நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 24, 2017

சிவ தரிசனம்

நேற்று ஆடி அமாவாசை...

அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்த நாள்..


விடியற்காலையில் இருந்தே -
திருஐயாற்றை நோக்கி மக்களின் பயணம்..

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் -
நெல்லை, மதுரை, திண்டுக்கல், தேவகோட்டை, காரைக்குடி -
என, தமிழகத்தின்  பல பகுதியில் இருந்தும் மக்கள்  திரண்டிருந்தனர்..

காவிரியில் வெள்ளம்  இல்லை எனினும் அதன் கரையினில் மக்கள் வெள்ளம்..

சிவ தரிசனம் காண்பதற்கு - நானும் திருஐயாறு சென்றிருந்தேன்..

பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயில் செல்லும் வழியில் பேருந்துகளைத் தடுத்து மக்களுக்காக விட்டிருந்தாலும் நெரிசல் - கடுமையான நெரிசல்..

காவலர்கள் கடும் வெயிலிலும் மக்கள் பணி செய்து கொண்டிருந்தனர்...

அவர்களை மனதார வாழ்த்தினர் பலரும்..

திருஐயாற்றின் சிவாலயத்தில் தனிச் சிறப்பு -
தெற்கு கோபுர வாயிலில் அமைந்திருக்கும் குங்கிலியக் குண்டம்..

ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புகைந்து கொண்டிருப்பது..,

கோயிலுக்குள் செல்லும் முன்பாக அதனுள் குங்கிலியத்தைப் போட்டு விட்டு எதிரிலுள்ள ஆட்கொண்டார் ஸ்வாமியை வணங்கிச் செல்வது மரபு..

கோபுர வாசலில் குங்கிலியப் பொட்டலங்கள் விற்கும் கடைகளும் உள்ளன..

சிறிய அளவில் குங்கிலியத்தை தாளில் மடித்துத் தருவார்கள்..

குங்கிலியத்தைக் குண்டத்தினுள் போட்டு விட்டு தாளை வெளியே போட வேண்டும்,..

ஆனால் -

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் இன்னும் பலவிதமான சேட்டைகளைச் செய்து கொண்டும்

குங்கிலியக் குண்டத்தினுள் பொட்டலங்களை அப்படியே வீசிக் கொண்டிருந்தனர்...

அதன் விளைவு - புகைந்து கொண்டிருந்த குண்டம் குபீரெனத் தீப்பற்றிக் கொண்டது...



நூற்றுக் கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது எங்கே தப்பித்து ஓடுவது?...

ஆபத்தான அந்த வேளையில் -

அஞ்சாத சிங்கமாக காவலர் ஒருவர் அருகிலிருந்த தேநீர்க்கடையில் இருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து குண்டத்தினுள் ஊற்றி -

மூண்டெழுந்த தீயையும் மக்களின் பதற்றத்தையும் தணித்து
சூழ்நிலையைக் குளிர வைத்தார்...

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் மக்கள் மீண்டும் குங்கிலியப் பொட்டலங்களைக் குண்டத்தினுள் போட்டுக் கொண்டிருந்தனர்...

மக்கள் திருந்த மாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே!..

வாருங்கள் நாம் கோயிலுக்குள் செல்வோம்...

ஆடி அமாவாசை தீர்த்தவாரியை முன்னிட்டு
ரிஷப வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் எழுந்தருள இருக்கின்றனர்..

தெற்கு வாசலின் இரண்டாவது ராஜகோபுரத்தின் அருகில் -
இதோ அறுபத்து மூவர் - பெரிய ரதத்தில் காட்சியளிக்கின்றனர்...



திருக்கோயிலில் ஆங்காங்கே சிவனடியார்களின் தேவார பாராயணம்..
சிவகண திருக்கயிலாய இசைக்குழுவினரின் வாத்திய முழக்கம்..



மக்கள் பணியில் நீர் வழங்குதல், அன்னதானம் என கோலாகலமாக இருந்தது..

சென்னை அம்பத்தூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்தனர்..

திருக்கோயிலில் எங்கு காணினும் மக்கள் திரள்..

அவரவர்க்கும் ஆயிரம் ஆயிரமாகப் பிரச்னைகள்..

அத்தனையையும் விட்டுத் தள்ளி விட்டு
ஐயாறனின் அடித்தலமே துணை!.. - என்று கூடியிருக்கின்றனர்..

காவிரியில் தீர்த்தவாரி முடிந்ததும் நிகழ்ந்த திருவீதி உலாவின் சில காட்சிகள் - இன்றைய பதிவில்...







முன்னிரவுப் போதில் அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் காட்டிய வைபவம்...

அதைக் கண்டு இன்புறத்தான் வீடு வாசலை மறந்து
கோயிலடியில் கொதிக்கும் வெயிலில் கிடக்கின்றார்கள்..

உச்சிப் பொழுது வரை திருக்கோயிலில் இருந்தேன்...

இரவு வரைக்கும் அங்கேயே இருப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை..

உறவினர் ஒருவர் ஆபத்தான  நிலையில்.. சென்று பார்க்க வேண்டும்..

எல்லாவற்றுக்கும் ஐயாறப்பன் துணை.. - என்று
வேண்டிக் கொண்டபடி தஞ்சைக்குத் திரும்பினேன்...

பதிவில் உள்ள படங்கள் தங்களின் மனம் கவரும் என நம்புகின்றேன்..
  
காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..
திருநாவுக்கரசர் (6/55) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

18 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    திருஐயாறு தரிசனம் கண்டேன் நன்று நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அழகான படங்கள்.

    குங்கிலியம் தாளோடு குண்டத்தில் போடும் மாக்கள்! வேறென்ன சொல்ல.

    திருஐயாறு தரிசனம் உங்கள் மூலம் எனக்கும். நேரில் சென்று காணும் நாள் எப்போதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      எடுத்துச் சொன்னாலும் கேட்பதில்லை..
      மக்கள் எதற்கும் திருந்த மாட்டார்கள் என்பது வெளிப்படை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மக்கள் திருந்தவே மாட்டார்கள்....படங்கள் அழகு...தகவல்களும்...யானைகள் படம் வெகு அழகு...மனத்தைத் கொள்ளை கொண்டது...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திருக்கோயில்களில் எப்படி நடந்து கொள்வதென்பது மக்களுக்கு இன்னும் விளங்கவேயில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தரிசனம். குங்கிலியம் தொட்டியில் எரிந்த தீ பரவாமல் தடுத்த காவலர் பாராட்டுக்குரியவர்.
    உறவினர் உடல் நலமா?
    பாடல் பகிர்வும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விரைந்து செயல்பட்ட அந்தக் காவலர் பாராட்டுக்குரியவரே..
      உறவினர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கின்றார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் மனத்தைக் கவர்ந்தன. ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகிய படங்களுடன் திருஐயாறு தளத்தை தரிசித்தோம்....

    அனைத்து படங்களும் ..தகவல்களும் சிறப்பு...

    குங்கிலியம் என்றால் என்ன....தெரியவிலையே ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குங்கிலியம் என்பது ஒருவகையான மரத்தின் பட்டை..
      மருத்துவ குணமுடையது..

      ஆலயங்களிலும் வீடுகளிலும் தூபமிடுவதற்கு உகந்தது..
      இதனுடைய புகையால் விஷப் பூச்சிகள் ஓடி விடுகின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மாதர் பிறை....எங்கள் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் ஐயா. திருவையாறு சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. திருவையாறு உலா சிறப்பாக இருந்தது. அறுபத்து மூவரையும் ஒரே மேடையில் மாலைகளோடு இன்றுதான் இந்தப் பதிவின்மூலம் கண்டேன். நன்றி.

    நெய்விளக்கு, கற்பூரம் ஏற்றுதல், நீங்கள் சொல்லியிருக்கும் குங்கலியம், பிரசாதம் சாப்பிட்டபின் தூணில் தேய்ப்பது, வாங்கும் குங்குமம்/மஞ்சள்/சந்தனம் கோவிலிலேயே போட்டுவிட்டு அசுத்தம் செய்வது - இது எல்லாம், கோவில், இறைவன் சன்னிதி என்ற மனதளவு பயமும் மரியாதையும் இல்லாதோர் செய்வது. இறைவனுக்கு அட்டென்டென்ஸ் போடும் எண்ணமுடையோர் செய்வது. ஆலயம், நம் கலாச்சாரம் என்ற பெருமிதம் வேண்டாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நமது ஆலயம்.. நமது கலாச்சாரம்!.. - என்றெல்லாம் எண்ணினால் ஏன் இவ்வளவு பிரச்னைகள்?..

      தங்களது கருத்தினைக் கொண்டு தனியாக ஒரு பதிவே இடலாம்..
      அந்த அளவுக்கு என் மனதிலும் ஆதங்கங்கள் உள்ளன..

      நேரம் கூடிவரும்போது நிச்சயம் பதிவு செய்வேன்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..