நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 28, 2015

மார்கழித் தென்றல் - 12

குறளமுதம்

பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்.. (0196)

பயனில்லாத சொற்களையே பலகாலமும் 
சொல்லித் திரிகின்ற ஒருவனை - 
மகன் என்று சொல்லாமல் 
மக்களுள் பதர் என்றே சொல்லவேண்டும்.. 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 12


திவ்ய தேசம் - திருப்பேரை

எம்பெருமான் - மகர நெடுங்குழைக் காதன்
தாயார் - குழைக்காதுடைய வல்லி, திருப்பேரை நாச்சியார்
உற்சவர் - நிகரில் முகில் வண்ணன்


ஸ்ரீ பத்ரவிமானம்
வீற்றிருக்கும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்...

மங்களாசாசனம்
நம்மாழ்வார்


இத்திருத்தலத்தில்
ஸ்ரீபூமாதேவி - ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் வடிவந்தாங்கி
தவம் செய்து எம்பெருமானுடன் கலந்ததாக தலபுராணம்..

நவதிருப்பதிகளுள் - சுக்ரன் ஸ்தலம்..

மகரநெடுங்குழைப்பெருமான் தன் அடியார்களின்
வறுமை தீர்த்து வளம் அருள்வதாக ஐதீகம்.. 
* * *

கனைத்து கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்

திருத்தலம் - செண்பை மாநகர்
கோவில்பட்டிஇறைவன் - ஸ்ரீ பூவனநாதர்
அம்பிகை - ஸ்ரீ செண்பகவல்லி அம்மன்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்
தலவிருட்சம் - களாமரம்

மதுரை ஸ்ரீ மீனாக்ஷியைப் போல
திருக்கரத்தினில் செண்டும் கிளியும்
தாங்கியிருக்கின்றனள் - செண்பகவல்லி


வில்வலன் வாதாபி எனும் அசுரர்களை
வதைத்த தோஷம் நீங்குதற்கு
அகத்தியர் - இத்தலத்தில் சிவபூஜை நிகழ்த்தியதாக ஐதீகம்.


ஐயனும் அம்பிகையும்
கிழக்கு நோக்கிய வண்ணம் திகழ்கின்றனர்..

1999 - ஆம் ஆண்டளவில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டது..நன்றி - G. கணபதி, கோவில்பட்டி.
சென்ற 2014-ல் - அறுபத்து மூவர்க்கும்
ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமானுக்கும்
திருமேனிகளும் உற்சவ விக்ரகங்களும்
நிறுவப்பெற்றன..திருக்கோயிலில்
எல்லா வைபவங்களும் சீரும் சிறப்புடனும்
நடைபெறுகின்றன..

இத்தலத்திற்கு
சமயக்குரவர்களின் திருப்பதிகங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
ஆயினும், மிகவும் பழைமையான திருத்தலம்..
* * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலாநிறைய நீரமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே!.. (4/76)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்திருஅம்மானை
திருப்பாடல் 03 - 04.

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான் தான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்!..

வான்வந்த தேவர்களும் மாலயனோடு இந்திரனும்
கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்!.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

6 கருத்துகள்:

 1. நான் இதுவரை செல்லாத கோயில்களுக்கு உங்கள் பதிவுகள் மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பாடல்கள், அவைச் சார்ந்த கோயில்களும் பதிவுகளில் அருமை, தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மார்கழித் தென்றலின் 12 ஆம் குறளமுதம் படித்தேன் ஜி தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..