நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 03, 2017

திருவெண்காடு 2

முதல் பதிவு

திருவெண்காடு 1 

இப்படியாக,
அம்பிகையின் அமுதமொழியினைக் கேட்டு ஆறுதல் கொண்ட ஐராவதம்
வடக்கிலிருந்து பொடி நடையாகத் தெற்கே திருவெண்காட்டிற்கு வந்து சேர்ந்தது..

ஐயன் அருளியபடியே திருவெண்காட்டில் மூன்று குளங்களைக் கண்டது...

அப்போதெல்லாம்
அந்தக் குளங்களுக்கு படித்துறைகள் கட்டுமானங்கள் இல்லை...

எனவே,  கஷ்டப்படாமல் முதல் குளத்தில் இறங்கியது...

இடையில் ஒரு சந்தேகம்..

தண்ணீருக்குள் மூர்க்க முதலை கிடந்தால்!?..

கிடக்கட்டுமே.. ஐயனுடைய ஆணைப்படி இங்கே வந்திருக்கிறோம்...
அதற்கு மேல் நம்மைக் கடிக்க வேண்டும் என்று முதலை வந்தால் நஷ்டம் நமக்கொன்றும் இல்லை...

அன்றைக்கு சக்ராயுதம் வந்தது.. இன்றைக்கு சூலாயுதம் வரும்!..
அவ்வளவு தான் வித்தியாசம்!..

சந்தோஷமாக பிளிறியவாறு குளத்துள் இறங்கிய ஐராவதம்
நின்று நிம்மதியாக நீராடியது...


இப்படியாக -
ஏனைய இரண்டு குளங்களிலும் குளித்து விட்டுக் கரையேறிய ஐராவதம் - அந்தக் குளங்களில் பூத்துக் கிடந்த தாமரை மலர்களைப் பறித்தெடுத்து வந்து
ஆங்கிருந்த சிவலிங்கத்திற்குச் சூட்டி வலம் செய்து வணங்கியது..

நாட்கள் நகர்ந்தன.. ஓடுவதாகத் தெரியவில்லை..

அவ்வப்போது தண்ணீரில் பிரதிபலிக்கும் தன் உடம்பை உற்று கவனிக்கும்..

ஏதாவது மாற்றங்கள் தெரிகின்றதா.. - என்று...

ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை...

இதற்கிடையில்,

பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்தினால் எல்லாம் சரியாகும் என்று யாரோ கொளுத்திப் போட்டார்கள்..

ஆதாயத்திற்காக அசுரர்கள் வீட்டில் கை நனைத்தான் - தேவேந்திரன்..

அதன் பின் -
அசுரர்களும் தேவர்களும் ஒன்றாகக் கூடினார்கள்..

சிவ பரம்பொருளின் இசைவினைப் பெறாமல் -
தான் தோன்றித்தனமாக மந்தர மலையைப் பிடுங்கினார்கள்..

அங்கிருந்த மரங்கள் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் முதலான உயிரினங்களை இன்னலுக்கு உள்ளாக்கினார்கள்..

பிடுங்கிய மலையை பாற்கடலுக்குள் போட்டு ஓரமாகப் போன பாம்பைப் பிடித்துச் சுற்றி அப்படியும் இப்படியுமாக இழுத்து கடலோடு சேர்ந்து சுற்றுப் புறத்தையும் கலக்கியடித்தார்கள்...

மந்தர மலை தலைகுப்புற கடலுக்குள் கவிழ்ந்தது..

போனால் போகிறதெனெ ஸ்ரீ ஹரிபரந்தாமன்
உதவி செய்ய மறுபடியும் அதே களேபரம்..

சுற்றுப்புறம் இயல்பு கெட்டால் என்ன ஆகும்?..

அதுதான் நடந்தது... உலகுக்கு ஒவ்வாத நஞ்சு விளைந்தது..

அது தீயவர் கையில் கிடைத்தால் கேடு என்று -
இறைவன் தான் தன்னுடைய கண்டத்துக்குள்
அடக்கி வைத்துக் கொண்டு எல்லாரையும் காப்பாற்றினார்...

பிரச்னைகள் எல்லாம் சரியானதும்
முறையான அனுமதியுடன் நிதானமாக வேலை செய்தனர்..

அதன் பிறகு தான் அமுதம் திரண்டு வந்தது...

அமுதம் திரண்டு வந்த வேளையில்
தேவலோகத்தின் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்தன..

தேவகன்னியர்கள் இளமையுடன் திரும்பினர்...
தேவேந்திரனுக்கு தாள முடியாத மகிழ்ச்சி... ஒரே சந்தோஷம்...

இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத ஐராவதம் -
தானுண்டு.. தன்னுடைய பூஜை உண்டு என்றிருந்தது..

எனினும் -
ஐராவதத்தின் வழிபாட்டினில் மகிழ்ச்சியடைந்த
ஐயனும் அம்பிகையும் திருவெண்காட்டிற்கு எழுந்தருளினர்..

ஐராவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி.. தன்னுடைய பூஜையும் பலித்ததே!.. - என்று..

அந்த அளவில் ஐராவதத்தின் சாபமும் நிவர்த்தியானது...

அம்மையப்பனை வலம் செய்து வணங்கியது ஐராவதம்...

துர்வாச முனிவருடைய சாபத்தினால்
தனது வெள்ளை நிறத்தை இழந்திருந்த ஐராவதம்
இறையருளால் சாப விமோசனம் பெற்றது..

மறுபடியும் வெள்ளை நிறத்தைப் பெற்ற யானையின் அழகு -
முன்னை விட அதிகமாகப் பொலிந்தது...

ஐராவதத்தை மீண்டும் தேவலோகத்திற்குச் செல்லுமாறு பணித்தனர் - இறைவனும் இறைவியும்...

அவர்களுக்கு நன்றி கூறிய ஐராவதம் அங்கிருந்து புறப்பட்டு
தேவலோகத்தை அடைந்தது...

அங்கே தேவகன்னியரின் நடனத்தில் லயித்திருந்தான் தேவேந்திரன்..

ஐராவதத்தைக் கண்டதும் ஆவலுடன் ஓடி வந்து வரவேற்றான்...

துதிக்கையால் அவனை அன்புடன் அணைத்துக் கொண்ட ஐராவதம் -

தேவேந்திரனே!..
இனியாகிலும் பெரியோரை அலட்சியம் செய்யாதே..
அவர்களை மதித்து மரியாதை செய்து வணங்கு...

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து!..

இவ்வாறு தமிழ் வேதம் சொல்லியிருக்கின்றது.. அதனை என்றும் மறவாதே!..

- என்று, மெதுவாகச் சொன்னது...

அப்போதைக்கு -
சரி.. சரி!.. - என்று தலையாட்டிக் கொண்ட தேவேந்திரன் -
மீண்டும் ஆடலரங்கத்திற்குள் நுழைந்தான்..
***


இப்படியொரு தலவரலாற்றைக் காட்டுவது 
திருவெண்காடு திருத்தலம்..

அடுத்த பதிவினில்
திருக்கோயில் தரிசனம்..

அதற்கு முன்பாக 
ஆன்றோர் அருளிய அமுத மொழிகள்.. 

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்ற பிற..(0095)

கீழோர் ஆயினும் தாழ உரை..
-: கொன்றைவேந்தன் :-

நம்மிலும் குறைந்தவர்கள் என்றாலும் 
அவரிடத்தும் அன்புடன் பேசுதல் வேண்டும் - என்பது
ஔவையாரின் அமுத வாக்கு..
***

இன்று ஐப்பசி நிறைநாள்..
சகல சிவாலயங்களிலும் சிவமூர்த்திக்கு
அன்னாபிஷேக அலங்காரம்..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

17 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஐராவதத்தின் பூஜையின் மகிமை கண்டேன் நன்று.
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஐப்பசி அன்னாபிஷேக காட்சி கண்டுமகிழ்ந்தேன்.
    திருவெண்காடு தலபுராணம் சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    நேரமிருப்பின் இந்த தளம் சென்று வரவும்

    https://nanbansuresh.blogspot.in/2017/11/blog-post_2.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்குச் சென்று வந்தேன்..
      தகவல் அளித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்னாபிஷேகத் திருநாளன்று தங்கள் சிவப்பழமான கட்டுரையைப் படித்ததே பெரும்பேறாக நினைக்கிறேன். நன்றி!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எளியவன் தங்களால் மகிழ்ச்சியுற்றேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
  5. சிவ தரிசனம் மிக நன்று...

    ஐராவதத்திற்கு மீண்டும் பழைய அழகு கிடைக்க வில்லையா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாபம் நீங்கி ..முன்னை விட அழகு பெற்றது என்றீர்...

      பின் ஏன் வெண்மைக்கு மாறவில்லை....

      (சின்ன ஐயம்)

      நீக்கு
    2. அன்புடையீர்..

      >>> அந்த அளவில் ஐராவதத்தின் சாபமும் நிவர்த்தியானது...
      அம்மையப்பனை வலம் செய்து வணங்கியது ஐராவதம்..
      அதனுடைய அழகு முன்னை விட அதிகமாகப் பொலிந்தது... >>>

      - என்று குறித்திருக்கின்றேன்..

      ஆயினும் இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது..

      நீக்கு
    3. அன்புடையீர்..

      பின் ஏன் வெண்மைக்கு மாறவில்லை?.. - என்ற, தங்களது ஐயத்திற்கு விடையாக -

      >>> துர்வாச முனிவருடைய சாபத்தினால்
      தனது வெள்ளை நிறத்தை இழந்திருந்த ஐராவதம்
      இறையருளால் சாப விமோசனம் பெற்றது..

      மறுபடியும் வெள்ளை நிறத்தைப் பெற்ற யானையின் அழகு -
      முன்னை விட அதிகமாகப் பொலிந்தது...<<<

      - என்று திருத்தம் செய்திருக்கின்றேன்..

      தஙகள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. நன்றி ஐயா..

      தற்போது அறிந்துக் கொண்டேன்....

      சிறு குழப்பம் ..அவ்வளவே...ஆனால் நீங்கள் சொல்லும் முறை மிக எளிதாகவும் ..இயல்பாகவும்...உள்ளது..


      தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்...

      நீக்கு
    5. அன்புடையீர்..

      இதைப் போன்ற கருத்துரைகளால் தான் பதிவு சிறப்புறுகின்றது..
      நான் தான் தங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...

      தங்களது மீள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. அருமையாக இருக்கு.. மிகவும் சுவாரஷ்யம்.

    ///பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்தினால் எல்லாம் சரியாகும் என்று யாரோ கொளுத்திப் போட்டார்கள்..///
    ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  7. திருவெண்காடு சென்றுள்ளேன். முழுமையான வரலாற்றினைத் தங்கள் பதிவு தந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஐராவதத்தின் கதை அறிந்தோம் எப்போதோ கேட்டிருந்த நினைவு இருந்தாலும் இப்போது மீண்டும் தங்களின் பதிவு வழி விரிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. அருமை ஐயா/சகோ

    அடுத்த விட்டுப் போன பதிவுகளைத் தொடர்கிறோம்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..