வழியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு...

தென் கரையில் நின்றிருந்த சுந்தரர் ஓலமிடுகின்றார் - ஐயாறப்பருக்குக் கேட்கட்டும் என்று!...

அந்த வேளையில் கோயிலின் தெற்கு வாசலில் இருக்கும் பிள்ளையாரும் சுந்தரருடன் சேர்ந்து பெருங்குரல் கொடுத்ததாகத் தலபுராணம்...

ஓலமிட்ட விநாயகர் என்றே திருப்பெயர்...

திருநாட்டியத்தான்குடி எனும் தலத்தை அடைந்தபோது
ஸ்வாமியும் அம்பிகையும் திருக்கோயிலில் இல்லை...

ஸ்வாமியும் அம்பிகையும் உழவனும் உழத்தியுமாக வயல்வெளியில் மக்களோடு மக்களாக நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்..

இதையறியாத சுந்தரர் -
அங்கும் இங்கும் தேடுகின்ற வேளையில்
இறைவன் இறைவியை சுட்டிக் காட்டியவர் பிள்ளையார்...

திருநாட்டியத்தான் குடியில்
விநாயகரின் திருப்பெயர் கைகாட்டி விநாயகர்...

திருமாகாளத்தில் சோமாசிமாற நாயனாருடைய யாகசாலைக்கு
புலையர் கோலத்தில் வந்த அம்மையப்பனை சுந்தரர்க்கு உணர்த்தியவர் பிள்ளையார்...

காலங்களைக் கடந்ததாக பிள்ளையாரின் பெருமைகள் விளங்கினாலும்
பிள்ளையாரின் காலம் மட்டும் இன்னும் பிடிபடவில்லை...

ஸ்ரீ வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடி 
நரசிம்ம பல்லவனின் தளபதியாகிய பரஞ்சோதி சாளுக்கியர்களை
வெற்றி கொண்டபின் வாதாபியில் இருந்த விநாயகர் சிலையை பெயர்த்துக் கொண்டு வந்து மன்னனின் அனுமதியுடன் தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் நிறுவுகின்றார்...

அந்தக் காலத்தில் போரில் வீழ்ந்த மன்னனின் தலைநகரிலிருந்து எதையாவது கவர்ந்து கொண்டு வருவது வழக்கம்...

கரிகால் பெருவளத்தானும் அப்படித்தான் வடக்கிருந்து முத்துப் பந்தர் தோரணவாயில் இவற்றைக் கொணர்ந்ததாக ஆன்றோர் இயம்புவர்..

அப்படியானால் அதற்கு முன்
சோழமண்டலத்தில் முத்துப் பந்தர் இல்லாமல் இருந்ததா?...

நரசிம்ம பல்லவனின் தளபதியாகிய பரஞ்சோதியின் சொந்த ஊர்
திருச்செங்காட்டங்குடி எனக் கண்டோம்...

அப்படியானால் பரஞ்சோதி இப்பூவுலகில் பிறப்பதற்கு முன்பே
திருச்செங்காட்டங்குடி இருந்ததாக அர்த்தம் ஆகின்றது...

அப்படியான திருச்செங்காட்டங்குடியில் சிவாலயம் ஒன்றிருக்கின்றது..

இவ்வூருக்கான தலபுராணம் -

கஜமுகாசுரனை அழிப்பதற்காக
விநாயகப்பெருமான் அவனுடன் போர் புரிந்தார்...
அப்போது அசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்தால்
இந்த மண் செந்நிறமாகியது.. அதனாலேயே செங்காட்டங்குடி என்று பெயர்..
கஜமுகாசுரனை வீழ்த்தியபின் விநாயகப்பெருமான் சிவ வழிபாடு செய்தது இங்கே தான் என்று அறியத் தருகின்றது...

இந்தத் தலபுராணத்தினை -

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயமுகாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் .. (4/53)

- என்று திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில்
அப்பர் பெருமானும் குறித்தருள்கின்றார்...

ஆக -
பரஞ்சோதி வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொணர்வதற்கு முன்பே
தமிழகத்து திருச்செங்காட்டங்குடி மக்கள் விநாயகப் பெருமானைப் பற்றி அறிந்திருக்கின்றார்கள் தானே!...

விநாயகரையும் விநாயகர் வழிபட்ட சிவலிங்கத்தையும் மக்கள் 
வணங்கியிருப்பர் தானே!...

அப்படியிருக்க
விநாயக வழிபாடு வடக்கேயிருந்து வந்தது என்று சொல்வது எங்ஙனம்?...

பரஞ்சோதி -  வாதாபியிலிருந்த விநாயகர் சிலையைக் கொணர்ந்தாரே அன்றி
விநாயகர் வழிபாட்டினைக் கொணரவில்லை என்பது தெளிவு...

இன்றைய பதிவில் திருக்கோயில்கள் பலவற்றிலும் நிகழ்ந்த விநாயக வழிபாட்டின் படங்கள் இடம்பெறுகின்றன...

வலையேற்றம் செய்த சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி...


ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையார் - மதுரை 
ஸ்ரீகொங்கணேஸ்வரர் கோயில்
தஞ்சை
ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார்
தஞ்சை 
திருவலஞ்சுழி 
திருஐயாறு 
ஔவையார் விநாயகர் அகவல் பாடிய தலம் திருக்கோவிலூர் என்று அறியப்படுகின்றது...

திருக்கோவிலூரிலுள்ள விநாயக மூர்த்தியே
ஔவையாரைக் கயிலாய மாலையில் கொண்டு சேர்த்ததாக ஐதீகம்...

அந்த விநாயக மூர்த்தியின் தரிசனம் இதோ!..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திரசம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தரும்தான்... 
-: பழம் பாடல் :-

ஓம் கம் கணேசாய நம:
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. விநாயகர் தரிசனம் காலையில் கிடைக்கப்பெற்றேன்.

  நன்றி. குட்மார்னிங்! (இந்த முகமன் ஆங்கிலேயர் கொண்டு வந்து தந்தது!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..ஸ்வாகதம்!...

   இந்த வரவேற்பு பாரம்பர்யமானது!...

   நீக்கு
 2. சொல்பவர் ஆயிரம் சொல்லட்டும். அவர்களுக்கு அடுத்தவரைக் குத்தி ரத்தம் பார்ப்பதிலே ஆனந்தம். அதைக் கேட்டு அவரை நம்புபவர்கள் அவர் வழி நடக்கட்டும். நாம் நம்வழி நடப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பிள்ளையார் படங்கள் எல்லாம் மிக அருமை.
  காலையில் பிள்ளையார் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.

  திருக்கோவிலூர் விநாயகர் அபிஷேக தரிசனம் கிடைக்க செய்தமைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இனிய காலை வணக்கம்.

  தகவல்கள் சிறப்பு. விநாயகர் தரிசனம் கண்டு ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நல்ல பகிர்வு ஐயா...
  படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. அருள் கணபதி தரிசனம் அருமை.
   சங்ககாலப் புலவர்கள் பாடு பொருளாக இருந்த விநாயகர்
   பெருமான் சிறுத்தொண்ட நாயனார் அறியாதவர் இல்லை.

   பரஞ்சோதியாக இருந்த போது
   போரின் வெற்றியாக வாதாபி கணபதியையும் கொண்டுவந்து
   விட்டார்.
   எங்கும் நிறை கணபதி
   எல்லோருக்கும் எப்போதும் அருள் புரிவார்.
   திருக்கோயிலூர் கண நாயகன் திரு அபிஷேகம்
   மன நிறை மகிழ்வைக் கொடுத்தது. நன்றி அன்பு துரை.

   நீக்கு
  3. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா...

   கண நாதன் அனைவருக்கும் நல்வாழ்வினைத் தரட்டும்...

   நன்றி..

   நீக்கு
 6. அழகிய படங்களோடு விநாயகர் வரலாறு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு