நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவெண்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவெண்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 12, 2017

திருவெண்காடு 5

திருவெண்காடு திருத்தலத்தைப் பற்றிய செய்திகளை
நான்கு பகுதிகளுடன் நிறைவு செய்யலாம் - என்றிருந்தேன்..

ஆனால் -

அங்கே அமைதியையும் ஆனந்தத்தையும் அள்ளி அள்ளி அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கும் எம்பெருமானின் நாட்டம் அதுவாக இல்லை...

தவிரவும் -

ஸ்ரீபுதன் - திருவெண்காட்டில் சிவ தரிசனம் செய்து
வித்யாகாரகன் எனும் நவக்ரக நிலையினைப் பெற்றான்..

இங்கே -

மோனத் தவத்தில் ஆழ்ந்திருக்கும்
ஸ்ரீபுதன் - பச்சை நிறத்திற்கு அதிபதி..
எண் ஐந்தினை ஆட்சி செய்பவன்.. 


ஸ்ரீபுதன்
நன்றி - சிவனடியார் திருக்கூட்டம்
இப்படி ஐந்தின் நாயகனாக ஸ்ரீபுதன் இருப்பதனால் -
பொதுவான குணாதிசயம் எப்படி!?..

ஐந்தினுக்கு உட்பட்டவர் ஜனவசியம் உடையவராகவும்

கலை மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் உள்ளவராகவும்
பழைமையைப் பேணுவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பர்..

குழந்தையைப் போல எவரிடமும் பழகும் தன்மை உடையவர்..

அதே சமயம் புத்தியும் யோசனையும் மின்னல் வேகத்தில் செயல்படும்..
மனதில் தோன்றியவற்றை தயக்கமின்றி அப்படியே சொல்லுபவர்..
இருந்தாலும் ரகசியங்களை எதற்காகவும் வெளியிடாதவர்...

தனிமை விரும்பி.. எனினும் உற்சாகம் கரை புரண்டோடும்...

மனோதிடம் உடையவர்.. என்றாலும்,
சமயத்தில் சிறு விஷயங்களுக்கும் கலங்கித் தவிப்பவர்..

பயணங்களில் மிக்க நாட்டமுடையவர்...

நண்பர்களுக்கு இனியவர்..பகைவரையும் நேசிப்பவர்..
பொருளாதாரத்தில் இளகிய மனம்... சிக்கனம் தெரியாது...
அதற்காக ஆடம்பரத்தில் பிரியமும் கிடையாது...

பெண்களின் மீது பெருமதிப்பு உடையவர்..

பொதுவாக இவர்களது மனசு தங்கம்..
வாங்கி வந்த வரத்தின்படி கோள் சாரம் சரியில்லை எனில்
தகரத்துக்கும் கீழே!..

பெயர் எண் விதி எண் - இவைகள் நன்றாகக் கூடியிருந்தால்

ஐந்தாம் எண்ணுக்குடையவர்களிடம் -

தொட்டது துலங்கும்படியான கைராசி..

தியானம் மந்திர சக்தி கூடியிருக்கும்..
அருளும் பொருளும் உடனிருக்கும்...
லக்ஷ்மி கடாட்சத்திற்குக் குறைவிருக்காது..
ஆலயத் திருப்பணி மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு..
முதுமையிலும் சந்தோஷம்.. இனிமையான வாழ்க்கை..
- என்றெல்லாம் சொல்லப்படுகின்றது..

இவை எல்லாம் பொதுவானவையே!..


நாளும் கோளும் மாற்றங்களுக்குள்ளாகும் போது

குணங்களும் சற்றே மாறுதலுக்குரியவை..

இருந்தாலும்,

கன்னி ராசி ஐந்தாம் எண் - என்றெல்லாம்
அமையப் பெற்றவர்கள் 95% நம்பிக்கைக்குரியவர்கள்...
சுட்டாலும் வெண்மையுடைய சங்கினைப் போன்றவர்கள்...
***

அப்படி..ன்னா - நானும் இப்படித்தானா!..

டேய் தம்பீ!.. டமாரச் சத்தம் அதிகமா இருக்கே!?..

இதோ.. பதிவுக்குப் போகலாங்...கணா!..
***

இந்த அளவில், ஐந்தாவது பதிவு மலர்கின்றது..
வாருங்கள் நாம் பதிவினுக்குச் செல்வோம்..

இதுவரை அளித்துள்ள நான்கு பதிவுகளையும்
கீழுள்ள இணைப்புகளின் வழியாகக் காணலாம்..

திருவெண்காடு 1 
திருவெண்காடு 2 
திருவெண்காடு 3 
திருவெண்காடு 4 


திருவெண்காட்டிற்குச் சென்றவுடனேயே -
மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்களுடைய நினைவு தான் வந்தது..

ஏனெனில், அவர்கள் - தமது வலைத் தளத்தில்
திருவெண்காட்டைப் பற்றி சிறப்பாக சொல்லியிருந்தார்கள்...

இப்போது கூட, சென்ற பதிவின் கருத்துரையில் -
திருவெண்காட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்...

ஏழாண்டு காலம் இங்கே வசித்திருக்கின்றார்கள்.. கொடுத்து வைத்தவர்கள்..

பதிவுக்காக நான் தொகுத்து வைத்திருந்த சில செய்திகளை
கோமதி அரசு அவர்களது கருத்துரையில் கண்டதும் மகிழ்ச்சி..

அக்னி தீர்த்தம்.. பின்னால் தெரிவது கிழக்கு ராஜகோபுரம்
அக்னி தீர்த்தத்தில் ஒட்டி உறவாடும் தாமரை..
சூரிய தீர்த்தம்
சந்திர தீர்த்தம். குளக்கரையில் அம்பிகையின் திருக்கோயில்..
சந்திர தீர்த்தக் கரையிலிருந்து கிழக்கு ராஜகோபுரம்
தல விருட்சம் - வட ஆல்..
ஆலின் கீழ் சிவலிங்கம்
ஆலினைச் சுற்றிலும் நாக பிரதிஷ்டை
பட்டினத்தடிகளாரின் இயற்பெயர் திருவெண்காடர்...

அவரது தாயார் - ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரரை நோக்கித் தவமிருந்து

அவரைப் பெற்றெடுத்ததாகச் சொல்வர்...

சங்குமுகம் ஆடி

சாயாவனம் பார்த்து
முக்குளத் தீர்த்தமாடி
முத்தி பெற வந்தவனோ!..

- என்றொரு தாலாட்டுப் பாடல் இதனைக் குறிப்பதாகச் சொல்வழக்கு.. 



கொடி மரமும் நந்தி மண்டபமும்
ஸ்ரீ அதிகார நந்தி.
மேல் தளத்துடன் கூடி திருமாளிகைப் பத்தி..
கடல் போன்ற செல்வத்தைத் துறந்து - திருவெண்காடர் 
துறவியான பின் - திருவெண்காடு கோயிலுக்கு வந்தபோது
ஸ்ரீ ஸ்வேதாரண்ய மூர்த்தியே குருவாக இருந்து
தீட்சை வழங்கியதாக ஐதீகம்...

திருச்செங்காட்டங்குடியில்
இறைவனுக்கு அமுது படைத்த சிறுத்தொண்ட நாயனாரை  அறிவோம்...

இவரே நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி..

வாதாபியை வென்று அங்கிருந்த கணபதி விக்ரகத்தைத்
தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர்..

சிறுத்தொண்ட நாயனாரின் மனைவியார் திருவெண்காட்டினைச் சேர்ந்தவர்...

அவரது திருப்பெயர் - திருவெண்காட்டு நங்கை..


ஆதி சிதம்பரம்.. ஸ்ரீநடராஜ சபை

தில்லைச் சிதம்பரத்தினைப் போலவே இங்கும் நடராஜ சபை புகழுடையது..
தினமும் நான்கு கால பூஜை இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு நிகழ்கின்றது..

அருள் தரும் ஸ்ரீஅகோரமூர்த்தி
கார்த்திகை மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று
ஸ்ரீ அகோரமூர்த்திக்கு மஹா ருத்ராபிஷேகம் நிகழ்வுறும்..

தவிரவும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நள்ளிரவுக்கு முன்பாக

ஸ்ரீ அகோரமூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்..

பூர நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் கூடி வரும் நாள்

மிகச் சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது...

இப்பதிவினை வெளியிட்ட பிறகு 
மீண்டும் தகவல் ஒன்றினைப் பதிவு செய்கின்றேன்..

இதனை வெளியிட்ட நேரம் காலை 9.10..
இப்போது நேரம் முற்பகல் 11.10

சற்று நேரத்திற்கு முன் தற்செயலாக நாட்காட்டியை நோக்கினால்
இன்று ஐப்பசி மாதத்தின் பூர நட்சத்திரம்...

இன்று ஞாயிற்றுக் கிழமை..
இன்று மாலை 4.08 முதல் நாளை பிற்பகல் 3.40 வரைக்கும் பூரம்..

ஒருகணம் என்னையே நான் மறந்தேன்...

நல்ல விஷயங்களைச் சிந்திக்கும்போது
அந்த நல்ல விஷயங்களே நம்மைத் தேடி வருகின்றன..



ஸ்ரீ புதன் சந்நிதி விமானம்
ஸ்ரீ புதன் சிவ தரிசனம் செய்த திருத்தலம் என்பதால்
இங்கே நவக்ரக தோஷங்கள் அனைத்தும் விலகுகின்றன..

பரிகாரம் என்பதாக இல்லாமல் -
பச்சை நிறமுடைய வஸ்திரத்தையும் முல்லை மலர்ச் சரங்களையும்
சமர்ப்பித்து ஸ்ரீபுதனை வணங்குவது நல்லது...

இயன்றவரை ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவதும்
புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்கித் தருவதும் நல்லது..

எளியோருக்கு பச்சைப் பயறு சுண்டல் வழங்குவதும் பச்சை நிற உடைகள் பச்சைப் பயிறு - இவற்றினைத் தானம் செய்வதும் சிறப்புடையது..

வக்ரம் இல்லாமல் நவ கிரகங்கள்

இத்தலத்தில் மேற்கு நோக்கியபடி ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி திகழ்கின்றனள்..
நவக்கிரகங்கள் வக்ரமின்றி நேர் வரிசையில் அருள்பாலிக்கின்றனர்...


திருவெண்காட்டு தலத்திற்கு வந்து இங்கு அமைந்துள்ள 
மூன்று திருக்குளங்களிலும் நீராடி இறைவனை வணங்குவோர் நல்ல மகப்பேற்றினையும் அத்துடன் மனதில் எண்ணிய வரங்களையும் பெறுவர்.. 
நினைத்த காரியங்கள் எல்லா நலன்களுடன் கைகூடி வரும்.. 
இதிலே யாதொரு சந்தேகமும் வேண்டாம்!..

- என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு..  


மேற்கு ராஜகோபுரம்..
என்னுடைய மனதில் இப்படித் தோன்றுகின்றது..

நம் வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நிகழ்ந்ததும்
அடுத்து வரும் சில நாட்களில் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம் மற்றும் சந்திர தீர்த்தங்களில் நீராடி
ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வர ஸ்வாமியையும் ஸ்ரீ பிரம்மவித்யா அம்பிகையையும் வழிபாடு செய்தல் வேண்டும்..

நம்பிக்கையுடன் இவ்வாறு 
வழிபடுவோர் தம் இல்லங்களில்
நன்மக்கட்பேறு நிகழும்..

நல்ல பிள்ளைகளுடன் 
தொட்டில்கள் நற்றமிழ் பேசும்...

நல்ல பிள்ளைகளின் வருகை 
இனிவரும் நாட்களுக்கு இன்றியமையாதது...

யார் கண்டது!..
நல்லனவற்றை விரும்பும் நாமே கூட
நம் சந்ததியினர்க்குப் பிள்ளைகளாகலாம்!... 
***

இந்தப் பதிவில்
திருமிகு நெல்லைத் தமிழன் அவர்கள்
கேட்டுக் கொண்டபடிக்கு - 
பேயடையா பிரிவெய்தும்..
எனும் திருப்பாடலுக்கான விளக்கம்..

தருமபுர ஆதீனப் பதிப்பில்
சான்றோர்கள் அளித்துள்ள விரிவுரையை
என்னளவில் தந்திருக்கின்றேன்..
- - -

எல்லாம் வல்ல இறைவன் திருவெண்காடு எனும் திருத்தலத்தில்
வேய் எனும் மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய உமையுடன் ஒருபாகமாகத் திகழ்கின்றான்..

இத்திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள முக்குளங்களிலும் மூழ்கிக் குளித்து வணங்குபவர் தம்மைத் தீவினைகள் அணுகுவதில்லை..

(தோய்வினையார் அவர் - எனும் திருவாக்கினுக்கு விளக்கம்:
 தோய்தல் - மூழ்கிக் குளித்தல்.. தோய்வினையார் அவர் - என்பதற்கு மூழ்கிக் குளிப்பவர் தமக்கு - என்பதாகும்..

தோயாவாம் தீவினையே - எனும் திருவாக்கினுக்கு விளக்கம்:
தோய்தல் எனில் பீடித்தல் என்பதாகும்.. தோயாவாம் தீவினையே - எனில்,
முக்குளங்களிலும் மூழ்கிக் குளிக்கும் அடியவரை தீவினைகள் பற்றுவதில்லை - என்பதாகும்..)

மேலும், நல்ல பிள்ளைகளைப் பேறாகப் பெறவேண்டியும்
மற்றும் அதனோடுடையதாக மனதில் நினைப்பவற்றையும்
நினைத்தவாறே வரங்களாகப் பெறுவர்..

நம்மைப் பிடித்திருக்கும் பேய்கள் (கெட்ட குணங்கள் ) கூட
விலகி ஓடிப் போய்விடும்... 

இதிலே யாதொரு ஐயமும் வேண்டாம்!..


பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே!..(2/48/2)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
*** 

புதன், நவம்பர் 08, 2017

திருவெண்காடு 4

அனைவருக்கும் 
அன்பின் வணக்கம்..
ஸ்ரீ மஹாகணபதி
தஞ்சை பெரியகோயில்
இந்தப் பதிவு
தஞ்சையம்பதியின் 
ஆயிரமாவது பதிவு..

இதற்கெல்லாம் தாங்கள் அளித்த 
ஊக்கமும் உற்சாகமுமே காரணம்..

இனிவரும் நாட்களில்
அவ்வண்ணமே வேண்டுகின்றேன்..
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
***

திருவெண்காடு திருத்தலத்தைப் பற்றிய தொடர் பதிவில்
இன்று நான்காவது பதிவு..

முந்தைய பதிவுகளுக்கான 
இணைப்புகள்..

***

ஈசன் எம்பெருமானால் வீழ்த்தப்பட்டவன் சலந்தராசுரன்...

சலந்தராசுரனின் வீழ்ச்சிக்குப் பின்
அவனது மகன் மருத்துவன் என்பவன் வீறு கொண்டு எழுந்தான்...

அப்போது அசுர குலத்தில் இருந்த நல்லோர் சிலர் சொன்னார்கள்..

ஈசனை எதிர்ப்பதென்பது ஆகாது...
இறைவனை வணங்கி வரங்களைப் பெற்று வாழ்ந்து கொள்வாயாக!..

அதன்படி - இறைவனை எண்ணித் தவமிருந்தான்..

அதன் பயனாக -
ஈசனிடமிருந்து பலவித வரங்களையும்
பலவித ஆயுங்களையும் பெற்றுக் கொண்டான்..

ஆயுதங்களைப் பெற்றக் கொண்ட அவனால்
அவற்றை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..

வழக்கம் போல இந்திரனைத் துரத்திக் கொண்டு ஓடினான்...

இந்திரனும் வழக்கம் போல இறைவனிடம் முறையிட்டு நின்றான்..

நந்தியம்பெருமானை அழைத்த இறைவன் -
மருத்துவாசுரனுக்கு அறிவுரைகளைக் கூறி வருமாறு அனுப்பினார்...

ஆனால் விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருந்தது..
மருத்துவாசுரனின் மூளைக்கு மருத்துவம் தேவைப்பட்டது..

அறிவுரை கூற வந்த நந்தியம்பெருமானை அவமதித்தான்...

ஈசனிடமிருந்து வரமாகப் பெற்ற ஆயுதங்களால் தாக்கினான்..
நந்தியம்பெருமானின் திருமேனி முழுதும் காயங்கள் ஏற்பட்டன..

நந்தியம்பெருமான் நினைத்திருந்தால் -
தெள்ளுப் பூச்சியைப் போல அசுரனை நசுக்கி அழித்திருக்கலாம்...

அவர் அங்கு வந்தது - அசுரனுக்கு அறிவுரை புகல்வதற்காக...
ஆயுதங்கொண்டு அசுரனுடன் போரிடுவதற்கு அல்ல!..

அத்துடன் -
அசுரன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் சிவபெருமானால் வழங்கப்பட்டவை..

ஆகையால் அந்த ஆயுதங்களுக்கு மதிப்பளித்து
அவற்றையெல்லாம் தன்மீது தாங்கிக் கொண்டார்...

நந்தியம்பெருமான் தாக்கப்படுவதைக் கண்ட
இறைவன் பெருங்கோபமுற்றார்..

அந்த அளவில்
இறைவனின் கோபம் ஈசான்ய திருமுகத்திலிருந்து
அகோர மூர்த்தி - என்ற திருக்கோலத்தில் வெளிப்பட்டது...

எட்டுத் திருக்கரங்களுடன் விளங்கிய
அகோர மூர்த்தி வலது திருவடியை முன்னெடுத்தார்..

அந்தப் பேருருவைக் கண்ட மாத்திரத்தில் மருத்துவாசுரன்
அஞ்சி நடுங்கி அங்கேயே வீழ்ந்து மாண்டு போனான்...

அகோரமூர்த்தியைப் பணிந்து வணங்கிய மகாமுனிவர்களும் தேவர்களும்
பெருமானை திருவெண்காட்டிலேயே விளங்கியிருக்க வேண்டிக் கொண்டனர்...

இத்தகு சிறப்புடைய திருக்கோயில் 
மூன்று தீர்த்தங்களையும் மூன்று தலமரங்களையும் உடையது...

இருந்தும் -
இத்திருக்கோயில் விளம்பரத்தனமான ஊடகங்களால் -
புதன் பகவான் கோயில் என்று பிழையாகவே சொல்லப்படுகின்றது...


திருத்தலம் - திருவெண்காடு

ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் 
இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி.. 

தீர்த்தங்கள் 
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

தலவிருட்சம்
வட ஆல், வில்வம், கொன்றை..
***

கிழக்கு நோக்கிய திருக்கோயில்..
ஐந்து நிலைகளுடன் நெடிதுயர்ந்த ராஜகோபுரம்..

ராஜகோபுரத்தைக் கடந்ததும் விசாலமான பெருவெளி...

கொடி மரத்து விநாயகர்.. கொடிமரம் பலிபீடம்..

அவற்றின் தென் புறமாக அக்னி தீர்த்தம்...
குளக்கரையில் அக்னி வழிபட்ட சிவலிங்க சந்நிதி..

படித்துறையுடன் கூடிய குளம்.. குளத்தில் தண்ணீர் இல்லை..
ஆயினும், அதனை விட்டு அகலாமல் தாமரை படர்ந்திருக்கின்றது...

ஆழ்துளைக் குழாய் மூலமாக குளத்தில் தண்ணீர் நிறைக்கின்றார்கள்...

குளத்தினுள் இறங்கி தீர்த்த தரிசனம் செய்து கொண்டு கரையேறினோம்...



கொடிமரத்து விநாயகப் பெருமானை வணங்கி
முன்மண்டபத்தினைக் கடந்தால் இரண்டாவது ராஜகோபுரம்..

இதோ திருவெண்காட்டு நாதனின் திருச்சந்நிதி வாசல்....

சகல அதிகாரங்களையும் உடைய நந்தியம்பெருமான் -
மருத்துவாசுரனால் தாக்கப்பட்ட திருக்கோலத்தில்
சாந்த ஸ்வரூபனாக சேவை சாதிக்கின்றார்...

அவரைப் பணிந்து கொண்டோம்..

மகா மண்டபம் அழகழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது..

எழிலார்ந்த திருக்கோலத்தில் திருமூலத்தானத்தில்
எம்பெருமான் ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்..

பச்சைப் பட்டுடன் திருக்கோலம்...

ஐராவதத்திற்கு அருள் புரிந்த பரம்பொருளே..
எம்மையும் காத்தருள்க இறைவனே!..
- என்று, பணிந்து நிற்கின்றோம்...

தீப ஆரத்தியில் கருணை வெள்ளம்...
மனதில் அமைதியும் ஆனந்தமும் பொங்கிப் பெருகுகின்றன..

மூலஸ்தானத்திலிருந்து தெற்குத் திருச்சுற்று...

மேல் தளத்துடன் கூடிய திருமாளிகைப் பத்தி..
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் அணி செய்கின்றன...

ஸ்ரீ பத்ரகாளி 
திருச்சுற்றின் நேர் கடைசியில் நிருதி மூலையில்
வடக்கு நோக்கியதாக பத்ரகாளியம்மன் சந்நிதி...

அமர்ந்த திருக்கோலத்தினள்.. எட்டுத் திருக்கரங்கள்..
உடுக்கை, வாள், சக்கரம், பாசக்கயிறு, மணி, கபாலம் இவற்றுடன்
திருக்குறிப்பு காட்டியவளாக பீடத்தில் அமர்ந்திருக்கின்றாள்..

இவளது சந்நிதிக்கு நேர் எதிராக -
வாயு மூலையில் தெற்கு நோக்கிய சந்நிதியில்
ஸ்ரீ அகோர மூர்த்தி..


ஸ்ரீ அகோரமூர்த்தி 
அக்னி ஜ்வாலைகளுடன் எட்டுத் திருக்கரங்கள்..
கம்பீரமாக முன்வைத்து நடந்த வண்ணமாக திருக்கோலம்..

முன் இரு திருக்கரங்களில் திரிசூலமும்
ஏனைய திருக்கரங்களில் குறுங்கத்தி, வாள், டமருகம், 
இருதலைச் சூலம்,  கேடயம், கபாலம் ஆகியனவும் அணி செய்கின்றன..

அகோரமூர்த்தியின் அருகில் நந்தி விளங்குகின்றார்..
திருவடியில் வீழந்துபட்ட மருத்துவாசுரன்..

அகோரமூர்த்தி ஆகிய திருவடிவம் இறைவனின் அறுபத்து நான்கு திருக்கோலங்களுள் நாற்பத்து மூன்றாவது திருக்கோலம் ஆகும்..

பூர நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தான்
அகோர மூர்த்தி திருக்கோலம் காட்டிய பொழுது..

எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 
நள்ளிரவுக்கு முன்பாக விசேஷ பூஜைகள் நிகழ்கின்றன..

அகோரமூர்த்தியின் சந்நிதியில் வணங்கி நிற்பவர் தமக்கு
சகல விதமான வினைகளும் தீர்ந்து அழிகின்றன என்பது ஐதீகம்...



திருச்சுற்றில் தனித்துவமாக விளங்குவது நடராஜ சபை..

இங்கே அம்பிகைக்காக -
ஆனந்தத் தாண்டவம், காளிகா தாண்டவம், 
கௌரி தாண்டவம், முனி தாண்டவம்,
சந்தியா தாண்டவம், திரிபுட தாண்டவம்,
புஜங்க தாண்டவம், பைசாச தாண்டவம்
சங்கார தாண்டவம்
- என, ஒன்பது தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஐதீகம்..

அதனால் ஆதி சிதம்பரம் என்ற சிறப்பும் உண்டு..


ஸ்ரீ துர்காம்பிகை
அடுத்து திருச்சுற்றில் பிரதானமாக விளங்குபவள் - ஸ்ரீ துர்காம்பிகை..
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வடிவழகுடன் திகழ்கின்றனள்..

முன்னிரு திருக்கரங்களால் அபயமளித்து அரவணைப்பவளாக திருக்குறிப்பு அருளும் அம்பிகை -

ஏனைய திருக்கரங்களில் வாள், அம்பு, சக்கரம், சங்கு, தனுசு மற்றும் கேடயம் ஆகியவற்றை ஏந்தியவளாகப் பொலிகின்றாள்...

இத்திருத்தலத்தில் நவக்கிரக தோஷங்கள் விலகுகின்றன..

புதனுக்கு தனி சந்நிதி இருந்தாலும்
நவக்கிரக மண்டலம் என்று தனியாக இல்லை..



இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அடக்க ஒடுக்கமாக ஒரே வரிசையில் விளங்குகின்றனர்...

இந்த அளவில் உள் திருச்சுற்றில் தரிசனம் நிறைவடைகின்றது..

கருவறையை நோக்கி மீண்டும் வணங்கியபடி வெளித் திருச்சுற்றுக்கு வருகின்றோம்...

முன்பே தரிசித்த அக்னி தீர்த்த குளத்தைக் கடந்தால் -
அதற்கு நேராக சூரிய தீர்த்தம்..

குளக்கரையில் சூரியன் வணங்கிய சிவலிங்க சந்நிதி..
அக்னி தீர்த்தத்தைப் போலவே இக்குளமும் தண்ணீரின்றி இருக்கின்றது...

தொடர்ந்து நடந்தால் ஆங்கொரு விசாலமான மண்டபம்.. அதில் விநாயகர் சந்நிதி..

மேலைத் திருச்சுற்று.. மேற்குத் திருவாசல் - ராஜகோபுரத்துடன் திகழ்கின்றது..

இங்கும் ஒரு பெரிய மண்டபம்.. அழகான முருகன் சந்நிதி..
ஆறு திருமுகங்களுடன் திருக்கோலம்..

மேலைத் திருச்சுற்றில் இருந்து வடக்கு திருச்சுற்றுக்குத் திரும்பியதும்

ஸ்ரீ பிரம்மவித்யாநாயகியின் திருக்கோயில் -
கிழக்கு முகமாக கொடி மரத்துடன் திகழ்கின்றது..


ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி 
தாயே.. பராசக்தி!.. - என்று அவளை நோக்கி ஓடுகின்றது மனம்..

அம்பிகையும் அழகான பச்சைப் பட்டு உடுத்தித் திகழ்கின்றாள்...
பரிதவிக்கும் உள்ளங்களைப் பாசத்துடன் அணைத்துக் காப்பவளாக அவள்!..

என்ன ஒரு அமைதி மனதில்..
இதற்காகவே அன்னையின் சந்நிதி வாசலில் வீழ்ந்து கிடக்கலாம்...

அஞ்சேல்!.. - அபயம் அருளி திருவடிகளைக் காட்டும் அம்பிகையின்
மேல் திருக்கரங்களில் ஜபமாலையும் தாமரையும் திகழ்கின்றன..

வாழ்வருள்வாய் அம்பிகையே!.. - என்று, வலம் வந்து வணங்குகின்றோம்..

அம்பிகையின் கோயிலுக்கு வடபுறமாக தனிக் கோயிலில் புதன்...


மிக அமைதியாக இருக்கின்றது.. வித்யாகாரகனின் சந்நிதியல்லவா!..
அடிதடி, தள்ளுமுள்ளு.. - என, ஏதும் இல்லை..

புதனின் சந்நிதி சற்று உயரமாக விளங்குவதால் அழகான தரிசனம்..

அபயமும் சின்முத்திரையும் காட்டும் புதன்
வஜ்ரமும் சக்தி ஆயுதமும் தாங்கியருள்கின்றான்..

பூம்பட்டுப் பச்சை வண்ணம்.. 
புதனின் திருவழகை எடுப்பாகக் காட்டுகின்றது..

கண்களில் சற்றே நீர்..

கன்னி ராசி.. ஹஸ்த நட்சத்திரம்... துலா லக்னம்..
எனது ஜாதகத்திற்கு அவனே அதிபதி...

என் மகனுக்கும் கன்னி ராசி.. ஹஸ்த நட்சத்திரம் தான்..


ஸ்ரீ புதன்
திருக்கோயில்களைத் தேடித் தேடி நடந்திருக்கின்றேன்...
ஆயினும் - என்னை வழி நடத்தும் ராசி நாதனே!..
உன்னை நான் தேடி வருவதற்கு இத்தனை காலம் ஆகியிருக்கின்றது...

என் பிழை எல்லாம் பொறுத்தருள்க ஐயனே!..
நல்ல புத்தியையும் நல்ல செயல்களையும் தந்து
நோய் நொடியில்லாத வாழ்வினை அருள்க ஸ்வாமி!..

மனதார வேண்டிக் கொண்டு வலம் வந்தோம்...

புதன் சந்நிதிக்கு அருகில் வில்வமரம்...
இன்னொரு தல விருட்சமான கொன்றை மேற்காக இருக்கின்றது..

அம்பிகையின் சந்நிதிக்கு நேரெதிரே சந்திர தீர்த்தம்...
நிறைந்த நீருடன் சலசலத்துக் கொண்டிருக்கின்றது..
குளக்கரையின் கீழ் கரையில் சந்திரன் வழிபட்ட சிவலிங்க சந்நிதி..

இந்த சந்நிதிக்குப் பின்னால் தான் ருத்ரபாதம்.. 
தலவிருட்சமாகிய ஆலமரம்!.. வட ஆல் என சிறப்பிக்கப்படுவது..

காசிக்கு நிகரான திருத்தலம் என்று சிறப்பிக்கப்படும் மையப்புள்ளி - இதுவே!..

ஆலமரம் விழுதுகளுடன் பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கின்றது..



ஆலமரத்தின் நிழலில் அழகான சிவலிங்கம்..
பக்தர்கள் தாமாகவே ஆராதித்து மகிழ்கின்றனர்..

ஆல மரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாக வடிவங்கள்..
புதிய மனை - வீடு அமைவதற்கென பக்தர்கள் கற்களை அடுக்கி வைக்கின்றனர்..

வட ஆலினை வலம் வந்து வணங்கியபடி மீண்டும் தலைவாசல் கொடிமரம்..

எல்லாப் பிறவிகளிலும் உன்னைத் தொடர்ந்திருக்கும் வரத்தினை அருள்க!..

- என்று வேண்டியபடி எம்பெருமானையும் அம்பிகையையும் சரணடைகின்றோம்..

எண்ணங்கள் யாவும் ஈடேறுதற்கு வீழ்ந்து வணங்குகின்றோம்...


சஞ்சிதமாகிய தொல் வினையை 
பிராரப்தமாக அனுபவித்துத் தான் கழிக்க வேண்டும்.. இதுவே நீதி...

இதற்கிடையில் பரிகார சடங்குகள் என்று எவையும் கிடையாது...


அறச் செயல்களைப் புரிவதனால் -
பாவச் சுமையின் கனத்தைக் குறைத்துக் கொள்ளலாம்...

அந்த மாதிரியான பக்குவத்தை அருள்பவன் புதன்...

செவ்வாய், குரு, சனைச்சரன், ராகு கேது!.. - ஆகிய கிரகங்களுக்கு 
பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் கோயில்கள்
புள்ளிருக்கு வேளூர், ஆலங்குடி, திருநள்ளாறு, திருக்காளத்தி - என்பன..

இந்தத் திருக்கோயில்களில் காணப்படும் நெருக்கடி, தள்ளு முள்ளு, 
கூச்சல் குழப்பம் - என, எதுவும் திருவெண்காட்டில் இல்லை..

நாங்கள் திருவெண்காட்டிற்குச் சென்றது புதன்கிழமையில் தான்...

பக்தர்களை அதட்டுவதும் விரட்டுவதும் சர்வ சாதாரணமாக நடப்பது திருநாகேஸ்வரத்தில்..

திருநாகேஸ்வரம் நாகராஜன் வழிபட்ட தலம்..
இங்கே நாககன்னி நாகவல்லியுடன் திகழ்பவன் - ஸ்ரீ நாகராஜன்...   

நான் தரிசித்த வகையில் -
சந்திரன் வழிபட்ட திங்களூர் இதோ இந்த திருவெண்காடு 
- இவை இரண்டு மட்டுமே பரிகாரக் கோயில்களில் அமைதியாக விளங்குபவை...

ஏனைய திருக்கோயில்களும் இப்படி இருந்தால் எப்படியிருக்கும்!..

மனம் நிறைவான தரிசனம்.. 
அமைதி.. ஆனந்தம்.. இவை தவிர வேறெதுவும் இல்லை மனதில்..

திருக்கோயிலில் இருந்து வெளியே வந்தோம்..

ராஜகோபுர வாசலில் கிராமிய மணத்துடன் சிற்றுண்டிக் கடைகள்...
சூடாக பஜ்ஜி வடை - என, அருமையான பலகாரங்கள்...

நல்ல பாலில் தேநீர் மற்றும் காபி...

அடுத்த சில நிமிடங்களில் மயிலாடுதுறைக்குச் செல்லும் பேருந்து..
தஞ்சையை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது...
***




இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ள - 
ஸ்ரீ சிவலிங்கம், அம்பிகை, அகோரமூர்த்தி, 
பத்ரகாளி மற்றும் துர்காம்பிகை ஆகிய 
திருக்கோலங்களை வழங்கியோர்
 - சிவனடியார் திருக்கூட்டத்தினர்.. 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஏனைய படங்கள் எனது கைவண்ணம்..
எடுக்கப்பட்ட படங்களுள் சில படங்கள் மட்டுமே - பதிவில்..
மற்றவைகளை அடுத்தொரு பதிவில் தருகின்றேன்..
***

திருவெண்காடு அழகான சிற்றூர்.. 
தங்கும் விடுதிகள் ஒருசில உள்ளன..

தமிழகத்தின் எப்பகுதியில் இருந்தும் எளிதாக
மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு வந்து சேரலாம்..

மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ.. 
சீர்காழியில் இருந்து 15 கி.மீ..

மயிலாடுதுறை சீர்காழியில் இருந்து திருவெண்காட்டிற்கு
அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. 
***


பருவெண் கோட்டுப்பைங்கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே!..(5/49)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***