நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 08, 2018

பூஜைக்கு வந்த மலர்



தாமரை

பூக்களில் மிக உயர்வான மலர்...

இறைவனின் திருவடித் தாமரை..
- என்று சைவத்திலும் வைணவத்திலும்
மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது...

எனினும்
மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகப் புகழப்படுவது

செந்தாமரை மலர் மன இறுக்கத்தைத் தவிர்க்கும்...
சிந்தை ஒருமுகமாகும்..

செந்தாமரை மலர்களைக் கொண்டு
வழிபாடுகளைச் செய்பவர்கள் இல்லத்தில்
நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்...

திருமுகமும் தாமரை.. திருவிழிகளும் தாமரை...
திருத்தனங்கள் தாமரை.. திருவதனமும் தாமரை..
திருக்கரங்கள் தாமரை.. திருவடிகளும் தாமரை...

இப்படிப் போற்றினால் அது தெய்விகம்...
அப்படியே புகழ்ந்துரைத்தால் அது இல்லறம்..

தெய்வீகமும் இல்லறமும்
தாமரையால் சிறப்பிக்கப்படுவதே சிறப்பு...

தாமரையாள் ஏன் சிரித்தாள்!...
- என்பது கவியரசரின் வியப்பு...

இதற்குமேல் சொல்வதற்கு
ஏதுமில்லை...
***


வெண்தாமரை

அன்னை கலைவாணிக்கு உரிய மலர்...
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் - என்பார் மகாகவி..

வெண் தாமரை என்ற உருவகம் நல்லோர் மனமாகும்..

வெண் தாமரை மலரும் மன இறுக்கத்தைத் தவிர்த்து
சிந்தையை ஒருமுகமாக வல்லது..

எனினும்
மிகுந்த மருத்துவப் பயன்பாட்டினை உடையது வெண் தாமரை..
மண்பானை நீரில் வெண் தாமரை இதழ்களைப் போட்டு வைத்து
அந்த நீரை குடித்து வந்தால் மூளை பலமடையும் என்பது குறிப்பு...

 பொதுவாக தாமரை இதழ்க் கஷாயத்தினை
வாரம் இருமுறை குடித்து வந்தால்
இரத்த ஓட்டம் சீராகின்றது..
படபடப்பு நீங்குகின்றது.. 
இதயம் வலிமையடைவதுடன்
இரத்தம் தூய்மையாகின்றது...

முதிர்ந்த தாமரையின் விதைகள்
நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்த்து...
உயிரணுக்களை விருத்தி செய்யவல்லவை

தாமரை இதழ் கஷாயத்தினை
அவ்வப்போது நான் குடித்துக் கொண்டிருக்கின்றேன்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது... 
***


கொன்றை

சிவபெருமானுக்கு உரிய மலர்...

ஈசனின் திருக்கோலம் தோன்றும் போது

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்..

- என்று, கசிந்துருகி நிற்கின்றார் அப்பர் பெருமான்...

பன்னிரு திருமுறைகளிலும் பேசப்படுவதுது - கொன்றை..

கேரளத்தின் விஷூ கொண்டாட்டங்களில்
சிறப்பிடம் பெறுவது கொன்றை...

தமிழகம் முழுதும் காணக்கூடியது கொன்றை எனினும்
மலையாள நாட்டின் மலராக சிறப்பிக்கப்பட்டுள்ளது..

கொன்றையில் பலவகைகள் உள்ளன...
கொன்றை மருத்துவ குணமுடையது.. ஆனால்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்..
***


தும்பை

விநாயகப் பெருமானுக்கு உரிய பூக்களுள்
தும்பையும் ஒன்று...

நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் தாமாகவே வளரக்கூடியது...
நிறைந்த மருத்துவ குணங்களைஉடையது...

வெண்மைக்கு எடுத்துக்காட்டு தும்பைப் பூ...

தும்பை மலர் வேட்டி கட்டி.. - என்றொரு சொல்லாடல்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் ஒன்றில் வரும்..

தும்பையின் இலை பூக்களை சாதாரண உப்புடன் சேர்த்து அரைத்து
உடலில் பூசிக் குளித்தால் அரிப்பு நமைச்சல் தேமல்
இவை தொலைந்து போகும் என்பார்கள்...

எனினும்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்...
***


துளசி

திருத்துழாய் என்று
வைணவத்தில்
வெகுவாகச் சிறப்பிக்கப்படுவது...

துளசி வனத்தில் தான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
திருஅவதாரம் செய்தனள்..

துளசி என்றே
பாரதத்தின் அனைத்து மொழிகளிலும் 
அறியப்படுவது..

துளசியும் மிகுந்த
மருத்துவ குணங்களை உடையது..

துளசி தீர்த்தம்
புனிதம் என்று போற்றப்படுவது...

துளசி தீர்த்தம்
சுவாச மண்டலத்தைச் சுத்திகரித்து
சுவாசத்தைச் சீராக்கும்...

துளசி நிறைந்திருக்கும் இடத்திற்கு
விஷ ஜந்துகள் வராது...

மிக முக்கியமான செய்தி
துளசி இலையும் துளசி தீர்த்தமும்
காமத்தைக் கட்டுப்படுத்த வல்லவை...

அதனால் தான் விரத நாட்களில்
துளசி மணி மாலை அணிவதும்
துளசி மணி மாலையை ஸ்பரிசித்து
விரல் கொண்டு எண்ணுவதும்!... 
***


தாழை

நான்முகப் பிரம்மனுடன் சேர்ந்து கொண்டு
ஈசனின் முன்பாக பொய் சொன்னதால்
சிவ வழிபாட்டில் விலக்கப்பட்டது - தாழை..

விநாயகர் முருகன் வழிபாடுகளிலும்
இது சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை..

ஆனால் இதன் மீது
அம்பிகை இரக்கம் கொண்டாள்...

நான்முகனுக்கு அஞ்சியே
பொய்யுரைத்தது தாழை..
அதுவன்றி - வேறு பிழை
ஏதும் செய்யவில்லை...

ஆகையால்
தனது திருவடிகளுக்கு அருகில்
இருத்திக் கொண்டாள்...

திருக்கருகாவூர்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகையின்
திருவடிகளில் தாழம்பூவினை எப்போதும் காணலாம்..

ஈசன் எம்பெருமானுடைய சாபத்தினால்
தாழை வனங்களில் நாகங்கள் கிடக்கும்...

இப்படித் தாழங்காட்டில் பாம்புகள் கிடந்தாலும்
மக்கள் இந்தப் பூவின் மீது கொண்ட ஆசை மாறியதில்லை..

சடங்கான பெண் மஞ்சள் நீராடி
வீட்டுக்குள் வந்ததும்
மங்கல அலங்காரம் செய்யும் போது
சடையில் தாழை மடல்களை வைத்துப்
பின்னுவது பாரம்பர்யம்...

தாழம்பூ வைத்துப் பின்னப்பட்ட சடையுடன்
தன் மகளைக் காணும் தாய் பூரித்து நிற்பாள்...

தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
 - என்பது நம் குலப் பெண்களுக்கே உரிய சிறப்பு.. 

கடற்கரைகளிலும் சற்றே உள் வாங்கிய
ஆற்றங்கரைகளிலும் வளர்வது தாழை...

பொய் சொன்ன குற்றமுடையது ஆனாலும்
இதனுடைய சிறப்புகள் பலவாகும்..

அவற்றை வேறொரு பதிவினில் 
காண்போம்..
***


மல்லிகை

இல்லறம்
இந்த மலராலேயே இனியதாகின்றது...

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ!..
- என்று, பூவையர் சூடும் பூ இதுவே!..

விதிவிலக்குகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே இருக்கலாம்...

மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதில்
மல்லிகைக்கு நிகர் மல்லிகையே..

மல்லிகைப் பூக்கள் கிடந்த நீரைக் கொண்டு
கண்களைக் கழுவினால் கண் பளிச்சிடுகின்றன..
கண்களில் குறை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன...

மல்லைகை முல்லை சம்பங்கி மலர்களை
இட்டு வைத்த நீரால்
இளங்கன்னியரை நீராட்டுதல் மரபு...

நிழலில் உலர்த்தப்பட்ட மல்லிகைப் பூக்களை
தேங்காய் எண்ணெயில் இட்டு
அதனை வெயிலில் சூடு செய்து
தலையில் பூசிக் கொள்வது மிக மிக நல்லது..

இல்லறத்தில் மோகத்தை விளைப்பது - மல்லிகை ..

மல்லிகையே.. மல்லிகையே தூதாகப் போ!..
- என்பது இளங்காதல்...

அதே சமயம் பிரசவித்த பெண்களின்
பால் கட்டு வலியைக் குறைப்பதும் மல்லிகையே...

அந்தக் காலத் திரைப்படங்களில்
புறம் பொறுக்கும் மைனர்கள்
கையில் மல்லிகைச் சரத்தினைச் சுற்றிக் கொண்டு
திரிவதாகக் காட்டுவார்கள்...

இருந்தாலும் 
அக்காலத்தில் பள்ளிகள் தோறும்
வகுப்புக்கு நான்கு பெயர்
மல்லிகா என்றிருக்கும்...

இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு 
அந்தக் கொடுப்பினை
இல்லாமல் போயிற்று..

மல்லிகைப் பூவும் பேசுதற்கு இனியது..
அதன் பெருமையும் அளப்பரியது...
***


பவளமல்லி

ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு மட்டுமல்லாது
சிவ வழிபாட்டிற்கும் உரியது - பவளமல்லி...

தேவலோகத்திலிருந்து
இதனுடைய மற்றொரு பெயர் தான் பாரிஜாதம்..

சாஸ்த்ர விதிகளின்படி மண்ணில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களைக் கொண்டு வழிபாடு செய்தல் கூடாது..

ஆனால்,
மரத்தின் கீழாக உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாதப் பூக்களைச் சேகரித்து பூஜை செய்யலாம்...

இந்த மரத்தின் வேர்களை நிழலில் உலர்த்தி
இடித்து பல் துலக்கலாம்...
ஈறு தொடர்பான பிரச்னைகள் தீரும்...

மரத்தின் பட்டைகளைக் கொதிக்க வைத்த
நீரைக் குடிப்பதனால் சிறுநீரகம் சுத்தமடைகின்றது...
நீரிழிவு நோயும் மட்டுப்படுகின்றது..

எனினும், தக்க மருத்துவருடைய
மேற்பார்வை அவசியம்...
***


செண்பகம்

இதன் மறுபெயர் தான்
மனோரஞ்சிதம்...

இப்பூவினைக் குறிப்பதற்கு
ஆங்கிலத்தில் சொல் இல்லை என்பது
நமக்குப் பெருமை...

செண்பகம் என்பதுவே Champak
என்று வழங்கப்படுகின்றது..

தேவாரத்தில் பல இடங்களிலும்
பேசப்படும் மலர்களுள் செண்பகமும் ஒன்று...

பெரும்பாலும் இந்தப் பூவைச்
சூட்டிக் கொள்வதில்லை..

ஆனாலும்
இந்தப் பூவின் பெயரைச்
சூடிக் கொள்வதை விரும்பினர்....

ஏழை எளிய மக்கள் இன்புற்று
சூடிக் கொண்ட செண்பகப் பூவின் பெயரை
மாமன்னன் செண்பகப் பாண்டியன்
என்று சூட்டிக் கொண்டு
கூந்தலில் நறுமணம் தேடி
தமிழுக்குப் புகழ் சேர்த்தான்...

மண்ணின் மக்கள் இன்புற்ற பொழுதில்
அம்பிகை பராசக்தி
செண்பகப் பூவையும் அதன் பெயரையும்
ஒருசேர சூட்டிக் கொண்டாள்..
.

கோயில்பட்டி நகரில்
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன்
- எனத் திருக்கோலங் கொண்டு நின்றாள்...

செண்பக மலர்களை நிழலில் உலர்த்தித் தூளாக்கி
பனங்கருப்பட்டியுடன் கொதிக்க வைத்து
அந்த நீரை தினமும் அருந்தினால்
பார்வை தெளிவு பெறும் என்பார்கள்...

பலவிதமான மருத்துவ குணங்களை உடையது..
தக்க மருத்துவருடைய மேற்பார்வை அவசியம்
என்பதையும் நினைவில் கொள்ளவும்...
***

இயற்கை வழங்கிய 
அருட்கொடைகளுள்
மலர்கள் சிறப்புடையவை...

அவற்றுள் இங்கே சொல்லப்பட்டவை
மிக மிகக் கொஞ்சமே..


தம்மை ஒரு மலராகப் பாவனை
செய்து கொள்வது மங்கையர் தம் மாண்பு...


ஆயினும்,
மங்கையர் தம்மை மாகாளியாய்
முன்னிறுத்திக் கொள்ள வேண்டியதும்
காலத்தின் கட்டாயம் ஆயிற்று..


பூச்சூடி பொட்டு வைத்த
புனிதம் தான் பூவை..

பூ வைத்த பூ
என்று கொண்டாடுவது தமிழ்..

அதுதான் நமது பாரம்பர்யம்..

அந்த இனிய பாரம்பர்யத்தின் வழி நின்று
பெண்மைக்குத் தலை வணங்குகின்றேன்..

அன்பின் இனிய
மங்கையர் தின நல்வாழ்த்துகள்!...

பெண்மை வாழ்க..
பெண்மை வெல்க!..
***

54 கருத்துகள்:

  1. மலர்களைப் பற்றிய இறையுணர்வுடன் கூடிய அருமையான இடுகை.

    கொன்றைக்குக் குறிப்பிட்டுள்ளதில்,

    வடியேறு திரிசூலம் என்று வரவேண்டும். 'கடியேறு','இடியேறு', 'பொடியேறு' என்று அடுத்தடுத்து வருகின்றன பாருங்கள். (வடியேறு - வடி-கூர்மை, கூரிய திரிசூலம்) இது திருபூவண நாதரைப் பற்றியது. அதுவும் தவிர, அப்பருக்கு, 'மாதொரு பாகனாகக் காட்சியளித்தமை' இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இந்தத் திருப்பாடல் வடியேறு திரிசூலம் - என்று தான் பதிவினில் உள்ளது..

      ஆயினும் - ஓதுவார் மூர்த்திகளால் வடிவேறு திரிசூலம் - என்று இசைக்கப்படுகின்றது..

      மேலும் வடிவேறு திரிசூலம் என்பதும் ஒரு பாடம் என்று தருமபுர ஆதீனத்தார் தங்களது தளத்தினில் குறிக்கின்றனர்...

      மிகவும் அற்புதமான திருப்பதிகம்..

      அப்பர் பெருமான் கண்டுணர்ந்த திருக்காட்சியினை
      நாமும் அனுபவிக்கலாம்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. பதிவில் அப்படி இல்லையே சார். 'வடிவேறு' என்றுதானே இருக்கிறது. நான் கவனிக்கவிட்டுவிட்டேனோ என்று திரும்பவும் பார்த்தேன்.

      நீங்கள் சொல்லியிருக்கும் பாயின்ட் சரி. இரண்டு பாடங்களும் (வடிவேறு வடியேறு) உள்ளன. வடிவு + ஏறு - அழகு ஏறிய, அதிகமாகிய திரிசூலம்.

      நீக்கு
    3. அன்பின் நெ.த. அவர்கள் பொறுத்தருளவும்...

      தங்களுக்கான பதிலில்
      ஆதீனத்தின் பதிவில் - என்று சொல்லியிருக்க வேண்டும்..

      தருமபுர ஆதீனத்தார் திருமுறைகளை இணையத்தில் பதிவு செய்திருக்கிறனர்...

      சில சந்தேகங்களை அதில் தீர்த்துக் கொள்வேன்.

      இன்று காலை 6.30 க்கு அறைக்கு வந்து மீண்டும் 12.30 க்கு வேலைக்குச் செல்லும்படியான சூழ்நிலை,...

      காலை உணவு... தூக்கம் எல்லாம் இதற்குள்...

      இன்று வெள்ளிக்கிழமை..
      இணையமும் ஒத்துழைக்காது...

      சற்றே அவசரம்..

      பொருள் விளங்கச் சொல்லாதது என் பிழை...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. அதனாலென்ன. குறைந்த நேரத்திலும், பதிவுகளை எழுதணும், மற்றப் பதிவுகளைப் படிக்கணும், பின்னூட்டமிடணும்னு நிறைய வேலைகள் இருக்குமல்லவா. உங்கள் மறுமொழியை எப்போதும் எதிர்பார்ப்பேன். நன்றி.

      நீக்கு
    5. இன்னொன்று... உங்கள் இடுகையினால்தான், எந்தத் திருமுறைப் பாடலை நீங்கள் வெளியிட்டாலும், அதனை உணர்ந்து படித்து, அர்த்தப்படுத்திக்கொள்வேன். எனக்குள்ள ஆர்வத்தால் இதனைச் செய்கிறேன். அதில் கூறும் பக்திமிக்க கருத்தும் என்னை மிகவும் கவரும்.

      தொடர்ந்து இடுகையில், வைரம் போல், பாடல்கள் ஜொலிக்கட்டும்.

      நீக்கு
    6. தங்களது அன்பினுக்கு மனமார்ந்த நன்றி...

      நீக்கு
  2. என்னாம் பெரிய போஸ்ட்டூஊ:)...

    /வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் - என்பார் மகாகவி..
    ////
    நோஓஓஓ மகாகவிக்கு முன்பே தேவாரம் வந்து விட்டதே.... வெள்ளைக் கலை உடுத்து... வெள்ளைப்பணி பூண்டு... வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் அன்பு வருகை..

      மகாகவியின் பாடலை விவரித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. ////தாமரை இதழ் கஷாயத்தினை
    அவ்வப்போது நான் குடித்துக் கொண்டிருக்கின்றேன்
    என்பது இங்கே குறிப்பிடத்தக்கது...
    ***/////
    இது எதுக்கூஊ?... சரி விடுங்கோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...
    தும்பையையும் எள்ளுப்பூவையும் இடம் மாத்தி வைக்கலாம் போல இருக்கே:)

    இங்கு நானும் ஊசிமல்லிகை நட்டு வளருகிறது வெளியில்... குளிரால இலைகள் பெரிதா வருவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை இதழ்க் கஷாயம் இதயத்திற்கு நல்லது என்று சொல்லியிருக்கின்றேனே!...

      எள்ளின் பூவும் வெள்ளை எனினும் அது பூஜைக்கு வருவதில்லை....

      பொதுவாக மல்லிகைக்கு சம தட்ப வெப்ப சூழ்நிலைதான் உகந்தது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பூவையும் பூவையையும் இணைத்து அழகிய பதிவோடு வாழ்த்து..

    அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். _()_

    பதிலளிநீக்கு
  5. காலையில் சன் டீ வியில் வரும்நாட்டு மருத்துவர் இதைப் படித்தால் ஒருநாள் ப்ரோகிராம் செய்துவிடுவார் மலர்களில் எனக்குப்பிடித்ததுமல்லிகை திருச்சி குடியிருப்பில்பவழமல்லி மரமொன்று இருந்தது காலையில் மலர்கள் தூவப்பட்ட மரத்தடி அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      பவளமல்லி மரத்தின் நிழலே நறுமணமாக இருக்கும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகான மலர்கள், அருமையான செய்திகள், அருமையான பாடல்கள் அழகான படங்கள். என்று மகளிர்தின பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நானும் மலர்களை பத்தி இப்படி ஒரு பதிவு போடலாம்ன்னு நினைச்சேன், பெண்களுக்கு பிடித்த பூ பத்திய பதிவை மகளிர் தினம் அன்னிக்கு போட்டது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பு வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மலர்களே மலர்களேன்னு பாடத்தோணுது எனக்கு எல்லா மலர்களையும் பிடிக்கும் தும்பைப்பூ எங்க ஊர் தோட்டத்தில் நிறைய வளரும் பார்க்க ரம்யமா இருக்கும்
    அப்புறம் மல்லிகா பேருக்கு பதில் இப்போ ஜாஸ்மின் னு வச்சிக்கிறாங்க :)
    பூ போன்ற மகளிருக்கு /பூவையருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கும் மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  9. செந்தாமரையைக் கொண்டு வழிபட, குளத்தின் அருகே குடியிருக்க வேண்டும்! :))
    வரைவதற்கு எளிதான மலரும் தாமரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      வரைவதற்கு எளிதான மலர் - உண்மை..
      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. தாமரையின் மருத்துவக் குறிப்புகள் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் சோதித்துப் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  11. பூக்களிலிருந்து பூவையருக்கு வந்தது சிறப்பு.ஒவ்வொரு மலருக்கும் பாடல்கள் என் மனத்திலும் மோதுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      மலர்களுக்கான பாடல்கள் தான் எத்தனை எத்தனை!..
      மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...

      நீக்கு
  12. பூக்கள் பற்றிய தகவல்கள் - மிகச் சிறப்பு.

    அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. அன்பின் ஜி
    மலர்களைக் குறித்த தொகுப்பு அழகிய படங்களுடன் அருமையாக தந்தீர்கள்.

    மங்கையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. துரை அண்ணா நேற்று தளம் பக்கம் காலைக்குப் பிறகு வரவே இல்லை....திருமண நிகழ்வு...மாமியார் வீடென்று போய்...இன்று காலை முதல் உங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாமல் இதோ இப்போதுதான் நுழைகிறேன்....அழகான பதிவாய்...இதோ வாசித்து வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. பூவையாரான எங்கள் எல்லோருக்கும் பூக்கள் வழி வாழ்த்துகள்!!! துரை அண்ணா மிக்க நன்றி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும்
      அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. செந்தாமதை வெண் தாமரை அழகான விவரணம் மருத்துவக் குறிப்புகள்....தாமரை இதழ் கஷாயம்! அட! பூ கிடைக்கிறதா அண்ணா அன்றலர்ந்த பூ தான் வாங்க வேண்டுமா இல்லை நாட்டு மருந்து கடையில் சேமிக்கப்பட்ட ரோஜா இதழ் போல தாமரை இதழ்கள் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்...ஊரில் என்றால் அன்றலரந்தது கிடைக்கும்....குறித்துக் கொண்டுவிட்டேன்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் செந்தாமரைப் பூக்கள் கிடைக்கின்றன..
      என்னிடம் இருப்பவை செந்தாமரை இதழ்கள்..

      பூக்கடைகளில் கிடைக்கும்போது வாங்கி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளலாம்...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. ஒவ்வொரு பூவும் அழகு!!! நான் எல்லாப் பூக்களையும் அது காட்டுப்பூ என்றாலும் ரசிப்பதுண்டு. இயற்கையின் படைப்பில் எதைப் புறம் தள்ள முடியும் இல்லையா?!

    முன்பெல்லாம் வகுப்பில் மல்லிகைப் பூவின் பெயர் தாங்கி பலரும் இருப்பதையும், செண்பகப் பூவை பெயராய் சூடுவதைச் சொன்னதையும் பூவையும் பெயரையும் இணைத்துச் சொன்ன ரஸத்தை மிகவும் ரசித்தேன்!!!!

    கூடுதலாக ...ஏழை எளியோர் சூடுக்கொண்டு களித்த செண்பகப் பூவின் பெயராய் சூடிக் கொண்ட செண்பகப் பாண்டியன் கூந்தலில் நறுமணம் தேடி தமிழுக்குப் புகழ் சேர்த்தான் என்று சொல்லியிருப்பது அட்டகாசம்

    இப்படி எல்லாம் பூக்களைக் கொண்டே அழகான சொல்லாடலால், கருத்தாடலால் இறை உணர்வுடன், அழகிய தமிழ்ப்பாடலுடன் இனிய தமிழில் பதிவு எழுதும் பெருமை துரை அண்ணாவைத்தான் சேரும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் படைப்பில் காட்டுப்பூ என்றோ நாட்டுப் பூ என்றோ ஏதுமில்லை..

      ஒவ்வொன்றுக்கும் பயன்களை அவன் வைத்திருக்கின்றான்..

      நாம் அறிந்திருப்பவை கொஞ்சமே...

      சொல்லாடல் கண்டு பதிவைச் சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. மிக அழகிய பதிவு. தாமரைப்பூக்களைத் தவிர்த்து மற்ற மல்லி, பவளமல்லி, துளசி, தும்பை போன்றவை அம்பத்தூர் வீட்டினில் இருந்தன! ஶ்ரீராம் முகநூலில் போட்டிருந்த பாரிஜாதமும், விருக்ஷிப் பூக்களும், செம்பருத்தியும் கூட இருந்தன. :( இப்போ எதுவும் இல்லை. சந்தனமுல்லையைப் பறித்துத் தொடுப்பது தினசரி வேலை! இப்போ!!!!!!!!!!! போகட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் குறித்துள்ள செம்பருத்திப் பூவின் பயன்கள் அளப்பரியவை..
      முன்பு எங்கள் வீட்டுத் தோட்டத்திலும் சந்தனமுல்லை இருந்தது..

      தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. தாமரைக் கிழங்கு/தண்டு (?) சமைத்துச் சாப்பிட்டிருக்கோம். வற்றலும் போடலாம். இங்கே தமிழ்நாட்டில் அரிதாகக் கிடைக்கிறது. வட மாநிலங்களில் தாமரைத் தண்டு நிறையக் கிடைக்கும். சமைப்பார்கள். எப்போவோ ஒரு முறை தாமரை இலைக் கஷாயம் சாப்பிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரைக் கிழங்கு/ தண்டு இவை சாப்பிட்டதில்லை..
      முதிர்ந்த பூவில் நடுவிலிருக்கும் சூலகத்தின் முத்துகளைச் சாப்பிட்டதுண்டு...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. சென்னையில் இருந்தவரை ஒவ்வொரு கோடைக்காலமும் கடப்பது பெரிய பாடாக இருக்கும். ஃபோட்டோ அலர்ஜியினால் கஷ்டப்படுவேன். வெளியே வரவே முடியாது. தும்பைப்பூக்கள், இலைகள், குப்பை மேனி, துளசி, வேப்பிலை, மஞ்சள் இவை தான் என்னுடைய தோலுக்குப் பாதுகாப்புக் கொடுத்தன. நல்லவேளையாய் இங்கே அப்படி ஏதும் வரவில்லை. ஆனாலும் வெயிலில் சில குறிப்பிட்ட துணிகளைக் கட்டிக் கொண்டால் பிரச்னை தான்! :) அந்தத் துணி எதுனு கண்டுபிடிச்சா விலக்கலாம். பல சமயங்களிலும் அணிந்த பின்னரே தெரிய வரும்! :)))) குப்பைமேனியையும், வேப்பிலையையும், துளசியையும் தேடி ஓடணும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தும்பை, தூதுவளை,குப்பைமேனி, துளசி,வேப்பிலை, மஞ்சள் எல்லாமே அருமருந்துகள்...

      நமக்கு அருகில் கிடைப்பவை.. ஆனால் இன்றைய சூழ்நிலையில்?...

      தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  22. தாமரை இதழ்க் கஷாயம் சாப்பிட்டிருக்கேன்! என வர வேண்டியது! தாமரை இலை எனச் சொல்லிவிட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை இலையில் சாப்பிடுவது மிகவும் மிகவும் நல்லது...

      அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. தேவாரப் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களுக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. பூக்களின் அழகும்,அதன் பலன்களும். அதற்கேற்ற பாடல்களும் மிக்க அழகு. நான் நிதானமாகப் படித்தே எழுதுகின்றேன். தாமரை இலையைக் கவிழ்த்துப் போட்டு அதில் சிந்தாமல் சாபபிடுவதற்குப் போட்டி போடுவோம். தாமரைத் தண்டு வற்றல் கேரளாவில் பிரமாதமாக இருக்கும். தாமரை விதைகள்தான் மகானா என்று சொல்லப்படும் வெண்மைநிறம்கொண்ட விதைகள். நல்ல விலையுள்ளது. வட இந்திய உணவு வகையில் சேர்க்கப்படுவது. கோயில்களில் இதைக்கொண்டு செய்த இனிப்புகள் பிரஸாதமாகவும் வழங்கப்படுமாம்.இதெல்லாம் டால்மக்னி என்ற உணவுக்குறிப்பு எழுது முன்னர் கேட்டறிந்தவை.உங்களுடைய குறிப்புகள் மிக்கப் பயனுள்ளது. அதிக விஷயங்களடங்கியது. மிக்க நன்றி எல்லா வகையிலும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா...

      தாங்கள் தஞ்சையம்பதிக்கு வருகை தந்து மேலதிகத் தகவல்களுடன் கருத்துரை வழங்கியது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி..வணக்கம்.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..