நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அன்பின் வழி..

திரு. அனந்தநாராயணன் அவர்கள் Fb ல் வழங்கிய பதிவு - இது..
திரு. கேஜி கௌதமன் அவர்கள் வழியாக எனக்குக் கிடைத்தது...

மனதைக் கவர்ந்த அந்தப் பதிவு
சற்றே அலங்காரங்களுடன்
நமது தளத்தில்!..
***


போகும் வழியில் ஒரு மின்கம்பம்..

அதில் சிறு காகிதத் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது..

எதற்காக இந்தத் தாள்?.. என்ன அதில் எழுதியிருக்கு!?..

- என்ற ஆர்வத்தில் நானும் அருகில் போய்ப் படித்தேன்...

அந்தக் காகிதத்தில் -

என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை..

இப்படிக்கு அஞ்சலையம்மாள்..

- என்றபடிக்கு விலாசத்துடன் எழுதப்பட்டிருந்தது..

எனக்கும் பொழுது போகவில்லை..

குறுகலான வழி..
எதிர்ப்பட்ட ஒருவரிடம் இந்த விலாசத்தைக் கூறி வழி கேட்டேன்..

இந்த அம்மாவா!.. கொஞ்ச தூரம் போனால் பழைய வீடு ஒன்றிருக்கும்.. அங்கே தான் இந்த அம்மா இருக்காங்க!..

- என்றார்..

அவர் காட்டிய வழியில் நடந்தேன் நான்..

வழி காட்டியவர் பழைய வீடு என்று சொன்னார்..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..

அது கீற்றுக் கொட்டகை..

வெயிலில் தூளாகிப் போயிருந்தது.. மழைத் தூறல் விழுந்தால் தண்ணீரோடு போய் விடும்..

அந்தக் கொட்டகையின் வாசலில் அந்த மூதாட்டி..

எலும்பும் தோலுமாக - குழி விழுந்த கண்களுடன்..

காலடி சத்தம் கேட்டதும் -

யாரப்பா நீ!.. - என்றார்கள்..

அம்மா.. இந்த வழியாக வந்தேன்.. வழியில் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது.. உங்களுடையதாக இருக்கலாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்..

அதைக் கேட்டதும் அந்த மூதாட்டியாரிடமிருந்து விசும்பல்..
ஒட்டி உலர்ந்த கன்னங்களில் கண்ணீர்..

ஏனம்மா அழுகின்றீர்கள்?.. - என்றேன் அதிர்ச்சியுடன்..

தம்பீ.. ரெண்டு நாளா இந்த மாதிரி தான்.. முப்பது முப்பத்தைஞ்சு பேராவது இருப்பாங்க.. 

அம்மா... கீழே இந்தப் பணம் கிடந்தது.. உங்க கிட்ட கொடுத்துட்டுப் போகலாம் ..ன்னு வந்தேன் ..ன்னு சொல்றாங்க..

உண்மையில என்னோட பணம் ஏதும் காணாம போகலை.. அந்தக் கடுதாசியும் நான் எழுதலை.. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுப்பா!..

ஊரார் பணம் எனக்கு எதுக்குடா.. ராசா!..

மறுபடியும் அதிர்ந்தேன்..

பரவாயில்லைம்மா.. நீங்க இதை வெச்சிக்குங்க!..

அவர்கள் கையில் பணத்தைக் கொடுத்ததுடன் தொட்டுக் கும்பிட்டு விட்டு நடந்தேன்..

பின்னாலிருந்து அந்த மூதாட்டியின் குரல் கேட்டது..

தம்பீ.. நீ போறப்போ.. அந்த லைட்டு மரத்துல கட்டியிருக்குற கடுதாசிய கிழிச்சுப் போட்டுடு!.. மறந்துடாதேப்பா!..

ஆகட்டும்.. அம்மா!..

அந்தக் கடிதம் தொங்கிக் கொண்டிருக்கும்
மின் கம்பத்தினைக் கடந்து - நடந்தன என் கால்கள்..

மனதில் பலவிதமான எண்ணங்கள்..

யார் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்கள்?..

அந்தக் கடிதத்தைக் கிழித்து விடுங்கள்..
- என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் சொல்லியிருக்கக் கூடும்..

ஆனால், யாரும் அப்படிச் செய்த மாதிரி தெரியவில்லை..

ஆதரவுக்கு என்று யாரும் இல்லாமல் வாழும் ஓர் உயிருக்கு
அன்பின் இனிய வார்த்தைகளால் உதவி செய்திருக்கிறார் ஒருவர்..

அந்த நல்லவருக்கு மனதால் நன்றி சொல்லிக் கொண்டேன்..

நன்மை செய்யவேண்டும்!.. 
- என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்..


அண்ணே!..  இந்த விலாசம் எங்கே..ன்னு சொல்ல முடியுமா?.. 
வர்ற வழியில் இந்த ஐம்பது ரூபாய் கிடந்தது.. 
அந்த அம்மா கிட்டே கொடுக்கணும்.. வழி சொல்லுங்களேன்?...

அந்த குறுகலான வழியில் எதிர்ப்பட்டவர் என்னிடம் கேட்டார்...

மனித நேயம் மலர்கின்றது!.. - என்ற மகிழ்ச்சியுடன்
அஞ்சலையம்மாள் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினேன்..

வாழ்க நலம்!..
***

13 கருத்துகள்:

  1. மனதைத் தொட்ட பகிர்வு. நல்ல மனம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி உதவ நினைத்தால் எவ்வழியிலும் செல்லலாம் இது உதாரணமாகிறது.
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான பதிவு.
    நல்லமனங்கள் வாழ்க!
    அன்பின் வழி தொடரட்டும் ,மனித நேயம் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நெகிழ வைக்கும் சிறுகதை. எனக்கும் கட்செவி அஞ்சலில் வந்துள்ளது. போதுமான உதவி வந்து விட்ட சங்கடமும், போதும் என்று சொல்லும் நேர்மையும்.. அந்தப் பாட்டியின் குணநலன்களும் நெகிழ வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அந்த வறுமையிலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத குணம்..
      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மைதான்.. மனிதம் இன்னும் இருக்கின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மின் கம்பத்தில் காகிதம் எழுதிய முதல்வர் வாழ்க மனித நேயத்தை அடையாளம் காட்டியதற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      மனித நேயத்தை அடையாளாம் காட்டிய நல்லமனம் வாழ்க..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..