நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 05, 2016

விக்ன விநாயகன்

தேவேந்திரன் செய்வதறியாது திகைத்து நின்றான்...

அருகிருந்த எவர்க்கும் - இந்திரனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை..

அத்தனை களேபரத்தினூடாக விஷயம் மெல்லக் கசிந்தது..

இவன் அமுதக்கலசத்தை எங்கோ ஒளித்து வைத்து விட்டு நாடகம் ஆடுகின்றான்!..

எனக்கு அப்பொழுதே தெரியும்!.. இவன் இப்படிச் செய்வான் என்று!..

திரண்டிருந்த அசுரர் கூட்டத்தினுள்ளிருந்து கலகக் குரல்கள் எழுந்தன...

வீண் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத நல்லோர் சிலர் -
இந்திரனை இழுத்துக் கொண்டு வந்து நான்முகனின் எதிரில் நிறுத்தினர்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்றே!.. எத்தனை எத்தனை ப்ரயத்தனம் செய்து கடலைக் கடைந்து அமுதத்தினைப் பெற்றோம்!..

பேசுதற்கு ஒரு வார்த்தையின்றி விக்கித்து நின்றான்..


நானே அனைத்தும் அறிவேன்.. என்ற ஆணவம் தான் உனக்கு அதிகம்.. ஆனால், எதைச் செய்ய வேண்டும்.. எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறியவே மாட்டாய்.. உன்னால் விளைந்த விபரீதங்களே அதிகம் என்பதை உணர்வாயாக!...

நான்முகனின் முன் தலைகவிழ்ந்து நின்றான் - தேவேந்திரன்...

இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.. வழி காட்ட வேண்டும்.. தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு ஓர் உபாயம் அருளல் வேண்டும்..

தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு வழி ஒன்றைக் கேட்கின்றாய்.. வழி எங்கும் வீற்றிருந்து தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளையினை நீ அறிந்திலையோ!..

தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளை!.. யார் அது?..

மனம் போன போக்கில் சென்று போகங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திரனே!..  எல்லாம் மறந்தனையோ!.. ஆதியில் திருக்கயிலை மாமலையில் எம்பெருமானும் அம்பிகையும் தத்தமது பீஜாட்சர மந்திரங்களால் மகாகணபதிப் பெருமானை அருளியபோது நமக்கெல்லாம் என்ன கூறினார்கள்!..

ஆம்... ஆம்!.. நினைவுக்கு வருகின்றது!..

அமுதம் வேண்டுமெனப் புறப்பட்ட போது ஐங்கரனை நீ நினைத்ததுண்டா?..

...... ......  ......  ......

மந்தர மலை கடலுள் வீழ்ந்து மூழ்கிய போதும் கவலைப்பட்டு கணபதியை சிந்தித்ததுண்டா?..

...... ......  ......  ......

அதன்பிறகு ஆலகாலம் எழுந்து வந்து அனைவரையும் துரத்தியடித்ததே!.. அப்போதாவது அந்த ஆனைமுகனை வந்தித்ததுண்டா?..

...... ......  ......  ......

அலறியடித்துக் கொண்டு கயிலைமாமலையை நோக்கி ஓடி - அதனுள் உட்புகுந்தபோது - ஆங்கே வேலவனோடு விளையாடிக் கொண்டிருந்த விநாயக மூர்த்தியை ஒரு கணம் கண்டு கைகூப்பியதுண்டா?...

...... ......  ......  ......

நான் இளைய பிள்ளையை எதிர்நோக்காமல் சென்றதற்கே - அவன் கையால் குட்டுப் பட்டதுடன் படாதபாடு பட்டிருக்கின்றேன்.. நீயோ.. மூத்த பிள்ளையை மதிக்காமல் சென்று - அவதிக்குள்ளாகி நிற்கின்றாய்!..

...... ......  ......  ......

இதற்கிடையில் - தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளை.. யார் அது?..
என்று கேள்வி வேறு கேட்கின்றாய்!..

..... ......  ......  ......

தடைகளைக் கண்முன் முன்னே காட்டி நடத்துபவனும் அவன் தான்.. தாள் பணிந்து நிற்பவரை - தடைகளைத் தாண்டி கடத்துபவனும் அவன் தான்!..

..... ......  ......  ......

சென்று - செல்வக் கணபதியின் பாதம் பணிவாய்!.. உன் புத்தியை நல் வழியில் செலுத்து.. எடுத்த செயல்களில் சித்தியைக் காண்பாய்!..   

தாங்களும் உடன் வந்தருள வேண்டும்!..

எதற்கு?..

உடன் வந்து நலங்காட்டவேண்டும்.. வணங்கி வழிபடும் வகையறியேன்!..

பிள்ளை.. யார் என்று கேட்டாயே.. அந்தப் பிள்ளையின் வழிபாடு எளிமை.. இருப்பினும் இப்போதைக்கு அருகம் புல்லையும் தும்பைப் பூக்களையும் கருப்பஞ்சாற்றையும் இனிப்பு மோதகத்தையும் எடுத்துக் கொள்.. இவற்றை நிவேதனம் செய்து தான் அகத்திய மகரிஷியின் மனையாள் லோபாமுத்திரை நற்பயன் எய்தினாள்..

நான்முகனின் தலைமையை ஏற்று அசுரர்களும் தேவர்களுமாக மீண்டும் திருக்கயிலாய மாமலையை நோக்கி நடையைக் கட்டினர்...


அங்கே - மேற்கு நோக்கிய வண்ணம் மஹாகணபதி தியானத்தில் வீற்றிருக்க - அருகாமையில் பொற்பிரம்புடன் அதிகார நந்தீஸ்வரர்...

நந்தீசனைக் கண்டதுமே தேவேந்திரனின் அடிவயிறு கலங்கியது...

என்ன விஷயம்?.. -  பார்வையினாலேயே வினவினார் நந்தியம்பெருமான்..

மஹாகணபதியைத் தரிசிக்க வந்திருக்கின்றோம்!..

கைகட்டி வாய் பொத்தி நின்றான் - தேவேந்திரன்..

இப்பொழுது கணேச மூர்த்தி சிவபூஜை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாரே!.. தெரியவில்லையா?..

ஆயிரங்கண்ணிருந்தும் அந்தகனாகிப் போனேன்!.. பிழை பொறுத்தருளல் வேண்டும்.. ஸ்வாமி!..

சற்றே பொறுத்திருங்கள்!.. - அதிகார நந்தி விடையிறுத்தார்..

தங்கள் சித்தம்!..

சிறிது நேரத்தில் தியானத்திலிருந்த விநாயகப்பெருமான் - 
தனக்கு முன்னால் திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தை ஏறெடுத்து நோக்கினார்...

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விக்ஷாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்..

ஸர்வ விக்னகரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்..

ஒற்றைக் கொம்பினையும் ஒளிரும் பொன் போல் விளங்கும் பெரும் தேகத்தையும் தழைத்து விளங்கும் வயிற்றையும் விசாலமான விழிகளையும் உடைய பெருமானே!.. பூத கணங்களுக்கு நாயகமான தங்களை வணங்குகின்றேன்!..

தடைகளை ஏற்படுத்தி அறிவுறுத்தும் நாயகனாகவும் அந்தத் தடைகளைக் களைந்து வழிகாட்டும் விநாயகனாகவும் விளங்குவதுடன் எல்லா வெற்றிகளையும் அருளும் பெருமானே!.. பூத கணங்களுக்கு நாயகமான தங்களை வணங்குகின்றேன்!..

அருகம்புல்லையும் தும்பைப் பூக்களையும்
மோதகங்களையும் கருப்பஞ்சாற்றையும்
பணிவுடன் திருவடிகளில் சமர்ப்பித்து நின்றான் - தேவேந்திரன்..

விசாலமான காது மடல்கள் அப்படியும் இப்படியுமாக ஆடி அசைந்தன...

சின்ன விழிகளால் தேவேந்திரனை உற்று நோக்கினார் - விநாயகப்பெருமான்..

அந்த அளவில் தேவேந்திரனின் அகங்காரம் உடைந்து சிதறியது..

ஆற்றாமையால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவினுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தில் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரை கழல் சரணே.. சரணே!..

நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர் - அனைவரும்..

விநாயகப் பெருமான் முகமலர்ந்து புன்னகைத்தார்..

சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டியருளிய எம்பெருமான்
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டியருளினார்..

நான்முகனுக்கும் தேவேந்திரனுக்கும் சித்தத்தினுள் சிவலிங்கம் தோன்றியது..

ஆனால் - என்னென்று கேட்கத் தோன்றவில்லை..

பிஞ்சிலம் எனப்படும் தேவமல்லிகை வனத்தினுள் தேஜோமயமாகத் திகழும் சிவலிங்கம்.. அங்கே சென்றால் அடுத்த விளக்கம் கிடைக்கும்..

மின்னலென விரைந்து வந்தனர்..


காவிரிக்குத் தென்கரை... 

மல்லிகை வனம் எனப்பட்ட திருத்தலமாயிற்றே... இங்கு நான் சிவவழிபாடு செய்திருக்கின்றேனே!..

நான்முகனின் திருமுகத்தில் புன்னகை அரும்பியது..

அங்குமிங்கும் நோக்கினர் அனைவரும்..

ஆங்கே - அவர்களுக்கு முன்னதாகவே கணபதி வீற்றிருந்தார்..

மீண்டும் அவரைப் பணிந்தனர்...

திருக்கரத்தினால் எம்பெருமான் சுட்டிக் காட்டிய திசையில்...

சத்யோ ஜாதம் எனும் மேற்கு முகமாக ஒளிமிகும் சிவலிங்கம் விளங்கிற்று..

மீண்டும் திகைத்தனர்.. வேண்டி வந்தது அமுதக் கலசம்.. 

ஆனால், பிள்ளையார் மறுபடியும் சிவலிங்கத்தைக் காட்டியருள்கின்றாரே!..

திகைப்பினின்று விடுபட்ட ஸ்ரீ ஹரிபரந்தாமன் - தனது ஆபரணங்களையெல்லாம் கழற்றி சிவலிங்கத் திருமேனியில் சாற்றினார்..

மீண்டும் பேரொளி வெளிப்பட்டது.. அந்தப் பிழம்பினுள்ளிருந்து,
அம்பிகையாகிய பராசக்தி அழகுக்கு எவரும் ஒவ்வாத வண்ணமாக
அபிராமவல்லி எனத் திருப்பெயர் கொண்டு வெளிப்பட்டனள்...

தாயே!.. பராசக்தி!.. - விண்ணதிர எழுந்தது ஜயகோஷம்!..

புன்னகைத்து நின்ற பொற்கிளியாள் - 
தனது செல்வத் திருக்குமரனைக் கனிவுடன் நோக்கினாள்...

தாயையும் தந்தையையும் வலம் செய்து வணங்கினார் விநாயகப் பெருமான்..

அந்த அளவில் சிவலிங்கத்தின் உள்ளிருந்து அமுதக் கலசம் வெளிப்பட்டது..

தாழ்ந்து பணிந்து அதனைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான் தேவேந்திரன்...

தேவேந்திரா!.. உனக்கு இன்னுமா விளங்கவில்லை!..  சித்தத்தினுள் சிவலிங்கம் காட்டிய கணபதி சிவமும் அமுதமும் வேறுவேறு அல்ல என்ற ஞானத்தை அருளியிருக்கின்றார்.. சிவமே அமுதம்.. அமுதமே சிவம்!..

இனி இத்தலத்தில் எம்பெருமானுக்கு எந்நாளும் அமுதீசர், அமுதகடேசர், அமிர்த லிங்கம் எனவும் திருப்பெயர்கள் வழங்குவதாக!..

ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருவாய் மலர்ந்தருளினான்..

அத்துடன், அமுத கலசத்தை ஒளித்து வைத்து விளையாடிய தங்கள் அன்பு மருகனுக்கும் கள்ள வாரணன் என்ற திருப்பெயர் விளங்குவதாக!..

நான்முகன் கூறியவுடன் -

திருமேனி குலுங்க புன்னகைத்தார் - விநாயகப்பெருமான்..

அமுதக் கடம் வெளிப்பட்டதால் திருத்தலம் - திருக்கடவூர் என்றானது..


துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய் நின்கருணையினால்
விதியே புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!..
-: அபிராமி பட்டர் :-

விநாயகர் - கள்ள வாரணன்
இறைவன் - அமுதீசர், அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - அபிராமவல்லி

தல விருட்சம் - பிஞ்சிலம் எனப்படும் மல்லிகை
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்

திருக்கடவூர் திருக்கோயிலில் இறைவனுக்கு முன்பாக சங்கு மண்டபத்தின் தென்புறமாக கள்ளவாரணன் எனப்படும் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்துள்ளது..

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் கள்ள வாரணப் பெருமானின் மீது பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்..

கருணை வேண்டி நிற்கும் எவர்க்கும் நல்லருள் புரியும் நாயகன்..
நம்மைக் கலங்காமல் காத்தருள்வான்..

எளிமைக்கு எளிமையானவர் விநாயகப் பெருமான்..

திருப்புன்கூரில் நந்தனார் ஸ்வாமிகளின் பொருட்டு - திருக்குளம் அமைத்துக் கொடுத்த ஞானமூர்த்தி...

திருநாரையூரில் நம்பிக்கு எல்லாமும் தானே உரைத்து ஆளாக்கி வைத்தார்.

தில்லையில் ராஜராஜசோழனுக்கு மூவர் பாடிய தேவார திருமுறைகளைக் காட்டியருளினார்..

திருஆரூரில் - சுந்தரருக்காக பொன்னை உரசி மாற்றுரைத்தார்..

உப்பூரில் - அடியவருக்காக வெயிலுகந்து விளங்குகின்றார்..

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த
காவிரி மீள்வதற்குக் காரணம் காக்கை வடிவாகிய கணபதியே!..


இன்று ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி..
ஸ்ரீ விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாள்..

அன்று போல் இன்றும் 
சிறைப்பட்டுக் கிடக்கும் காவிரியை மீட்டளித்து
தஞ்சை மண்ணின் துயர் தீர்க்க வேண்டி நிற்போம்..

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..



பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனும் உக்ரதுர கமுநீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்

திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே..

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப் பருப்புடனெய்
எட்பொரி அவற்றுவரை இளநீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமிடிப் பல்வகை தனிமூலம்

மிக்க அடிசிற்கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!..
-: அருணகிரி நாதர் :-

ஓம்
கம் கணபதயே நம: 
***

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. விநாயகனைக் கண்டேன், தங்கள் பதிவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்களும், பகிர்வும், பாடல்களும், புராணக்கதைகளும் அருமை.

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் -
      வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணங்குவதற்கு எளியவர் கண நாதர் திருச்சியில் ஐயப்ப பஜனை நடக்கும் போது அப்போது மூன்று வயதினனான என் இளைய மகன் விநாயகர் துதியை ஆரம்பிக்க பஜனை களை கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி..

    நலம் தானே!..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. கதை, பாடல் பகிர்வு, படங்கள், விளக்கங்கள் என்று எல்லாம் வெகு சிறப்பு.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. சிறப்பான பகிர்வு. விக்னவிநாயகன் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதிவு அருமை! அற்புதமான பாடல்! எத்தனையோ வருடங்களுக்குப்பின் மீண்டும் கேட்டு, ரசிக்க முடிந்ததில் மனமார்ந்த நன்றி! ஓவியங்கள் மூன்றும் மிக‌ அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. சிறப்பான பதிவு பகிர்வு என்பதுடன் மேலும் பல அறிந்தும் கொண்டோம் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..