நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 20, 2018

பாலைவனப் பழம்

உலகின் மிகப் பழைமையான பழங்களுள் இதுவும் ஒன்று..

50 மில்லியன் ஆண்டுகளாக
இது பூமியில் நின்று விளங்குவதாக விக்கிபீடியா சொல்கின்றது...

இது - பேரீச்சம்பழம்..

பாலை வனங்களின் - குறிப்பாக
அரபு நாடுகளின் முக்கியமான அடையாளம் - பேரீச்சம்பழம் தான்..

நான் கூட நினைத்திருந்தேன் -
பேரீச்சம்பழ விளைச்சலில் சவுதி அரேபியா தான் முதலிடம் என்று..

விக்கிபீடியா வழங்கும் தகவலின்படி
எகிப்து தான் முதலிடம்.. சவூதிக்கு நான்காமிடம் தான்...

அப்போ - குவைத்?..

முதல் பத்து இடங்களில் கூட இல்லை!...

அதெல்லாம் போகட்டும்...

சென்ற ஆண்டே நினைத்திருந்தேன் -
இப்படி ஒரு பதிவினை வழங்க வேண்டும் என்று...

இப்போது தான் வேளை கூடி வந்தது....

நான் பணி செய்யும் சமையற்கூடத்தின் வாசலில் உள்ள
பேரீச்சை மரத்தின் குலைகள் இன்றைய பதிவில்...

ஈச்சம் பாளை


ஈச்சம் பூக்கள்
பாளை பிடித்த மூன்று மாதங்களுக்குள்
பிஞ்சுகள் கனிகளாகின்றன...

அரபு வெளியில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நிலவும்
புழுக்கமான சூழ்நிலையில் தானாகப் பழுத்து விடுகின்றன...

பூக்கள் பிஞ்சுகளாகி விட்டன..


நிறை நிலையில் காய்கள்..


பேரீச்சம்பழம் நார்ச்சத்து மிக்கது...

பலவிதமான வைட்டமின்களும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சல்ஃபர், மக்னீசியம் இவற்றோடு தாமிரம் மற்றும் இரும்புச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன...

இரத்தச் சோகை உள்ளவர்களுக்கு பேரீச்சை நல்லது..



செம்பழம்
பேரீச்சங்காய் கடுந்துவர்ப்பு உடையது..

செம்பழத்தைத் தின்றால் தேங்காய்த் துண்டுகளைப் போலிருக்கும்...


செம்பழங்கள்..
மேலும் பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால்
நரம்பு மண்டலம் நலம் பெறும் என்கின்றார்கள்...

பசும்பாலும் பேரீச்சம் பழமும் பொதுவாக நல்லது
என்றாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததல்ல...

பேரீச்சம்பழம் பாலியல் வேட்கையைத் தூண்டுகின்றது...

எனவே,
இளந்தம்பதியர்க்கு பாலுடன் தரப்படும் மும்மூர்த்திகளுள் இதுவும் ஒன்று...

ஆனாலும் -
முரட்டுத் தனமான குணத்தை வளர்க்கின்றது என்று சொல்லப்படுகின்றது...

பாலைவன நாடுகளில் - அந்தந்த நாடுகளின் இயல்புக்கேற்ப
பலரகமான பேரீச்சைகள் விளைவிக்கப்படுகின்றன...

முதிர்ந்த பழங்களை அப்படியே கனிந்த தன்மையுடன் பாதுகாத்து உண்பதைப் போலவே உலர வைத்தும் பயன்படுக்கிறார்கள்...

இப்போதெல்லாம்
நமது ஊர்களில் அரபு நாட்டுப் பேரீச்சம் பழம் என்று 
ஈரப் பதமான பழங்களை விற்கின்றார்கள்..

அவற்றின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை...

கனிந்த பழங்கள்
தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் அபிஷேக மற்றும் யாகசாலைப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழங்கள் கிடைக்கின்றன...

நமது கலாச்சாரத்துக்கு அரபுகளின் பேரீச்சை உகந்தது அல்ல...

முன்பெல்லாம் திருவிழாப் பந்தல்களில் ஈச்சங்குலைகளைக் கட்டுவது மரபு..

கொள்ளிடக் கரையில் ஈச்சை மரங்கள் காணப்படுகின்றன...

அவை குலைகளை ஈன்றாலும் அவற்றைப் பழுக்க விடுவதில்லை - நம்மவர்கள்...

பனையைப் போலவே
ஈச்சையிலும் தூக்கணாங்குருவிக் கூடுகளைக் காணலாம்...

நமது ஊர்ப்புறங்களில்
தப்பித் தவறிக் காணப்படும் ஈச்சைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன..

ஆனாலும் அவை அழிவின் விளிம்பினில் உள்ளன...


தஞ்சைக்கு வடக்கே
கணபதி அக்ரஹாரம் செல்லும் வழியில் ஈச்சங்குடி என்றும்

தஞ்சைக்கு தெற்கே
ஒரத்தநாட்டிற்கு அருகே ஈச்சங்கோட்டை என்றும் ஊர்கள் உள்ளன..

அவை
ஈசன் குடி, ஈசன் கோட்டைஎன்றிருந்து மருவியவை என்கிறார்கள்..

குருவடி போற்றி

இவற்றுள் -
தஞ்சைக்கு வடக்கே உள்ள ஈச்சங்குடி கிராமம் தான்
காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம்.

இத்தலத்தில்
ஸ்ரீ காருண்யவல்லி உடனுறை ஸ்ரீ கர்ஜூரபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது..

இத்திருக்கோயிலின் தலவிருட்சம் - ஈச்சை மரம்...

கர்ஜூர (kharjura) என்றால் - ஈச்சை...

ஈச்சை மரங்கள் நிறைந்த வனத்தில் விளங்கும் ஈசன் என்பது பொருள்...
எனவே ஈச்சை வனத்து ஈசன் .. ஈச்சங்குடி என்பது நிதர்சனம்...

ஆக - 
ஈசன்குடி என்பது தான் 
ஈச்சங்குடி என மருவி வந்தது என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.. 

திருஐயாற்றினை அடுத்துள்ள
திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலில்
ஈச்சை தலமரமாக இருந்திருக்கின்றது...

இப்போது அங்கே வில்வம் தலமரம்...

இன்றைய பதிவின் படங்கள் தங்களைக் கவரும் என, நம்புகின்றேன்...

வாழ்க நலம்... 
ஃஃஃ 

24 கருத்துகள்:

  1. துரை சார்... நான் அங்கு இருந்தபோது தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு ஒரு பூங்காவுக்குப் போவேன். அதில் நடக்கும் தளத்தைச் சுற்றிலும் பேரீட்சை மரங்கள்தான். பாளை பிடிப்பதில் ஆரம்பித்து பல்வேறு படங்கள் எடுத்துவைத்திருக்கிறேன். அங்கெல்லாம் பழம் வந்துவிட்டால், யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

    இந்த இடுகையில் படங்களைப் பார்த்ததும் அந்த ஊரின் நினைவு வந்துவிட்டது. காயவைக்காத பழுத்த பேரீட்சை, சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ஆனால் உடனே அழுகிவிடும் (குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் 4-5 நாட்களுக்குமேல் இருக்காது)

    நான் மிக விலை உயர்ந்த பேரீட்சைகளைச் சாப்பிட்டிருக்கிறேன்..

    அங்கேயிருந்து ஈச்சங்குடியில் கொண்டுபோய் இடுகையை நிறுத்திட்டீங்க. ரசித்தேன். அதுக்கேத்த படம்தான் மிஸ்ஸிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,
      தங்களுக்கு நல்வரவு... வருகைக்கு மகிழ்ச்சி..

      உயர்ந்த ரக பழங்களை உண்ணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது..
      சர்க்கரைக் குறைவினால் இப்போது அவ்வளவாகத் தின்பதில்லை..

      ஈச்சங்குடி கோயிலைப் பற்றிய படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை...
      இப்போது ஒரு படத்தை இணைக்கின்றேன்..

      பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்..

      நீக்கு
    2. எனக்கு மனசுல, இடுகை முழுமையோ நிறைவாகவோ இல்லைனு தோணுது. இதை கல்ஃப் நாடுகளில் வளரும் பேரீச்சை மரம் பற்றியது என்று எடுத்துக்கொள்வதா (தலைப்பு அப்படித்தான் சொல்லுது), அல்லது தமிழகத்தின் பழம் பெரும் கோவிலைப் பற்றியது என்று எடுத்துக்கொள்வதா?

      தலைப்பும் பெரும்பகுதி இடுகையும், கோவிலுக்கு சம்பந்தமில்லாத பதிவு. என்னைக் கேட்டால், ஈச்சன்குடி பகுதியை இன்னும் விரிவுபடுத்தி ஒரு தனி இடுகை போடலாம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அது (அதாவது இங்கும் ஈச்சை மரங்கள் இருந்தன என்பதனால், ஆனால் அந்த ஈச்சை மரங்கள் பேரீச்சம்பழம் வரும் மரங்களா என்று தெரியலை).

      சொன்னதைத் தவறாக எண்ண வேண்டாம்.

      நீக்கு
  2. வாவ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர், பேரீச்சம்பழ முத்தல் காய்களும் ஒருவித சு வையாக இருக்கும், ரம்ளான் சீசனில் இங்கு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. எங்களுக்கு ஒரு ப்ரிய பற்றை போன்ற வளவிருந்தது அதில் ஈச்சம் மரங்கள் கஜூ மரங்கள் இருந்தன... இப்படித்தான் காய்க்கும்.. நேரடியாகப் பிடுங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.. இச்சை பச்சை மஞ்சள் சிவப்பு பின்பு பழம் கறுப்பாகும்.

    பதிலளிநீக்கு
  4. பெரிசா இருந்தா பேரீச்சை. சாதாரணமா இருந்தா ஈச்சையா! ஏனோ எனக்கு பேரீச்சம்பழம் பிடிப்பதில்லை. எனக்குதான் நல்லது எதுவுமே பிடிக்காதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் - வாழ்க்கையில் தவறவிடக்கூடாத பழங்கள், லிச்சி, ரம்பூட்டான், நல்ல பைனாப்பிள் (நம்ம ஊர்ல இருப்பது அல்ல), பேரீச்சை. நம்ம ஊர் மாம்பழம், பலாப்பழம் ஆகியவையும் தவறவிடக்கூடாதவைகளே.

      நம்ம ஊர்ல விக்கறது எல்லாமே ஈராக் இறக்குமதிச் சரக்காக இருக்கும். தெருவில் (ஒரு காலத்தில் பார்த்திருக்கிறேன்) விற்பதை வாங்கவே கூடாது. அவர்கள் எண்ணெயை அதன் மீது தேய்த்திருப்பார்கள் (ஈ வரக்கூடாது என்று).

      நீக்கு
    2. நெல்லைதமிழன் ... இந்தியாவில் இருப்போருக்கு றம்புட்டான் பழம் தெரியாது என நினைக்கிறேன்... இதில் மங்குஸ்தானும் அடங்கும்.

      நீக்கு
    3. ///எனக்குதான் நல்லது எதுவுமே பிடிக்காதே///
      ஹா ஹா ஹா அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கும் ஶ்ரீராம்....

      நீக்கு
    4. இல்லை அதிரா. (அப்படீன்னு நினைக்கறேன்). என் பெண் கேரளா சென்றுவிட்டு எனக்கு ஒரு (ஒரே ஒரு) ரம்பூட்டான் தந்தாள். நான் ரம்பூட்டானை தாய்லாந்தில் அவ்வளவு சாப்பிட்டேன். துரதிருஷ்டவசமாக நான் இருந்த ஒரு வாரத்தில் முதல் நாள் மட்டும்தான் கடையில் கிடைத்தது (அது ஒரு தீவு, ரம்பூட்டான் சீசன் முடிந்துவிட்டது). ஆனால் முதல் நாளே, நான் நிறைய வாங்கிவிட்டேன்.

      பஹ்ரைனில், இலங்கை, தாய்லாந்து ரம்புட்டான்கள் கிடைக்கும் (விலை அதிகம்தான்). மங்குஸ்தான் எனக்குப் பிடிக்காது.

      நீக்கு
    5. இங்கும் மங்குஸ்தான் ரம்பட்டான் கிடைக்கும் ஆனால் விலை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகம். லிச்சியும் தான்

      அதிரா நானும் சின்ன வயசுல இலங்கையில் இருந்தப்ப நிறைய சாப்பிட்டிருக்கேன்...இங்கு சென்னையில் பார்த்தேன் ஆனால் விலை அதிகம் என்பதால் ஒரே ஒரு முறை மகனுக்கு இதெல்லாம் நான் இலங்கையில் சாப்பிட்டது என்று அவனுக்கு அப்பழங்களை அறிமுகப்படுத்த வாங்கிக் கொடுத்தேன். ஆனால் இப்போது தெரியவில்லை கிடைக்குதான்னு...

      அப்புறம் சமீபகாலமாக தாய்லாந்து புகழ் ட்ராகன் ஃப்ரூட் கிடைக்கிறது நிறையவே கிடைக்கிறது. ஒரு பழம் 50 ரூ லிருந்து 80, 150 வரை செல்கிறது. பாரிஸ் கார்னரில் 50 லிருந்து 80க்குள் கிடைக்கிறது.

      கீதா

      நீக்கு
  5. பாளை விடுவதிலிருந்து பழமாவது வரை படிப்படியாய் படம் எடுத்து அசத்தி இருக்கிறீர்கள். படங்கள் அழகாய் இருக்கின்றன. இப்போது பேரீச்சை சிரப் எல்லாம் வந்து விட்டதே! பாலில் போட்டு சாப்பிட்டு பாலுணர்வும் பெறலாம், இரும்புச்சத்தும் பெறலாம்!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பேரிச்சைப் பழங்கள் குஜராத்தில் நிறையக் கிடைக்கும். இளம் மஞ்சள் நிறம், சிவப்பு நிறப் பழங்கள் வாங்கிக் கொத்துக் கொத்தாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்வோம். அடுத்து ராஜஸ்தானிலும் கிடைத்தாலும் குஜராத்துக்கு அடுத்துத் தான் இதில் ராஜஸ்தான். நல்ல ருசியாக இருக்கும். பேரிச்சைப் பழங்களோடு கொஞ்சம் உப்பு, புளி, வெல்லம், மிளகாய்த் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொண்டு அதில் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து போட்டு வைத்துக் கொண்டால் நல்ல கெட்டியான இனிப்பு/புளிப்புச் சட்னி தயார். வடமாநில உணவு வகைகளில் சேர்க்கவும், சாட், தயிர்வடை, பேல் பூரி, பானி பூரி போன்றவற்றோடு உண்ணவும் பயன்படும். நான் முன்னெல்லாம் ஒரு பாட்டிலில் செய்து வைச்சுப்பேன். இப்போச் செலவே ஆகறதில்லை! :) எப்போவானும் ஆசை வந்தால் கொஞ்சமாய்ச் செய்வதோடு சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா சேம் சேம் நானும் இந்தச் சட்னி தயார் செய்து வைத்துக் கொள்வது வழக்கம் இப்போ மகன் இங்கு இல்லாததால் செய்வதில்லை..நானும் எப்போதேனும் கொஞ்சமாய் யாரேனும் கேட்டுச் செய்தால் மட்டுமே...

      கீதா

      நீக்கு
  7. பேரீச்சம் பழங்களிலேயே மிகவும் பெரியது, விலை உயர்வானது அமெரிக்க பழம்தான்.

    நானும் அலுவலகத்தின் அருகில் உள்ள மரத்தை படிப்படியாக எடுத்து வைத்துள்ளேன் ஜி.

    விடயங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கில்லர்ஜி. எங்கள் கம்பெனி அதிபர், வருடா வருடம் கலிபோர்னியாவிலிருந்து பேரீச்சை பழங்களை இறக்குமதி செய்து, (அழகான கிஃப்ட் பாக்கெட்டில்) நிறைய பேருக்கு ரமதான் சமயத்தில் பரிசாக அளிப்பார் (அரசு அதிகாரிகள், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் போன்று).

      நீக்கு
  8. பேரீச்சை பழங்களின் வரலாறு, அதன் வளர்ச்சியை படி படியாக காண்பித்த படங்கள் எல்லாம் அருமை.
    பேரீச்சை மரத்தில் கூடு கட்டி வசிக்கும் தூக்காணங்குருவி படம் அழகு.

    பதிலளிநீக்கு
  9. பேரீச்சை பழங்களின் படங்கள் - படிப்படியான படங்கள் வெகு சிறப்பு. நம் ஊரிலும் இப்படி சில இடங்களில் இருந்தால் வளர விடுவதில்லை.

    ராஜஸ்தான், குஜராத் பகுதிகளிலும் இப்பழங்கள் உண்டு - கீதாம்மா சொன்னது போல. தில்லியிலும் நிறைய கிடைக்கிறது! எண்ணெய் தடவிய பழங்கள் இங்கேயும் உண்டு! :(

    பதிலளிநீக்கு
  10. பரமாச்சாரியாரின் இந்தப் படம், அவருடைய எல்லாப் படங்களிலும் மிகவும் சிறப்பானது என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  11. ஈச்சையைப் பற்றிய ஒரு நுணுக்கமான பதிவு. பாடல் பெற்ற தலங்களிலும் இது இருப்பதைக் கூறிய விதம் அதுமை.

    பதிலளிநீக்கு
  12. பேரீச்சம்பழம் சாப்பிடிருக்கிறேன் ஈச்சம்பழம் ? இது வேறா

    பதிலளிநீக்கு
  13. பேரீச்சம்பழம் மிகவும் பிடித்தமானது ஐயா
    ஆனால் பேரீச்சம்பழம் பற்றிய அறியா பல செய்திகளை இன்றுதான்
    தங்களால் அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா செம படங்கள் அதுவும் எல்லா பருவமும் எடுத்துப் போட்டுருக்கீங்க. ஈச்சம் பழம் கிடைக்கிறது இங்கு. ஈச்சம் கிடைக்கும் போது வாங்குவது உண்டு எல்லாம் முன்பு....

    பேரீச்சை பற்றி பல தகவல்கள் அறிந்திருந்தாலும் ஒரே ஒரு தகவல் புதிது முரட்டுத்தனம் அதிகமாகும் என்பது மட்டும் இப்போதுதான் அறிகிறோம் அண்ணா...

    பாலைவனப்பழம் என்று ஆரம்பித்து ஈச்சங்குடியை லிங்க் செய்து அத்தகவலையும் கொடுத்தது நன்றாக இருக்கிறது. ஈச்சங்குடி இன்னும் தொடருமோ?!!

    ஈச்சம் பழம் என்றதுமே ஈச்ச மரத்து இன்பச் சோலையில் பாடல் நினைவுக்கு வரும்

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..